சென்னை கழகத் தலைமை அலுவலகத்தில் 29.10.2024 அன்று நிமிர்வோம் வாசகர் வட்ட சார்பில் குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு சிறப்புக் கூட்டம் நடந்தது. அடிகளார் படத்தைக் கழகப் பொதுச்செயலாளர் திறந்து வைத்து ஆற்றிய உரை. கடந்த இதழின் தொடர்ச்சி..
பார்ப்பன எதிர்ப்புப் புள்ளியில் ஒன்றுபட்டாலும் சைவப் பெருமையைச் சுயமரியாதை இயக்கம் ஏற்கவில்லை. இது குறித்து ஆ.இரா.வேங்கடாசலபதி தனது நூலில் இவ்வாறு விளக்குகிறார்.இந்தி எதிர்ப்புப் போர் நடந்து முடிந்த சில காலத்திற்குள், சைவர்கள் ஒன்றுகூடி தமிழர் திருமண மாநாட்டைச் சென்னையில் 16, சூலை 1939இல் கூட்டினர். பார்ப்பனச் சடங்கு எதிர்ப்பு, பகுத்தறிவுச் சார்பு, தந்தை வழிச் சமூக ஆணாதிக்கத்தை எதிர்த்தல் என்ற விரிந்த கொள்கை அடிப்படையில் சுயமரியாதை இயக்கம் முன்வைத்த வாழ்க்கை ஒப்பந்தம் என்ற மண உறவுக்கு மாற்றாகச் சைவர், தமிழ்த் திருமணம் என்ற கோட்பாட்டை முன்னெடுத்தனர். பிராமணப் புரோகிதர்களைக் கொண்டு வட மொழி மந்திரங்களை ஓதி ஆரிய முறைப்படி நடத்திவைக்கப்பட்ட திருமண முறையைச் சைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், திருமணம் என்பது ஒப்பந்தம் தான், தாலி என்பது அடிமைச் சின்னம் என்பது சுயமரியாதைத் திருமணத்தின் புரட்சிகரக் கூறுகளை ஒப்புக் கொள்ளவில்லை. சுருக்கமாகச் சொல்வதனால் அந்தணப் புரோகிதர்களின் இடத்தில் சைவப் பெரியோர், வடமொழி மந்திரங்களுக்கு மாற்றாகத் தமிழ்ப் பாடல்கள் என்பதே சைவர்கள் உருவாக்கிய தமிழ்த் திருமண முறை ஆகும்.
இவ்வாறு தமிழ்த் திருமணம் வரையறுக்கப்பட்ட மாநாட்டில், இந்தி எதிர்ப்புப் போரில் சுயமரியாதை இயக்கத்தோடு மேடையைப் பகிர்ந்து கொண்ட அதே கா.சு.பிள்ளையும், ச.சோமசுந்தர பாரதியாரும், த.வே.உமாமகேசுவரன் பிள்ளையும் கலந்து கொண்டனர் என்பது மனங்கொள்ளத் தக்கது.
இதற்கடுத்து, 1940 அக்டோபரில் தமிழர் சமய மாநாடு சைவப் பெரியோரால் சென்னையில் கூட்டப்பட்டது. இதிலும் மறைமலையடிகள், கா.சு.பிள்ளை, ச.சோமசுந்தர பாரதியார், த.வே.உமாமகேசுவரன் பிள்ளை ஆகியோர் கலந்துகொண்டு, தமிழர் சமயம் என்ற கோட்பாட்டுக்கு முழு உருவம் கொடுத்தனர். ஆரியர் வருகைக்கு முன்பு தமிழ்ச் சமூகம் சமயங்களற்றிருந்தமையால் ஏற்றத்தாழ்வில்லாத பொதுமைச் சமூகமாக விளங்கியது என்ற சுயமரியாதை இயக்கத்தின் வரலாற்றுக் கருத்தாக்கத்தில் ஆரியரால் ஏற்பட்ட சீரழிவு என்ற ஒரேயொரு கூறினை மட்டும் ஏற்றுக் கொண்டு, சைவமே பண்டைத் தமிழரின் சமயம் என்றும், அக்காலத்தில் வேளாளர் நாகரீகமே நிலவியது என்றும் தம் நலன்களுக்கு உகந்த வகையில் தமிழர் சமயத்துக்கு ஒரு உருவம் கொடுத்தனர். தமிழர்கள் தங்கள் மதத்தைக் குறிப்பிடும் போது “இந்துமதம்” எனாமல் “தமிழர் சமயம்” என்று கூற வேண்டும் என்றும், வாழ்க்கைச் சடங்குகளையும் கடவுள் வழிபாட்டையும் ஆரிய முறையில், ஆரிய மொழிவழி, ஆரியப் புரோகிதரைக் கொண்டு நடத்துவதை விடுத்து, அவற்றைத் தமிழ்மொழிக் கொண்டு தமிழ் முறையில் தாமே நடத்திக் கொள்ள வேண்டும் என்றும் மாநாடு தீர்மானித்தது. பிரித்தானியக் காலனியாதிக்க அரசினால் இயற்றப்பட்ட இந்துச் சட்டங்கள் ஆரியச் சார்பின என்றும் கண்டிக்கப்பட்டன. இதனிடையில் சில சுயமரியாதை இயக்கத் தொண்டர்கள் மாநாட்டுக்குள் புகுந்து தீர்மானங்களை விவாதிக்கத் தொடங்கினர். இதனால் குழப்பம் ஏற்பட்டு பின்னர் அடங்கியது.
இவ்வாறு சுயமரியாதை இயக்கத் தொண்டர்கள் சைவக் கூட்டங்களில் புகுந்து விவாதத்தைக் கிளப்புவதும், அதனால் கூட்ட ஒழுங்கு குலைந்து குழப்பம் ஏற்படுவதும் இடையிடையே நிகழ்ந்தன. 1944ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற செந்தமிழ் மாநாட்டில் மறைமலையடிகள் பேச முற்பட்ட போது இரா.நெடுஞ்செழியன் இடையிட்டு, “சைவ சமயம் பற்றியும், கோயில் வழிபாட்டு முறைப் பற்றியும் மனதைப் புண்படுத்தும் வகையில்” பேசினார் என்றும் அறிய முடிகிறது.
சுயமரியாதை இயக்க, சைவர் மோதலின் இறுதிச் சுற்று என்று சொல்லத்தகும் விவாதம் 1943இல் நடந்தது. கம்பராமாயணத்தையும் பெரிய புராணத்தையும் கொளுத்த வேண்டும் என்று சுயமரியாதை இயக்கம் தீர்மானித்த போது, அதற்குச் சைவரிடையே இருந்து கிளம்பிய எதிர்ப்பு 1920களின் பிற்பகுதியினதோடு ஒப்பிட்டால் கீசுகீசென்றே ஒலித்தது. அரிய சமய இலக்கிய நூல்களைக் கொளுத்த முற்படுவது “கொடுஞ்செயல்” என்று வருணித்த பண்டிதமணி கதிரேசன் செட்டியார் போல் சிலரே எதிர்க்குரல் கொடுத்தனர்.
இதன் தொடர்பாகப் பொது மேடையில் நடந்த விவாதத்தில் அண்ணாவுக்கு எதிராகச் சோமசுந்தர பாரதியும், ரா.பி.சேதுப்பிள்ளையும் வாதாடினர். அண்ணாவின் மேடைத் தமிழே வாகை சூடியது என்று பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்ட அவ்விவாதத்தில், எதிர் வழக்காடிய சோமசுந்தர பாரதியும், சேதுப்பிள்ளையும் சமயக் காரணங்களைக் காட்டாமல் இலக்கிய அளவுகோல்களையே முன்வைத்தனர். இவ்விருவரும் சைவராக இருந்த போதிலும், விவாதத்தில் பெரிய புராணமன்றிக் கம்பராமாயணமே முதன்மை பெற்றது என்று படம் பிடிக்கிறார் ஆ.இரா.வேங்கடாசலபதி.
பெரியார் –- திரு.வி.க.
பெரியாருக்கும், திரு.வி.க.வுக்குமான நட்பு 1919-1953 வரை நீடித்தது. இருவருமே காங்கிரஸ் கட்சியில் ஒன்றாகப் பயணித்தவர்கள். சேரன்மாதேவி குருகுலப் பிரச்சனையின் போது பெரியாருக்கு ஆதரவாக நின்றார். தனது தேச பக்தன் ஏட்டில் பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் பிரச்சனையை கூர்மைப்படுத்துவதை இயக்கமாக நடத்துவதை விரும்பவில்லை, அது தேசத்துக்கு விரோதமான கருத்து என்று குறிப்பிட்டிருந்தார். அந்தப் பத்திரிகையில் நீதிக்கட்சியை எதிர்த்துக் கடுமையாக எழுதினார். அதற்குப் பெரியார் இயக்க ஏடுகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. அப்போது இரு தரப்புக்கும் இடையில் கருத்துப் போராட்டங்கள் நடந்து கொண்டு இருந்தது.
1925ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பெரியார் வகுப்புவாரி உரிமைத் தீர்மானத்தைக் கொண்டுவந்த போது அந்த மாநாட்டிற்குத் தலைமை தாங்கியவர் திரு.வி.க. வகுப்புவாரித் தீர்மானத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று பெரியாருக்கு உறுதியளித்த திரு.வி.க, தீர்மானம் நிறைவேற்றும் போது அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்து விட்டார். அதனால் ஆத்திரமடைந்த பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினார் என்பது வரலாறு.
1925ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்ட திருவிக, 1927இல் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்கவில்லை. கிட்டத்தட்ட 1937இல் இருந்து 1944 வரை காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியே இருந்தார். பெரியாரின் பார்ப்பனிய எதிர்ப்பில் இருக்கும் நியாயத்தை உணர்ந்த திருவிக 1944க்கு பிறகு பெரியாருடன் கை கோர்த்தார். பெரியாருடன் இணைந்தப் பிறகு சுயமரியாதை இயக்கத்தின் தந்தை, பெரியார் என்றால், நான் தாய். எங்களுக்கு பிறந்தக் குழந்தை தான் சுயமரியாதை இயக்கம் என்றார்.
திரு.வி.க, 1947இல் கடலூரில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் பெரியாரின் படத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். திரு.வி.க. ஈரோடு வருகிற போதெல்லாம் பெரியாரின் இல்லத்தில் தான் தங்குவார். அங்கு தங்கும் சமயத்தில் அவர் காலையில் எழுந்தவுடன் பூஜை செய்வதற்கு தேவையான பொருட்களையெல்லாம் வாங்கி வைத்துவிட்டு அவர் வழிபடுவதற்கான ஏற்பாடுகளை செய்தவர் பெரியார். 1953இல் திராவிட நாடு பிரிவினை மாநாடு ஈரோட்டில் நடந்த போது “திராவிட நாடு” படத்தைத் திறந்து வைத்தவர் திரு.வி.க. ஒரு கட்டத்தில் பெரியாரைக் கடுமையாக எதிர்த்து வந்த குன்றக்குடி அடிகளார், மறைமலை அடிகளார் மற்றும் திரு.வி.க ஆகியோர் பின்னாளில் பெரியாருடன் இணைந்துப் பணியாற்றியது குறிப்பிடத்தக்க ஒன்று.
சேரன் மாதேவி குருகுலத்தில் பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவதில் இருந்த வேறுபாடுகளைக் கண்டு கொதித்தெழுந்தப் பெரியார், அதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்த சமயத்தில் பெரியகுளம், குற்றாலம் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்றார். அப்போது பார்ப்பனர் வீட்டில் தங்கினார். அங்கே அவருக்கு தனி இடத்தில் உணவு பறிமாறப்பட்டது. காலையில் போட்ட எச்சில் இலை அப்படியே இருக்கும் சூழலில் மதியம் அதே இடத்தில் இலை போட்டு சாப்பாடு போட்டார்கள். இந்த சம்பவங்களை பல இடங்களில் பகிர்ந்து கொண்ட பெரியார் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.
தனக்கு நேர்ந்த அவமானம் குறித்து பெரியார் கவலைப்படவில்லை. ஆனால் சேரன்மாதேவி குருகுலத்தில் ‘வர்ணப் பாகுபாடு’ அமைப்புரீதியாக அமல்படுத்தப்பட்ட போது பெரியார் கொதித்து எழுந்தார்.
திராவிடர் கழகத்தின் 19வது மாநாடு ஈரோட்டில் நடந்தது. அதில் ‘திராவிட நாடு’ படத்தைத் திறந்து வைத்து, திராவிட நாட்டுப் பிரிவினைக்கும், திராவிடக் கருத்தியலுக்கு வலிமை சேர்க்கும் உரையை நிகழ்த்தினார்.
“இந்தியா வென்பது பெரிய நாடு. இதில் பல திறப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள் என்றாலும் இந்நாட்டில் பெரிய கலாச்சாரங்களே அடிப்படைக் கலாச்சாரங்களாகக் காணப்படுகின்றன. இவை இரண்டும் பெரிதும் முரண்பட்ட கலாச்சாரங்களாகவும் இருந்து வருகின்றன. இவற்றுள் ஒன்று ஆரிய கலாச்சாரமாகும். மற்றொன்று திராவிட கலாச்சாரமாகும். வட நாட்டில் பெரும்பாலும், ஆரிய கலாச்சாரமும் தென்னாட்டில் பெரும்பாலும் திராவிட கலாச்சாரமும் நிலவி வருகின்றன.
இவற்றுள் ஆரிய கலாச்சாரம் சுரண்டலையும் ஏமாற்றுதலையும் அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அதைப் பின்பற்றி வருபவர்கள் தமது சுரண்டலுக்காக அந்நிய நாடுகளை ஆக்கிரமிக்கும் எண்ணம் கொண்டு முயற்சி செய்து வருகிறார்கள்.
திராவிட கலாச்சாரம் சமதர்மத்தை, சோஷலிசத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருப்பதால் அதைப் பின்பற்றுபவர்கள் பிறர் சுரண்டலை ஒழித்து சுதந்திரமாக வாழ விழைகிறார்கள். எனவேதான் பிரிந்து வாழ நினைக்கிறார்கள் தென்னாட்டவர்கள்.” (விடுதலை 30.10.1948)
தமிழ்ப் பெரியார்!
திரு.வி.கவைத் தமிழ்ப் பெரியார் என்று அழைத்தார் பெரியார். அந்த அடைமொழியைத்தான் கொடுத்தார். 13.9.1953 அன்று திரு.வி.கவுக்கு மிகப்பெரிய விழா எடுத்தார் பெரியார். தொழிற்சங்கத் தலைவர் அந்தோணி தலைமையில் திரு.வி.க. படத்தைத் திறந்து வைத்துப் பெரியார் பேசினார். திரு.வி.க. அவர்கள் மற்றவர்கள் பின்பற்ற வேண்டிய பண்பாடுகளைக் கொண்டவர் என்றார் பெரியார். தமக்கும் திரு.வி.கவுக்கும் 1919 முதல் நட்பு ஏற்பட்ட நிகழ்வுகளை விவரித்தார் பெரியார். சென்னை மாகாண சங்க வரலாறுகளை அடுக்கினார். இதனை முதல் பக்கத்தில் வெளியிட்ட விடுதலை ‘35 ஆண்டுகள் இரு பெரியார்களின் நட்புறவு’ என்று தலைப்பிட்டது. - விடுதலை 14.9.1953
இந்தப் படத்திறப்பு நடந்தது 13.9.1953. நான்கே நாளில் அதாவது 17.9.53 அன்று திரு.வி.க. மறைந்தார். அவ்வளவு பெரிய விழாவைப் பெரியார் ஏன் நடத்தினார்? எத்தகைய உள்ளுணர்வு அவரை அப்படி நடத்த வைத்தது? “தமிழ்நாட்டில் ஆயிரமாண்டுக்கு ஒருமுறை தோன்றும் பெருந்தகை” என்று ‘விடுதலை’ எழுதியது.
‘திரு.வி.க.வின் முடிவு’ என்று அறிக்கை வெளியிட்டார் பெரியார். அன்றைய விடுதலையின் தலைப்புச் செய்தியே, ‘சென்னை நகரே கண்டிராத பிரம்மாண்டமான சவ ஊர்வலம் – பெரியார் தலைமையில் பல்லாயிர மக்கள் பின் தொடர்ந்தனர். - மறைந்த தமிழ்ப் பெரியாருக்கு மக்கள் காட்டிய இறுதி வணக்கம்’ என்று எழுதியது. அந்த ஊர்வலத்துக்கு பெரியாரே தலைமை வகித்து நடத்திச் சென்றார். ஈரோட்டில் இருந்து பெரியார் வந்திருந்தார். திராவிடர் கழகத்தவர், தொழிலாளர்கள் அதிகமாகக் கூடி இருந்தார்கள். தமது இறுதி நிகழ்ச்சிகளில் தமிழ்மறைகள் பாட வேண்டும் என்று திரு.வி.க. விரும்பியதாகத் தமிழறிஞர்கள் மு.வரதராசனாரும், அ.ச.ஞானசம்பந்தமும் பெரியாரிடம் சொன்னார்கள். தமிழ் மறைகள் பாடும் போது ஓரமாக உட்கார்ந்திருந்தார் பெரியார் (இதனை அ.ச.ஞா. தனது நூலில் விரிவாக எழுதியுள்ளார்.) - விடுதலை 19.9.1953
திராவிடத்தையும், தமிழையும் மோதவிட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தமிழ்த் தென்றல் திரு.வி.கவின் பேச்சைப் பதிலாகக் கூற முடியும்.
இந்த வரலாறுகளில் இருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி என்னவென்றால் நமக்குள் ஏற்படும் முரண்பாடுகளைத் தொலைநோக்குப் பார்வையோடு இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக எப்படிக் கையாளப்போகிறோம். அதைச் சரியாகக் கையாண்டு எப்படி அடுத்தக்கட்டத்திற்குச் செல்ல போகிறோம் என்ற ஒரு புரிதலை உருவாக்கி கொள்வதற்கு இப்படிப்பட்ட வரலாறுகள் நமக்கு பயன்படும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.(நிறைவு)
- விடுதலை இராசேந்திரன்