1)            சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாட தமிழக அமைச்சரவை நியமித்த பவானிசிங் நியமனம் செல்லாது. - உச்சநீதிமன்றம்

அம்மாவுக்கு எதிராக அமைச்சரவையே இப்படி குழிபறித்துக் கொண்டு - இன்னொரு பக்கம் பிரார்த்தனைகளை நடத்துகிறார்கள் போலும்!

2) பழைமை மாறாமல் இருப்பதற்கு பார்த்தசாரதி கோயில் - ‘மார்பிள்’ தரைகள் அகற்றப்பட்டு, கருங்கற்கள் பதிக்கப்படுகின்றன. - செய்தி

அப்படியே மின்சாரத்தையும் சேர்த்து துண்டிச்சுடுங்க; பழைமை மாறாம இருக்கும்.

3) பெரியார் திடலில் தாலி அகற்றிய பெண்களின் கணவர்கள் செத்துவிட்டதாகக் கருதி, திருவண்ணாமலையில் புரோகிதர்கள் ‘கரும காரிய’ புரோகிதம் செய்ய முடிவு. - செய்தி

பொய்யும் புரட்டுமே புரோகிதம் என்பதை வெட்கம், மானம் இல்லாமல் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்!

4) மதவிழாக்களுக்கு யானைகளை பயன்படுத்ததடை போடுக. - உச்சநீதிமன்றத்தில் வழக்கு

யானைகளாக விரும்பி ‘மதம்’ பிடித்தால் பங்கேற்க அனுமதிக்கலாம்; அதற்கு தடை போட வேண்டாம்!

5) இந்தியாவுக்கு ‘பரதன்’ பெயரை சூட்ட வேண்டும். - உச்சநீதிமன்றத்தில் வழக்கு

‘பரதன்’ பெயர் சூட்டினால், பிரதமர் நாற்காலியில் ‘ராமன்’ செருப்புகளை வைக்கச் சொல்வீங்க; அந்த செருப்பு அயோத்தியில்தான் கிடைக்கும் என்பீங்க... நல்லாத்தான் பாவுது!

6) இந்தியாவில் குழந்தை திருமணம் செய்த 1.7 இலட்சம் குழந்தைகள் (தாலி அறுக்கப்பட்டு) விதவைகளாக உள்ளார்கள்.    - ஆய்வு தரும் தகவல்

தாலி காக்கும் ‘தாலி’பான்களே! இதற்கு என்னப்பா, பதில்?

7) தமிழ்நாடு தகவல் ஆணைய தலைமை அதிகாரி, ஸ்ரீபதி ஓய்வு பெற்றார்.- செய்தி

தமிழ்நாட்டில் அப்படி ஒரு அமைப்பு இருந்தது என்பதை தனது ஓய்வின் மூலம் தகவலாக தந்திருக்கிறார், ஸ்ரீபதி; நல்ல சேவை போங்கோ!

8) ‘பெருமாள்’ பன்றி அவதாரம் எடுத்ததை கேலி செய்யும் கமலகாசன் படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி.  - செய்தி

கவலைப்படாதீங்க; ‘பெருமாளை’, நீதிபதியாக மற்றொரு அவதாரம் எடுத்து வரச் சொல்லி தடை வாங்கிக்கலாம்!

Pin It