இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரும் முசோலினியும் ஓரணியில் நின்று நேச நாடுகளை எதிர்த்தவர்கள். இத்தாலியின் கொடூரமான சர்வாதிகாரி. அவர் தொடங்கிய பாசிஸ்ட் கட்சி, இத்தாலி முழுதும் ஆயுத முனையில் அரசு அலுவலகங்களையும் அரசு நிதியங்களையும் கைப்பற்றியது. மூன்றே ஆண்டுகளில் தன்னை எதிர்த்த 10 பேர் தலையை வெட்ட உத்தரவிட்டார்.

1945இல் தனது மனைவியோடு சேர்த்து எதிரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர். அந்த பாசிஸ்டை ஆர்.எஸ்.எஸ். நிறுவனர்களில் ஒருவரான மூஞ்சே என்ற சித்பவன் பார்ப்பனர் நேரில் சந்தித்துப் பேசியதோடு, முசோலினி நடத்திய கொடூரமான சர்வாதிகார அமைப்பைப்போல் ஆர்.எஸ்.எஸ்சை யும் உருவாக்கினார். மிகவும் இரகசியமாக சங்பரிவாரப் பார்ப்பனர்கள் காப்பாற்றி வந்த இந்த செய்தியை ‘எக்னாமிக் அன்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ இதழில் (ஜன.22, 2000) ஒரு ஆய்வாளர் ஆதாரங்களுடன் வெளிக் கொண்டு வந்தார். அந்த ஆய்வாளர் பெயர் மார்கியா கசோலாரி. ‘நேரு நினைவு அலுவலகம் மற்றும் நூலக’ ஆவண காப்பகத்தில் இருந்த மூஞ்சே எழுதிய நாட்குறிப்பில் இந்தத் தகவல்கள் இடம் பெற்றிருந்தன. 13 பக்கங் களில் மூஞ்சே, முசோலினியினுடைய சந்திப்பு களைப் பதிவு செய்துள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன் வெளி வந்த இந்த செய்தியை மீண்டும் ‘பிரன்ட் லைன்’ (ஜன. 23, 2015) வெளியிட்டுள்ளது.

வட்டமேசை மாநாட்டிற்குச் சென்று வந்த பி.எஸ். மூஞ்சே, 1931 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அய்ரோப்பிய சுற்றுப் பயணம் ஒன்றை மேற் கொண்டார். பயணத்தின் பெரும் பகுதி இத்தாலியில் கழிந்தது. பாசிச நிறுவனங்கள் பலவற்றை அவர் நேரடியாகச் சென்று பார்த்தார். பயணத்தின் உச்சகட்டமாக முசோலினியைச் சந்தித்து உரையாடினார்.

மார்ச் 19ஆம் தேதியன்று ரோமிலிருந்த ‘உடற்கல்விக்கான மத்திய இராணுவப் பள்ளி’, ‘உடற் பயிற்சிக்கான பாசிசக் கல்விக் கழகம்’ மற்றும் ‘பலில்லா’, ‘அவான் கார்டிஸ்டி’ அமைப்புகளையும் நிறுவனங்களையும் நேரில் ஆராய்ந்த மூஞ்சே, அவை குறித்து இரு பக்கங்கள் குறிப்பு எழுதியுள்ளார். இளைஞர்களிடம் கல்வியைக் காட்டிலும் பாசிசக் கருத்தியலை ஊட்டுவதே இந்நிறுவனங்களின் நோக்கமாக இருந்தது. ஆறு வயது முதல் பதினெட்டு வயது வரையிலான சிறுவர்களைத் தேர்வு செய்து பயிற்சியளித்த இன்றைய ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு எல்லா வகைகளிலும் முன்மாதிரியாக அவை விளங்கின என்பது மூஞ்சேயின் குறிப்புகளில் வெளிப்படுகிறது. இந்த இளைஞர்கள் வாராந்திரக் கூட்டங்களுக்குச் செல்ல வேண்டும். அப்போது உடற்பயிற்சியும் இராணுவப் பயிற்சியும் அளிக்கப் படும். ‘டிரில்’களும் அணிவகுப்புகளும் நடத்தப்படும்.

பலில்லா குறித்துத் தனது குறிப்பேட்டில் வெகுவாகப் பாராட்டி எழுதியுள்ளார் மூஞ்சே. இத்தாலியை இராணுவ ரீதியில் புத்துயிர்ப்புச் செய்வதற்காக முசோலினியின் மூளையில் உதித்த கருத்து இது எனப் பாராட்டும் மூஞ்சே.

“பாசிசக் கருத்தாக்கம் மக்களிடையே ஒற்றுமை என்கிற சிந்தனையை ஏற்படுத்து கிறது. இந்துக்களை இராணுவ ரீதியில் புத்துயிர்ப்புச் செய்வதற்கு இதே போன்ற ஒரு அமைப்பு இந்தியாவில், குறிப்பாக இந்து இந்தியாவில் தேவை... இராணுவச் சீருடையில் இச் சிறுவர்களும் சிறுமியர்களும் எளிய உடற்பயிற்சிகளையும் ‘டிரில்’களையும் செய்வதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன்” என்று குறிப்பிடுகிறார்.

அன்று மாலை மூன்று மணியளவில் வெனீஷிய அரண்மனையில் இத்தாலிய சர்வாதிகாரியை டாக்டர் மூஞ்சே சந்தித்தார். எழுந்து நின்று கைகுலுக்கி வரவேற்றார் முசோலினி. அன்றைய அரசியல் நிலைமைகள் குறித்துக் கருத்துப் பரிமாறிக் கொண்ட பின்னர்,

மூஞ்சே: இன்று காலையும் மதியமும் பலில்லா மற்றும் சில பாசிச அமைப்புகளைப் பார்வையிட்டேன். அவை என்னை மிகவும் கவர்ந்தன. இத்தாலியின் வளர்ச்சிக்கும் செழுமைக்கும் இவை மிக அவசியம். இந்த அமைப்புகள் குறித்தும் மேன்மை தங்கிய உங்களைப் பற்றியும் பத்திரிகைகளில் பெரும்பாலும் நல்ல செய்திகள் வருவதில்லை என்ற போதிலும் என்னைப் பொருத்த மட்டில் இவற்றில் எந்த மறுப்புக்குரிய அம்சங்களையும் நான் காணவில்லை.

சிக்னோர் முசோலினி: இவை குறித்த உங்களின் கருத்தென்ன?

மூஞ்சே : மேன்மை தங்கிய அய்யா, நான் இவற்றால் பெரிதும் கவரப்பட்டுள்ளேன். இலட்சியங்கள் மிக்க வளரும் நாடுகள் ஒவ்வொன்றிலும் இத்தகைய அமைப்புகள் அவசியம் தேவை. இராணுவத் தன்மையிலான இந்தியப் புத்துயிர்ப்புக்கு இத்தகைய அமைப்புகளின் தேவை அதிகமாக உள்ளது. இதேபோன்ற குறிக்கோள்களுடன், நானாகவே சிந்தித்து ஏற்கெனவே ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளேன். இந்தியா விலும் இங்கிலாந்திலும் பொது மேடைகளில் வாய்ப்புக் கிடைக்கும்போது பலில்லா குறித்தும் இதரப் பாசிச அமைப்புகள் குறித்தும் புகழ்ந்து பேசுவதற்குத் தயங்க மாட்டேன். அவை வெற்றி பெற வேண்டும் என மனதார வாழ்த்துகின்றேன்.

முசோலினி : (மிகவும் மகிழ்ச்சியுடன்) நன்றி. ஆனால் உங்கள் பணி மிகவும் கடினமானது. எனினும் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என நானும் வாழ்த்துகின்றேன். (ஆவணக் காப்பகத்திலுள்ள மூஞ்சேயின் குறிப்பேட்டில் 1931 மார்ச் 20ஆம் தேதி எழுதப்பட்ட குறிப்புகளில் சில)

இந்தியாவிற்குத் திரும்பியவுடன், ஹெட்கேவர் முதலானோருடன் இணைந்து இந்தத் திசையில் பணியைத் தொடங்கினார் மூஞ்சே. ‘மராத்தா’ இதழுக்கு அளித்தப் பேட்டி ஒன்றில் இந்துச் சமூகத்தை இராணுவ ரீதியில் ஒருங்கிணைப்பதன் தேவையை வலியுறுத்தினார்.

“உண்மையில் நமது தலைவர்கள் ஜெர்மானிய இளைஞர் அமைப்பு, பலில்லா மற்றும் இத்தாலிய பாசிச அமைப்புகளைப் பின்பற்ற வேண்டும். இந்தியாவில் அறிமுகப் படுத்துவதற்கு அவை மிகவும் பொருத்த மானவை என்று நான் கருதுகின்றேன்”  என்றும் அவர் குறிப்பிட்டார். பாசிசம் குறித்துப் பொது விவாதங்கள் நடைபெறத் தொடங்கின. இவற்றில் ஹெட்கேவர் ஆர்வத்துடன் பங்கேற்றார். மூஞ்சே, ஹெட்கேவர், லாலு கோகலே ஆகிய மூவரும் இத்தாலிய/ஜெர்மானிய மாதிரிகளில் இந்துக்களுக்கான இராணுவ அமைப்பொன்றைக் கட்டுவது குறித்து ஆலோசித்தனர். 1934 ஜனவரி 31ஆம் தேதியன்று ஹெட்கேவர் தலைமையில் ‘பாசிசமும் முசோலினியும்’ என்கிற தலைப்பில் மாநாடொன்றை ஏற்பாடு செய்தார் இந்து மகாசபையைச் சேர்ந்த கவ்டே சாஸ்திரி. மூஞ்சே இதில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.

“இந்து தர்ம சாஸ்திரங்களின் அடிப்படை யில் இந்தியா முழுவதும் இந்து மதத்தைச் சீராக்க வேண்டும். அதனடிப்படையில் இந்து ஒற்றுமையைக் காட்ட வேண்டும். நமது பழைய சிவாஜி அல்லது இன்றைய முசோலினி, இட்லர் போன்ற ஓர் இந்துச் சர்வாதிகாரியின் கீழ் நமக்குச் சுயராஜ்யம் கிடைக்காத வரையில் நாம் இதைச் சாதிக்க இயலாது... இதற்கான விஞ்ஞானபூர்வமான திட்டமொன்றை உருவாக்கிப் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்” என்று அம்மாநாட்டில் தன் கருத்தை முன் வைத்தார் மூஞ்சே.

பின்னர் மூஞ்சே, ‘மத்திய இந்து இராணுவக் கல்விக் கழகத்திற்கான பணியைத் தொடங்கினார். இந்து இளைஞர்களை இராணுவமயமாக்குவதும், ‘சனாதன தர்ம’த்தை அவர்களுக்குக் கற்பிப்பதும், தனி நபர்களையும் தேசத்தையும் காப்பதற்கான விஞ்ஞானங்களையும், கலைகளையும் சொல்லித் தருவதும் கழகத்தின் குறிக்கோள்களாகச் சொல்லப் பட்டன. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலியிலுள்ள இராணுவப் பயிற்சிப் பள்ளிகளின் மாதிரியில் இதைத் தாம் செய்வதாக மூஞ்சே வெளிப்படையாகக் குறிப்பிட்டு வந்தார்.

மூஞ்சே உருவாக்கிய ‘மத்திய இந்து இராணுவக் கழகம் மற்றும் இராணுவப் பள்ளிக்கான திட்ட வரைவின்’ முன்னுரையில் (1935), “வெற்றியை நோக்கிய பெரும் இலட்சியத்துடன் மக்கள் திரளைக் கொன்று குவிக்கும் விளையாட்டிற்குத் தகுதியுடையவர் களாக நமது சிறுவர்களைத் தயாரிப்பதே பயிற்சியின் நோக்கம். எதிரிக்கு உச்சபட்ச இழப்புகளையும் மரணங்களையும் ஏற்படுத்து வதாகவும் நமது தரப்பில் ஆகக் குறைந்த மரணங்களும் இழப்புகளும் ஏற்படுவதாகவும் இந்த வெற்றி அமைய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நன்றி: அ. மார்க்ஸ் எழுதிய ‘ஆட்சியில் இந்துத்துவம்’ ‘பிரன்ட் லைன்’ மற்றும் ‘எக்னாமிக் அன்ட் பொலிட்டிக்கல் வீக்லி’

Pin It