தலையங்கம்

பக்தி என்ற போர்வையில் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் மூடநம்பிக்கைகள் தன்னம்பிக்கையைக் குலைத்து, உடலுக்கும் உயிருக்கும் ஆபத்துகளை உருவாக்குவதாக இருந்து வருகின்றன. அதில் ஒன்றுதான் பக்தர்களின் மொட்டைத் தலையில் பூசாரி தேங்காயை உடைப்பதாகும். கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் எனும் ஊரில் உள்ள மகாலட்சுமி கோயிலில், இந்தக் கொடுமை பக்தியின் பெயரால் நடந்து வருகிறது.

தேங்காய் உடைத்து, தலையில் ரத்தம் வந்தால், ‘தெய்வ குற்றம்’ என்று பூசாரிகள் பழி போட்டு விடுகிறார்கள். இந்த மூடத்தன சடங்கைத் தடை செய்ய வேண்டும் என்று, தமிழ்நாடு மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி எஸ்.சம்பந்தம், மாவட்ட ஆட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியிருப்பது, பாராட்டி, வரவேற்க வேண்டிய நடவடிக்கையாகும். அதே போல் சில கோயில்களில் பெண்கள் பேயாடுவதாகக் கூறுவதும், பெண்களை அவமதிக்கும் செயலாகும் என்றும், இதுபற்றி இந்து அறநிலையத் துறையிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றும், அவர் கூறியிருப்பதும், மிகச் சரியான சமூகக் கவலையோடு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையாகும்.

ஏற்கனவே - குழந்தைகளை குழிக்குள் புதைத்து எடுக்கும் ‘குழி மாற்றுத் திருவிழா, பக்தர்கள் முதுகில் ஆணிச் செருப்புகளோடு பூசாரி நடக்கும் சடங்கு போன்றவை, அரசினால் தடை செய்யப்பட்டிருந்தாலும், தடையை மீறி, இந்த ஆபத்தை விளைவிக்கும் மூடநம்பிக்கைகள் நடைபெற்று வருவதாகவே செய்திகள் வருகின்றன.

மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்கும் பிரச்சார இயக்கங்கள் வலிமையாக நடைபெறாததும், மாவட்ட ஆட்சி நிர்வாகம், மூடநம்பிக்கையில் மூழ்கி ‘மதச்சார்புடையதாக’ இருப்பதுமே இதற்கு முக்கிய காரணங்களாகும்.

தமிழ்நாட்டில் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை செய்யக்கூடிய அமைப்புகளாக, பெரியார் இயக்கங்கள் மட்டுமே இருக்கின்றன. மனித உரிமை அமைப்புகளானாலும், தலித் விடுதலை அமைப்புகளானாலும், இடதுசாரி அமைப்புகளானாலும், மக்களிடம் மண்டிக் கிடக்கும் மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதைத் தவிர்த்தே வருகின்றன. இது வேதனையான உண்மை!

‘நேர்த்திக் கடனும்’, ‘வேண்டுதலும்’ கடமை தவறாமல் நடத்தப்படும் சடங்குகளும் - தங்களது பிரச்சினைகளைத் தீர்த்துவிடும் என்ற நம்பிக்கையை உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டுள்ள மக்கள், எப்படி, சமூக மாற்றத்துக்கு அணி திரளுவார்கள்? இந்த நம்பிக்கைகள் தகர்க்கப்படாதவரை இயக்கங்களில் பங்கு பெறுவதும் கூட, மற்றொரு ‘நேர்த்திக் கடன்’ என்ற உளவியல் தானே, அவர்களிடம் மேலோங்கி நிற்கும்?

தமிழகத்தில் மனித உரிமைக் களத்தில் பணியாற்ற, ஏராளமான தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால், பக்தியின் பெயரால் நடக்கும் மனித உரிமை மீறல்கள் என்றால், இந்த நிறுவனங்கள் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு விடுகின்றனவே!

அரசு எந்திரம் கட்டவிழ்த்து விடும் மனித உரிமை மீறல்களை எதிர்ப்பதோடு கடமை முடிந்து விடுவதில்லை. சமூகத்தில், ‘பக்தி கலாச்சாரம்’, ‘பாரம்பர்யம்’, ‘பழக்க வழக்கம்’ என்ற பெயர்களில் பின்பற்றப்படும், மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் களப்பணியாற்றவும், மனித உரிமை அமைப்புகள் முன்வரவேண்டியது மிகவும் அவசியமாகும்.

மனித உரிமைப் பணியில் ஈடுபட்டு வரும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், இத்தகைய மூட நம்பிக்கைச் சடங்குகளை தடுத்து நிறுத்த முன்வராததையும் நீதிபதி சம்பந்தம் சுட்டிக் காட்டிக் கண்டித்திருக்கிறார். ‘வாழ்வுரிமை, சுதந்திரம், சுயகவுரவம், சமத்துவம் ஆகியவற்றுக்கு பங்கம் ஏற்படும் போது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதேகூட; மனித உரிமை மீறிய செயல் தான்’ என்று நீதிபதி சம்பந்தம் கூறியிருப்பது, கல்வெட்டுகளில் செதுக்கப்பட வேண்டிய கருத்தாகும்.

மனித உரிமை அமைப்புகளும், இடதுசாரி, தலித் அமைப்புகளும், இது பற்றி ஆழமாகப் பரிசீலிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

Pin It