“கோமதி... கோமதி... இந்தப் பெயரை உச்சரிக்காதவர்களே கிடையாது. திருச்சியை திரும்பி பார்க்காதவர்களே இல்லை. ஆனால், இப்படி ஒரு நிகழ்வு நடந்து இருப்பதையே அறியாத அப்பாவியாக இருக்கிறாள் அந்தத் தாய்” திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் போதிய பேருந்து வசதிகள்கூட இல்லாத மிகவும் பின்தங்கிய கிராமம் முடிகண்டம். இந்த கிராமத்திற்கு செய்தியாளர்களும் ஊடகவியலாளர்களும் படையெடுத்தனர். கிராமமே ஒன்று கூடி ஆச்சரியப்பட்டது. என்ன நடந்ததோ? ஏது நடந்ததோ? என முணுமுணுக்கிறார்கள்.
அந்தக் கூட்டத்தில் இருந்தவர்களிடம் கோமதி வீடு எங்கே இருக்கிறது என செய்தியாளர் ஒருவர் கேட்க, மேலும் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. எதற்காக? என்று ஒருவர் கேட்க, ஆசிய தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார் என்று ஊடக செய்தியாளர்கள் கூறியதைக் கேட்ட கோமதியின் உறவினர்களும் ஊர் மக்களும் இன்ப வெள்ளத்தில் நீந்தினர். தோஹாவில் நடந்த ஆசிய ஓட்டப்பந்தயம் 800 மீட்டர் பிரிவில் கோமதி தங்கப் பதக்கத்தை வாங்கிய செய்தி வெளியானதும், மு.க.ஸ்டாலின், கே.பாலகிருஷ்ணன், வைகோ, டிடிவி தினகரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், முதலமைச்சர் எடப்பாடி என பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில், அவருடைய வீட்டுக்கு செய்தியாளர்கள் சென்ற போது, அதுகுறித்து எதுவும் அறியாமல் இருந்தனர். கோமதியின் சகோதரிகள், அம்மா வயல் வேலைக்குப் போயிருக்காங்க என்ற தகவலைச் சொன்னதும் அவரை அழைத்து வரச் சென்று விடுகிறார்கள் ராஜாத்தியின் மகள்கள். கூலி வேலை பார்க்கும் ராசாத்தி அம்மாவின் வருகையை எதிர்பார்த்து செய்தியாளர்கள் காத்திருந்தனர்.
கூலி வேலை செய்து கொண்டிருந்த ராசாத்தி வீட்டிற்கு வந்ததும் செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர். “எங்க மகள் கோமதி சின்ன வயதிலிருந்தே நல்லா விளையாடுவாள். எங்க ஊர் பள்ளிக்கூடத்தில் பள்ளிப் படிப்பை முடிச்சதும், திருச்சி கல்லூரியில் சேர்த்து விட்டோம். அந்த காலேஜூக்கும் பயிற்சிக்கும் போக காலையில 3 மணிக்கே எழுந்து நடந்துபோய், அங்கிருந்து பஸ்ச பிடிச்சு போகவேண்டும். கல்லூரிக்குச் சென்று வீட்டிற்கு திரும்ப வேண்டும்” என்றார்.
“அவர் (கணவர்) உயிரோடு இருந்தவரை சின்ன புள்ளைக்கு ரொம்ப ஆதரவாக இருந்தார். அவ சாதிக்கணும்னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பார். அவருக்குப் புற்று நோய் இருக்குன்னு தெரிய வந்தப்ப எல்லாருமே கலங்கிப் போய்ட்டோம். வைத்தியம் எல்லாம் பார்த்தோம். ஆனாலும், நோய் முத்தி போனதுனால அவர் எங்களைவிட்டே போய்ட்டார். அதுல சின்ன புள்ள (கோமதி) இடிஞ்சு போயிட்டா. அவளை அதுலேருந்து தேத்திக் கொண்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு என்றும் கூறினார். எங்க சொந்தக்கார பொண்ணு ஒன்னு ஓடிவந்து அக்காவ டிவியில காட்டுறாங்கனு சொன்னது. ஆனால், எனக்கு டிவி போடத் தெரியாது. அதனால கூலி வேலைக்குப் போயிட்டேன். இப்ப நீங்க வந்து சொல்றப்பதான் எனக்கு கோமதி தங்கம் வாங்கனதே தெரியும். ‘ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதுக்கு அவளோட முயற்சி மட்டும்தான் காரணம். அதற்கு பலனும் கிடைச்சிருக்கு’’ என்று கண் கலங்கினார் தாய் ராசாத்தி.
கோமதியின் தந்தை மாரிமுத்து விவசாயப் பண்ணையில் கூலி வேலை செய்து வந்தார். தாய் ராசாத்தி விவசாயக் கூலி வேலைக்குச் சென்று வருகிறார். விவசாயக் கூலித் தொழிலில் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு தங்களின் நான்கு பிள்ளைகளைக் காப்பாற்றி வந்துள்ளனர். மூத்த மகன் சுப்பிரமணிக்கு ஊர்க்காவல் படையில் வேலை கிடைத்திருக்கிறது. அடுத்து பிறந்த மூன்று பெண் குழந்தைகளில் கடைக்குட்டி தேவதை தான் கோமதி. பெண் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருந்திருக்கிறார் மாரிமுத்து. அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு படிப்பிலும் விளையாட்டிலும் அதிக ஆர்வம் காட்டியிருக்கிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாரிமுத்து உடல்நலக் குறைவால் இறந்துபோக இடிந்து போயிருக்கிறார் கோமதி. அந்த சமயம், ஒரு வேளை சாப்பிட, உணவுகூட இல்லாமல் கஷ்டங்களை அனுபவித்துள்ளனர்.
தந்தைக்குப் பிறகு, தன்னை சிறந்த வீராங்கனையாக உருவாக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக பயிற்சி கொடுத்து வந்த பயிற்சியாளர் காந்தியும் மாரடைப்பில் மரணம் அடைந்தது கோமதியை ரொம்பவும் மனசு உடைய வைத்திருக்கிறது. “கொடும கொடுமன்னு கோவிலுக்கு போனா அங்க இரண்டு கொடும ஜிங்கு ஜிங்குனு ஆடுச்சு’’ என்ற கதையாக கோமதிக்கு காலில் ஏற்பட்ட காயத்தால், விளையாடவே முடியாமல் அவதிப்பட்டார். ஆனாலும், விடாமுயற்சியில் விளையாட்டில் கவனம் செலுத்தி வந்த கோமதி, விளையாட்டில் ஜெயிச்சே ஆகணும்னு வைராக்கியம் கொண்டார். அதில் வெற்றியும் பெற்றுவிட்டார். மகளின் விளையாட்டு ஆர்வத்திற்கு தூணாக நின்று ஊக்கம் கொடுத்த தந்தை மாரிமுத்து, சாதனை படைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். ஆனால், மகள் சாதித்ததை பார்ப்பதற்கு அவர் உயிரோடு இல்லை என்ற கவலை அவரது குடும்பத்தினரிடம் மேலோங்கியுள்ளது.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, பல்வேறு சவால்களைக் கடந்து சாதித்துள்ள கோமதிக்கு, சல்லிக் காசுகூட வழங்காமல் வெறும் வாழ்த்துக் கடிதத்துடன் முடித்துக் கொண்டது தமிழக அரசு. விளையாட்டு ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி யுள்ளது. தடகளத்தில், அதுவும் 800 மீட்டர் ஓட்டம் போன்ற கடினமான பிரிவில் தமிழக வீராங்கனை வெற்றி பெறுவது அத்தி பூத்தார்ப் போன்றது. இந்த கூட்டத்தில் சாதித்த அந்த ஏழை விவசாய கூலித் தொழிலாளி மகளுக்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் ஒரு இலட்சம் ரூபாய் வழங்கினார். சென்னை ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்தியாலயா பள்ளியின் சார்பில் நடந்த பாராட்டு விழாவில் அவரை ஊக்கப்படுத்தி மூன்று இலட்சம் ரூபாய் வழங்கி கவுரப்படுத்தினர். திமுக தரப்பில் 10 இலட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக் கிறார்.
கோமதிக்கு சின்ன வயசுல தடகளத்தின் மீது ஆர்வம் இல்லை. கல்லூரியில் படிக்கும்போதுதான் ஓடத் தொடங்கியிருக்கிறார். கல்லூரிகளில் நடந்த பல்வேறு தடகளப் போட்டிகளிலும் வெற்றி பெற்று பல்வேறு பதக்கங்களையும், கோப்பைகளையும் வென்ற கோமதி, தேசிய அளவில் பதக்கம் வென்றார். பெங்களூரில் வேலை செய்து வந்தாலும் தான் வாங்கிய பதக்கங்களைக் கூட வைக்க இடமில்லாத வீட்டில் வளர்ந்த பெண் இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்ததை எண்ணி அவரது கிராம மக்கள் பெருமை கொள்கின்றனர். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்த கோமதி, ‘‘எனது இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் எனது அப்பா மாரிமுத்துதான். இந்தியாவுக்கு பதக்கம் வாங்கியதன் மூலம் எனது கனவு நிறைவேறியுள்ளது’’ என்றார்.
சாலை வசதியோ, மின் வசதியோ இல்லாத தனது கிராமத்துக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்று கேட்கும் கோமதி, அத்தகைய கட்டமைப்பு வசதிகள் வந்தால், தன்னுடைய கிராமத்திலிருந்து மற்றொரு விளையாட்டு வீராங்கனையை தன்னால் உருவாக்க முடியும் என்கிறார், சாதித்துக் காட்டியிருக்கிறார் கிராமத்தி லிருந்து வந்த ஒடுக்கப்பட்ட சமுதாயத்துப் பெண்.