அன்றைய உள்துறை அமைச்சர் பதிவு செய்த வரலாறு

காந்தியார், ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் திட்டமிட்ட சதியால் படுகொலை செய்யப்பட்ட அந்த நேரத்தில் - மராட்டிய மக்கள் எப்படிப்பட்ட உணர்வு களைக் கொண்டிருந்தார்கள் என்பதை புரிந்து கொண்டால் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தின் பார்ப்பனத் தன்மையை தெளிவாகவே அடையாளம் கண்டுகொள்ள முடியும்!

மராட்டிய மண்ணில் - காந்தியார் கொலை செய்யப் பட்டார் என்ற செய்தி வந்தவுடன் பார்ப்பனர்களுக்கு எதிராக பார்ப்பனரல்லாத மக்கள் வீறுகொண்டு எழுந்தார்கள்.

கொலை செய்த கோட்சேவுக்கும், தங்களுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது என்று ஆர்.எஸ்.எஸ். காரர்கள் சாதிக்க முயன்றாலும், மராட்டிய மக்களுக்கு அந்த மண்ணிலே உருவான இயக்கத்தின் பின்னணிகள் புரியாதா? எனவே ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு எதிராக மட்டுமல்ல; பார்ப்பனர்களுக்கு எதிராகவே மராட்டிய பார்ப்பனரல்லாத சமுதாயம் கொதித்து எழுந்தது!

தமிழ்நாட்டுப் பார்ப்பன ஏடுகள் இந்த செய்திகளை எல்லாம் - அப்போது திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து விட்டன!

மராட்டிய மாநிலத்தில் மிகப் பெரிய கொந்தளிப்பு எழுந்த அந்தக் காலக்கட்டத்திலே, அந்த மாநிலத்தில் உள்துறை அமைச்சராக இருந்தவர் துவாரகா பிரசாத் மிஸ்ரா! அவரும் ஒரு பார்ப்பனர்தான்!

அப்போது மத்திய அரசின் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் பட்டேல் அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான இவர், அன்றைக்கு காங்கிரஸ் கட்சியிலே மிகப் பெரிய புள்ளி!

இவர் “Living an era” என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதியிருக்கிறார். அது இரண்டு பகுதிகளாக வெளி வந்திருக்கிறது! (விகாஸ் பதிப்பகத்தின் வெளியீடு)

காந்தியார் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி வந்தவுடன் மராட்டிய மாநிலத்திலே ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களுக்கு எதிராக நடந்த மிகப் பெரிய கலவரத்தை அவர் தனது சுயசரிதையின் - இரண்டாவது தொகுப்பில் மிக விரிவாக விவரித்திருக்கிறார்!

ஆர்.எஸ்.எஸ்.காரர்களைக் கைதுசெய்து, கலவரத்தை அடக்குவதற்காக உத்தரவுகளைப் பிறப்பித்தவர் என்ற முறையில் அவருடைய கருத்துகள் மிக முக்கியத்துவம் உண்டு!

அந்த சுயசரிதையில் துவாரகா பிரசாத் மிஸ்ரா அவர்கள் விவரித்துள்ள தகவல்களை இங்கு தருகிறோம்:

“நான் ஆர்.எஸ்.எஸ். பற்றி சில ஆதாரப்பூர்வமான தகவல்களை வெளியிட்டு, சில உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். காரணம் - இந்தப் பிரச்சினையில் எனக்கு நேரடியான தொடர்பு உண்டு.

காந்தியார் கொலையில் ஒரு அரை டஜன் மராட்டியப் பார்ப்பனர்களுக்கு பங்கு உண்டு. அதன் காரணமாக ஏராளமான பார்ப்பனர்கள் கடும் விலை கொடுக்க வேண்டியதாயிற்று. மக்கள் தொகையில் 4 சதவீதம் பேர் மட்டுமே உள்ள பார்ப்பனர்கள் மராட்டியத்தில் எல்லா துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அந்தக் காலத்தில் மகாராஷ்டிரியர்கள் என்று சொன்னாலே அது பார்ப்பனர்களைத்தான் குறிக்கும். பெரும்பாலான பார்ப்பனரல்லாத மக்கள் ‘மராத்தா’ என்று அழைக்கப் பட்டனர். தேசத் தந்தை காந்தியடிகளை கோட்சே சுட்டுக் கொன்ற செய்தி பரவியவுடன் பார்ப்பனரல்லாத மக்கள் ஆத்திரம் கொண்டனர். பார்ப்பனர்களுக்கு எதிராக திரண்டெழுந்தனர்.

அப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் - ‘சர் சங் சாலக்’, எம்.எஸ். கோல்வாக்கர் சென்னையில் இருந்தார். அங்குதான் அவருக்கு இந்தச் செய்தி கிடைத்தது. உடனே அவர், ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகம் இருக்கும் இடமான நாக்பூருக்கு விரைந்தார். தலைமை அலுவலகத்திலே கோல்வாக்கர் நிர்வாகக் குழுக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்ட பார்ப்பனரல்லாதவர்கள் எல்லோரும் - அந்த அலுவலகத்தைச் சுற்றி சூழ்ந்து கொண்டு விட்டனர். அலுவலகக் கட்டடத்தையே தீ வைத்துக் கொளுத்தத் திட்டமிட்டனர். போலீஸ் அய்.ஜி. உடனே என்னுடைய அலுவலகத்துக்கு விரைந்து வந்தார். அலுவலகத் துக்குள்ளே இருக்கும் 40 பேரும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டு விடுவார்கள் என்றார்.

ஆர்.எஸ்.எஸ்.காரர்களில் சிலர் எனக்கு நண்பர்களாக இருந்தாலும் அரசியலில் எனக்கு எதிரிகளாகவே இருந்தனர். பல வகுப்பு வெறி பார்ப்பனர்கள் என்னைத் தீர்த்துக் கட்டப் போவதாக பல கொலை மிரட்டல் கடிதங்களையும் எழுதினர். இருந்தாலும் அந்த பகுதியின் உள்துறை அமைச்சர் என்ற பொறுப்பை ஏற்றிருக்கும் நான் எனது கடுமையான அரசியல் எதிரிகளாக இருந்தாலும் அவர்களை சாக விட்டு விடக்கூடாது; எனவே ஆர்.எஸ்.எஸ்.காரர்களை கைது செய்வதன் மூலம்தான் - பார்ப்பனரல்லாத மக்களிடையே அமைதியை ஏற்படுத்த முடியும் என்று கருதி அவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டேன்.

கோல்வாக்கரும் அவரது சகாக்களும் கைது செய்யப்பட்டு நாக்பூர் சிறைக்கு அப்போதுதான் கொண்டு போய் இருப்பார்கள். அப்போது எனக்கு - இந்து மகாசபைத் தலைவர் எல்.வி. பராஞ்சிபேயிடமிருந்து டெலிபோன் செய்தி வருகிறது. ஒரு பொதுக் கூட்ட மேடையிலே என்னோடு மோதியவர் இவர். “ஒரு பெரிய கூட்டம் என் வீட்டை சூழ்ந்து கொண்டு தாக்குகிறது; என்னைக் காப்பாற்றுங்கள்” என்று டெலிபோனில் அவர் சொன்னார். “நீங்கள் உயிர் பிழைக்க வேண்டுமானால் அதற்கு இப்போது பாதுகாப்பான ஒரே இடம் நாக்பூர் சிறைதான்” என்று சொல்லி அவரைக் கைது செய்ய உத்தரவிட்டேன்.

பிறகு நான், காந்தியடிகளின் அஸ்தியை நர்மதை ஆற்றில் கரைப்பதற்கு டில்லிக்குச் சென்று விட்டேன். அந்த நேரத்தில் நாக்பூரில் பார்ப்பனரல்லாதாரின் எதிர்ப்புக் கிளர்ச்சி உச்சக்கட்டத்திற்குப் போய்விட்டது. உடனே புறப்பட்டு வருமாறு எனக்கு அவசரச் செய்தி வந்தது. நாக்பூருக்குச் சென்றபோது இதற்கு முன் எப்போதும் நடந்திராத அளவுக்கு கலவரங்கள் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியுற்றேன்.

காந்தியடிகளைப் பார்ப்பனர்கள் கொலை செய்து விட்டார்களே என்ற ஆத்திரத்தில், பார்ப்பனர்களின் வீடுகள் தாக்கப்பட்டன. பார்ப்பனர்களின் கல்வி நிலையங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. பார்ப்பன நிறுவனமான ஜோஷி உயர்நிலைப் பள்ளி தீயில் எரிந்தபோது, தீயை அணைக்க வந்த தீயணைக்கும் படை மேலும் வர முடியாமல் பார்ப்பனரல்லாத மக்கள் கூட்டத்தால் திருப்பி விரட்டப்பட்டது; அதற்குப் பிறகு கண்டதும் சுடும் உத்தரவு போலீசாருக்குப் பிறப்பிக்கப் பட்டது; அதற்குப் பிறகுதான் நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்தது.

பார்ப்பனர்களுக்கு எதிராக - திரண்ட பார்ப்பனரல் லாதார்களில் காங்கிரஸ்காரர்களே மிக அதிகமாக இருந்தனர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்த பலரும் இந்த யுத்தத்தில் இறங்கினர். கலவரத்தை ஒட்டி கைது செய்யப்பட்டவர்களின் 100க்கும் அதிகமானவர்கள் காங்கிரஸ்காரர்கள்தான்!

காந்தியடிகள் கொலையைத் தொடர்ந்து, பார்ப்பனரர்களுக்கு எதிர்ப்பு தீவிரமானது; நாக்பூர், பேரார் ஆகிய இடங்களில் காங்கிரசார் மாநாடு கூட்டினர். அங்கே பேசிய பேச்சு இரகசிய புலனாய்வுத் துறை மூலம் எனக்குக் கிடைத்தது. “காந்தியாரைக் கொலை செய்தது ஒரு பார்ப்பனர். எனவே இந்தப் பகுதியின் நிர்வாகப் பொறுப்பு எந்தப் பார்ப்பனரிடமும் இருக்கக் கூடாது. மத்திய அரசிலே பார்ப்பன அமைச்சர்கள் இருக்கிறார்கள். இது காங்கிரஸ் கட்சிக்கே மிகப் பெரிய சவாலாகும்” என்று அந்தக் கூட்டத்திலே காங்கிரசார் பேசினர்.

தொடர்ந்து பிப்ரவரி 4 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது.

“நாட்டின் பல பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் வன்முறையில் இறங்கி, கலவரத்தை உருவாக்கி வருகிறார்கள். அரசு இதைத் தடுப்பதற்காக - அந்த அமைப்பை சட்ட விரோதமாக அறிவிக்கிறது” என்று தடை உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தடையை எதிர்த்து கிளர்ச்சிகள் நடத்துமாறு கோல்வாக்கர் ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு கடிதம் எழுதினார். ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் ஆங்காங்கே கிளர்ச்சிகளை நடத்தினர். அதே நேரத்தில் அன்றாடம் பார்ப்பனர் எதிர்ப்புக் கூட்டங்களும் நடந்து கொண்டே இருந்தன. கோல்வாக்கரை தூக்கில் போடு என்ற முழக்கங்கள் வீதிகள் முழுதும் எதிரொலித்தன.

ஒரு பக்கம் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தாலும், இன்னொருப் பக்கம் கோல்வாக்கர் அரசாங்கத்திடம் மனு போட்டுக் கொண்டே இருந்தார். உள்துறை அமைச்சர் பட்டேலுக் கும், கோல்வாக்கருக்கும் கடிதப் போக்குவரத்துகள் நடந்தன. அவ்வவ்போது கைதான ஆர்.எஸ்.எஸ். காரர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் தடை நீக்கம் செய்யப்படவில்லை.

இவ்வாறு அன்றைய சூழ்நிலையை துவாரகா பிரசாத் மிஸ்ரா தனது சுயசரிதையில் படம் பிடித்துக் காட்டி யிருக்கிறார்!

இந்தக் கருத்துகள் விளக்குகின்ற உண்மைகள் என்ன?

1.            காந்தியார் கொலையில் அரைடஜன் பார்ப்பனர்கள் தொடர்பு கொண்டிருந்தார்கள்.

2.            காந்தியார் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி வந்தவுடன் மராட்டியத்தில் அது பார்ப்பன எதிர்ப்புப் போராகத்தான் உருவெடுத்தது.

3.            இந்து மகாசபைக்காரர்தான் கோட்சே என்று ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சாதித்தாலும் மராட்டிய மக்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் சதி இதில் அடங்கியிருக் கிறது என்ற உண்மையை உறுதியாகப் புரிந்திருந்தனர்.

4.            அன்றைய மராட்டிய உள்துறை அமைச்சராக துவாரக பிரசாத் மிஸ்ரா என்ற பார்ப்பனர் மட்டும் இருந்திருக்காவிட்டால் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் பூண்டோடு அழிக்கப்பட்டிருக்கும்.

5.            அன்றைய மராட்டிய காங்கிரஸ் கட்சியே பார்ப்பனர் எதிர்ப்புப் போரில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டது.

6.            ஆர்.எஸ்.எஸ்.சுக்கு தடை விதிக்கப்பட்டு, பார்ப்பனர்கள் எல்லாம் சிறைப்பிடிக்கப்படாமல் இருந்திருந்தால் அவர்களின் வாழ்வே அப்போது முடிக்கப்பட்டிருக்கும்.

7.            கடைசியாக - வீரம் பேசிய ஆர்.எஸ்.எஸ். கூட்டம், அப்போதும் ஆட்சியின் கால்களில் விழுந்து அரசியலில் ஈடுபட மாட்டோம் என்று உறுதி தந்து அமைப்புக்கு புதிய சட்டத்தையே வகுத்துக் கொள் வதாக உறுதி அளித்து-‘சரணாகதி’ அடைந்தது.

(‘ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்’  நூலிலிருந்து)

Pin It