பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொரு பாகன்’ நாவல் வெளி வந்து நான்கு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. முதல் பதிப்பு வெளிவந்தது 2010 டிசம்பரில். இப்போது திடீரென எதிர்ப்பு ஏற்பட்டது ஏன்? இதற்கு பெருமாள் முருகன் தரும் பதில்:

“திடீர் எதிர்ப்புக்கு எனக்கு காரணம் தெரிய வில்லை. இது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு 2014இல் வெளி வந்த பிறகுதான் எதிர்ப்பு வந்திருக்கிறது. ஆங்கிலத்தில் படித்த யாரோ சிலர், இதை தூண்டிவிட்டிருக்கும் வாய்ப்புகள் உண்டு”.

மேலும் அவர் கூறுகிறார்:

முதன்முதலாக ஜாதி அமைப்புகளும் இந்து அமைப்புகளும் ஒரே மேடையில் கைகோர்த்திருக் கின்றன. இந்து முன்னணி மற்றும் மூன்று ஜாதி அமைப்புகள் இணைந்து இந்த எதிர்ப்பை உருவாக்கி வருகின்றன. இந்த எதிர்ப்பு அந்த நாவலுக்கானது மட்டும் என்று நான் நினைக்கவில்லை. காரணம், அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ‘திருச்செங்கோடு’ ஊர்ப் பெயரை அடுத்த பதிப்புகளில் நீக்குவதாக அறிவித்து விட்டேன். அதற்குப் பிறகும் ஏன் எதிர்க்கிறார்கள்?

போராட்டம் நடத்தும் ஜாதிக்காரர்கள் ­நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளில் நடத்தி வரும் பள்ளிகளில் நடக்கும் கல்வி வியாபாரத்தையும் மாணவர்கள் மதிப்பெண் பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு விளையாட்டு உள்ளிட்ட மாணவர்களுக்கான செயல்பாடுகளை தடை செய்துள்ளதையும் நான் தொடர்ந்து கண்டித்து எழுதி வருகிறேன். ஜாதியம் எப்படி வாழ்க்கையில் பாகுபாடுகளை இப்போதும் பின்பற்றத் தூண்டுகிறது என்பதை எனது மாணவர்களின் அனுபவங்களைத் திரட்டி, 32 கட்டுரைகளாக தொகுத்து ‘சாதியும் நானும்’ எனும் தலைப்பில் நூலாக வெளியிட் டுள்ளேன். (இந்த நூல் : தந்தை பெரியாருக்கு சமர்ப்பிக்கப்பட் டுள்ளதாகும் - ஆர்) கடைசியாக நான் எழுதிய ‘பூக்குழி’ நாவலை தர்மபுரியில் ஜாதி யத்துக்கு பலியான இளவரசனுக்கு சமர்ப்பித்தேன். அதற்காகவே அந்த நூலை வாங்க மறுத்தார்கள். இந்த சக்திகள் என் மீது கொண்ட கோபத்தை தீர்த்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பாக, இந்த எதிர்ப்பைப் பயன்படுத்துகிறார்கள்” என்கிறார் பெருமாள் முருகன்.
“நமது சமூகம், ஜாதியில் மூழ்கிக் கிடக்கிறது. இதிலிருந்து ஒரு எழுத்தாளரும் அவரது படைப்புகளும் மட்டும் எப்படி ஒதுங்கி நிற்க முடியும்?” என்று தனது ஜாதியத்துக்கு எதிரான எழுத்துகளை நியாயப்படுத்துகிறார்.

கோயில் திருவிழாவில் இப்படி விருப்பமுள்ள வரோடு உறவு கொள்ளும் வழக்கம் இருந்ததற்கு எழுத்துபூர்வ சான்றுகள் உள்ளனவா என்ற கேள்விக்கு பெருமாள் முருகன் தரும் பதில்:

“வரலாற்று பூர்வமாக சான்றுகள் இல்லை; ஆனால், அப்படிப்பட்ட வழக்கம் இருந்தது என்று வாய்மொழியாக சொல்லப்படுகிறது. இத்தகைய வழக்கங்கள் தமிழகத்தில் வேறு பகுதிகளில் நிலவியதை எழுத்தாளர் தியோடர் பாஸ்கரன், பேராசிரியர் ஏ.கே.பெருமாள் போன்றோரும் பதிவு செய்திருக்கிறார்கள். உதாரணமாக ‘துப்பட்டி திருவிழா’ என்ற விழாவில் ஆண்களும் பெண்களும் தங்கள் முகத்தை துணியால் மூடிக் கொண்டுதான் பங்கேற்க வேண்டும் என்ற சம்பிரதாயம் இருந்திருக்கிறது” என்கிறார், பெருமாள் முருகன்.

‘மாதொரு பாகன்’ கதை என்ன?

மகிழ்ச்சியுடன் உளம் நிறைந்து வாழும் இணையர் (காளி-பொன்னாயி) - தங்களுக்குள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்தாலும், ‘குழந்தை இல்லை’ என்பதால் உறவினருக்கு முன் அவமதிப்புக் கும் புறக்கணிப்புக்கும் உள்ளாகிறார்கள். திருச்செங் கோட்டிலுள்ள கடவுள் ‘அர்த்தநாரீஸ்வரர்’, ஆண் பாதி-பெண் பாதி உடலைக் கொண்டவர். ‘மாதொரு பாகன்’ என்ற பெயரும்அந்தக் கடவுளுக்கு உண்டு. குழந்தை இல்லாத தம்பதிகள், ஊர் தேர்த் திருவிழாவுக்கு வருவதும், கடவுள் ஆணைப்படி வேறு ஆணோடு தொடர்பு கொண்டு குழந்தையை பெற்றுக் கொள்வதும் வழக்கம்.

கதையின் நாயகியை தனது தாய், சகோதரர் தேர் திருவிழாவுக்கு செல்ல நிர்ப்பந்திக்கிறார்கள். கணவரிடம், ‘நீ சம்மதித்தால் போகிறேன்’ என்று அந்தப் பெண் கூறுகிறார். தன்னிடம் தனது மனைவி இப்படி ஒரு கேள்வியை கேட்பார் என்று எதிர்பார்க்காத கணவன், மனமுடைந்து போகிறார். மனைவி திருவிழாவுக்குப் போனதை அறிந்து மனம் உடைகிறார். அவர் இறந்து விட்டாரா? உயிர் பிழைத்தாரா? என்று உறுதியாக சொல்லாமல் கதை முடிகிறது. மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்தும்கூட ‘குழந்தை இல்லை’ என்ற பிரச்சினை சமூகத்தில் உருவாக்கும் தாக்கத்தை விவரிப்பதே நாவலின் நோக்கம்.

இது குறித்து பெருமாள் முருகன் ஒரு நிகழ்வில் பேசும்போது, “கதையின் நாயகன் முடிவை நான் வெளிப்படுத்தவில்லை என்றாலும், அவன் உயிருடன் இருந்திருப்பானேயானால் என்ன நிகழ்ந்திருக்கும்? மரணமடைந்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்? என்ற பார்வையில் மற்றொரு நாவலை எழுதி முடித்துள்ளேன்” என்றார்.

ஆய்வாளர் தரும் தகவல்

ஆய்வாளர் ஏ.ஆர். வெங்கடாசலபதி, இது குறித்து பெருமாள் முருகனுக்கு ஆதரவாக ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (ஜன.2, 2015) ஒரு கட்டுரை எழுதி யுள்ளார். இதே திருச்செங்கோடு அர்த்தநாரிஸ்வரன் கோயிலில் 125 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு சின்னத்தாயம்மாளும் வெங்கட்ட நாயக்கரும் தங்களுக்கு பிள்ளை வரம் வேண்டி திருச்செங்கோடு “வரடிக் கல்லை” சுற்றி வலம் வந்தார்கள். அப்போது பிறந்தவர்தான் மிகப் பெரும் பகுத்தறிவுப் புரட்சிக்காரர் பெரியார் என்று குறிப்பிட்டுள்ளார். கேளிக்கை கொண்டாட்டம் வழியாக குழந்தை இல்லாத பெண் ‘வைகாசி விசாகம் தேர்த் திருவிழாவில் பங்கேற்று பிற ஆண்களுடன் கூடி குழந்தைப் பெறுவதும்; பிறந்த குழந்தைக்கு “கடவுள் கொடுத்த குழந்தை” என்று கூறி, சமூகம் அங்கீகரித்ததையும் குறிப்பிடுகிறார். இந்து மதமே அங்கீகரிக்கும் ‘நியோகா தர்மப்படி’ (இது பற்றி ரிக்வேதம் கூறுகிறது) குழந்தை இல்லாத ஒரு பெண், கணவரைத் தவிர வேறு ஆணுடன் உறவு கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வதை அனுமதிப்பதையும் ஆய்வாளர் வெங்கடாசலபதி சுட்டிக் காட்டியுள்ளார்.

நீதிபதி சந்துரு கூறுகிறார்

‘இந்து’ பத்திரிகை நடத்திய இலக்கிய விழாவில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் நீதிபதி சந்துரு, இப்படி இலக்கியங்களைப் படித்து, அதில் மத அடிப்படையின் ‘எதிர்ப்பு’களைக் கண்டுபிடித்து தெரிவிக்க டெல்லியில் ஒரு குழு செயல்பட்டு வருகிறது என்றும், ஒரு ஜாதியமைப்பு, கல்லூரியில் மாணவர்களைத் திரட்டி, ‘சொந்த ஜாதியில் திருமணம் செய்து கொள்வேன்’ என்று உறுதியேற்கச் செய்துள்ளதையும் சுட்டிக் காட்டியிருப்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது. பெருமாள் முருகனுக்கு எதிராக திருச்செங்கோட்டில் முழு அடைப்புக்கு தூண்டியவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. முழு அடைப்புக்கான கோரிக்கை களும் முன் வைக்கப்படவில்லை. சமாதானக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த அரசு அதிகாரிகள் ஜாதி-மத வெறியர்கள் பக்கமே சார்ந்து நின்று எழுத்தாளர் பெருமாள் முருகனை மிரட்டியுள்ளனர். அரசு எந்திரம் - ஜாதி மத வெறிக்குள் மூழ்கிக் கிடப்பதையே காட்டுகிறது. முதலில் வருத்தம்; பிறகு நிபந்தனையற்ற மன்னிப்பு என்று மிரட்டல் படலம் தொடர்ந்து, ‘இனி எழுதவே மாட்டேன்’ என்று ஒரு இலக்கியவாதியை அறிவிக்க வைத்து விட்டார்கள். பெருமாள் முருகனிடம் வற்புறுத்திப் பெறப்பட்ட இந்த ‘சரணாகதி’ உடன்பாடு ஏற்கெனவே அரசு நிர்வாக ஒப்புதலோடு ஜாதி மத வெறி சக்திகளால் அச்சிடப்பட்ட படிவமாகவே தயாரிக்கப்பட் டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

புத்தகக் கண்காட்சியில் எதிர்ப்பு

சென்னை புத்தகக் கண்காட்சியில் ஜன. 13 ஆம் தேதி பெருமாள் முருகனுக்கு ஆதரவாக எழுத்தாளர்கள் அமைதியாக துண்டுப் பிரசுரம் வழங்கி எதிர்ப்பைத் தெரிவிக்க கூடினர். ஆனால், காவல்துறை அரங்கத்துக்குள் அதற்கு அனுமதி இல்லை என்று கூறி துண்டுப் பிரசுரங்களை பறிமுதல் செய்து, எதிர்ப்பாளர்களைக் கலைத்து விட்டது. ஜனவரி 14ஆம் தேதி மாலை புத்தகக் கண்காட்சியில் கருத்தரங்குகள் நடக்கும் இடத்துக்கு அருகே “மாற்று இடதுசாரி இளைஞர்கள்” என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள் வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு பெருமாள் முருகனுக்கு ஆதரவாக துண்டறிக்கைகளை வழங்கினர். காவல் துறையினர் துண்டறிக்கைகள் வழங்கிய இளைஞர்களை மிரட்டினர். அப்போது அந்தப் பகுதியில் கண்காட்சியில் இருந்த திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள், விடுதலை இராசேந்திரன், வழக்கறிஞர் திருமூர்த்தி, பேராசிரியர் சரசுவதி ஆகியோர் தோழர்களுடன் காவல்துறையின் மிரட்டலை தட்டிக் கேட்டனர். அமைதியாக எழுத்தாளரின் கருத்துரிமைக்கு ஆதரவாக - துண்டறிக்கை வழங்குவது குற்றமா? புத்தகக் கண்காட்சியில் எதிர்ப்பு தெரிவிக்காமல் வேறு எங்கே எதிர்ப்பு தெரிவிப்பது? இதைத் தடுக்க காவல்துறைக்கு ஏது உரிமை? - என்று தட்டிக் கேட்கவே பெரும் கூட்டம் கூடிவிட்டது.

அருகே கருத்தரங்கில் பேசிக் கொண்டிருந்த பாரதி கிருஷ்ண குமார் - ‘மாதொரு பாகன்’ நூலுக்கு காட்டப்படும் எதிர்ப்பைக் கண்டித்துப் பேசிக் கொண்டிருந்தார். ஒரே இடத்தில் மேடையில் பேசப்படும் கருத்துக்கு உரிமை இருக்கும்போது அதே கருத்தை துண்டறிக்கையாக வழங்குவது குற்றமா? என்று காவல்துறையிடம் தோழர்கள் வாதிட்டனர். புத்தகக் கண்காட்சியை நடத்தும் நிர்வாகிகள் விரைந்து வந்து காவல் துறைக்கு ஆதரவாகவே பேசியது அனைவரையும் வியப்பில் ஆடிநத்தியது. வளாகத்துக்குள் இத்தகைய துண்டுப் பிரசுரங்களை வழங்கக் கூடாது என்றே அவர்களும் வாதிட்டனர். “எழுத்தாளர்கள் - இலக்கியவாதிகள் இல்லையேல் புத்தகக் கண்காட்சியே இல்லை; காவல்துறையின் மொழியிலேயே பதிப்பாளர்கள் பேசுவது நியாயம்தானா?” என்று தோழர்கள் தட்டிக் கேட்டனர். இந்த காட்சிகளை அங்கே இருந்த ‘டைம்ஸ் நவ்’ (Times Now) தொலைக்காட்சியாளர்கள் தொலைக்காட்சியில் நேரடியாகவே ஒளிபரப்பியதோடு விடுதலை இராசேந்திரன், வழக்கறிஞர் திருமூர்த்தி, பேராசிரியர் சரசுவதி கருத்துகளையும் கேட்டு அந்த கண்டனத்தையும் ஒளிபரப்பினார்கள். காவல்துறை பின்வாங்கிச் சென்றது.

Pin It