தோழர் ஆர். கே. ஷண்முகம் அவர்கள் இந்தியா சட்டசபைக்குத் தலைவராகத் தெரிந்தெடுக்கப்பட்டிருப்பது கேட்டு பார்ப்பனர்களும், அவர்களது அடிமையாயிருந்து வயிறு வளர்த்துத் தீர வேண்டிய பேறு பெற்ற பார்ப்பனரல்லாதாரும், அவ்விருகூட்டத்தினது பத்திரிகைகளும் தவிர்த்து மற்றைய எல்லோருமே ஆனந்தக்கடலில் மூழ்குவார்கள் என்பதிலையமில்லை.

தோழர் ஆர். கே. ஷண்முகம் அவர்கள் ஒரு பார்ப்பனராயிருந்திருந்தால் இன்று அரசியல் உலகில் மகாகனம் என்னும் பட்டம் பெற்ற சீனிவாச சாஸ்திரி பார்ப்பனரும், சர். பட்டம் பெற்று மற்றும் பல போக போக்கியங்களையும், மாதம் 20 ஆயிரம் 30ஆயிரம் வரும்படியையும் உடைய சர். சி. பி. ராமசாமி அய்யர்ப் பார்ப்பனரும் ஷண்முகத்திற்குப் பின்னால் 5-வது 6-வது ஸ்தானங்களில் இருப்பதற்குக்கூட தகுதி உடையவர்கள் என்று சொல்லிக் கொள்ளப்பட மாட்டார்கள். மகாகனம் சாஸ்திரிக்கு தோழர்கள் கோக்கேல், காந்தி ஆகியவர்கள் வெளிப்படையாகவும், இரகசியமாகவும் ஆதரவு கொடுத்தும் அரசாங்கத்திற்கு சிபார்சு செய்தும் இந்தியாவிலுள்ள “முக்கிய” பத்திரிகைகள் என்பனவெல்லாம் (பார்ப்பனர்களை ஆசிரியராகவும், நிருபர்களாகவும் கொண்டிருக்கும் காரணத்தால்) “சாஸ்திரி மணலைக் கயிராகத் திரித்து வானத்தை வில்லாக வளைத்து விடுவார்” என்று புகழ்ந்து வந்ததாலுமே இந்தியப் பொதுமக்களுக்கு இன்ன விஷயத்தில் குறிப்பாக இன்ன காரியத்தைச் செய்தவர் என்றோ, அதனால் இன்ன பலன் இன்ன மக்களுக்கு ஏற்பட்டதென்றோ சொல்லுவதற்கு சிறிதுகூட இடமில்லாத ஒரு வாத்தியார் பார்ப்பனர் மகாகனமாகி இந்திய மக்களுடைய பிரதிநிதியென்று உலகம் முழுவதும் விளம்பரம் பெற்று வாழ முடிந்தது.

periyar 389 copyஅதுபோலவே தோழர் சர். சி.பி. ராமசாமி அய்யருக்கும் ஹைக்கோர்டு ஜட்ஜுகளில் இரண்டொருவருடைய சலுகையும், கோகேல், காந்தி இவர்களைப் போலவே அரசியல் உலகில் விளம்பரம் பெற்ற பெசண்டம்மை யாரின் வெளிப்படையாகவும், இரசியமாகவும் சர்க்காருக்குச் செய்த சிபார்சுகளும், மற்றும் பல வழிகளில் பெற்ற அரசாங்கத் தலைமை அதிகாரிகளின் ஆதரவுகளும், தேசியபார்ப்பன பத்திரிகைகளின் விளம்பரங்களும் எல்லாம் சேர்ந்து அவரையும் ஒரு பெரிய மனுஷியனாக்கச்செய்ததோடு வருஷம் பல லக்ஷம் ரூபாய் வரும்படிக்கு ஆளாக்கியும் விட்டுவிட்டது.

ஆனால் தோழர் ஆர். கே. ஷண்முகம் அவர்களுக்குத் தோழர் காந்தி முதல் எதிரியாயிருந்து முட்டுக்கட்டை போட்டவைகளையும், பார்ப்பனப் பத்திரிகைகள் செய்து வந்த விஷமங்களையும், சூட்சிகளையும் தாண்டியும் பார்ப்பனர்களின் அடிமைகளாயிருந்த பல பார்ப்பனரல்லாத கோடாரிக் காம்புகள் செய்து வந்த தொல்லைகளிலிருந்து சமாளித்து அரசாங்கத்தையும் (தோழர் மோதிலால் நேரு “தேசியவீர” ராயிருந்தபோது அவருக்கு வலக்கை யாயிருந்து) எதிர்த்தும் யாருடைய தயவில்லாமலும், எந்தப்பத்திரிகையுடைய (பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் ஆகிய இருவர்களுடைய) ஆதரவில்லா மலும் மேற்படி பத்திரிகைகளின் நிருபர்களுடைய அயோக்கியத்தனமான விஷம நிருபங்களுக்கெல்லாம் மார்பைக் கொடுத்தும் தானாகவே இந்த நிலைமை அடைந்தார் என்பதை எல்லா மக்களும் அறிய வேண்டும் என்பது நமது ஆசை.

இந்த உத்தியோகத்தால் தோழர் ஆர். கே. ஷண்முகத்துக்கு மாதம் 4000 ரூபாய் லாபமே யொழிய மற்றபடி இந்திய ஏழை மக்களுக்கு - பாடுபடும் மக்களுக்கு ஒரு காதொடிந்த ஊசிக்கும் மார்க்கமில்லை என்பது நமக்கு நன்றாய்த் தெரியும். ஆனால் அப்படி ஒரு உத்தியோகமும், பதவியும் இருக்கும் வரையிலும் அதை ஏதாவது ஒரு மாம்சப் பிண்டமாவது அனுபவித்துத்தான் தீரவேண்டும் என்கின்ற நிலைமை இருக்கின்ற வரையிலும் வெறும் அனாமதேயங்கள் அடைந்து தாழ்த்தப்பட்ட அதாவது பார்ப்பனரல்லாத சமூகத்திற்கு இழிவும், தாழ்மையும் நிரந்தரமாய் இருக்கச் செய்வதற்கு பாடுபடும் மக்களோ, அல்லது இப்படி ஒரு கஷ்டமான, கொடுமையான நிலைமை ஒன்று இருக்கின்றது என்பதை அறியாத ஒரு தேசா போகமோ அடைவதைப் பார்க்கிலும் இப்படிப்பட்ட ஒரு அறிஞரும், சாமார்த்தியவாளியும், தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயத்தில் கவலையும் அவர்களது தாழ்மைக்கும், இழிவுக்கும் அஸ்திவாரமான காரணத்தை நன்றாய் உணர்ந்தவரும், அதை வேருடன் களைந்து வெந்நீரை ஊற்றி பூண்டர அழிக்க வேண்டும் என்கின்ற ஆசையும் உறுதியும் கொண்ட ஒருவர் அனுபவிப்பதில் எந்த மூடனும் பொறாமைப்படவே மாட்டான்.

அன்றியும் தோழர் ஆர். கே. ஷண்முகம் இன்று ஒரு வெறும் ஆசாமி அல்ல என்றும் இப்படிப்பட்ட பட்டம் பதவி முதலிய வேட்டைகளுக்காக தேசிய வேஷமோ, வகுப்பு வேஷமோ, மதவேஷமோ, தெய்வ பக்தி வேஷமோ மகான் வேஷமோ போட்டுக் கொண்டு பாமரர்களை ஏமாற்றும் பாஷாண்டியல்லவென்றும், சொல்வதோடு ஜாதி, மதம், கடவுள், தேசம், வகுப்பு, அரச ஆட்சி முதலிய சகல விஷயங்களையும் புரட்டென்று ஒதுக்கித் தள்ளி சரீரத்தால் பாடுபடும் மக்களுடைய மேன்மைக்கும், சமூகத்தால் இழிவு படுத்தப்படும் மக்களுடைய விடுதலைக்கும் உழைக்கும் உண்மை இயக்கமாகிய சுயமரியாதை இயக்க சங்கத்துக்குத் தலைவராயிருக்கின்ற ஒரு வீரராவார் என்றும் சொல்லுவோம்.

சுயமரியாதைச் சங்கமானது பார்ப்பனர்களும், பார்ப்பனர்களது அடிமைகளாகிய பார்ப்பனரல்லாத தேசியவாதிகள் என்பவர்களும் தூற்றி வருவதும், மதவாதிகள் தூற்றி வருவதும், சர்க்காரும் கண்காணித்து வருவதும் சுயமரியாதை இயக்கமென்றாலே நாக்குசுட்டு விடுமென்றும், சர்க்கார் கோபித்துக் கொள்வார்கள் என்றும், அதிகாரிகள் கஷ்டப்படுத்துவார்கள் என்றும் சொல்லப்பட்டு வருவதுமான ஒரு இயக்கமாகும்.

அதுமாத்திரமல்லாமல் சுயமரியாதை இயக்கம் அரசாங்கத்தையே கவிழ்க்கப் பார்க்கின்றது என்றும், மதத்தையே அழிக்கப் பார்க்கின்றது என்றும், கடவுளையே ஒழிக்கப் பார்க்கின்றது வென்றும், வேத சாஸ்திரங்களை எரிக்கப் பார்க்கின்றதுவென்றும் பல முண்டங்கள் ஒப்பாரி இட்டு மாரடித்து அழுவது மாத்திரமல்லாமல் அரசாங்கத்துக்கு மகஜரும், விண்ணப்பமும், தூதும் அனுப்புவதல்லாமல் பத்திரிகைகளிலும் பத்தி பத்தியாய் எழுதி திண்ணைப் பிரசாரம் செய்யப்படுவதற்கு ஆளாகி இருக்கும் ஒரு இயக்கமாகும்.

அப்படிப்பட்ட ஒரு இயக்க ஸ்தாபனத்துக்குத் தலைவராயிருக்கின்ற ஒருவர் இந்தியா சட்டசபை ஸ்தாபனத்துக்கும் தலைவராகத் தெரிந்தெரிந்தெடுக்கப் பட்டாரென்றால் அதுவும் எல்லாக் கட்சியாராலும் ஏகமனதாய்த் தெரிந்தெடுக்கப்பட்டார் என்றால் இப்படிப்பட்ட இவரைத் தலைவராயடைந்தது இந்தியா சட்டசபைக்கே ஒரு பெரிய கௌரவமென்றே சொல்ல வேண்டும்.

ஆகவே தோழர் ஆர். கே. ஷண்முகம் அவர்களைத் தனது தலைவராகக் கொண்ட இந்திய சட்டசபையைத்தான் நாம் பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 19.03.1933)

Pin It