சென் ற இதழில் வெளிவந்த தலித் க. சுப்பையா அவர்களின் பேட்டி இந்த இதழிலும்...

நீங்கள் வாழ்ந்த கிராமத்தின் மண் வாசனையைப் பற்றிச் சொல்லுங்கள்...

கிராமத்தில் நான் வாழ்ந்த காலம் துயரங்களின் தொகுப்பாகும். நடப்பது, ஓடுவது, பேசுவது, சிரிப்பது, உடுத்துவது, படிப்பது போன்ற அனைத்தும் கள்ளர்களின் கண்காணிப்புக்கு உட்பட்டதாகவே இருந்தது. சாதி ஒழுங்கிற்கான இக்கண்காணிப்பு, சே மக்கள் மீது ஊர்க்காரர்கள் சுமத்திய சமூகக் கட்டுப்பாடாகவே இருந்தது. அச்ச உணர்வும், அடங்கி வாழ வேண்டிய நிர்பந்தம் என் உடம்பைக் குள்ளமாக்கி விட்டது. ஒழுங்கை மீறுதல் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டது. இதற்கானத் தீர்ப்பை வழங்கும் அதிகாரப் பீடமாக பஞ்சாயத்துறை இருந்தது. கள்ளர்கள்தான் பஞ்சாயத்தின் நீதிபதிகள். பஞ்சாயத்தின் முதலும் முடிவுமான நோக்கம், சாதிக் கட்டமைப்பைக் கட்டிக் காப்பதுதான். காலம் முழுவதும் சேரிமக்கள் கைகட்டி, விழுந்து வணங்கி மன்றாடுபவர்களாகவும், கள்ளர்கள் தீர்ப்புச் சொல்பவர்களாகவும் இருப்பதற்கான சாதி மேலாதிக்கத்தை ரத்தம் சிந்தியாவது காப்பதற்கான ஆவணமில்லாத அமைப்புதான் பஞ்சாயத்தாகும்.

Dalit Subbiah
காலில் செருப்பணிய முடியாது; குதிகால் வரை வேட்டி உடுத்த முடியாது; முழங்காலுக்கு மேல் வேட்டியைச் சற்று உயர்த்திக் கட்டினால், "உந்தொடைய எங்க பெண்கள் பார்க்கணும்னு வேட்டியத் தூக்கிக் கட்டுறியா' என்று கள்ளர்கள் கோபப்படுவார்கள். பாட்டுப் பாடிக்கொண்டு நான் செல்லும்போது, "ஊருக்குள்ள பாட்டு என்னடா வேண்டியிருக்கு' என்று கேட்பார்கள். கள்ளர்கள் எதிரே வரும்போது, சேரி மக்கள் பாதையைவிட்டு தூர ஒதுங்கிச் செல்ல வேண்டும். உடம்பை வளைத்து மரியாதை செலுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். அப்படிச் செய்யாத பட்சத்தில் "என்னடா/என்னடி வெறப்பா போறே போ, போ, ஒரு நாளைக்குச் சிக்குவே அப்ப வெச்சுக்குறேன்' என்று மிரட்டுவார்கள். அந்தச் சேரிப்பய/ பொம்பள என்னை உரசிக்கிட்டுப் போறான்/போறா, என்று ஊருக்குள் திட்டமிட்டுப் பரப்புவார்கள். இக்கருத்தை ஊதிப் பெருக்கி ஒருநாள் பழி தீர்த்துக் கொள்வார்கள்.

எங்கள் சேரிக் கோவிலான காளியம்மன் கோவில் வரவு செலவை என் தந்தைதான் நிர்வகித்து வந்தார். மேலும், வெட்டுக் காயங்களுக்குப் பச்சிலை கட்டும் மருத்துவராகவும், ஆடி மாதத்தில் நாற்றங்காலில் பழுதில்லாமல் விதை நெல் பாவுவதில் தேர்ச்சிப் பெற்றவராகவும் என் அப்பா விளங்கி வந்தார். இதனால் எங்கள் வீட்டிற்கு தினம் மாலை நேரத்தில் ஆட்கள் வந்து செல்வார்கள். இப்படி வருபவர்கள் உட்காருவதற்காக, வீட்டின் முன்பு இரண்டடி உயரத்தில் 5 அடி நீளத்தில் பட்டியல் கல்லை அப்பா போட்டிருந்தார். ஒரு நாள் கள்ளர் சாதியைச் சேர்ந்த ஒருவர் வேலைக்கு ஆள் கூப்பிட வந்தபோது, கல்லில் உட்கார்ந்திருந்த சிலர் எழுந்திருக்காததால் மறுநாள் பஞ்சாயத்தைக் கூட்டி, உட்கார்ந்திருந்த பெரியவர்களைக் கும்பிட்டு விழ வைத்து மன்னிப்புக் கேட்க வைத்தார்கள். இப்பயத்தை மனதில் வைத்து அப்பா கல்லைத் தரையில் கிடத்திப் போட்டு விட்டார்.

இதைப் போலவே, காளியம்மன் கோவில் திருவிழாவின்போது வைக்கப்படும் பொங்கல் சோற்றையும், வெட்டப்படும் ஆட்டுக்கறியையும் கூறுபோட்டு குடும்பங்களுக்குக் கொடுப்பதற்காக கோவில் முன்பு அகலமான பட்டியல் கல்லை பெரியவர்கள் போட்டிருந்தனர். கோவில் முன்பு உள்ள ஆற்றைக் கடப்பதற்குப் பாலம் உள்ளது. உயரமான இப்பாலத்தில் கள்ளர்கள் உட்கார்ந்திருப்பார்கள். அதைவிடத் தாழ்வாக உள்ள கோவில் பட்டியல் கல்லில் நாங்கள் உட்கார்ந்திருப்போம். நாங்கள் கல்லின் மீது அமர்வதைப் பொறுக்க முடியாத கள்ளர்கள், "ஏன்டா! உங்க குண்டிக்கு உட்கார்ரதுக்கு உசரமான எடம் தேவைப்படுதா? போற போக்கப் பார்த்தா எங்களுக்குச் சமமா உட்கார்ந்திடுவிக போல இருக்கே' என்று கோபப்படுவார்கள். நாங்க வாங்கிப் போட்ட கல்லுல நாங்க உட்கார்ரதுல என்ன கஷ்டம் என்று கேட்டால் "எதிர்த்துப் பேசுரானுக பாரு, அவனுகள கட்டி வையுங்கடா' என்று அடிப்பதற்கு ஓடி வருவார்கள். இதுபோன்று வாக்குவாதம் ஏற்பட்டுப் பலறை தகராறுகளும் நடந்துள்ளன. இதற்குப் பயந்து அப்பட்டியல் கல்லைக் கீழே கிடத்திவிடலாம் என்று அப்பா உள்ளிட்ட பெரியவர்கள் முடிவு செய்ததுண்டு. அதன் பிறகு இரவு நேரத்தில்தான் நாங்கள் அப்பட்டியல் கல்லில் உட்காருவோம். பகலில் உட்காரப் பயப்படுவோம்.

கள்ளர்கள் வழிபடும் கோவில் பக்கம் அது காட்டுப் பகுதியாக இருந்தாலும், சேரி மக்கள் சுத்தபத்தமாகச் செல்ல வேண்டுமென்று ஆன்மீக நேர்மை பேசுவார்கள். ஆனால், காளியம்மன் கோவிலுக்குள் செருப்புக் காலுடன் நுழைந்து காசு வைத்து தாயம் போடுவது, சீட்டு விளையாடுவது போன்று பகல் முழுக்கச் சூதாடுவார்கள். மதுரை மேலூர் சாலையில் எங்கள் கிராமத்தையொட்டி அமைந்துள்ள முனிக்கோவிலுக்கு வேண்டுதல் செய்ய விரும்பும் சேரிமக்கள் மாலை சாத்தி, தேங்காய் பழம் வைத்து நேரடியாக நேர்த்திக் கடன் செய்ய முடியாது. பூசைப் பொருட்களுக்குரிய பணத்தை கள்ளர் சாதி கோவில் பூசாரியிடம்தான் கொடுக்க வேண்டும். கோவில் சுற்றுச் சுவருக்கு வெளியில் நின்றுதான் நாங்கள் கும்பிட வேண்டும். பூசாரி திருநீரு மட்டுமே கொடுப்பார்.

எங்கள் கிராமத்தில் கள்ளர், கோனார், ஆசாரி ஆகிய சாதியினர் உள்ளனர். இவர்களில் ஆண்களை அய்யா என்றும், பெண்களை ஆயா என்றும்தான் நாங்கள் அழைக்க வேண்டும். வயதின் அடிப்படையில் ஆண்களை மூத்தவரே, நடுவுளவரே, இளையவரே என்றும், பெண்களை பெரிய ஆயா, நடு ஆயா, சின்ன ஆயா என்றும் அழைக்க வேண்டும். இத்தகைய அழைத்தலுக்கு அவர்களின் பதில் என்னடா! ஏண்டி! என்பதாக மட்டுமே அமையும். வயதுக்கு மரியாதை என்பதெல்லாம் மேலூர் வட்டாரத்தில் ஒருவழிப் பாதைதான். தப்பித் தவறி கள்ளர்களை ஒருமையில் வா, போ என்று பேசிவிட்டால் (பேச முடியாது) அன்று மாலை பஞ்சாயத்து கூட்டப்படும். இடுப்புக்கு மேல் உடம்பில் துணியில்லாமல், ழங்காலுக்கு மேல் வேட்டியை மடித்துக்கட்டி, அந்த வேட்டி அவிழாமல் இருக்க அதன்மேல் துண்டைக் கட்டி, நெஞ்சில் மண் ஒட்டும்படி மூன்றுமுறை கும்பிட்டு விழுந்து கள்ளர்களின் விசாரணைக்குப் பதில் சொல்ல வேண்டும். விசாரணையின்போது அக்கா ஆத்தா என்கிற வசவுகள் கிடைக்கும். சில நேரங்களில் அடி, உதை விழும். அபராதம் போட்டால் அதைக் குறைக்கும்படி கோரி முழங்கால் தேய கும்பிட்டு விழ வேண்டும்.

குடும்ப வாழ்வில் எங்கள் சேரி மனிதர்கள் மிகவும் கண்ணியமானவர்கள். கொலை, கொள்ளை, திருட்டு, விபச்சாரம், சாராயம் காய்ச்சுதல் போன்ற குற்றச் செயல்களைச் செய்ததாக எமது சேரி மக்கள் மீது மேலூர் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவானதாகக் கூற முடியாது. காவல் நிலையத்திற்குச் செல்வதை எமது மக்கள் கேவலமாகக் கருதுவார்கள். இப்படிப்பட்டவர்கள், கும்பிட்டு விழும் தண்டனையிலிருந்து எவரும் தப்பவில்லை. என் அப்பா பலமுறை கும்பிட்டு விழுந்திருக்கிறார். இத்தகைய எனது கிராம வாழ்வின் இருண்ட காவியத்தை நான் விரிவாக எழுத இருக்கிறேன்.

நீங்கள் எப்படி மார்க்சியத்தின்பால் ஈர்க்கப்பட்டீர்கள்?

மதுரையில் மாமா வீட்டில் தங்கிப் படித்தபோதுதான் சிட்டாலாட்சி நகரில் ஒரு குடிசையில் தங்கியிருந்த தோழர் கே. ராஜ்குமார் (மறைவு) எனக்கு மார்க்சியத்தை அறிகப்படுத்தினார். அவரது வழிகாட்டுதலின்படியே மார்க்சிய லெனினிய நூல்களைப் படிக்கத் தொடங்கினேன். மதுரை நியூ செஞ்சு புத்தக நிறுவனத்தில் உறுப்பினரானேன். அப்போது சிவப்புப் புத்தகங்களை வெளிப்படையாகக் கையில் வைத்துக் கொண்டு செல்ல முடியாது. மார்க்சிய லெனினியக் கருத்துகளை மக்கள் மத்தியில் விதைப்பதற்குப் படித்த இளைஞர்களைக் கொண்ட ஒரு குழுவை ராஜ்குமார் உருவாக்கினார். அக்குழுவில் தோழர் பொதும்பு சோனை, தோழர் மதிவாணன், தோழர் கோபால கிருஷ்ணன், த. மு.எ.ச.வின் இன்றையப் பேச்சாளர் தோழர் கிருஷ்ண குமார் நான் உட்படப் பலர் இருந்தோம். மதுரை நகரின் மிகவும் பின்தங்கிய சில குடிசைப் பகுதிகளில் இளைஞர்களின் ஆதரவோடு தோழர் ராஜ்குமார் பட்டிமன்றங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்து எங்கள் குழுவை களமிறக்கினார். எங்கள் குழுவில் உள்ள அனைவரும் மார்க்சியத்தில் ஈடுபாடு கொண்டிருந்தபோதிலும், தோழர் சோனையும் நானும் நக்சல்பா இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டோம். இச்செய்திகள் விரிவாக எழுதப்பட வேண்டியவையாகும். கிராம வாழ்வில் நான் எதிர்கொண்ட பாடுகளை உணர்ந்து, அவைகளை எதிர்கொள்வதற்கான விழிப்பைப் பெறும் தளமாக மார்க்சியம் எனக்கு அமைந்தது. சேரிமனிதர்களில் மார்க்சியத்தை உள்ளீடாகக் கொண்டு இயங்கும் தோழர்கள், இந்துத்துவம் உள்ளிட்ட வரலாற்றுப் பகைமையை எதிர்கொள்ளும் தனித்த போக்கை, இன்று தமிழகம் கண்டு வியக்கிறது.

அய்யா பெரியார், மேலூர் பேருந்து நிலையம் அருகில் ஒருறை பொதுக் கூட்டத்தில் பேசியதைப் பார்த்ததாக எனக்கு நினைவிருக்கிறது. டவுசர் போட்ட வயசில் பார்த்த அந்த நிகழ்வை, என்னால் விளக்கமாகச் சொல்ல முடியவில்லை. எம்.ஜி.ஆர். படங்களை நான் விரும்பிப் பார்ப்பேன். அதன் தாக்கம் என்னை தி.மு.க. வின் அனுதாபியாக மாற்றியது. பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை வைத்தே தி.மு.க.வை அப்போது சாமி இல்லை என்று சொல்கிற கூட்டம் என்பதாக மக்கள் பேசுவார்கள். தி.மு.க. அனுதாபியாக இருந்த என்னைப் பார்த்ததும், "சாமி இல்லை என்று சொல்கிறவன் வருகிறான்' என்று கிண்டலடிப்பார்கள். அப்பாவின் காலத்தில் காங்கிரஸ் தி.மு.க. என்பதாகத் தமிழகம் பிரிந்து கிடந்தது. கிராமங்களை கள்ளர்கள் ஆளும் சூழலில் மேலூர் தனித் தொகுதியாகவும், கக்கன் அமைச்சராகவும் இருந்த நிலையில், கள்ளர்கள் காங்கிரஸ் கட்சி மீது மிகுந்த வெறுப்புக் கொண்டிருந்தார்கள். மேலும், சேரி மக்களுக்கும் தேவர்களுக்குமிடையே முதுகளத்தூரில் நடைபெற்ற சாதிப் போரையொட்டி, முத்துராம லிங்கத் (தேவரை) காமராசர் தலைமையிலான காங்கிரஸ் அரசு கைது செய்து சிறையிலடைத்தது. முத்துராமலிங்கம் மீது சாதி அபிமானம் கொண்ட காங்கிரஸ் கட்சி கள்ளர்கள் எல்லாம் காங்கிரசிலிருந்து விலகி, அக்கட்சியை ஒழிப்பதற்கானப் பிரச்சாரத்தில் இறங்கினார்கள். இத்தகைய எதிர்ப்பு, கள்ளர்களில் பெரும் பகுதியினரை தி.மு.க.வை நோக்கி நகர்வதற்கான நிர்பந்தத்தை ஏற்படுத்தியது. தி.மு.க. வழியே அய்யாவை அறிந்த நான், தி.மு.க.வில் ஒருபோதும் உறுப்பினராயிருந்ததில்லை. ஏனெனில், தி.மு.க. அப்போது மைனர்களையும், சாதிவெறியர்களையும் தலைவர்களாகக் கொண்டு வளரும் கட்சியாக இருந்தது.

அய்யா பெரியாரின் நூல்களை என்னிடம் கொடுத்து வாசிக்கத் தூண்டியவர், மறைந்த தோழர் மலைச்சாமி என்பது குறிப்பிடத்தக்கதாகும். என்னிலும் வயது குறைவுடைய அவர் "தலித் பேந்தர்ஸ் ஆப் இந்தியா' எனும் அமைப்பைத் தமிழகத்தில் நிறுவியவர். மலைச்சாமி மிகச் சிறந்த பெயார் கொள்கைப் பற்றாளர். மதுரை அவனியாபுரம் பெரியார் நகரை இருப்பிடமாகக் கொண்ட மலைச்சாமி, தமிழகத்தில் திராவிடர் கழகத்தை வேரூன்றச் செய்தவர்களில் ஒருவரும், தமிழக எண்ணெய் பலகாரக் கடைகளின் உரிமையாளரும், சேரி மக்களின் விடுதலையில் மிகுந்த அர்ப்பணிப்புடையவருமான அய்யா தேவசகாயம் அவர்களை அழைத்து, திராவிடர் கழகக் கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் நானும் ஒரு பேச்சாளராகப் பங்கேற்றேன். நான் பங்கேற்ற முதல் பகுத்தறிவாளர் கூட்டம் அதுதான். மதுரை மாவட்ட திராவிடர் கழகத்தின் இன்றைய தலைவர் தோழர் மகேந்திரன், உயர்நிலைப் பள்ளியில் என் வகுப்புத் தோழர். பெரியார் குறித்து அவர் எனக்கு நிறையச் சொல்லுவார்.

மேதை அம்பேத்கரை அவரது நூற்றாண்டு தினத்திற்குப் பிறகுதான் அறிய நேர்ந்தது. மதுரை தியாகராசர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில், காந்தி மியூசியம் நூலகத்தில் தனஞ்செய்கீர் எழுதிய அம்பேத்கர் வாழ்க்கை குறித்த நூலைப் பார்த்திருக்கிறேன். போதிய ஆங்கில அறிவு இல்லாத நிலையிலும், அம்பேத்கரைக் குறித்து அறியாத நிலையிலும் அந்நூலை நான் படித்ததில்லை. எங்கள் சேரிக்கு அம்பேத்கரை அறிகப்படுத்திய பெருமை, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பையே சேரும். அதே சமயம், தி.மு.க., அ.தி.மு.க. நுகத்தடிகளில் நீண்ட காலம் பிணைக்கப்பட்டிருந்த எமது மக்களை மீண்டும் மாட்டுவதற்கான திசையை நோக்கிச் செல்வது, அச்சத்தை அளிப்பதாக உள்ளது. மேற்கண்ட வரலாற்றை நான் பதிவு செய்யக் காரணம், எமது விடுதலைக் குரல் கலைக் குழுவின் இசைப் பயணத்தில் பங்கேற்கும் கலைஞர்கள் அனைவரும் பாட்டாளிகளாகவும், நாங்கள் விதைக்கும் பாடல்களும், செய்திகளும் சோசலிசத்திற்கான வர்க்க ஓர்மை, இந்துத்துவத்தை அழிப்பதற்கான அணிசேர்க்கை, பவுத்தத்தை முன் மொழிதல் போன்ற தத்துவப் பின்னணியோடு இயங்குவதற்கு அடித்தளமாக உள்ளது என்பதைப் பகிர்ந்து கொள்வதற்காகத்தான். இத்தகைய பின்புலத்தோடு கலைத் தளத்தில் மக்களிடமிருந்து நான் கற்ற அறிவையும் பெற்ற அனுபவத்தையும் பகிர்ந்து கொள்வது பொருத்தமாக அமையும் என்று நம்புகிறேன்.

தாங்கள் ஒரு இசைக் கலைஞராக உருவானது எப்படி?

Subbiah and Tholkappiyan
மனிதன் அழகியலின் பாதியாக இருக்கிறான். வாழ்வின் பன்முக நிலைகளில் மனிதனின் தொடர்ச்சியான இயங்குதலுக்கு கலை இலக்கியம் உந்து சக்தியாக அமைகிறது. குரலிசை, விரலிசை, ஆட்டம், நாடகம், கூத்து ஆகிய கலை வடிவங்கள் தமக்குரிய வடிவம், உத்தி, உள்ளடக்கம் ஆகியவற்றால் மனித குலத்தை மகிழ்விக்கிறது. உழைப்பை அடிப்படையாகக் கொண்ட மண்சார், மரபுசார் கலைகளைப் படிப்பது, பரப்புவது, தரவுகளைச் சேகரிப்பது, நிகழ்த்துவது, பாதுகாப்பது ஆகிய வேலைகள் மட்டுமே ஒருவனை கலைஞன் என்று அங்கீகப்பதற்கானத் தகுதியாகிவிட்டது. இது, படிப்பாளிகளின் பிழைப்புத் தொடர்பான பணிகளில் ஒரு பகுதி மட்டுமேயாகும். மேலும், தனது முன்னோர்கள் கலைஞர்களாக இருந்தார்கள் என்கிற "பரம்பரை பம்மாத்து' கலைத் தளத்தில் கூச்சமற்ற உரையாடலாக வெளிப்படுகிறது. பிரபுத்துவ வழிப்பட்ட இச்சிந்தனை, கலைத் தளத்தில் அதிகாரம் செலுத்துவதற்கான தந்திரமாகக் கையாளப்படுகிறது. மக்களை நேசிப்பதும், அவர்களின் பாடுகளுக்கான மூலங்களைக் கண்டறிவதும், அத்தடைகளை உடைப்பதற்கான கலை வடிவங்களைப் படைப்பதும், அதன் வழியே எதிர்கொள்ளும் விளைவுகளை மன உறுதியுடன் எதிர்ப்பதற்கானப் புரட்சிகரத் தத்துவத்தைப் பின்புலமாகக் கொண்டிருப்பவனையே கலைஞன் என்பதாக மக்கள் அங்கீகரிக்கிறார்கள்.

இத்தகைய அனுபவங்களோடு எப்படி ஒரு கலைஞனாகப் பணமிக்க நேர்ந்தது என்பதை இங்கே தான் பதிவு செய்ய விரும்புகிறேன். கலைத் தளத்தில் பாடல் எழுதுவது, பண்ணமைப்பது, பாடுவது, நாடகம் மற்றும் நாடக விமர்சனம் எழுதுவது போன்ற தளங்களில் நான் இயங்குவதற்கு, கடவுளோ அல்லது அது தொடர்பான மத நிறுவனங்களோ காரணமல்ல என்பதைச் சொல்வதில் எனக்கு எவ்விதத் தயக்கமில்லை. என்னிலிருந்து வெளிப்படும் கலை முயற்சிகள் அனைத்திற்கும் வேராய், விழுதாய் இருப்பவர்கள் எழுத்தறிவற்ற, பிறர் உழைப்பைச் சுரண்டாத தங்கள் எண்சாண் உடம்பை மட்டுமே நம்பிப் பிழைக்கிற தினக் கூலிகளான என் தாய் தந்தை போன்ற ஏழைகளான என் சக மனிதர்கள்தான். மண்ணின் கலைகளுக்கு இவர்கள்தான் அடித்தளம். வளர்ச்சி விதிகளைப் போலவே பாடற்தளத்தில் உழைக்கும் மக்களிடமிருந்து தொடர்ச்சியாக நான் கற்றுக் கொண்டவைகளை மூன்று நிலைகளில் வகைப்படுத்துகிறேன் : 1. பாடல் கேட்ட வரலாறு 2. பாடல் பாடத் தொடங்கிய வரலாறு 3. பாடல் எழுதத் தொடங்கிய வரலாறு என்பதாகும். வந்த வழிதான் செல்லும் வழிக்கானத் தொடர்ச்சியாகும்.

தந்தை பாடிய தாலாட்டுப் பாடல்

என் தந்தை ஓர் விவசாயத் தொழிலாளி. உழைப்பின் களைப்பை மறக்க இரவு நேரங்களில் நல்லதங்காள், அச்சந்திரன், கட்டபொம்மன், ஊமத்துரை, மதுரை வீரன் ஆகிய வரலாற்றுப் பாடல்களை எங்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து சிம்னி விளக்கின் ஒளியில் படித்து சத்தம் போட்டு இசையுடன் பாடுவார். பள்ளிப் பருவத்தில் இத்தகைய பாடல்களை, என் தந்தையின் அருகில் அமர்ந்து பாடக் கேட்டிருக்கிறேன். ஆனால், நான் கேட்ட முதல் பாடல் அதுவல்ல. எனது சின்ன அக்காள் பூச்சியம்மாளின் மூத்த மகன் கணேசன் மழலையாய் இருந்தபோது, என் தந்தை தாலாட்டுப் பாடியதைக் கேட்டிருக்கிறேன். பேரனுக்குத் தாலாட்டுப் பாடியவர், தன் சொந்த மகனுக்குத் தாலாட்டுப் பாடாமல் இருந்திருக்க நியாயமில்லை. தந்தை வழிச் சமூக அமைப்பில் ஆண் குழந்தைக்குரிய முக்கியத்துவம் குறிப்பாக ஒரே மகன் என்கிற நிலையில் காணப்படும் பெற்றோர்களின் மகிழ்ச்சியும் பல்வேறு பரிமாணங்களாக வெளிப்படும். உறக்கத்திற்கான ஓசையாகவும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் செய்தியாகவும் உழைப்பாளிகளுக்கேயுரிய இயல்பான உரத்த சத்தத்துடன் என்னைத் தூங்க வைக்கப் பாடிய தாலாட்டுப் பாடல்தான் உள்வாங்க இயலாத மழலைப் பருவத்தில் என் உடம்பைத் தாக்கிய, என் புலன்களைப் பரவசப்படுத்திய முதல் பாடல் என்று நம்புகிறேன்.

செல்வந்தர் குடும்பங்களில் குழந்தைகள் மகிழ்வுடன் தூங்குவதற்குத் தொட்டிலின் உச்சியில் பொம்மைகள், கிலுகிலுப்பான்களைக் கட்டித் தொங்கவிடுவார்கள். கண்கள் அழகிய பொருட்களைப் பார்க்கவும், காதுகள் தாலாட்டு இசையை ரசிப்பதற்குமான சூழலில், குழந்தைகள் சீக்கிரம் தூங்குவதற்கு இத்தகைய ஏற்பாடுகள் வசதியாக இருக்கும். ஆனால், சேரிக் குழந்தைகளோ கூரை வீட்டின் கடுகளில் அழுக்குப் படிந்துள்ள ஓட்டடையைப் பார்த்துக் கொண்டே தூங்கும் அவலம். தொட்டில் சேலையும் அடிக்கடி மாற்றப்படுவதில்லை. மூத்திரத் துணிகளில் படியும் கிருமிகளால் குழந்தைகள் நெளிந்து தூங்கச் சிரமப்படும் நிலை. இதுபோன்ற சூழல், தாலாட்டுப் பாடலுக்கான நோக்கத்தையே அர்த்தமற்றதாக்கி விடுகிறது. சிந்திக்கத் தொடங்கும் முன்பே சேரிக் குழந்தைகள், இதுபோன்ற பலவிதமான பாடுகளை எதிர்கொள்வது இன்றும் தொடர்கிறது.

இத்தகைய அவலச் சூழலில் வளரும் பல்லாயிரம் சேரிக் குழந்தைகளின் தாலாட்டுப் பாடல் கேட்டு வளர்ந்த குழந்தைகள், எண்ணிக்கையில் மிகமிகக் குறைவென்றே கருதலாம். வாய்ப்புப் பெற்ற குழந்தைகளில் நானும் ஒருவனாக இருந்தமைக்கு என் தந்தை மிகுந்த நன்றிக்குரியவராகிறார். குழந்தைக்குத் தாலாட்டுப் பாடுவது, பெற்ற தாயிடமிருந்து வெளிப்படும் வாய்மொழி இலக்கியம். மூடை நெல்லை முக்காமல் தூக்கும் உடல் வலிமை, நாலு குப்பம் நாற்று முடிச்சுகளை தலையில் சுமந்து முழங்கால் சேற்றுக்குள் பாய்ச்சல் வேகத்தில் நடக்கும் உரமேறிய கால்கள், நாற்று முடிச்சுகளை, நாற்பதடிக்கப்பால் விழும்படி வீச்சோடு எறியும் வாகான கைகள் என் அம்மாவுக்கு இயற்கை அளித்த கொடையாகும். இவ்வளவு வலிமையைத் தந்த இயற்கை, அவரை மொழியற்ற பெண்ணாக்கி இதன் வழியே தாலாட்டுப் பாடுவதற்கான திறனையும், அழகியலையும் தர மறுத்துவிட்டது.

- நேர்காணல் : அன்பு செல்வம்
பேட்டி அடுத்த இதழிலும் தொடர்கிறது

Pin It