செம்மொழி என்ற சொல் இன்று Classical language என்பதற்கான மொழி பெயர்ப் பாகக் கொள்ளப்படுகிறது. இம்மொழி பெயர்ப்பு இந்திய ஆட்சி அமைப்புச்சட்டத்தில் Classical languages எனச் சமஸ்கிருதம், அரபு, உருது போன்ற மொழிகள் பற்றிக் குறிப்பிடும்பொழுது பயன்படுத்தப்பட்ட சொல்லாகும். தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களது முயற்சியின் காரணமாக மத்திய அரசு நிலையிலும் தமிழ் Classical language ஆக (செம்மொழியாக) ஆக்கப்பெற்றது. இப்பொழுது உலகின் Classical languageகளில் ஒன்று என்ற கருத்தில் தமிழ் குறிப்பிடப்படுகின்றது.

sivathamby_327இங்கு கிளம்பும் மிகப்பிரதானமான பிரச்சனை செம்மொழி என்பது Classical languageயை கருதுமா என்பதே. செம்மொழியென்ற சொற்றொடர் செம்மையான மொழியென்றதன் குறுக்க வடிவமாகும். (செந்தமிழ்) இன்று செம்மொழியென்னும் சொல் Classical language என்பதைக் கருதப் பயன் படுத்தப்பட்டாலும் தமிழ் லெக்சிகனில் அக்கருத்துத் தரப்படவில்லை. அங்கு தரப்படும் கருத்துகள் பின்வருமாறு:

செம்மொழி என்பது (1) நல்வார்த்தை (2) தொகையில்லாத ஒரு மொழி என்பனவாகும்.

ஆனால் இப்பொழுது செம்மொழி என்னும் பதம் Classical language விற்கான மொழி பெயர்ப்பாகக் கொள்ளப்படுகின்றது. இந்த வினாவிற்கான விடையை இரண்டு நிலைப்படுத்திக் கூற விரும்புகிறேன். முதலில் செம்மொழி Classical language என்னும் எண்ணக்கரு பற்றிய சிற்றாய்வாகவும், அடுத்தது கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு மொழிகளைக் குறிப்பிடுவது போலத் தமிழையும் குறிப்பிடலாமா? என்பதாகும். தமிழ் லெக்சிகனில் செம்மொழியெனும் தொடருக்குத்தரப்பட்ட கருத்துகளுள் இக்கருத்து வரவில்லையென்பதும் முக்கியமாகும்.

இன்று செம்மொழியென்னும் தொடர் Classical language என்ற கருத்துப்பட பயன்படுத்தப்படுகின்றது. இடுகுறிப்பெயராக அன்றேல் காரண இடுகுறிப்பெயராக நாம் சில கலைச்சொற்களைப் பயன்படுத்தி வருகிறோம் என்பது உண்மையெனினும் தமிழின் இந்திய நிலை அந்தஸ்தையும் உலகநிலை அந்தஸ்தையும் குறிப்பிடப்பயன்படுத்தப்படுகின்ற சொற்றொடரில் கருத்து மயக்கமில்லாதிருப்பது அத்தியவசியமாகும். இப்பின்புலத்திலே உலகின் Classical language என ஆங்கிலத்திலே குறிப்பிடப்பெறும் மொழிகள் பற்றி நோக்குவோம்.

முதலில் இத்தொடர் உண்மையில் Classical language என்பதிலும் பார்க்க Classical divilization என்று சொல்லுவது மரபு. உண்மையில் கிரேக்க, உரோம நாகரிகங்களையே மேல்நாட்டு மரபில் Classical civilization என்று கொள்ளப்படுகின்றது.

மேல்நாட்டு நாகரிகம் இவ்விரண்டு மொழி இலக்கியம், கலைகள், பண்பாடு ஊடாகவே உருவாகியது. ஆனால் இப்பொழுதோ Classical language என்னும் தொடர் சற்று அகலப்படுத்தப்பட்ட கருத்தினையுடையதாகக் காணப்படுகின்றது. இவ்வழி நோக்கும் பொழுது உலகின் Classical language ஆக கிரேக்கம், லத்தீனுக்கு அப்பாலே ஹீப்ரு, சீனம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் சேர்த்துச் சொல்லுதல் மரபாகிவிட்டது.

இந்திய மரபில் சமஸ்கிருத மேலாண்மைவாதிகள் சமஸ்கிருதத்தைச் சேர்த்துக் கொண்டாலும் உலக நிலையில் அறிஞர்கள் கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, சீனம் என வருவனவற்றை Classical languages எனக் கொள்வர். காரணம் இவை இன்றும் பேசப்படுவனவாக வழக்கிலுள்ள மொழிகளாக உள்ளன. கிரேக்கம் - நவீன கிரேக்கமாகத் தொடர்கிறது. இவற்றிடையே காலவேறுபாடு உண்டெனினும் மொழித்தொடர்ச்சியமைப்பில், மொழிப்பயன்பாட்டு நிலையில் நிச்சயமானதொரு தொடர்ச்சி நிலையைக் காணலாம். சீனத்திற்கும் அத்தகைய தொரு தொடர்ச்சி நிலை உண்டு.

இக்கட்டத்திலே Classical language என்னும் தொடருக்கான மேலும் ஒரு விளக்கத்தையும் அடுத்து அதற்குப் பொருத்தமான தமிழ்ச் சொற்றொடரையும் நோக்குவோம். ஹீப்ரு இஸ்ரேலின் உத்தியோகப்பூர்வ மொழியாகும். இவ்வாறு நோக்கும் பொழுது Classical language என்பதற்கு மூன்று முக்கியப் பண்புகள் இருக்க வேண்டுமென்று கொள்ளலாம்.

(அ) தொன்மை (ஆ) தொடர்ச்சி

(இ) செழுமைவளம்

மேலே குறிப்பிட்ட சமஸ்கிருதம் தவிர்த்த நாலு மொழிகளும் இன்றும் ஏதோவொரு வகையில் புதிய புத்தகம் பேசுது | சூலை 2010 11

பேசப்படுகின்றன. சமஸ்கிருதத்தைப் பொறுத்தவரையில் நிலைமை முற்றிலும் வேறானது. சமஸ்கிருதமெனும் சொல்லின் கருத்து நன்கு செய்யப்பட்டுள்ளது என்பதாகும். இது உண்மையில் பேச்சு வழக்கு நிலையில் பயன்படுத்தப்படுவதில்லை. வடமொழியாளர் சாதாரணமாகப் பேசும் மொழிகளை பிராக்கிருத மொழிகள் என்பர். சமஸ்கிருதம் இந்து சமயச்சடங்குகளில் இடம் பெறும் மொழியெனினும் அதனைப் பேச்சு மொழியாகக் கொண்ட எவரும் இலர். ஆனால் சமஸ்கிருத நாடகங்களில் சமூக உயர்நிலையிலுள்ள பாத்திரங்கள் சமஸ்கிருத மொழியில் பேச மற்றைய பாத்திரங்கள் பிராகிருத மொழிகளில் பேசுவர்.

இந்திய ஆட்சியமைப்பு நிலையில் அது Classical language ஆக கொள்ளப்பட்டமைக்குக் காரணம் இந்திய வைதீக நாகரீகத்தின் ஊற்றாக இருப்பதாலாகும். சமஸ்கிருத வளர்ச்சியிலும் இரு நிலைகளைக் குறிப்பிடுவர்.

(அ) vedic sanskirt, (ஆ) classical sanskrit

இந்த Classical language  மொழிநிலையிலேதான் காளிதாசன் போன்ற பெரும் புலவர்கள் எழுதியுள்ளனர். தமிழ் இலக்கணத்தில் சமஸ்கிருதம் என்று குறிப்பிடப் படாமல் வடமொழியென்ற பதமே பயன்படுத்தப் படுவதைக்காணலாம். இதற்குக் காரணம் சமஸ்கிருதம், பாலி ஆகிய இரண்டு மொழிகளையும் குறிக்க வடமொழி என்னும் சொல் பொதுவானதாகும்.

மற்றைய Classical language க்குரிய தொன்மையும் தொடர்ச்சியும் சமஸ்கிருதத்திற்கு இல்லை. இனித்தமிழை எடுத்துக் கொள்வோம். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது. இன்றைய மொழியறிவு நிலையின்படி தமிழைத் தென் திராவிடமொழிகளுக்கான (South Dravidian language) முதன்மை உதாரணமாகக் கொள்வர். இத்தென் திராவிட மொழிகளுள் கன்னடம், துளு, மலையாளம் போன்றவை வரும். தெலுங்கு மத்திய திராவிட மொழி (Central Dravidian language) என்று கொள்ளப்படுகிறது. இவற்றுள் தமிழின் முதன்மையை நோக்குவோம். அனைத்திந்திய மட்டத்தில் இன்று பேசப்பெறும் மொழிகளுள் இதுவே தொன்மையும் தொடர்ச்சியுமுள்ள மொழியாகும் (antiquity and continuity) தமிழின் எழுத்து வழக்குப்பற்றி பேசும் பொழுது கி.மு. 3ம் நூற்றாண்டுக்குரிய பிரஹ்மிக் சாசனங்களை உதாரணம் காட்டுவர். ஆனால் தமிழ் மொழியோ நீண்ட காலம் பேச்சு வழக்கிலிருத்தல் வேண்டும்.

இந்தியாவின் பெருங்கற் படைப்பண்பாடு (Negatithicl culture) ஏறத்தாழ கி.மு 700 - 1000 ஆண்டுகள் என்பர். அப்பண்பாடு உள்ள இடங்களில் தமிழ் காணப்படுவதாகச் சிலர் கூறுவர். இன்னுமொரு முக்கியத் தகவல் திராவிடத்தின் பழைமையை ஆராய்ந்த பேராசிரியர் தொமஸ் பரோ வேத சமஸ்கிருதத்தில் திராவிடச் சொற்கள் பல காணப்படுவதாகவும் அடுத்து வரும் சமஸ்கிருத வளர்ச்சியில் அவை படிப்படியாகக் குறைவதாகவும் எடுத்துக் கூறியுள்ளார். இவ்வாறு வடபகுதியில் பேசப்பட்ட திராவிட மொழிகளின் எச்சசொச்சமாக Bratui என்னும் மொழியைக் காணலாம்.

இலக்கியங்களைப் பொறுத்தவரையில் இருக்குவேதம் ஏறத்தாழ குறைந்த பட்சம் கி.மு. 1000 -1500 வருடங்களுக்குரியதாகக் கொள்ளப்படல் வேண்டும். அத்தகைய தொன்மை நிலைப்பட்ட தமிழ் இலக்கியச் சான்று இருப்பதாகச் தெரியவில்லை. எம்மிடம் இப்பொழுதுள்ள தமிழ் இலக்கியச்சான்று சங்ககாலம் எனக் குறிப்பிடப்பெறுவது ஏறத்தாழ கி.மு. 250-கி.பி.100 என்ற காலத்துக்குரிய தென்பர்.

ஆனால் இந்தக்காலத்துக்குரிய இலக்கியங்களைப் பார்க்கும் பொழுது அவை மிகவும் செம்மையான செழுமையான இலக்கியப் பராம்பரியம் ஒன்றின் அடிப்படையிலே தோன்றியுள்ளன என்பது தெரியவரும். புராதன தமிழ் கவிதை இயற்கைச் சூழலால் தீர்மானிக்கப்பட்டது என்பது திணைக்கோட்பாட்டின் மூலம் தெரிய வருகிறது. இப்பாடல்களினூடே இலியட், ஒடிசி போன்ற கதைப்பாடல் போன்ற எதுவும் காணப்படவில்லை. ஆனால் அவ்வாறு இருந்திருப்பதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளனவென்று கைலாசபதி வாதிடுவார்.

இந்திய நிலையில் தமிழின் மிக முக்கியமான சிறப்புகள் யாவையெனின் தொன்மையான இலக்கியங்களைக் கொண்டுள்ளமை மாத்திரமல்லாமல் அது இன்றும் வழக்கு மொழியாகவுள்ளமையாகும். இதற்கு மேலாக தமிழுக்கு இன்று ஓர் அனைத்துலகப் பரிமாணமும் வந்து விட்டது. சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளைத் தவிர்ந்த நாடுகளில் வளரும் தமிழிலக்கியம் இல்லை.

இத்தகைய பின்புலம் உள்ள மொழியன்று உலகின் செம்மையான மொழிகளுள் ஒன்றாக மாத்திரமல்லாமல் தொல்சீர்மொழியாகவும் விளங்குகிறது. Classical languageஎன்பதற்கு தொல்சீர் மொழிகள் என்பதே பொருத்தமாகும். துரதிர்ஸ்டவசமாக உலக நிலைப்பட்ட மொழியியல், இலக்கிய ஆய்வு நிலைகளில் இவை முதன்மைப்படுத்தப் படவில்லை. ஒன்றில் தமிழைக் குறைத்து மதிப்பிடுவார்கள் அல்லது மிகைப்பட மதிப்பிடுவார்கள். மேலே கூறப்பட்டவாறு மொழி இலக்கிய வரலாற்றடிப் படைகளிலே தமிழின் இடம் நன்கு கணிக்கப்படல் வேண்டும். பேணப்படல் வேண்டும்.

Pin It