பாபர் மசூதிக்குள் நள்ளிரவில் ராமன் சிலைகளைப் போட்டு, அது ‘ராமஜென்ம பூமி’ என்று சங்பரிவாரங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை காந்தி ஆதரித்தார் என்று உண்மைக்கு மாறாக பொய்யான ஆதாரங்களை பா.ஜ.க. உயர்மட்டத் தலைவர்களே எழுதினார்கள். இந்தப் புரட்டுகளை அம்பலப்படுத்தி பிரபல எழுத்தாளர் ஏ.ஜி.நூரானி எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்:

காந்திஜி எந்த இலட்சியங்களுக்காகப் பாடுபட்டாரோ அவற்றை நிராகரித்து வரும் சங் பரிவார் தனது அரசியலை நியாயப்படுத்திக் கொள்ள காந்திஜியின் பெயரையே பயன்படுத்திக் கொள்ளும் மோசடியை செய்து வருகிறது. பிரிட்டனில் செயல்படும்

விஸ்வ இந்து பரிஷத்தின் தலைவரான எல்.சி. பௌன்ஞ் என்பவர் அயோத்தி பிரச்சினைப் பற்றி இந்துக்களின் கருத்து என்ன என்று விளக்கக் கடிதம் ஒன்றை பிரிட்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரியிடம் அளித்தார். இராம ஜென்ம பூமி பற்றிய சர்ச்சையைப் பற்றி காந்திஜியின் கருத்துக்கள் 27.7.1927 தேதியிட்ட ‘நவஜீவன்’ பத்திரிகையில் வெளி வந்துள்ளதாகக் கூறிய அவர் அவற்றைத் தமது கடிதத்தில் மேற்கோள் காட்டியிருந்தார். காந்திஜியின் கருத்துக்கள் சங் பரிவாரின் கருத்துக்களை ஆதரிக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார் (ஆர்கனைசர் செப். 23, 1990).

இரண்டு மாதங்கள் கழித்து பா.ஜ.க.வும் இதே முறையில் செயல்பட்டது. அப்போதைய பிரதமர் சந்திரசேகருக்கு பா.ஜ.க. பொதுச் செயலாளர் லால் கிருஷ்ண சர்மா கடிதம் எழுதினார். இராம ஜென்ம பூமி பற்றி காந்தியின் கருத்துக்கள் 27.7.1937 தேதியிட்ட ‘ஹரிஜன் சேவக்’ பத்திரிகையில் (நவஜீவன் பத்திரிகையில் அல்ல) வெளி வந்ததாகக் குறிப்பிட்டு அக்கட்டுரையிலிருந்து இரண்டு பத்திகளை மேற்கோள் காட்டியிருந்தார். இச்செய்தி 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதியன்று

‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிகையில் வெளி வந்தது என்றும் குறிப்பிடப்பட்ட ‘ஹரிஜன் சேவக்’ இந்தி வார இதழைத் தாமே படித்துப் பார்த்ததாகவும் கிஷன்லால் சர்மா குறிப்பிட்டிருந்தார்.

இச்செய்தி பொய்யானது என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிகையின் புலனாய்வுப் பிரிவு செய்தி வெளியிட்டது. காந்திஜி அப்படிப்பட்ட கட்டுரை எதனையும் எழுதவில்லை. இதுபற்றி சர்மாவிடம் பத்திரிகையாளர்கள் வினாக்களை தொடுத்தபோது ‘விஸ்வாஸ்’ என்ற உள்ளூர் பத்திரிகை ஒன்றில் வெளிவந்த கட்டுரையிலிருந்து இதனைத் தான் தெரிந்து கொண்டதாக அவர் பதில் அளித்தார். பின்னர் வேறுவிதமாகப் பேச ஆரம்பித்தார். தான் கூறிய செய்தி சரியா? தவறா? என்று ஆய்வு செய்யும் பொறுப்பு பிரதமருடையதுதான் என்று குறிப்பிட்டிருந்தார். அந்தச் செய்தி ஆதாரபூர்வமற்றது என்றால் பிரதமர் மறுப்புச் செய்தி வெளியிட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“கட்டுரை வெளி வந்ததாகச் சொல்லப்படும் ஹரிஜன் சேவக் அல்லது நவஜீவன் பத்திரிகையின் பிரதி ஒன்றை அளிக்குமாறு பா.ஜ.க. மத்திய அலுவலகத்துக்கு ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுத்தது. ஆனால் குறிப்பிட்ட பத்திரிகைகளின் பிரதிகளை அதனால் அளிக்க முடியவில்லை” என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிகை அம்பலப்படுத்தியது (டிசம்பர் 4, 1990).

பாபர் மசூதி பிரச்சினையில் சங் பரிவாரின் நிலைக்கு காந்தியின் ஆதரவு இருந்தது என்ற செய்தி பொய்யானது என்று நிரூபிக்கப்பட்ட பிறகும் மீண்டும் ஒருமுறை காந்தியை மேற்கோள் காட்டி பிரதமருக்கு இதே சர்மா கடிதம் எழுதினார். காந்தி பல்வேறு சமயங்களில் எழுதியவை பல நூல் தொகுதிகளாக வெளியிடப்பட்டிருந்தது. அவற்றில் 26ஆவது தொகுதியின் 65ஆவது பக்கத்தை மேற்கோள் காட்டியிருந்தார். ‘யங் இந்தியா’ பத்திரிகையின் வாசகர் ஒருவர் எழுதிய கடிதத்துக்கு காந்தி அனுப்பியிருந்த பதிலில், “ஒரு மசூதி முறையான அங்கீகாரம் பெறப்படாமலோ அல்லது வலுக்கட்டாயமான முறையிலோ கட்டப்பட்டிருந்தால் அதனைப் புனிதமானது என்று நான் கருத மாட்டேன்” என்று குறிப்பிட்டதாக மேற்கோள் காட்டப்பட்டிருந்தது. 1925 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி வெளியிடப்பட்ட ‘யங் இந்தியா’ இதழிலும், 1950ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி வெளியிடப்பட்ட ‘சேவக்’ இதழிலும் காந்திஜியின் பதில் பிரசுரிக்கப்பட் டிருந்ததாக சர்மாவின் கடிதம் தெரிவித்தது (‘தி ஸ்டேட்ஸ்மேன், டிச. 6, 1950). இதுவும் பொய் என்று நிரூபிக்கப்பட்டது. இதே சர்மா 1990இல் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் அளித்த உறுதிமொழியை நினைவுகூர்வது நல்லது. “எனது கட்சியோ அல்லது நானோ எந்த மசூதியையும் இடிப்பதை ஆதரிக்கவில்லை. அதனால்தான் பாபர் மசூதிக் கட்டிடத்தை கௌரவமான முறையில் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் அத்வானி ஆலோசனை தெரிவித்துள்ளார்” என்று சர்மா பிரதமரிடம் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அவர் கடிதம் எழுதிய நாளிலிருந்து இரண்டு ஆண்டுகள் கழித்து அத்வானியின் முன்னிலையில் அவரது ஒப்புதலுடன் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இப்போது மீண்டும் காந்தியின் கருத்துகள் பற்றிய செய்திக்கு வருவோம்.

காந்தியின் எழுத்துக்கள் இடம் பெற்ற 90 தொகுதிகளையும் ஆய்வு செய்த அஜய் மற்றும் சகுந்தலா சிங் இருவரும் இப்படிப்பட்ட கடிதம் எதுவும் அத்தொகுதிகளில் இடம் பெறவில்லை என்பதைக் கண்டனர். இதுபற்றி சர்மாவோ அல்லது காந்தியின் சீடர்கள் எவராவதோ விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர் (‘மெயின் ஸ்டீரீம்’, ஜனவரி 12, 1991). ‘மெயின் ஸ்டீரீம்’ பத்திரிகையின் அதே இதழில் 1947 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதியன்று காந்திஜி பேசிய பேச்சை மேற்கோள் காட்டி விஷ்ணுநாகர் என்பவர் எழுதிய கட்டுரையும் வெளி வந்திருந்தது. மசூதிகளைக் கைப்பற்றுவது பற்றியும் அவற்றைக் கோயில்களாக மாற்றுவதைப் பற்றியும் குறிப்பிட்ட காந்திஜி, அதில் பின்வருமாறு கூறியுள்ளார். “ஒரு மசூதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றுவது இந்து மதத்திற்கும் சீக்கிய மதத்திற்கும் அவமானத்தை ஏற்படுத்தும். மசூதிகளுக்குள் வைக்கப்பட்ட கடவுள் சிலைகளை அப்புறப்படுத்துவது இந்துக்களின் கடமையாகும். மசூதிகளுக்குள் சிலைகளை வைப்பதன் மூலம் மசூதிகளின் புனிதத்தைக் கெடுப்பதுடன் சிலைகளையும் அவர்கள் அவமானப்படுத்துகிறார்கள்” என்று அக் கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டிருந்தது.

‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ (டிச.09,1990) வெளியிட்ட இரு கட்டுரைகள், காந்தியைப் பற்றி சங்பரிவாரங்கள் பரப்பிய தவறான தகவல்களை ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தி யிருந்தது. ‘நவஜீவன்’ பத்திரிகையில் (ஜூலை 27, 1937) வெளிவந்ததாகக் கூறி, ஒரு கட்டுரையை ஷரத் மேற்கோள் காட்டியிருந்தார். பா.ஜ.க. செயலாளர் சர்மா, அதே தேதியிட்ட ‘ஹரிஜன் சேவக்’ பத்திரிகையில் காந்திஜியின் கட்டுரை வந்ததாகக் கூறி யிருந்தார். அந்தத் தேதியிட்ட ‘ஹரிஜன் சேவக்’ பத்திரிகையே வெளியிடப்படவில்லை என்று நிரூபித்தது ‘டைம்ஸ் ஆப் இந்தியா’. அதற்குப் பிறகும் பா.ஜ.க. செயலாளர் சர்மா பொய்யை நிறுத்தவில்லை. அவர் பின்னர் மற்றொரு மேற்கோளையும் காட்டி சிக்கலில் மாட்டிக் கொண்டார்.

1950ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதியிட்ட ‘ஹரிஜன் சேவக்’ இதழில் ‘ஜோடிக்கப்பட்ட கடிதமும் கட்டுரையும்’ (Concocted letter and article) என்ற தலைப்பில் ஜீவன்ஜி தேசாய் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். இந்தக் கட்டுரையைத் தான் ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ இதழ் மறுபிரசுரமாக வெளியிட்டிருந்தது. ‘இராமஜென்ம பூமி எதிர்ப்பாளர்களின் கருப்பு நடவடிக்கைகள்’ என்ற தலைப்பில் ராம்கோபால் பாண்டே என்பவர் புத்தகம் ஒன்றை எழுதியிருந்தார். இராமஜென்ம பூமி சேவா சமிதி அந்த நூலைப் பிரசுரித்தது. அந்தப் புத்தகத்தில் தாம் 1937ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதியன்று காந்திஜிக்கு ஒரு கடிதம் எழுதியதாகவும் அதற்கு காந்திஜியின் தனிச் செயலாளரான மகாதேவ் தேசாய் வார்தாவிலிருந்து மே 20ஆம் தேதி பதில் எழுதியதாகவும் அந்த நூலில் குறிப்பிட்டிருந்தார். பாண்டேயின் கடிதம் குறித்து தமது கருத்துக்களை ‘நவஜீவன்’ இந்தி மொழி இதழிலோ அல்லது ஹரிஜன் இதழிலோ காந்திஜி விளக்குவார் என்று மகாதேவ் தேசாய் தமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாகவும் பாண்டே தமது நூலில் குறிப்பிட்டிருந்தார். ஜூலை 27 (1937) ‘நவஜீவன்’ இதழில் காந்திஜியின் கட்டுரை வந்ததாகக் கூறி அதனை முழுமையாகத் தமது நூலில் பாண்டே வெளியிட்டிருந்தார்.,

மகாதேவ் தேசாயின் கடிதமும், காந்திஜி ‘நவஜீவன்’ பத்திரிகையில் எழுதியதாக மேற்கோள் காட்டப்பட்ட கருத்துக்களும் போலியானவை என்று ஜீவன்ஜி தேசாய் முகத்திரையைக் கிழித்தார். 1937ஆம் ஆண்டில் இந்தி மொழியில் ‘நவஜீவன்’ பத்திரிகையே வெளியிடப்படவில்லை. ‘நவஜீவன்’ பத்திரிகையின் இந்தி பதிப்பாக ‘ஹரிஜன் சேவக்’ தான் வெளியிடப்பட்டு வந்தது. ‘ஹரிஜன் சேவக்’ மற்றும் ‘ஹரிஜன்’ (ஆங்கிலம்) பத்திரிகைகள் தொடர்பான கோப்புகள் அனைத்தையும் தாம் பரிசீலனை செய்ததாகவும் காந்திஜி எழுதியதாகக் கூறப்பட்ட கட்டுரை ஜோடிக்கப்பட்டது என்றும் இல்லாத ஒன்று என்றும் ஜீவன்ஜி தேசாய் தனது கட்டுரையில் அம்பலப்படுத்தினார். அது தொடர்பான மற்ற விவரங்களும் இந்த முடிவை உறுதிப்படுத்தின. 1937ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி வாக்கில் காந்திஜியோ, மகாதேவ் தேசாயோ வார்தாவில் இருக்கவில்லை. அவர்கள் அப்போது குஜராத்தில் இருந்தனர்.

காந்திஜியின் நெருங்கிய கூட்டாளியான கே.ஜி. மஷ்ருவாலா என்பவர் எழுதி 1950 ஆகஸ்டு 19 ஆம் தேதியிட்ட ‘ஹரிஜன் சேவக்’ மற்றும் ‘ஹரிஜன்’ இதழ்களில் வெளிவந்த கட்டுரை ஒன்றையும் ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ பிரசுரித்திருந்தது. ‘அயோத்தி முஸ்லிம்கள்’ (Muslims in Ayodhya) என்பது அக்கட்டுரையின் தலைப்பு. 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதியன்று பாபர் மசூதி கைப்பற்றப்பட்டது குறித்து, அதே காலத்தில் எழுதப்பட்டிருந்த அதிகாரப்பூர்வமான கட்டுரை அது. அட்சய பிரம்மச்சாரி என்பவர் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் அக்கட்டுரை எழுதப்பட்டிருந்தது. மசூதி கைப்பற்றப்பட்ட விதம் குறித்து சங்பரிவார் பரப்பி வரும் பொய்களை அம்பலப்படுத்தும் வகையில் அக்கட்டுரை அமைந்துள்ளது. இப்படி காந்திஜி எழுதியதாகக் கட்டுரை விவகாரத்தில் எந்த அளவுக்குக் கீழ்த்தரமான பொய்களைக் கூறும் அளவுக்கு பா.ஜ.க.வின் உயர்மட்டத் தலைவர்கள் தரம் தாழ்ந்த வகையில் செயல்பட்டனர் என்பது இக்கட்டுரைகளின் மூலம் அம்பலமாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து இன்று வரை அவர்கள் மன்னிப்பு எதனையும் கோரவில்லை.

Pin It