பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொரு பாகன்’ நாவல் திருச்செங்கோடு பெண்களை இழிவுபடுத்துவதாக ஜாதி-மத வாத சக்திகள் அச்சுறுத்தி, மிரட்டி ஒரு இலக்கியவாதியின் படைப்பை முடக்கியுள்ளன. ஆனால், பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்தும் ‘மனு சாஸ்திரம்’ பெண்களை இழிவுபடுத்தும் புராணங்களை ‘புனிதமாக’ப் போற்றுகிறார்கள். பல நூறு ஆண்டுகளாக தொடர்ந்து ‘புனிதங்கள்’ என்ற பெயரில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ‘இழிவுகளுக்கு’ எதிராக பெரியார் இயக்கம் போராடி வருகிறது. ஆனால், பெரியார் இயக்கம் ‘மதத்தைப் புண்படுத்துவதாக’ குற்றம் சாட்டுகிறார்கள். ‘பெரும்பான்மை’ மக்களை இழிவுபடுத்தும் வேத புராண சாஸ்திரங்களை தடை செய்யக் கோரி திராவிடர் விடுதலைக் கழகம் திருச்செங்கோட்டில் ஜன.23இல் பொதுக் கூட்டம் நடத்தவிருக்கிறது. அதையொட்டி மக்களிடையே பரப்புவதற்காக கழகம் வெளியிட்ட துண்டறிக்கை:

சூத்திரன் என்றால் யார்?

இந்து மதத்தில் பார்ப்பனர்களைத் தவிர பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்த மக்கள் அனைவரும் சூத்திரர்கள் என இந்து மத சாஸ்திரங்கள் கூறுகின்றன.

“பிரம்மாவானவர் உலக விருத்தியின் பொருட்டு, தன்னுடைய முகத்திலிருந்து பிராமணரையும், தோளிலிருந்து க்ஷத்திரியரையும், தொடையிலிருந்து வைசியரையும், பாதத்திலிருந்து சூத்திரரையும் படைத்தார்.” - மனு சாஸ்திரம்: அத்தியாம் 1, ஸ்ஸ்லோகம் 31

சூத்திர ஜாதிகள் எப்படி உண்டாகின?

உலகில் கடவுள் உருவாக்கியது மேற்கண்ட நான்று வர்ணங்கள் மட்டுமே என்றும் - இந்த நான்கு வர்ணத்தாரும் ஒருவருக்கு ஒருவர் விபச்சாரம் செய்ததால்தான் இன்று நடைமுறையில் உள்ள 6000 க் கும் மேற்பட்ட ஜாதிகள் உருவாயின என்றும் - இந்தியாவில் உள்ள அனைத்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்த மக்களும் விபச்சாரத்தால் பிறந்தவர்கள் என்று இந்து மத நூல்களில் எழுதிவைக்கப்பட்டுள்ளன. ஆதாரம்: சுப்பர போதகம், பிரம்ம புராணம், வைகாநசம், மாதவியம்.

இந்துமத சாஸ்திரங்களில் ‘சூத்திரர்’ எனக் குறிப்பிடப்படும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களைப் பற்றி என்ன கூறப்பட்டுள்ளது?

சூத்திரன் என்றால் ஏழுவகைப்படும். 1. போரில் புறங்காட்டி ஓடியவன், 2. போரில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன், 3. பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியம் செய்பவன், 4.விபச்சாரி மகன், 5. விலைக்கு வாங்கப்பட்டவன், 6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன், 7. தலைமுறைதலைமுறையாக ஊழியம் செய்பவன். ஆதாரம்: மனுசாஸ்திரம், அத்தியாயம் 8, ஸ்லோகம் 415

இந்து சாஸ்திரங்கள் பெண்களை இழிவுபடுத்துகிறது!

மனைவியில்லாத ஒருவன், பிள்ளையில்லாத ஒருவன், தனக்கு வாரிசு தேவைப்படுமானால், மற்றொருவனுடைய மனைவியிடம் பிள்ளை பெற்றுக்கொள்ளலாம். - மனுசாஸ்திரம்: அத்தியாயம் 9, ஸ்லோகம் 52.

பிள்ளை இல்லாமல் ஒரு குலம் அழியுமானால், ஒரு பெண் தனது கணவனின் உடன் பிறந்த சகோதரர்கள் அல்லது தனது கணவனின் ஏழு தலைமுறைக்கு உட்பட்ட பங்காளிகள் யாருடன் வேண்டுமானாலும் கூடி பிள்ளை பெற்றுக் கொள்ளலாம். - மனுசாஸ்திரம்: அத்தியாயம் 9, ஸ்லோகம் 59.

கணவன் வாரிசு இல்லாமல் இறந்துவிட்டால் மனைவி வேறு ஒரு ஆணிடத்தில், தனது கணவன் சம்பாதித்த பொருளைக் கொடுத்து, பிள்ளையைப் பெற்றுக்கொள்ளலாம். - மனுசாஸ்திரம்: அத்தியாயம் 9, ஸ்லோகம் 190.

இந்துமதப் புராணங்கள் பெண்களை இழிவுபடுத்துகின்றன!

மகாபாரதக் கதைப்படி, பரசுராமன் தொடர்ச்சியாக 21 அஸ்திரங்களை எய்தி, பூமியில் க்ஷத்திரியர்களே இல்லாமல் அழித்து விட்டார். அப்போது எல்லாத் தேசங்களிலிலும் உள்ள க்ஷத்திரிய பெண்கள் அனைவரும், வேதங்களில் கரைகண்ட பிராமணர்களைக் கூடி, அவர்களோடு உறவுகொண்டு பிள்ளைகளை உற்பத்தி செய்தார்கள். பரசுராமன் காலத்திற்குப் பிறகு வாழ்ந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் பிராமணனுக்குப் பிறந்தவர்களே என்றும், எல்லா தேசங்களிலும் இருந்த க்ஷத்திரிய ஜாதிப்பெண்கள் அனைவரும் பிராமணர்களுடன் உறவுகொண்டுதான் வாரிசுகளைப் பெற்றார்கள் என்றும் மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. - மகாபாரதம்: ஆதிபர்வம், அத்தியாயம் 113.

பெண்கள் ஆபத்துக்காலத்தில், தனது கணவன் அல்லாத மேல்ஜாதி ஆணிடத்திலோ, மைத்துனனிடத்திலோ பிள்ளை பெற்றுக்கொள்ளலாம். - மகாபாரதம்: ஆதிபர்வம், அத்தியாயம் 126

இவை மட்டுமல்ல, இன்னும் இந்துமதத்திற்கு அடிப்படையாக உள்ள யக்ஞவல்கியர் ஸ்ஸ்மிருதி, பராசரர் ஸ்மிருதி, அர்த்தசாஸ்திரம், பகவத்கீதை, இராமாயணம், பெரியபுராணம், தேவாரம் போன்றவை அனைத்தும், இந்த நாட்டின் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரையும் விபச்சாரி மக்களாகவும், அடிமைகளாகவும், இழிவுபடுத்தியே உள்ளன. சுயமரியாதை உணர்வுள்ள ஒவ்வொரு மனிதனும் இந்த இந்துமத சாஸ்திரங்களையும், புராணங்களையும், வேதங்களையும் தடைசெய்யப் போராடுவோம்.

வெளியீடு: திராவிடர் விடுதலைக் கழகம் - திருச்செங்கோடு - 94428 28962

Pin It