மறைந்த மனித உரிமைப் போராளி தோழர் பாலகோபால் குறித்துச் சென்ற இதழில் தோழர் கண. குறிஞ்சி எழுதி யிருந்தார். பாலகோபால் நினைவுகள் என்ற முறையில் நானும் ஒரு சிலவற்றைக் குறிப்பிட்டிருந்தேன்.தோழர் பாலகோபாலின் எளிமைக்கும் சிந்தனைத் தெளிவுக்கும் சான்றான இரு நிகழ்வுகளே ஈண்டு பதிந்தாக வேண்டும் எனக் கருதுகிறேன்.

தோழர் பாலகோபால் தாம் நிறுவிய மனித உரிமைக் களம் சார்பில் ஐதராபாத்தில் நடத்திய மரண தண்டனைக்கு எதிரான கருத்தரங்கில் உரையாற்ற என்னையும் புதுவை கோ. சுகுமாரனையும் அழைத்திருந்தார். அவரே ஐதராபாத் தொடர்வண்டி நிலையத்துக்கு வந்து எங்களேத் தன் வீட்டுக்கு அழைத்துப் போனார். அவர் தன் ‘ஸ்கூட்டரில்’ முன்னால் செல்ல நாங்கள் தானியில் பின்தொடர்ந்தோம்.

மறுநாள் காலையில் ஒரு பெரிய கூடத்தில் மரண தண்டனை எதிர்ப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. புரட்சிப் பாவலர் வரவர ராவு உள்ளிட்ட பலரும் வந்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்த பின் பகலுணவுக்குப் புறப்பட்டோம். நான் தோழர் பாலகோபாலிடம் “ஐதராபாத்தில் என்ன சிறப்பு?” என்று கேட்டேன்.

அவர் சொன்னார்: “ஐதராபாத்தில் பிரியாணிதான் சிறப்பு. நீங்கள் இருவர் மட்டும் என்றால் பிரியாணி வாங்கித் தரத்தான் நினைத்திருந்தேன். ஆனால் இப்போது உங்க¼ளாடு 30-40 பேர் வருகிறார்கள். அத்தனைப் பேருக்கும் பிரியாணி வாங்கித் தர எனக்கு வசதியில்லை. ஆகவே ஐதராபாத்தின் இன்னொரு சிறப்பை உங்களுக்கு வாங்கித் தருகிறேன்.”

.....

“தேநீர்தான், ‘ஐதராபாத் டீ’ குடியுங்கள்” என்றார்.

எந்த ஊரில் எந்தக் கூட்டத்துக்குச் சென்றாலும், மனித உரிமை இயக்க வெளியீடுகளே விரித்துப் போட்டு விற்கத் தொடங்கி விடுவார். அறியாதவர்கள் ‘இவர் பாலகோபால்’ என்று ஊகிக்க வழியில்லை. கூட்டம் முடிந்த பிறகும் யார் என்ன கேட்டாலும் பொறுமையாக விடை சொல்லிப் புரிய வைத்து விட்டுத்தான் புறப்படுவார்.

அவரது சிந்தனைத் தெளிவுக்குச் சான்றாக என் மனத்தில் பசுமரத்தாணியாகப் பதிந்திருப்பது இனி ஏட்டிற்கு அளித்த பேட்டியில் ஒரு வினாவிற்கு அவர் தந்த விடைதான். இனி அப்போது தோழர் எஸ்.வி.ஆர். பொறுப்பில் வந்து கொண்டிருந்தது என்று நினைவு, தமிழ்நாட்டில் புதிதாகத் தோன்றிய ஓர் அரசியல் கட்சியின் தலைமை ‘எங்கள் கட்சியில் பார்ப்பனர்களே உறுப்பினர்களாகச் சேர்ப்பதில்லை’ என்று அறிவித்திருந்தது. இது சரிதானா? என்பது வினா. இதற்குத் தோழர் பாலகோபால் அளித்த விடையின் சாரம் இது:

பார்ப்பனர்கள் - பல்லாண்டு காலமாய்ச் செய்து வந்திருப்பதைக் கருத்தில் கொண்டால் - அவர்களேச் சந்தேகப்படுவது - அவர்கள் மீது ஐயுறுவது - நியாயமானது. இப்படி ஐயுறுவது, ஐயுறுகிறவர்களின் குற்றமன்று. இதற்கான பழி பார்ப்பனர்களேயே சாரும். பார்ப்பனர்களேயும் பார்ப்பனியத்தையும் எதிர்க்காமல் முற்போக்கான எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. ஒன்றே ஒன்றுதான், இப்படிப் பார்ப்பனர்களேயும் பார்ப்பனியத்தையும் எதிர்க்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. பார்ப்பனராகப் பிறந்தவருக்கும் கூட இந்த உரிமை உண்டு என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டுமெனக் கருதுகிறேன்.

இது தோழர் பாலகோபாலின் பார்வை. ஒருபுறம் வரலாற்றையும், மறுபுறம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உள்ள கருத்துரிமையையும் இணைத்துப் பார்க்கும் கூரிய பார்வை. இந்தச் சிக்கல் குறித்து விவாதிக்கும் போதெல்லாம் தோழர் பாலகோபாலின் இந்தச் சுடர்மிகு விளக்கத்தை நான் நினைவுபடுத்திக் கொள்ளவும், மற்றவர்களுக்கு நினைவுபடுத்தவும் தவறுவதில்லை.

- தியாகு

 

Pin It