மயிலையில் காந்தி படுகொலை கண்டனக் கூட்டம்
‘கருப்பு-சிவப்பு-நீலம்’ இணைந்து தமிழ்நாட்டில் காவியை விரட்டியடிக்க உறுதி ஏற்போம் என்று காந்தி படுகொலை கண்டனக் கூட்டத்தில் பேசிய அனைவரும் உறுதி ஏற்றனர்.
சென்னை மயிலைப் பகுதி திராவிடர் விடுதலைக் கழக சார்பில் 6.2.2023 மாலை மந்தைவெளி இரயில் நிலையிம் அருகே காந்தி படுகொலை நாள் பொதுக் கூட்டம் மக்கள் கலை இலக்கிய மய்யக் குழு பாடகர் கோவன் கலை நிகழ்ச்சிகளோடு எழுச்சியுடன் தொடங்கியது.
காந்தியாரின் பிரிட்டிஷ் எதிர்ப்புப் போராட்ட வடிவத்தில் தங்களுக்கு முரண்பாடு உண்டு என்றும், பகத்சிங் நிலைப்பாட்டையே தங்களது அமைப்பு அங்கீகரிப்பதாகவும் கூறிய பாடகர் கோவன், காந்தி படுகொலையை பார்ப்பன சங்கிகள் திட்டமிட்டு நடத்தியதைக் கண்டிப்பதிலும், அது நம் அனைவருக்குமான வரலாறு தரும் எச்சரிக்கை என்பதிலும் நாம் இந்த மேடையில் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்ற தன்னிலை விளக்கத்தோடு நிகழ்ச்சியைத் தொடங்கினார்.காந்தி படுகொலைக்குப் பின் இந்தியாவுக்கு காந்தி தேசம் என்று பெயர் சூட்டக் கோரினார் பெரியார். ஆனால் காந்தி பிறந்த குஜராத் இன்று மதவெறியின் வன்முறைக் களமாக மாறி இருப்பதையும் குஜராத் கலவரத்தில் முதல்வராக இருந்த மோடிக்கு பங்கு உண்டு என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய பி.பி.சி. ஆவணப் படத்துக்கு ஒன்றிய ஆட்சி தடை போட்டதையும் மோடியின் செல்லப் பிள்ளை அதானி பங்கு மார்க்கெட்டில் செய்த தில்லு முல்லுகள்; மோடியின் மவுனம்; அதன் காரணமாக வங்கிகளிலும், எல்.அய்.சி.களிலும் பொது மக்கள் முதலீடு சூறையாடப்படுவதையும் ஆளுநர் ரவியின் அதிகார அத்துமீறல்களையும் மனுசாஸ்திரத்துக்கு மீண்டும் உயிரூட்ட நடக்கும் மோடி ஆட்சியின் பார்ப்பனிய பாசிசத்தையும் புரட்சிகாரப் பாடல் களுடன் கோவன் குழுவினர் மக்கள் முன் வைத்தனர்.
தமிழ்நாட்டில் கருப்பு-சிவப்பு-நீலம் மூன்றும் காவிகளைச் சந்திக்கும். தமிழ்நாட்டில் காவிகள் காலூன்ற முடியாது என்ற கருத்தை கலை நிகழ்வுகளில் வலியுறுத்தினர். ஒரு மணி நேரம் கருத்துச் செறிவோடு பார்ப்பனிய பாசிசத்துக்கு பதிலடியாக கலைநிகழ்ச்சி நிகழ்ந்தது.
தொடர்ந்து மாவட்ட செயலாளர் இரா. உமாபதி, பால். பிரபாகரன், அன்பு தனசேகரன், மயிலை சுகுமார் உரையாற்றினர். சுகுமார் தனது உரையில், மக்களிடம் நிதி திரட்டச் சென்றபோது சந்தித்த அனுபவங் களைப் பகிர்ந்து கொண்டார். காந்தி கொலை செய்யப்பட்டார் என்பதோ, அவரைச் சுட்டுக் கொலை செய்த நாதுராம் கோட்சே ஒரு பார்ப்பனர் என்பதோ, நமது பாட நூல்களில் வரலாறாக எழுதப்படவில்லை. எனவே மாணவர்களுக்கே இது தெரியவில்லை. எனவே பாட நூல்களில் காந்தியின் வரலாற்றோடு அவர் கொலை செய்யப்பட்ட வரலாற்றையும் தமிழ்நாடு அரசு பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், காந்தியின் படுகொலைக்குப் பின்னால் ஒரு தத்துவம் இருக்கிறது. கோட்சே என்ற தனி மனிதர் செய்த கொலை என்று ஒதுக்கி விட முடியாது. இந்தியாவை இந்து நாடாக மாற்றுவதற்கு காந்தி தடையாக இருந்தார் என்பதே காந்தியின் கொலைக்கான தத்துவப் பின்னணி என்றார். காந்தி தென்னாப்பிரிக்காவில் நிறவெறி தீண்டாமைக்கு உள்ளாக்கப்பட்ட வரலாறு, இந்தியாவுக்குத் திரும்பி, அவர் காங்கிரசுக்கு தலைமையேற்ற போது காங்கிரசில் திலகர் போன்ற இந்துத்துவா சங்கிகளால் கட்டமைக்கப்பட்ட காங்கிரசில் பாதையை வேறு திசைக்கு மாற்றி தாழ்த்தப்பட்டோர், இஸ்லாமியர்களை உள்ளடக்கிய சுதந்திரப் போராட்ட அணுகுமுறைகளை விவரித்தார். கோவன் கூறியதைப் போல் பெரியார் இயக்கத்துக்கும் காந்திக்கும் இடையே காந்தியின் வர்ணாஸ்ரம ஆதரவு, காந்தியின் கல்விக் கொள்கை போன்ற பல பிரச்சினைகளில் முரண்பாடுகள் உண்டு. ஆனாலும் காலப்போக்கில் காந்தியின் சிந்தனையில் பார்ப்பனர்களைப் பற்றிய புரிதல் வரத் தொடங்கியதையும் அவரது கருத்துகளில் ஏற்பட்ட மாற்றங்களையும் சுட்டிக்காட்டினார். கோட்சேவுக்கும் சாவர்க்காருக்கும் இடையே நெருங்கிய உறவுகளையும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி, பாகிஸ்தான் பிரிவினையின் வரலாற்றுப் பின்புலத்தில் காந்தியின் பங்கினைச் சுட்டிக்காட்டி ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள் காந்தியாரைத் தீர்த்துக் கட்ட முன் வந்ததை விரிவாக விளக்கினார்.
நிறைவாகப் பேசிய பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், காந்தியின் படுகொலையை இயற்கை மரணமாக சித்தரித்து, குஜராத் பாட நூல்களில் எழுதப்பட்டிருப்பதையும் பழங்குடி மக்களை மலைவாழ் மக்கள் என்று முரளி மனோகர் ஜோஷி அமைச்சராக இருந்தபோது திரித்து அவர்கள் மண்ணின் மைந்தர்கள் என்ற வரலாற்றை மறைக்க முயன்றதையும் விளக்கினார். வரலாற்று திரிபுகளை எடுத்துக் கூறவே இந்தக் கூட்டம் என்று விளக்கி 45 நிமிட நேரம் பேசினார். (வழக்கறிஞர் திருமூர்த்தி, பால் பிரபாகரன் உரை தனியே வெளி வரும்)
கூட்டத்தில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு 70 சந்தாக்களுக்கான தொகையை பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரனிடம் மயிலைப் பகுதி கழகத் தோழர்கள் மேடையில் வழங்கினர்.
கூட்டத்தில் வழக்கறிஞர் திருமூர்த்தியின் தந்தையார் இராமையா, கோவை இராம கிருட்டிணன் துணைவியார் வசந்தி ஆகியோர் படங்களை பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் திறந்து வைத்தார்.
அனைத்து இந்துக்களையும் சேலம் திருமலைகிரி கோயில் நுழைவுக்கு அனுமதிக்கக் கோரி சேலத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்
சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 02.02.2023 வியாழன் காலை 11.00 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சேலம் திருமலை கிரி கோவிலில் அனைத்து தரப்பு இந்து மக்களும் வழிபட ஆலய நுழைவை தமிழ் நாடு அரசு உறுதிப் படுத்த வேண்டி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் க.சத்திவேல் தலைமை தாங்கினர்.
கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் தலைமைக்குழு உறுப்பினர் அ.சக்தி வேல், மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, இளைஞரணி அமைப்பாளர் தேவபிரகாசு, சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராஜ் ஆகியோர் ஆர்ப்பாட்ட நோக்கத்தை விளக்கி உரை நிகழ்த்தினர். தோழர்கள் தங்களது உரையில் “கிராமப் பகுதிகளில் தொடர்ந்து நிலவும் ஜாதிப் பாகுபாடுகள், தீண்டாமைக் கொடுமைகள் இவற்றை தமிழ்நாடு அரசு கண்கானித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், அதேபோல அறநிலையத் துறை கட்டுபாட்டின் கீழ் உள்ள அனைத்து கோவில்களிலும் அனைத்து இந்து மக்களும் வழிபட தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும்” தெரிவித்தனர்.
நிறைவாக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் இரா.டேவிட் நன்றி கூற ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது. ஆர்ப்பாட்டத்தை விளக்கி பொதுமக்களுக்கு துண்டறிக்கை வழங்கப்பட்டக. ஆர்ப்பாட்டத்தில் ஏற்காடு, சேலம், இளம்பிள்ளை, நங்கவள்ளி, வனவாசி, மேட்டூர், மேட்டூர் ஆர்.எஸ். ஆகிய பகுதிகளில் இருந்து பொறுப்பாளர்களும், தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர்.