திராவிடர் விடுதலைக் கழகத்தின் சேதுபாவா சத்திரம் ஒன்றிய அமைப்பின் தலைவர் அழகியநாயகபுரம் ப.அ. வைத்தியலிங்கம், அவர் நூறு வயதை நிறைவு செய்துள்ளார். அய்யா வைத்தியலிங்கம் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்று, கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை:

நூற்றாண்டு நிறைவு விழா காணும் விழா நாயகர், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சேதுபாவா சத்திரம் ஒன்றியத் தலைவர் அய்யா அழகிய நாயகிபுரம் ப.அ.வைத்தியலிங்கம் அவர்களே! அவரது வாழ்விணையர் காசியம்மாள் அவர்களே! பூரிப்போடும் பெருமிதத்தோடும் இவர்களுடைய நூற்றாண்டு விழாவை நடத்திக் கொண்டிருக்கும் அன்பிற்குரிய அம்மா மேகலை அவர்களே! இளையரசி அவர்களே! கோமதிஅவர்களே! அவரது அன்பு மகன் கலைநேசன்அவர்களே! அவர்கள் குடும்பத்தார்களே! இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கிற உறவினர்களே! நண்பர்களே! தோழர்களே! உங்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நாம் பெருமிதத்தோடு கலந்து கொண்டிருப் பதற்கான காரணத்தை பலரும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, பெரியார் இயக்கத்தினர் -பெரியாருடைய கொள்கையை ஏற்றுக்கொண்ட ஒருவர், கடவுள் நம்பிக்கையை புறம் தள்ளிய ஒருவர், கடவுள் நம்பிக்கை என்பது காலத்தை நீட்டிப்பதற்கு – வாழ்நாளை நீட்டிப்பதற்கு காரணமான ஒன்று அல்ல என்பதை மெய்ப்பித்து காண்பித்துள்ளார் என்று மகிழ்ச்சி கொண் டிருக்கலாம். அவர்களுடைய பிள்ளைகள், பெற்றோருடைய நீண்ட வாழ்வினை பற்றிப் பெருமைப்படுவார்கள். அவரோடு வாழ்ந்து இப்பகுதியில் இருக்கிறவர்கள் நம் பகுதியில் ஒருவர் இப்படி என்ற மகிழ்ச்சி இருக்கும். இதை எல்லாம் இந்த விழாவில் காணமுடிந்தது. இந்த நிலையில் பெரியாரியல் இயக்கத்துக்காரனாக நான் என் மனதில் பட்டதை சிலவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

வழக்கமாக பெரியார் இயக்கங்களில், குறிப்பாக இப்பொழுது எங்களுடைய திராவிடர் விடுதலைக் கழகத்தில், மேடைகளில் சால்வை போடுவதை ஏற்றுக் கொள்வதில்லை; வேண்டாம் என்று விட்டு விட்டோம். அது ஒரு சடங்காகிப் போய் விட்டது. துண்டு, சால்வை அணிவிக்கும் முறை எப்படித் தோன்றியது என்பதை எங்களுடைய பரப்புரை செயலாளர் பால்பிரபாகரன் சொன்னார். கானாடுகாத்தானில் ஒரு திருமண விழாவில், பெரிய நாதசுர இசைக் கலைஞர் மதுரை சிவக்கொழுந்து நாதசுரம் வாசித்துக்கொண்டு வருகிற போது, தோளிலே துடைப்பதற்கு போட்டிருந்த சிறு துணியை (அங்கவஸ்திரத்தை இடுப்பில் தான் கட்டியிருந்தார்) எடுத்துவிட்டுத் தான் அவர் வாசிக்க வேண்டும் என்று சொன்னபோது “கஞ்சன்” பெரியார், “அவர்கள் வேண்டாம் என்று சொன்னால் வரச்சொல், பணத்தை நாம் கொடுக்கலாம்” என்று சொல்லியிருக்கிறார். (அதுவும் எச்சரிக்கையாக சொல்லியிருக்கிறார்) வை.சு.சண்முகம் என்கிற மிகப் பெரிய பணக்காரரும் பெரியார் அருகில் இருந்திருக்கிறார். அழைத்து வாங்க, சண்முகம் என்ன கொடுக்காமலா போய்விடுவார் என்று சொல்லியிருக்கிறார். (பெரியார், தான் கொடுக்கிறேன் என்று சொல்லவில்லை) (சிரிப்பு.)

அப்படித் தான் முதலில் தோளில் துண்டு போடுகிற பழக்கம் தோன்றியது. பெரியார் இயக்கத்தில் மேடையில் மரியாதை செய்யப்படுகிறது என்று சொல்லி, துண்டு போடும் வழக்கம் தொடங்கியது. அது பெருமைக்குரியதாக பார்க்கப்பட்டது. தொடக்கத்தில் நம் எல்லோருடைய துண்டும் இடுப்பில் தான் இருந்தது. அக்கிரகாரத்திற்கு போகிற போது பெரிய ஜாதிக்காரன் துண்டும் இடுப்பில்தான் இருந்தது. தன்னை விட கீழ் ஜாதிக்காரன் தன் வீதிக்கு வருகிற போது துண்டை இடுப்பிலே கட்டிக்கொண்டு வா என்று அக்கிரகாரத்தில் இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு போனவன் சொன்னான். பிறகு அந்த துண்டு கக்கத்திற்கு வருவதற்கே ஒரு நூற்றாண்டு கடந்திருக்கும். பிறகு கக்கத்தில் இருந்த துண்டு தோளில் ஏறுவதற்கு பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தேவைப்பட்டது. அந்த பெருமையை பகிர்ந்து கொள்வதற்காக திராவிடர் இயக்கத்தைச் சார்ந்த எல்லோரும் துண்டணியத் தொடங் கினார்கள். வருவோர்க்கு எல்லாம் துண்டு அணிவித்து தான் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பழைய படங்களைப் பார்த்தால் தெரியும்; எம்.ஜி.ஆர். பழைய படங்களில் சட்டையும், பேண்டையும் போட்டு இன் பண்ணிக்கொண்டிருப்பார்; ஆனால் தோளில் துண்டு போட்டிருப்பார். துண்டு அணிய வேண்டும் - அந்த துண்டு அணிகிற உரிமை எங்களுக்கு ஏன் இல்லை என்பதை கேட்பதற்காகத் தான் அவ்வாறு அணியப்பட்டது. அந்த நினைவோடு அந்த சால்வையை அய்யாவுக்கு போட்டோம்.

பெரியார் தொண்டர்கள் நூற்றாண்டு என்கிறபோது சிலர் சொல்லுவார்கள், எங்களிடம் கூட கேள்வி வைத்ததுண்டு. சங்கராச்சாரி 101 ஆண்டு இருந்தார்; பெரியார் 95 வயதில் செத்து போய்விட்டார் என்று சொல்வார்கள். ஏன், பெட்ரடண்ட்ரசல், கடவுள் இல்லை என்று சொல்லியவர் மட்டுமல்ல, நாத்திக சங்கத்தை நடத்தியவர் 101 ஆண்டுகள் வாழ்ந்துதான் இறந்தார். இன்னொன்று, சங்கராச்சாரியார் 100 ஆண்டு இருந்தார்; பெரியார் 95ஆண்டுகள் வாழ்ந்தார். (கை தட்டல்) இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது. அவர் இருந்தார்; இவர் வாழ்ந்தார். பெரியார் மக்களோடு பேசினார், கடைசி நாளுக்கு (சாவதற்கு) நான்கு நாள்களுக்கு முன்புகூட பொதுக்கூட்டத்தில் பேசினார். அதுபோன்ற பெருமை தான் அய்யா வைத்திலிங்கம் அவர்களுக்கும். நூறாண்டு இருக்கிறார் என்பதும், வாழ்கிறார் என்பதும் அதை விடப் பெருமை. மகிழ்ச்சி. ஆனால், அய்யா மகிழ்ச்சியுடன் இருப்பார் என்று எங்களுக்குப் படவில்லை; என்னடா இவ்வளவு நேரம் ஒரே இடத்தில் கட்டி போட்டு விட்டார்களே என்று எரிச்சலோடு தான் இருப்பார் என்றே புரிந்து கொள்கிறேன். இவ்வளவு நேரம் தோட்டத்திற்கு போகாதது - வீட்டில் இருந்தது இன்றாகத்தான் இருக்க முடியும் எங்களை பொருத்தவரைக்கும். எப்பொழுது வந்தாலும் தோட்டத்திலிருந்து வந்துதான் எங்களை சந்திப்பார். ஒருவேளை முன்னரே சொல்லியிருந்தால் வீட்டில் இருப்பார். அப்படிப்பட்ட ஒருவர் இருக்கிறார் என்ற மகிழ்ச்சியில் வாழ்கிறார் என்ற மகிழ்ச்சி, அதை விட மகிழ்ச்சி. பயனுள்ள வாழ்வை வாழ்ந்திருக்கிறார். வாழ்வது கூட வாழ்ந்திருக்கலாம்; நடமாட்டத்தோடு வாழ்ந்திருக்கலாம். அதை விட சிறப்பு, பொது வாழ்க்கையில், பயனுள்ள பொதுநல வாழ்வை, தொண்டற வாழ்வை வாழ்ந்திருக்கிறார் என்பது. அவருடைய சிக்கனத்தை எல்லாம் சொன்னார்கள்.

அதே சமயம் இரண்டு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்கள் சில செய்திகளைச் சொன்னார்கள். அவர் பள்ளிக்காக எவ்வளவு உதவியிருக்கிறார் என்று. இந்த மருத்துவமனைக்கு 2ஙூ ஏக்கர் நிலம் வழங்கியதை, செய்த உதவிகளை எல்லாம் சொன்னார்கள். இதை பெரியாருடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். பெரியார் அப்படித்தான் இருந்திருக்கிறார். பள்ளத்தூரில் அமைந்திருக்க வேண்டிய ஆரம்ப சுகாதார நிலையம் இந்த ஊருக்கு வந்ததற்குக் காரணம் இவர் கொடுத்த நிலத்தின் காரணமாகத்தான் என்று சொன்னார்கள். அதுபோலவேதான் பெரியார் வாழ்க்கையிலும். அப்போது ஈரோடு, கோவை மாவட்டத்தில் இருந்தது. கோவை மாவட்டத் தலைமை மருத்துவமனை, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக மாற்றப்பட்ட போது, மாவட்ட மருத்துவமனையை எங்கே கொண்டு போவது, ஈரோட்டிற்கா, திருப்பூருக்கா என்ற கேள்வி எழுந்த போது, அப்போது ஒரு இலட்சம் எந்த ஊர் தருகிறதோ, அந்த ஊருக்கு கொண்டு போவது என்று அரசினர் கூறினர். அப்போது ஈரோட்டின் சில செல்வந்தர்கள் சேர்ந்து பெரியாரிடம் வருகிறார்கள். நாம் நூறு பேர் சேர்ந்து, 1000 ரூபாய் வீதம் போட்டு, ஒரு லட்ச ரூபாய் கட்டிவிட்டால் ஈரோட்டிற்கு மாவட்ட தலைமை மருத்துவமனை வந்துவிடும் என்று பெரியாரிடம் கேட்கிறார்கள். வந்தவர்களில் ஒரு செல்வந்தரைப் பார்த்து, ‘எதுக்கு ஆளுக்கு ஆயிரம்? நீங்கள் ஒருவர் ஒரு இலட்சம் தரமுடியாதா?’ என்று பெரியார் கேட்டாராம். இல்லைங்க என அவர் நெளிந்தாராம் அவ்வளவு பெரிய பணக்காரர். பெரியார் சொன்னாராம்… ‘வசூல் எல்லாம் வேண்டாம்; நான் ஒரு இலட்சம் ரூபாய் தருகிறேன்; ஈரோட்டிற்கு மருத்துவமனை வரட்டும்’ என்று. ஒரு இலட்சம் ரூபாயை உடனே எடுத்து பெரியார் கொடுத்தார். பெரிய பணக்காரர்கள் “ஆயிரம் ஆயிரம் நூறு பேர் போடலாம்” என பெரிய சாதனை போல் செயல் திட்டமாக கொண்டு வந்தபோது, ‘கஞ்சன்’ பெரியார் “இதை ஏன் எல்லோரிடமும் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் ? ஒன்று நீ கொடு இல்லை நான் தருகிறேன்” என கொடுத்து விட்டார்.

பின்னர் ஒருமுறை திருச்சியில் உள்ளவர்கள் எல்லாம் குழந்தைகளுக்கான தனி மருத்துவமனை இல்லை, அவ்வாறு ஒரு கட்டிடம் கட்ட வேண்டும், அதற்கு அரசிடம் மக்கள் பங்காக ஒரு இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். பெரியார் திருச்சி குழந்தைகள் மருத்துவமனைக்கென ஒரு இலட்சம் அப்போது தந்தார். இன்றும் அந்த குழந்தைகள் பிரிவு கட்டிடம் பெரியார்-மணியம்மை குழந்தைகள் பிரிவு என இருப்பதைக் காணலாம். அதுமட்டுமல்ல தோழர்களே, திருச்சியில் சில பேர் வந்து அய்யாவிடம், “இங்கு அரசு கல்லூரிகளே இல்லை. ஜமால் முகமது கல்லூரி இருக்கிறது; செயிண்ட் ஜோசப் கல்லூரி இருக்கிறது; நேஷனல் கல்லூரி மூன்று தான் இருக்கின்றன. செயிண்ட் ஜோசப் கல்லூரி கிறித்துவ கல்லூரி; ஜமால் முகமது கல்லூரி இசுலாமியக் கல்லூரி; நேஷனல் கல்லூரி பெத்தாச்சி செட்டியார் கட்டியது - ஆனால் இப்போது பார்ப்பான் கல்லூரியாக மாறி விட்டது - அவன் கைக்கு போய் விட்டது. கட்டிய குடும்பத்தினர் எவரும் கல்லூரி பொறுப்பில் இல்லை. பார்ப்பனர் கைப்பற்றிக் கொண்டனர். அரசு கல்லூரி ஏதும் இல்லை. எனவே, சாதாரண உழைக்கும் சமுதாயப் பிள்ளைகள் சேர்ந்து படிப்பதற்கு வாய்ப்பே இல்லை. குறைந்த பட்சம் நீங்களாவது ஒரு கல்லூரி கட்டுங்கள்” என்று பெரியாரிடம் கேட்கிறார்கள்.

“இந்த கல்லூரி கட்டுவது எல்லாம் எனக்கு வேண்டாம். அது என் இயக்க வேலையை கெடுத்து விடும்” என்று கூறிவிட்டு, பெரியார் கேட்கிறார் திரு. சுந்தரவடிவேலுவிடம், “அரசே கல்லூரிக் கட்ட என்ன பண்ணனும்?” என்று. “ஒரு ஐந்தரை இலட்சம் பணம் அரசிடம் செலுத்த வேண் டும்” என்று அவர் கூறுகிறார். பெரியார் தமிழக அரசுக்கு சொன்னார், “நான், 5ஙூ இலட்சம் பணம் கொடுக்கிறேன்; நீங்கள் கல்லூரி கட்டிக் கொள்ளுங்கள்.” இது 1966-இல். பக்தவச்சலம் முதல்வராக இருந்த காலத்தில் கொடுத்தார்; அது தான் பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி என்று இருக்கிறது. அது பெரியார் கல்லூரி என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். அந்த கல்லூரிக்கு பெரியார் பணம் கொடுத்ததால் பெரியார் பெயர் வைத்திருக்கிறார்கள். (அவ்வாறு பெரியார் பணத்தில் கட்டப்பட்ட கல்லூரித் திறப்பு விழாவில் அது அரசு விழா என்று காரணம் கூறி பெரியாரை அந்நிகழ்ச்சியில் பேசக்கூட அனுமதிக்கவில்லை என்பது ஒரு தனி செய்தி) அப்படி ’கஞ்சன்’ பெரியார் தான் ஐந்தரை இலட்சம் பணத்தைக் கொடுத்து கல்லூரியைக் கட்ட சொன்னார். பயனுள்ளதற்கு செலவு செய்யலாம்; பயனற்ற செலவு செய்யக் கூடாது.தேவைக்கு மேல் செலவு செய்வது ஊதாரித் தனம். தேவைக்கே கூட செலவு செய்யாததுகருமித்தனம். தேவைக்கு மட்டும் செலவு செய்வது சிக்கனம். இதை தான் பெரியாரும் செய்திருக்கிறார்; பெரியார் தொண்டர் அடய்யா வைத்திலிங்கமும் செய்திருக்கிறார்.

கல்வியும் மருத்துவமும் தான் மக்கள் சமுதாயத் திற்கு மிகவும் அடிப்படை தேவையானவை. 1990 களில் அரசாங்கம் உலகமயமாக்கல் கொள்கையை ஏற்றதால், கல்வி, மருத்துவம் இரண்டையும் அரசாங்கம் செய்யக்கூடாது என்கின்றன உலகவங்கி போன்றவைகள். அவர்கள் கடன் தருவதற்கு முன்வைக்கிற நிபந்தனைகள் ஒரு காரணம். ஒருவர் கடன் வாங்குவதாக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கல்யாணத்திற்கு கடன் வாங்குகின்றீர்கள். ஒரு இலட்சம் கடன் கொடுங்கள் வட்டியுடன் திருப்பித் தருகிறேன் என்கிறீர்கள். தருகிறேன். நீ 30 பேருக்குத் தான் சோறு போட வேண்டும் என்றோ, 300 பேருக்குத் தான் போட வேண்டும் என்றோ, ஒரு பொரியல் தான் வைக்கணும் என்றோ கடன் கொடுப்பவன் சொன்னால் உங்களுக்குக் கோபம் வரவேண்டும் அல்லவா? இதையெல்லாம் ஏன் என்னிடம் சொல்கிறீர்கள்? நீங்கள் கடன் கொடுக்கிறீர்கள்; நான் வட்டியுடன் திருப்பித் தருகிறேன் அவ்வளவுதான், அதற்குமேல் எதற்கு இவ்வாறான வீண்சொற்கள் என்றுதானே கோபிப்பீர்கள்? இப்படித்தான் உலக வங்கியில் கடன் கொடுக்கும் போது சொல்கிறான். இந்தியா கடன் கேட்கிறது. கடன் கொடுங்கள். பள்ளிக்கூடம் கட்டணும் என்று. உலக வங்கிகள், கடன் கொடுக் கிறோம், ஆனால் மருத்துவத்திற்கு செலவு செய்யக் கூடாது. கல்விக்கு செலவு செய்யக்கூடாது. வேளாண்மைக்கு, விவசாயத்திற்கு கொடுக்கிற மானியத்தை இரத்து செய்து விட வேண்டும் அரசாங்கங்கள் கண்டபடி செலவு செய்கிறீர்கள்; விவசாயத்திற்கு மானியம் கொடுக்கிறீர்கள்; அவை யெல்லாம் கூடாது என்கிறான். விவசாயத்தைவிட தொழிலதிபர்களைப் பற்றி தான் நமது மந்திரிகளுக்கு அதிக கவலை. சரிங்க, நாங்கள் விவசாயத்திற்கு கொடுக்கிற மானியத்தை எல்லாம் இரத்து செய்து விடுகிறோம் கல்வியைத் தனியாருக்கு கொடுத்து விடுகிறோம். மருத்துவ மனையும் அவர்களிடமே கொடுத்து விடுகிறோம். நாங்கள் இனி மருத்துவமனை, பள்ளிக்கூடம், கல்லூரி எல்லாம் கட்ட மாட்டோம் என்ற நிலைக்கு இப்பொழுது அரசினர் வந்து விட்டார்கள்.

வெளிநாட்டுக்காரர் நிபந்தனை களுக்குப் பணிந்து போகிறார்கள் நம் ஆட்சி யாளர்கள். எனவே கல்வி மருத்துவம் போன்ற சேவைகளுக்கு அரசு செலவு செய்யக்கூடாது என்று வந்து விட்ட பின்னால் முழுக்க முழுக்க அரசு மருத்துவமனையில் தருகிற மருத்துவத்தின் தரம் மருத்துவம் பெறாமல் விட்டு விடலாம் என்ற நிலைக்கு போய்விட்டது. எனவே இப்படிப்பட்ட அரசு மருத்துவமனையோ அரசு பள்ளிகளோ அதை காப்பாற்ற வேண்டியது அதை ஒழுங்காக நடைபெறச் செய்ய வேண்டியது நம் கடமை. சமூக அக்கறை உள்ளவர்கள் கடமை அது. நாம் தான் அதை செய்ய வேண்டும். இல்லை என்றால் சாமானிய மக்களுக்கு கிடைக்காது. எங்கள் கலை நிகழ்ச்சியில் சொல் வார்கள். “எப்பங்க பிரசவம் ஆகும்? வலிச்சா பிரசவமாகும்” என்று கொஞ்சம் அமைதியாக நின்று விட்டு, “தனியார் மருத்துவமனையா ?” என்று கேட்பார். “அரசு மருத்துவமனை என்றால் வலித்தால் பிள்ளை பிறக்கும்; தனியார் மருத்துவமனை என்றால் கிழித்தால்தான் பிள்ளை பிறக்கும்” என்பார். தனியாரிடம் எதுவானாலும் ஆபரேசன் தான். எனவே இப்படி எல்லாம் போன பின்னர் நமக்கு மருத்துவம் எட்டாத ஒன்றாக மாறிவிடும். நம்மால் மருத்துவம் செய்து கொள்ள முடியவில்லை என்ற நிலை வருகிற போது, இவர்கள் செய்த சிறந்தகொடைகள், மருத்துவமனை இந்த பகுதியில் வருவதற்கு நன்கொடைக் கொடுத்தார் என்று சொல்கிறபோது நெஞ்சம் நிறைத்து பாராட்ட வேண்டும். அப்படிப்பட்ட முயற்சி, அந்த எண்ணம் யாருக்கெல்லாம் வரும் என்றால் இப்படிப்பட்ட சமூக அக்கறையுள்ள இயக்கத்தை சார்ந்தவர்களுக்குத் தான் வரும். அது பெரியார் இயக்கம் மட்டுமல்ல.

எந்த இயக்கம் என்றாலும் சரி. நம்மவர்கள் 100 ஆண்டு ஆயுளை நினைத்ததே இல்லை. எப்பொழுதும் நினைத்தது இல்லை. மனிதன் 60 ஆண்டுகள்தான் இருப்பான் என்று உறுதியாக நம்பினார்கள். அதனால் தான் ஆண்டுக் கணக்கே 60 என்று வைத்துக் கொண்டார்கள். தமிழ் ஆண்டு என்று சொல்வார்கள். அதன் பெயர்களில் ஒன்று கூட தமிழ் இல்லை. பிரபவ, விபவ,சுக்கில, பிரமோதுத, இதில் எது தமி? தமிழே இல்லை. இது தமிழாண்டு. எப்படியானாலும் 60 தான் வைத்திருந்தார்கள். கரவருஷத்தில் பிறந்தால், இன்னொரு கர வருஷத்தில் அவருக்கு ஒரு வயது என்றா கணக்கு போடுவீர்கள்? 60 ஆண்டு சுழற்சி முறையை வைத்தார்களே அன்றி தொடர் ஆண்டு நம்மிடமில்லை. தொடர் ஆண்டை வள்ளுவரை வைத்து, தை முதல் நாளை புத்தாண்டு என நாம் வைத்தோம், அதை ஒழிச்சாங்க. எப்படியோ ஒரு தொடர் ஆண்டு முறை இப்பொழுது இருக்கிறது. அப்பொழுது இல்லாமல் இருந்ததற்குக் காரணம் 60 வருஷத்துக்கு மேலே மனிதன் இருக்க மாட்டான் என்று நினைத்தார்கள். இப்படிப்பட்ட நம்பிக்கை இருந்த நாட்டில் அய்யா 100 ஆண்டுகளைக் கடந்துள்ளார்.

நம்மை அறியாமல் நம்மை அடிமைப்படுத்து கின்ற இந்து மதத்திற்கு எதிரானவர்கள் தான் பெரியார் இயக்கத்துக்காரர்கள். மதத்துக்கு அல்ல. மதவாதி களுக்கு எதிரானவர்கள். மத நம்பிக்கையாளர்களுக்கு எதிராக என்றுகூட இல்லை; மதவெறியர்களுக்கு எதிரானவர்கள். என்னுடைய கடவுளை நான் வணங்குகிறேன் என்பது மத நம்பிக்கை; என்னுடைய கடவுளைத்தான் அனைவரும் வணங்க வேண்டும் என்பது மதவாதம். ஆனால் அந்த இந்து மதம் போதித்தவை நமது மூளையில் நிறைய ஏறிப்போச்சு. அய்யா வைத்திலிங்கம் அவர்களை வாழ்த்துகிற போது ஒருவர் சொன்னார், “திரைகடல் ஓடியும் திரவியம் தேடினார்” என்று, இது இந்து பண்பாடல்ல.

இந்து பண்பாடு என்பது கடலைத் தாண்டினால், மதத்தை விட்டு தள்ளி வைத்து விடுவார்கள், சாதியை விட்டுத் தள்ளி வை, சமுதாயத்தை விட்டு விலக்கி வை என்று சொன்னார்கள் இந்து மதத்தில். அப்பொழுது எல்லாம் கடல் தாண்டி விட்டு வரமுடியாது. தள்ளி வைச்சிருவான். ஆனால் தமிழர் பண்பாடு அப்படி யல்ல. திரைகடல் ஓடியும் திரவியம் தேடலாம். நமது இலக்கியத்தில் கூட நய்தல் திணை என்று வைத்திருந் தார்கள். ஒருவர் கல்விக்குப் போகலாம். தூதுக்குப் போகலாம். போருக்குப் போகலாம் கடல் கடந்து போகலாம். நமக்கே ஒரு திணை. நெய்தல் திணை என்ற ஒன்று இருந்தது. அதை பிரிவு என்ற அடிப் படையிலே ஏராளமாக இலக்கியம் படைத்த தமிழ் சமுதாயத்தில், கடல் தாண்டினால் குற்றம் என்கிற இந்து மதத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறோம். சங்கராச்சாரி கடல் தாண்டி போகக்கூடாது என்று சங்கரராமன் வழக்குப் போட்டார். சங்கராச்சாரி கடல் தாண்டி சீனாவிற்கு போகலாம்னு நினைச்சாரு. கடல் தாண்டக் கூடாது என்று வழக்கு போட்டார். வழக்குப் போட்டவரது வாழ்வு முடிந்து விட்டது. வழக்கு முடியவில்லை. ஆனால் இவர் திரை கடல் ஓடி திரவியம் தேடி வந்தவர், வந்தபின் அதை மக்களுக்கு பயன்படுத்தியவர்.

அடுத்து இப்போது மேடையில் நடந்த நிகழ்ச்சிகளைப் பார்த்தோம், கொள்கை உறுதியைக் காட்டினார். கொள்கைக்கு விரோதமான ஒன்றை அனுமதித்தார். பார்த்துக் கொண்டிருந்தோம். பல பேர் காலில் விழுந்தபோது தடுத்துப் பார்த்தார், முடியவில்லை. போ எத்தனை தடவை நான் குனிந்து நிமிர்ந்து கொண்டிருப்பது என்று இயலாமையால் விட்டு விட்டார். ஆனால் ஒருவர் குங்குமத்தை அவரது துணைவியாரின் நெற்றியில் வைக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் அய்யா அவர்கள் தொடவே இல்லை. முடியாது என்று மறுத்தார். இந்த சினிமா வந்து, சின்னத் திரையும், பெரிய திரையும் இரண்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். தாலிக்கு பேக் ரவுண்ட் மியூசிக் கொடுக்கும் போது அணுகுண்டுக்கு கொடுக்கிற மாதிரிதான் பின்னணி இசைக் கொடுப்பான். இன்னொன்று குங்குமம். நமக்கு குங்குமம் எல்லாம் தெரியாது. கருவேலங்காய் என்பதை உரசி, கருப்பு பொட்டுதான் நாம் வைத்துக் கொண்டிருந்தோம். குங்குமம் அண்மையில் தான் வந்தது.

குங்குமம் தமிழ்ப் பண்பாடு என்பார்கள். என்ன தமிழ்ப் பண்பாடு? இதற்கு முன் எங்கிருந்தது தமிழ்ப் பண்பாடு? சும்மா இப்படி எல்லாம் கொண்டு வந்து திணித்துக் கொண்டிருக்கிறான் நம்மீது. நாமும் அதை ஏற்றுக் கொண்டோம். முன்பெல்லாம் கிராமங்களில் பேசிக் கொள் வார்கள். “பையன் எப்படி இருந்தாங்க? நல்லா இருந்தான், சும்மா கர்லாக் கட்டை மாதிரி – கருங்காலி மாதிரி இருப்பான், கருகருன்னு கருநாகப் பழம் மாதிரி இருப்பான்” என்று சொல்வார்கள். ஆனால் இப்போது கருப்பு என்றால் அசிங்கம் என்று நம்மை நம்ப வைத்துவிட்டானே. ஆப்பிரிக்காவில் இயக்கம் தொடங்கினார்கள்; அமெரிக்காவில் ((Beauty Beyond Colour)) என்ற அமைப்பு வைத்தார்கள். ‘வண்ணங்களை கடந்த அழகு’ என்று சொன்னார்கள். கறுப்பை அப்படிச் சொன்னார்கள். இப்ப “பிளாக் இஸ்” பியூட்டி (black is beauty) என்று மாற்றிக் கொண்டார்கள். ஏன்? எங்கள் நிறம் எப்படி அழகு இல்லாமல் போகும் என்று கேட்பது, தன்னம்பிக்கையை ஊட்டுவது. ஆனால் நம்மவர்கள் எப்படி ஆகி விட்டார்கள்? சிவப்புதான் அழகு என்கிறார்கள். எல்லாம் வெளிநாட்டுக்காரன் திணித்தது தான்.

இந்து மதம் என்று ஆரியர் என்று வந்த வெளி நாட்டுக் காரர்கள் திணித்த மாதிரி. அதனால்தான் சிவப்பு அழகுக்கு நிறைய விளம்பரம் வருது: விற்பனை நடக்கிறது. நம்ம நிறம் என்னடா என்று எண்ணிக் கொள்ளாமல் நம்மீது பலவற்றை திணித்தார்கள். நாம் ஏற்றுக் கொண்டோம். அடிமையாகிப் போனோம். அடிமைப்படுத்தும் பண்பாட்டிலிருந்து மீட்டவர் தான் பெரியார். மீளச் செய்ய, இந்து மடத்தனத்தை விட்டு, ஆரியப் பண்பாட்டு ஆதிக்கத்தில் இருந்து வெளியே வாருங்கள் என்றவர் பெரியார். ஒரு ஆணுக்குக் கல்வி கொடுப்பது ஒரு தனி மனிதனுக்குக் கல்வி கொடுப்பது, ஒரு பெண்ணுக்குக் கல்வி கொடுப்பது, ஒரு குடும்பத்திற்குக் கல்வி கொடுப்பது - என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி யுண்டு, பெரியாரும் பெண் கல்வியை வலியுறுத்தினார் பெண் விடுதலைக்காக. அய்யா வைத்திலிங்கம் அவர்களின் மகன் பட்டப் படிப்போடு இருக்க, அவர்களின் மூன்று பெண் மக்களுக்கும் முதுகலைப் பட்டமும், அதற்கும் மேலாகவும் கல்வியைக் கொடுத்திருக்கிறார் என்பது பெரியாரை அவர் சரியாகப் புரிந்துகொண்டுதான் பின்பற்றியிருக்கிறார் என்பதையே காட்டுகிறது.

ஒரு பெரியாரியல்வாதியாக அவரது தனிப்பட்ட வாழ்வில் நான் பார்த்ததை சொல்கிறேன். நம் தோழர்கள் திருவேங்கடம், கண்ணன் போன்றோரெல்லாம் அவரிடம் இயக்கக் கூட்டங்களைப் பற்றி சொல்ல மாட்டார்கள். ஏன் சொல்ல மாட்டார்கள் என்றால் அவரிடம் சொன்னால் வந்து விடுவார், அவரை தொல்லைப் படுத்த வேண்டாம் என்று. அவர் ‘டி.வி.எஸ் 50’ வண்டியை எடுத்துக் கொண்டு வந்து விடுவார் எங்கே என்றாலும் வந்து விடுவார். இரவு கூட்டம் முடித்து திரும்பி வருவார். எனவே நிகழ்ச்சி முடிந்த அடுத்த நாள் தான் போய், “அய்யா நேற்று கூட்டம் நடந்தது” என்று சொல்வார்கள். அவர் கோபித்துக் கொள்வார். இப்போது கடந்த மாதம் கூட தோழர் பெரியசாமி அவர்கள் தந்தையாரின் இறப்புக்காக அவரது இல்லத்திற்கு வந்தபோது அய்யாவே வண்டியிலே வந்து விட்டார் அங்கே. ஒரு இடத்திற்கு போகிறபோது, ஒரு தோழரை நீங்கள் பின்னால் உட்காருங்கள், உங்களுக்கு வழி தெரியாது என்று டி.வி.எ° 50-ல் டபுள்° வைத்து ஓட்டுகிறார். இது ஒரு மாதத்திற்கு முன்பு நடந்தது. அய்யா அவர்களது தூய்மையான வாழ்க்கை நெறிகளைப் பற்றி, அவரிடம் எந்தவிதமான தேவையற்ற பழக்கங்களும் இல்லாததைப் பற்றியெல் லாம் சொன்னார்கள். ஒருவர் சொல்வதைவிட, நடந்து காட்டுவதுதான் அதிக பலனைக் கொடுக்கும். அதற்கு அய்யா ஒரு நல்ல எடுத்துக்காட்டு. நான் எங்களுடைய தோழர்களிடம் பேசும்போது சொல்லுவேன்.

நீங்கள் ஐந்தாண்டுகளாக இருக்கும் சிகரெட் பழக்கத்தை, பழகிவிட்டது விடமுடியவில்லை என்கிறீர்கள்; மதுப் பழக்கத்தை மூன்றாண்டுகளாக பழகிவிட்டோம் விடமுடியவில்லை என்கிறீர்கள், ஆனால், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நம்பிக் கொண்டிருக்கும் கடவுள் நம்பிக்கையை விடச் சொல்கிறோம். ஆயிரம் ஆண்டுகளாக நம்பிக் கொண்டிருக்கும் ஜாதியை விடச் சொல்கிறோம். ஐந்து வருட பழக்கத்தை விட முடியாத நாம் போய் ஆயிரமாண்டு கால கடவுள் நம்பிக்கையையும், நூற்றாண்டுகளாய் நம்பும் ஜாதியையும் விட்டுவிடச் சொல்வதில் நமக்கு என்ன தகுதி இருக்கிறது என்று யோசித்து பாருங்கள். சில ஆண்டுகளாக பழகியதை விட்டு ஒழித்துவிட்டுப் பேசினால் தான் சரியாக இருக்கும். அப்படிப்பட்ட பழக்கத்தை தன்னிடம் வைத்துக் கொள்ளாமல் அய்யா விட்டுவிட்டுத் தான் பலவற்றை சொல்லி கொண்டிருக்கிறார். மருத்துவ குறிப்பு எல்லாம் அய்யாவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்று சொன்னார்கள். அவர் எளிமையான குறிப்பை சொல்லி விட்டார். பசித்தப் பின்புதான் சாப்பிடுவது என்று.

பெரியாரிடம் கேட்டார்கள். 1970 ம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் 92 ஆம் ஆண்டு பிறந்த நாள். அப்போது சேலத்தில் சிலை அமைக்கப் பட்டது. அப்பொழுது மத்திய அமைச்சராக இருந்த சந்திர சேகர் (அவர்தான் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை கொண்டு வந்தவர்.) ஆனால் அதற்கு முன்பே 1928 ஆம் ஆண்டு முதலாக பெரியார் பரப்பியது பல பேருக்குத் தெரியாது. 1928 ஆம் ஆண்டே பெரியார் பேசத் தொடங்கி 1930 இல் ‘கர்ப்பஆட்சி’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். தேவையற்ற குழந்தைகளை ஏன் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கு பெண்களுடைய விடுதலை என்பது குழந்தை பேற்றில் தான் முடக்கப்பட்டு விடுகிறது என்பதை எல்லாம் பெரியார் சொன்னார். எப்படி யிருந்தாலும் அவர் பேசினார். அந்நிகழ்ச்சியில் பேசுகிறபோது டாக்டர் சந்திரசேகர் சொன்னார் ஆங்கிலத்தில் பேசினார். 90 year youth என்று ஆரம்பித்தார். 90 year old என்று சொல்வார்கள்அல்லவா, அதை 90 years youth என்று சொன்னார். அப்படிப்பட்ட பெரியாரை நான் கேட்டேன் உங்கள் இளமைக்கான இரகசியம் என்ன என்று கேட்டேன். அப்போது அவர் சொன்னார். “கொஞ்சம் சோறு, நிறைய கறி” என்றாராம். உணவுமுறை பற்றிக் கேட்ட போது என் நாவிற்கு பிடிக்காததை சாப்பிட மாட்டேன் என்றுகூட சொல்லாமல் என் மூக்கிற்கு பிடிக்காததை மட்டும் சாப்பிட மாட்டேன், அவ்வளவு தான். மற்றவற்றை எல்லாம் சாப்பிடுவேன். இவ்வளவு தான் என் உணவு முறை என்று சொன்ன தாக சொன்னார்.

ஆனால் அய்யா வைத்திலிங்கனாரின் உணவு முறை. பசித்தபின் உண்பது இதை வள்ளுவனும் சொன்னான். விவேக சிந்தாமணியிலும் சொல்லி இருந்தது. அதை நாம் பேணுவது. இப்போது தேவையாகிவிட்டது. இப்பொழுது மருத்துவத்திற்கு ஆகும் செலவைப் பார்த்தால் நாம் உடல் நலத்தை பேணியாக வேண்டும் நம்மை நாமே. செயற்கையாக. சிலவற்றை நம்பிக் கொண்டு சிலவற்றை பின்பற்றி பலவற்றை விட்டுவிட்டோம். நமக்கு சொந்தமான பலவற்றை விட்டுவிட்டோம். தஞ்சை மாவட்டத்துக்காரர்கள் நெல்லைப் பற்றி முன்பே அறிந்திருந்திருக்கலாம். எங்கள் சேலம், கோவை பகுதிகளில் நெல் எல்லாம் இல்லாத காலம். காவிரி பாசனம் வந்த பிறகு அங்கும் நெல் வந்திருக்கலாம். ஆனால் அப்பொழுது நெல் இல்லாத காலம். சட்டமன்றத்தில் ஒரு முறை கோவை மாவட்டத்தைச் சார்ந்த காங்கிரஸ் உறுப்பினர் வெள்ளியங்கிரி கவுண்டர் பேசியிருக்கிறார். நெல் விலை பற்றி - நெல்லைப் பற்றி பேசியிருக்கிறார். அவர் பெரியாரின் நண்பர்தான்.

பெரியார் எழுதுகிறார்,
“ஏன் உனக்கு சம்பந்தமில்லாததை பேசுகிறாய்,
கோவையில் பிறந்த நீ சோளத்தை பற்றி, ராகியை, கம்பு
சாப்பிடுங்கள் என்று பேசுவதை விட்டு விட்டு நீ
நெல்லைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறாயே. நீ ஏன்
தஞ்சாவூருகாரனாக மாறுகிறாய். நீ நம்ம பகுதியில்
உள்ள தானியங்களை உண்ணுவதைப் பற்றி பேசு”
என்று, அப்பொழுதும் எழுதினார். பின்னாளிலும் சொன்னார். இப்பொழுது எல்லோரும் சொல் கிறார்கள். சிறு தானியம் சாப்பிடுங்கள், நெல்லை விட்டு விடுங்கள் என்று. வெள்ளையானதை சாப்பிடாதீர்கள். வெள்ளை நஞ்சு என்று பிற நாடுகளில் விவரிக்கப்படும் அரிசி, சீனி, உப்பு இந்த மூன்றையும் தான் விடாமல் சாப்பிடுகிறோம். மற்றதை எல்லாம் விட்டு விட்டோம்.

திராவிடர் கழக மாநாட்டில் 1990களில் கம்பு, ராகி, சோளம் ஆகியவற்றை உண்ணும் பழக்கத்தைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் போடப் பட்டது. அதை எல்லாம் இந்த வேளையில் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். எவற்றை யெல்லாம் இழந்தோமோ அவை உயர்வானவை - நமக்குப் பொருத்தமானவை; பாதுகாப்பானவை. அவற்றை எல்லாம் விட்டு விட்டு நமக்குப் பாதுகாப்பு இல்லாததை - செலவு அதிகம் வைப்பதை – அடிமை தனத்தின் தத்துவத்தை பின்பற்றுகிறோம். அய்யா நூற்றாண்டு நிறைவு விழாவில் எண்ணு வோம், சிந்திப்போம். அவர் வழிகாட்டியாய் இருக்கிறார் என்று புரிந்து கொள்வோம். அவரைப் பாராட்டுவது நட்புக்காக – அறிமுகத்திற்காக என்பதை விட, வாழ்ந்த வாழ்க்கை நெடிய வாழ்க்கை மட்டுமல்ல. பயனுள்ள வாழ்க்கை – வளமான வாழ்க்கை – செல்வமான வாழ்க்கை. எல்லாவற்றிலும் சரியாக வாழ்ந்த வாழ்க்கை. எல்லாவற்றையும் நாம் புரிந்து கொண்டு அதை பின்பற்றுவோம் என்று சொல்லி எமது அன்பார்ந்த அய்யா அவர்களுக்கு பலரும் பாராட்டை சொன்னார்கள். வாழ்க என்றால் வாழ்ந்து விடுவார், வீழ்க என்றால் வீழ்ந்து விடுவார் என்றால் உலகத்தில் யாரும் இருக்கமாட்டார்கள். உலகில் எல்லோருமே திட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆகவே வாழ்த்துவது கூட மூட நம்பிக்கையில் ஒன்று தான் என்று சொல்வார் பெரியார்; ஆனால் வெறுமனே வாழ்க என்று சொல்லாமல் இவ்வாறு வாழுங்கள் என்று வாழ்த்தலாம் மண மக்களுக்கு என்று சொல்வார். இப்படி அய்யாவை சொல்ல முடியாது. எனவே நாங்கள் பின்பற்றக்கூடிய வாறு நீண்ட வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள். எங்களுக்கு வழிகாட்டுங்கள் என்று சொல்லி விடை பெறுகிறேன் என்றார், கழகத் தலைவர் கொளத்தூர் மணி.

சுகாதார மய்யம் அமைக்க நிலம் வழங்கியவர்:அய்யா வைத்திலிங்கம்

விழா மேடையில் அய்யா வைத்திலிங்கம் ஏற்புரையாற்றும்போது, தான் வாழ்ந்துவரும் அழகியநாயகிபுரத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்காக நிலம் கொடுத்ததைப் பற்றிக் கூறினார். கவிஞர் பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரத்தின் ஊரான நாட்டுச்சாலை தான் இவரது சொந்த ஊர். கவிஞரின் அண்ணன் கணபதியும் இவரும் மிக நெருங்கிய நண்பர் களாக இருந்துள்ளனர். அவரது வழிகாட் டலில்தான் இவர் சிங்கப்பூர் சென்றிருக்கிறார். அப்போது கடவுச் சீட்டு எடுக்கும்போது அதிக நாள் பணியாற்றலாம் என்று கூறி, நான்காண்டுகள் வயதைக் குறைத்துக்காட்ட 11-4-1918 என்று தனது பிறந்த நாளை மாற்றிப் பதிந்த கதையையும் இவர் நகைச் சுவை பொங்கக் கூறுவதுண்டு. நீண்ட நாட்கள் குழந்தைப் பேறு இல்லாதிருந்த நிலையில் அவரை பலர் கேலி பேசியதையும், அவமானப்படுத்தியதையும் எடுத்துரைத்தார்.

ஒரு திருமண வீட்டில் அவரைக் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் மொய் எழுதத் தொடங்கியபோது குழந்தைப் பேறு இல்லாதவன் திருமண மொய் எழுதக்கூடாது என்று மொய் ஏட்டைப் பிடுங்கிச் சென்ற பின்னரே குழந்தைப் பேற்றுக்காக ஒரு சீன மருத்துவரிடம் அவரது மனைவியை அழைத்து சென்று மருத்துவம் பார்த்திருக்கிறார். குழந்தைப் பேற்றுக்காக அவரது மனைவியை பலர் கோவில்களுக்கு அழைத்து சென்றதற்கு மாறாக அப்போதே சுயமரியாதை சிந்தனைகளில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் அறிவியல் பார்வையோடு மருத்துவம் செய்ததையும் நினைவு கூர்ந்தார். 40 வயதைக் கடந்த பின்னரே முதல் குழந்தை பிறந்ததாகவும் குறிப்பிட்டார். சிங்கப்பூரில் அப்போது இருந்துவந்த அவருக்கு 1962ல் சேதுபாவாசத்திர ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், தாங்கள் 2 ஏக்கர் நிலம் கொடுத்தால் மட்டுமே இவ்வூரில் மருத்துவமனையைக் கொண்டுவர முடியும் எனக் கடிதம் எழுதிக் கேட்டதையும், ஊர் சார்பாகவும் பலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இங்கு வந்து 2 ஏக்கர் 2 செண்ட் நிலத்தை எழுதிக் கொடுத்துவிட்டு அன்றே சிங்கப்பூர் திரும்பியதையும் கூறினார். மீண்டும் மேலும் 25 செண்ட் நிலம் தேவைப் படுகிறது என ஆணையாளர் கடிதம் எழுதிக் கேட்டதனால் மீண்டும் வந்து அதையும் பதிவு செய்துக் கொடுத்திருக்கிறார். இப்போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்நிலத்தின் ஒரு பகுதியை ஒருசில சுயநல சக்திகள் ஆக்கிரமித்துக் கொண்டதை எதிர்த்து அரசுத் துறை தரப்பில் எதையும் செய்யமுடியாமல் இருந்தபோது, தனிமனிதராக சுமார் நான்கு இலட்சம் ரூபாய்களுக்கும் மேலாக செலவு செய்து அதை மீட்டதையும் நினைவு கூர்ந்துஉரையாற்றினார்.

முதல்முறை நிலத்தைப் பதிவு செய்துவிட்டு வந்தவுடன், அந்நினைவுகளை ஒரு கவிதையாக எழுதியிருக்கிறார்.

அழகியநாயகிபுரத்தின் கிழக்கு எல்லையாக உள்ள - தொடக்கத்தில் மாட்டுமந்தையாக பயன்படுத்தப்பட்டு வந்தகணக்கன் கொல்லை’ என்றழைக்கப்பட்ட அந்நிலத்தில், தானே கோலேந்தி மாடு மேய்த்ததையும், அந்நிலத்தில் வரவிருக்கும் மருத்துவமனையால் மக்கள் நலம் உயரும் என்பதையும் கூறும் அக்கவிதையின் தொடக்க வரிகளையும் கூறினார்.

சுகாதார மய்யம் அமைக்க நிலம் வழங்கியவர்:
அய்யா வைத்திலிங்கம் நினைவலைகள்
ஆ கூடி அமர்ந்து நின்ற கணக்கன் கொல்லை
அழகிய நாயகி புரத்தின் கிழக்கின் எல்லை
கோல் ஏந்தி கோ மேய்த்தோன் கொடுத்த கொல்லை
குறைவின்றி மக்கள் துயர் தீர்க்கும் - அய்யமில்லை !…… ……
- என்பதே அவ்வரிகள்.
ஏங்கித் தவித்தேன் - பல
இன்னல் அனுபவித்தேன் - எதிர்காலம்
நமக்கில்லை என நினைத்தேன் - சொந்த
ஊரைத் துறந்து கடலைக் கடந்தேன்
சோம்பலின்றி உழைத்தேன்
சொல் தவறாது நடந்தேன்
சுய மரியாதையால் துணிவுற்றேன்
பெரியாரியலில் பெரிதும் மகிழ்ந்தேன்
குடும்ப வாழ்வில் குறைவின்றி வாழ்ந்தேன்
பகுத்தறிவைப் பெற்று, மூடநம்பிக்கை அற்று -
பெரியாரின் முன்னறிவில் என் வாழ்வு
நூறாண்டு நிறைவு பெற்று
தொடர்வதுதான் உண்மை எனக் கூறி
பெரியாரின் தொண்டர்களை பெரிது(உ)வந்து
வாழ்த்துகிறேன்.
சொந்த ஊரை விட்டோடி கடலைக் கடந்தேன்
உழைத்துப் பொருள் தேடி
ஊருக்கு வந்தேன் - பெற்ற
பிள்ளை பெண்டிற் சுற்றத்தாருடன் சேர்ந்து
சுகமடைந்தேன் - நல்ல
சுயமரியாதையால் துணிவு பெற்றேன் - தந்தை
பெரியாரியலில் பெருமையுற்றேன்
பேரின்பம் என்பது பொய் - தந்தை
பெரியார் சொன்னதே மெய்
இயற்கை என்பது மெய் - உலகில்
இறைவன் என்பது பொய்
பகுத்தறிவு சிந்தனைதான் வாழ்வு
பக்தி என்று நம்புவது தாழ்வு
பிணி மூப்பு சாக்காடு உண்மை - சாமி
பிழைக்க வைக்கும் என்பது பொய்மை!
தெய்வத்தால் கிடைக்காது மகப்பேறு - நல்ல
மகப்பேறு மருத்துவரைச் சென்று பாரு
இரு தாரம் செய்தும் மிக நீண்ட காலம் - இல்லை
எனக்கு ஒரு செல்லப் பிள்ளை - தெய்வ
நம்பிக்கை கொண்டலைந்தும்
நன்மையில்லை - அதனால்
வெந்து மனக் கண்ணீர் மல்க விரும்பவில்லை
நாற்பது வயதுக்கு மேல் ஏது பிள்ளை - என்ற
நலமற்ற விமர்சனத்தை நம்பவில்லை - தன்
நம்பிக்கை எந்நாளும் குறையவில்லை - இறுதியில்
மகப்பேறு மருத்துவந்தான் கடைசி எல்லை - அதன்
பயனால் கிடைத்தது நான்கு பிள்ளை
முதன்மை மகள் பெற்ற எனதன்பு பேத்தி - வைஷ்ணவி
மகப்பேறு மருத்துவரானதால் - நான்
மகிழ்ச்சி அலையதனில் மிதக்கின்றேனே.

- ப.அ.வைத்திலிங்கம்

Pin It