1927இல் பெங்களூரில், பெரியார், காந்தி அழைப்பை ஏற்று அவரை சந்தித்துப் பேசினார். அப்போது பெரியார் காங்கிரசை விட்டு விலகி, 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. இராஜாஜி உடனிருந்தார்.

“இந்து மதத்தில் இருந்துகொண்டே நாமெல்லாம் சீர்திருத்தம் செய்யலாம்” என்றார் காந்தி. “இப்படி செய்தால் பார்ப்பான் உங்களை விட்டு வைக்க மாட்டான்” என்றார் பெரியார். “இராஜாஜி கூடவா அப்படி?” என்று காந்தி கேட்கிறார். உடனே பெரியார், “இராஜாஜி திறமையானவர் என்பதை ஒத்துக் கொள்கிறேன். புத்திக் கூர்மையானவர் என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால், அவர் இனத்திற்கு அதை பயன்படுத்துகிறார். பொது மக்களுக்கு பயன்படுத்துவதில்லை” என்று இராஜாஜியை வைத்துக் கொண்டே சொன்னார். “அப்படியா, பார்ப்பனரில் யாருமே யோக்கியன் இல்லையா? கோபாலகிருஷ்ண கோகலே யோக்கியமாக யில்லையா?” என்று கேட்கிறார். “மகாத்மாவின் கண்ணிற்கே ஒருவர்தான் தெரிகிறார். என் கண்ணிற்கு என்ன தெரியும்?” என்று சொல்லி பெரியார் கிளம்புகிறார். அப்போது பெரியார் சொல்கிறார், “நீங்கள் இந்து மதத்திற்கு ஜால்ரா போடும்வரை பார்ப்பான் உங்களை விட்டு வைத்திருப்பான். எப்போதாவது நீங்கள் இந்து மதத்திற்கு எதிர்ப்பாக இருப்பது தெரிந்தால் உம்மை ஒழித்து விடுவான்” என்றார் 1927இல் பெரியார்.

1947இல் ‘சுதந்திர’த்துக்குப் பின்னால் தமிழகத்தில் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் முதலமைச்சராக இருந்தபோது, இடஒதுக்கீடு பிரச்சினை வருகிறது. இட ஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டில் மட்டும்தான் இருந்தது. மராட்டியத்தில் கொஞ்சம் இருந்தது. இடஒதுக்கீட்டுக்கு எதிராக பார்ப்பனர்கள் அவ்வப்போது பிரச்சினை செய்து கொண்டிருந்தார்கள். ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் இட ஒதுக்கீட்டை கொஞ்சம் அதிகப்படுத்தினார். பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு என தனி ஒதுக்கீடு அறிவித்தார். உடனே ஈ.வெ.ராமசாமி, தாடியுள்ள ராமசாமி இவன்; ஓமந்தூர் ராமசாமி தாடியில்லா ராமசாமி என்று பார்ப்பனர்கள் சொன்னார்கள். அவர் காங்கிரஸ்காரர், பெரியார் காங்கிரசை எதிர்த்துக் கொண்டிருந்தவர். இடஒதுக்கீடு என்ற திட்டத்தால் எங்களைப் போன்ற பார்ப்பனருக்கு இடம் கிடைக்கவில்லை என்று காந்தி யிடம் புகார் கொடுத்தனர். ஓ.பி. ராமசாமி ரெட்டியாரும் போயிருந்தார். ஆமாம் என்று தனது தரப்பு நியாயங்களைச் சொன்னார்.

உடனே காந்தி பார்ப்பனரிடம் கேட்டார்: “ஏய்யா உங்களுக்கு எதற்கு எஞ்சினியர் வேலை? கட்டிடம் கட்டுகிற வேலை, சூத்திரன் பண்ண வேண்டிய வேலை. பார்ப்பனர்கள் வேதங்கள் படிக்க வேண்டும், வேதம் ஓத வேண்டும் இப்படித்தான் சொல்லுகிறது வேதம். நீங்கள் அந்த வேலையைப் பாருங்களேன்” என்று எடுத்துச் சொன்னார். அப்பொழுதும் பெரியார் சொன்னார், ‘காந்தி இப்படிச் சொல்லிவிட்டாரா, இனி அவரைப் பார்ப்பான் வைத்திருக்க மாட்டான்’ என்று 1947இல் பெரியார் சொன்னார். 1948இல் காந்தி சுடப்பட்டார்.

காந்தி கொலையைப் பற்றி சொல்லுகிற பொழுது கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரன் இல்லை என்பது ஒரு வாதம். அந்த கொலை வழக்கிலே கோபால் கோட்சேவும் கைது செய்யப்படுகிறார். வழக்கு நடந்தது. இருவருக்கு தூக்கு தண்டனையும் மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கினார்கள். தண்டனை காலத்துக்குப் பிறகு விடுதலைப் பெற்று வந்தவர் கோபால் கோட்சே. ஒரு புத்தகம் எழுதினார். “நான் ஏன் காந்தியை கொன்றேன்” என்பது அந்த புத்தகத்தின் பெயர். அந்த புத்தகத்தில் “நாதுராம் கோட்சேயும் நானும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தான். அத்வானி இதை மறுப்பது அவரது கோழைத்தனத்தைக் காட்டுகிறது” என்று சொல்கிறார். இன்னொரு ஆதாரம் என்னவென்றால் 1912 ஆம் ஆண்டு கோட்சே பிறக்கிறார். 1932ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்.இல் பிரச்சாரகராக இருக்கிறார். 1938இல் ஐதராபாத் நிஜாமை எதிர்த்து (இசுலாமியர் என்பதற்காக) போராட்டம் நடத்துகிறார். இதை ஆர்.எஸ்.எஸ். தான் முன்னின்று நடத்துகிறது. அதில் கைதாகி ஐதராபாத் சிறையில் 20 மாத சிறை தண்டனை பெறுகிறார் நாதுராம் கோட்சே. 20 மாதம் சிறையில் இருக்கிறார். அப்போது கோட்சே தான் சிறையிலிருந்தவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வகுப்புகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த வழக்கில் தேஷ்பாண்டே என்பவரும் சிறைபட்டு வருகிறார்.

அவர் யாரென்றால் இந்து மகாசபையின் பொதுச் செயலாளர். அவரும் ஐதராபாத் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவர். அவர் கோட்சேவிடம் என்ன சொல்கிறார் என்றால், நீ ஆர்.எஸ்.எஸ்.சில் இருந்தாய். ஆனால், நீ அரைகுறையாய் இருந்துவிட்டு திரும்பி இப்ப வந்து பயிற்சி தந்தால், எப்படி? இன்னொரு தடவை ஆர்.எஸ்.எஸ்.காரன் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். அப்போது எல்லோரையும் அமர வைத்து மீண்டும் ஆர்.எஸ்.எஸ். காரனென்று கோட்சே உறுதியை புதுப்பித்துக் கொண்ட பின்னால் தான் பயிற்சிக்கே அவரை அனுமதிக்கிறார்கள். நீதிபதி எஸ்.மோகன் எழுதிய நூலில் இதை குறிப்பிடுகிறார். இவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர்; கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தவர்; உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர்; அவர் ‘தியாக தீபம்’ என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில் காந்தியினுடய கொலை வழக்கைப் பற்றி எல்லா தகவல்களையும் திரட்டி, எல்லோருடைய வாக்குமூலங்களையும் ஒன்று சேகரித்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். ஸ்ரீராம் டிரஸ்ட் வெளியிட்டிருக்கிறது. சென்னை 145 லிங்கு செட்டி தெருவிலிருந்து இதை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த புத்தகத்தில்தான் இந்த செய்திகளையெல்லாம் எழுதியுள்ளார்.

“இந்தியாவின் முதல் நிதியமைச்சரும் சுயமரியாதைக் காரருமான சர். ஆர்.கே.சண்முகம் செட்டியார்தான் விடுதலைப் பெற்ற பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ் தானுக்கும் பொருளாதார கணக்குகளை தீர்த்து வைத்தவர். இந்தியா, பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் தரவேண்டும் என்று கணக்கு தீர்கிறது. இதனை பட்டேல் தர முடியாது” என்று சொல்கிறார்.

ஆரம்பத்தில் ஒத்துக்கொண்ட பட்டேல் இப்பொழுது தர முடியாது என்று அறிவிக்கிறார். 12ஆம் தேதி காலையில் பத்திரிகையில் வருகிறது. மாலை வழக்கம் போல் காந்தி உண்ணாவிரதம் ஆரம்பிக்கிறார். அது 15ஆவது உண்ணாவிரதம். சாகும் வரை என்று சொன்ன 15ஆவது உண்ணாவிரதம். இது மட்டும் காரணம் இல்லை. அப்பொழுது காந்தி சொல்கிறார், 1176 மசூதிகள் கோவில்கள் ஆக்கப்பட்டுள்ளன. ஒப்புக்கொண்ட 55 கோடியை பாகிஸ்தானுக்கு தர வேண்டும். 1176 மசூதிகள் மீண்டும் மசூதிகள் ஆக்கப்பட வேண்டும் என்று சொல்லி 12.1.1948இல் உண்ணாவிரதத்தை தொடங்குகிறார் காந்தி.

இந்தப் போராட்டத்தை காந்தி தொடருவதற்கு முன்பே கோட்சே கும்பல் கொலை செய்ய வேண்டும் என திட்டம் போட்டிருந்தனர். அதற்கு ஆதாரம் இருக்கிறது.

13ஆம் தேதியே நாராயண ஆப்தே தன் மனைவி சம்பூதி பெயரில் International Assurance CompanyLimited என்ற நிறுவனத்தில் 2000 ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கிறான். ஏனென்றால் நாம் இறந்தால்கூட அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள் என்பதால். 14ஆம் தேதி கோபால் கோட்சே போய் அவன் மனைவி சிந்துபாத்தை நாமினியாக வைத்து 3000 ரூபாய்க்கு பாலிசி எடுத்துக் கொள்கிறான். அவன் 13ஆம் தேதி, இவன் 14ஆம் தேதி, மனைவிகளின் பெயரில் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கிறார்கள். காந்தி 12ஆம் தேதி உண்ணாவிரதம் இருந்த உடனே முடிவு செய்து விட்டார்கள். முடித்து விட வேண்டும காந்தியை என்று. இவங்க இடித்தது ஒரு மசூதியை மட்டுமல்ல, 1176 மசூதிகள் இடிக்கப்பட்டிருப்பதாக காந்தி தன்னுடைய அறிக்கையில் சொல்கிறார். அதை நீதிபதி மோகன் அவர்கள் அந்த வழக்கிலிருந்தே ஆதாரங்களுடன் எடுத்துச் சொல்லியிருக்கிறார். காந்தி கொலைக்கு கோட்சே புறப்பட்டபோது தன் கையில் கீதை ஒன்றை எடுத்துக் கொண்டான். அகண்ட விசால இந்து சாம்ராஜ்ஜியம் இருக்கிறதல்லவா? அதாவது பர்மா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லாம் சேர்ந்த அந்த படத்தை கையில் எடுத்துக் கொள்கிறான். இன்னொன்று ஆர்.எஸ்.எஸ். கொடி இவை மூன்றையும் எடுத்துக் கொண்டு தான் பயணத்தை தொடங்கினான் என்று கோபால் கோட்சே தன்னுடைய வாக்குமூலத்தில் சொல்கிறார். புனாவில் இருந்து கொலை செய்ய புறப்படும் முன் ஆர்.எஸ்.எஸ். கொடி, கீதை, அகண்ட இந்து சாம்ராஜ்ஜியத்தின் படம் இவை மூன்றையும் கையில் எடுத்துக் கொண்டு போகிறார். இவரை என்னவென்று சொல்லுகிறீர்கள். இவர் ஆர்.எஸ்.எஸ்.காரன் இல்லை என்று சொல்கிறார்களா?

- கொளத்தூர் மணி , ‘காந்தி படுகொலையில் பார்ப்பனர் பின்னணி’  நூலிலிருந்து

Pin It