நாங்கள் வழக்கு தொடர
வந்தாலே
நீதி தேவதை
தலைமறைவாகிறாள்.

*

எங்களுக்கான தீர்ப்பு
வரும்போதெல்லாம்
தராசு தட்டின் முள்
களவு போய்விடுகிறது.

*

கால் நூற்றாண்டு
அரை நூற்றாண்டு கடந்தும்
நீதி தேவதை அவர்களின்
வன்கட்டுப்பாட்டில்
அவதியுறுகிறாள்.

*

எங்கள் உரிமைகளை
முழக்கும்போது
நீதிதேவதை கண்கள் மட்டுமல்ல
புலன்களும் மூடிக் கொள்கிறது.

*

எங்கள் வழக்கு
விசாரணை வரும்போது
நீதிதேவதை தராசில்
வா(மோ)சம் செய்கிறாள்
நிதி தேவதை.
எமக்கான நீதி சுரண்டப்படுவதால் இவளை
சதி தேவதை
என்றே பறைந்தோம்.

*

சதி தேவதை தராசுத் தட்டில்
அரசு முதலீடு
நீதிமன்றங்களில்
அன்னிய முதலீடு
மக்களின் தட்டில்
குவிகிறது கடன்.

*

இனி நீதிமன்றங்களில்
கண்ணைக் கட்டி தூங்கும்
நீதி தேவதையை அகற்று
கண் திறந்து கேட்கும்
கண்ணகி சிலையே
வேண்டும்
அநீதிகள் எரிய..!

- சதீஷ் குமரன்

Pin It