ஈரோடு மாநாட்டுத் தீர்மானங்கள்:

குறைந்த விலையில் நிறைந்த புரதச் சத்தை வழங்கும் மாட்டிறைச்சி உணவை கேரள மக்கள் விரும்பி உண்பது போல, தமிழர்களும் தங்கள் உணவுப் பழக்கமாகக் கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. தமிழ்நாட்டில் மாட்டிறைச்சி உணவை முன் வைத்து நடக்கும் பொது நிகழ்வுகளுக்கு தமிழக அரசின் காவல்துறை தடைவிதிப்பதற்கும், கெடுபிடி காட்டுவதற்கும் வன்மையான கண்டனத்தை இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

பீகார் மக்களுக்குப் பாராட்டு!

பீகார் சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் மோடியும் பாஜக பரிவாரங்களும் மதவாத வெறுப்புக் கருத்துக்களை முன் வைத்து வெற்றி பெற்று விடலாம் என திட்டமிட்ட முயற்சிகளை முறியடித்து, நிதிஷ்குமார் தலைமையிலான சமூகநீதி சக்திகளுக்கு பெறும் வெற்றியை குவித்துள்ள பீகார் மக்களுக்கு வாழ்த்துக்களை யும், மகிழ்ச்சிகளையும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

கவுரவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம்

கவுரவக் கொலை என்ற பெயரால் ஜாதிவெறி சக்திகள் நடத்தும் குடும்பப் படுகொலைகளை தடுக்க தமிழக அரசு தனிச் சட்டம் ஒன்றைக் கொண்டு வரவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. இது குறித்து மத்திய அரசு கருத்து கேட்டு அனுப்பி வைத்த சட்ட வரைவுக்கு அண்டை மாநிலங்கள் தங்கள் கருத்தை தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசு கருத்து தெரிவிக்காமல் கிடப்பில் போட்டிருப்பதை இம்மாநாடு சுட்டிக்காட்டி, இதில் உரிய கவனம் செலுத்தி செயல்பட வலியுறுத்துகிறது.

மாநில உரிமைகளைப் பறிக்கிறது நீதித்துறை பரிந்துரை

உயர்நீதிமன்ற பாதுகாப்பை மத்திய காவல்துறைக்கு பரிந்துரைப்பதை, மாநில அரசின் உரிமைப் பட்டியலில் உள்ள காவல்துறை உரிமையைப் பறிப்பதாகவே இம்மாநாடு கருதுகிறது. ஏற்கனவே தமிழ் நாட்டில் இயங்கும் விமான நிலையங்களின் பாதுகாப்பு மாநில காவல்துறையிடம் இருந்து மத்திய பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது. இப்போது உயர்நீதிமன்ற பாதுகாப்பும், மத்திய பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டது. இவ்வாறான மாநில உரிமைப் பறிப்புக்கு எதிராகக் கட்சி அரசியல் கண்ணோட்டமின்றி, தமிழக அரசியல் கட்சிகள் அனைவரும் உரிமைக் குரல் கொடுக்க வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

Pin It