தமிழ்நாட்டில் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கான சமூக அறிவியல் பாடநூல்கள், எந்த அளவு மோசமாக தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை விளக்கி ‘இந்து’ தமிழ் நாளேட்டில் வெளிவந்த கட்டுரையைப் படித்த எவருமே அதிர்ச்சியும், தலைகுனிவும் அடைந்திருப்பார்கள். தமிழ்நாட்டில் நடப்பது அ.இ.அ.தி.மு.க. ஆட்சியா அல்லது ஆர்.எஸ்.எஸ். ஆட்சியா என்று சந்தேகப்பட வேண்டி யிருக்கிறது.

1927ஆம் ஆண்டே தனது பெயருக்குப் பின்னால் இருந்த ஜாதிப் பட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, ஜாதி எதிர்ப்பு இயக்கத்தை வாழ்நாள் முழுதும் நடத்தி வந்த பெரியாரை, ‘ஈ.வெ.ராமசாமி நாயக்கர்’ என்று இந்த பாட நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், ஜாதிப் பெயரை விட்டுவிடாமல் பிடித்துக் கொண்டிருந்த எஸ்.சத்தியமூர்த்தி அய்யர், வாஞ்சி அய்யர் போன்றவர்களின் பெயர்களை ஜாதிப் பெயரை நீக்கி குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஹிட்லர், முசோலினி ஆகியோரின் வெளிநாட்டுக் கொள்கைகள் முற்போக்கானவை என்றும், திராவிடர் இயக்க ஆதரவோடு ஒழித்துக் கட்டப்பட்ட தேவதாசி முறையை பெருமைப்படுத்தி, அவர்களை ‘ஆலய சேவகிகள்’, ‘இறைப்பணி, கலைப் பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்கள்’ என்றும் புகழாரம் சூட்டுகிறது. ஜின்னாவை பிரிவினைவாதியாகவும், ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை போன்ற பார்ப்பனிய அமைப்புகளைத் தொடங்கியவர் அனைவரும் தேசபக்தி மிக்க காங்கிரசார் என்றும், வரலாற்றைத் திரிக்கிறது.

“கோ மாமிசம் தின்னக் கூடிய மிலேச்சனை” கொல்லப் போவதாகவும், சனாதன தர்மத்தைக் காப்பாற்றவே இதைச் செய்வதாகவும் கடிதம் எழுதி வைத்து, ஆஷ்துரையை சுட்டுக் கொன்றான் வாஞ்சிநாதன். இந்த வரலாற்றை மூடி மறைத்து, கலெக்டர் ஆஷ், 4 பேரை சுட்டுக் கொன்றதற்கு பழி வாங்கவே வாஞ்சி சுட்டதாக உண்மைக்கு மாறான தகவல்களை பிஞ்சு உள்ளங்களில் விதைக்கிறது. 1944 சேலம் மாநாட்டில் அண்ணா கொண்டு வந்த தீர்மானத்துக்கு முன்பே ‘குடிஅரசு’ இதழ்களில் ‘திராவிடர் கழகம்’ திராவிட நாடு குறித்து பெரியார் தலையங்கங்களில் பதிவு செய்துள்ள வரலாற்றுக்கு மாறாக ‘திராவிடர் கழகம்’ என்று பெயரை அண்ணா தான் சூட்டியதாக உண்மைக்கு மாறான வரலாறு எழுதப்பட்டுள்ளது. (இன்னும் ஏராளமான பிழைகளை கட்டுரை பட்டியலிட்டுள்ளது)

தமிழகக் காவல்துறையோ, ‘ஆர்.எஸ்.எஸ்.’ மனப்பாங்குடன் செயல்படுகிறது. கோட்சேவுக்கு சிலை வைக்கப் போவதாக ஒரு கூட்டம் வெளிப்படையாகப் பேசுகிறது. ‘காந்தியை கொலை செய்த கோட்சே’வுக்கு சிலை வைப்பதைக் கண்டித்து, பொதுக் கூட்டம் என்று விளம்பரம் செய்தால், ‘காந்தியை கொலை செய்த’ வாசகத்தை நீக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட காவல்துறை நிபந்தனை போடுகிறது. காந்தி கொலை செய்யப்பட்ட ஜனவரி 30ஆம் நாள் அன்று கோட்சேயை ஆதரிக்கும் விசுவ இந்து பரிஷத் திருச்சியில் பொன் விழா பொதுக் கூட்டத்தை நடத்த காவல்துறை அனுமதி வழங்குகிறது. கழகத் தோழர்கள் தோழமை அமைப்பினரோடு இதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானார்கள்.

திருச்செங்கோட்டில் ஜாதி வெறி சக்திகள் - எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘மாதொரு பாகன்’ நாவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு நடத்தி மிரட்டியபோது, அரசு அதிகாரிகள் நடத்திய சமாதானக் கூட்டத்தில் அதிகாரிகள் ஒரு சார்பாக ஜாதி வெறியர்கள் பக்கம் நின்று எழுத்தாளர் பெருமாள் முருகனை மிரட்டி, அடிபணிய வைத்தது தமிழகத்துக்கே தலைகுனிவாகும்.

இதே திருச்செங்கோட்டில் பெரும்பான்மை மக்களை இழிவுபடுததும் வேத சாஸ்திர புராணங்களை விளக்கிப் பேச திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்த கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இபபோது அதே திருச்செங்கோட்டில் பெருமாள் முருகனுக்கும் அவரது நாவலுக்கும் எதிராக ‘இந்து மக்கள் கட்சி’ பொதுக் கூட்டம் நடத்த காவல்துறை அனுமதித்திருக்கிறது. தன்னுடைய நாவலை திரும்பப் பெற்றுவிட்டதாகவும், இனி இலக்கியத்தின் பக்கமே திரும்பப் போவதில்லை என்றும் ‘பெருமாள் முருகன் இறந்து விட்டான்’ என்றும், எழுத்தாளர் பெருமாள் முருகன் அறிவித்துவிட்ட பிறகு, அவரைக் கண்டித்துப்பேச காவல்துறை, மதவெறி சக்திகளுக்கு தாராளமாக அனுமதிக்கிறது என்றால், இங்கே நடப்பது - யாருக்கான ஆட்சி? அர்த்தநாரீஸ்வரர் வளாகத்தில் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜின் சம்பத்தை காவல்துறை கைது செய்ய முற்பட்டபோது, மாவட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தலையிட்டு கைதை தடுத்தார் என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (பிப்.9) செய்தி வெளியிட்டுள்ளது. இதுபோல் பல சம்பவங்களை சுட்டிக் காட்ட முடியும்.

இராஜிவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 ஆயுள் தண்டனை கைதிகளையும் (தூக்குத் தண்டனை குறைக்கப்பட்ட மூவரையும் சேர்த்து) விடுதலை செய்வதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவிக்க, முந்தைய காங்கிரஸ் ஆட்சி, மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று உச்சநீதிமன்றம் போய் தடைப்படுத்தியது. இப்போது, எந்த ஒரு மாநில அரசும், ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க முடியாமல் உச்சநீதிமன்றம் தடை விதித்தள்ள நிலையில், தமிழக அரசு, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய வரும்போதுதான் வழக்கின் தேக்க நிலை உடையும் என்று உச்சநீதிமன்ற வட்டாரங்கள் கூறு கின்றன. தமிழக அரசின் அலட்சியத்தால் தமிழ்நாட்டில் விடுதலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 7 பேர் மட்டுமல்ல; இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். இதன் முக்கியத்துவத்தை தமிழக அரசு உணர்ந்ததாக தெரியவில்லை.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழக அரசு நிர்வாகம், மக்கள் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்காமல், வளர்ச்சித் திட்டங்கள், மக்கள் நலத் திட்டங்கள் எதைப் பற்றியுமே கவலைப்படாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு நிற்பது வாக்களித்த மக்களுக்கு இழைக்கும் துரோகம்!

தமிழ்நாட்டில் நிர்வாகமே முடங்கிக் கிடக்கிறது. பெரியார்-அண்ணா பெயரை உச்சரிப்பதற்கு எந்தத் தகுதியும் இல்லாத பார்ப்பனிய ஆட்சியாகவே மாறி நிற்கும் இந்த அவலத்தை என்னவென்று சொல்வது?

Pin It