ஒரு செம்மொழி என்கின்ற வகையில் தமிழின் நிலை பற்றி எழுதுமாறு பேராசிரியர் மறைமலை என்னிடம் கேட்டுக் கொண்டார். நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டேன்.

george_2301975ம் ஆண்டிலிருந்து பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்; அந்த நிறுவனத்தில் இப்போது தமிழ்த்துறைத் தலைவர் பொறுப்பை வகித்து வருகின்றேன். 1970ம் ஆண்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நான் சமஸ்கிருதத்தில் பட்டம் பெற்றேன். 1969ம் ஆண்டு மாடிசனில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பேராசிரியராகச் சேர்ந்ததுதான் நான் பார்த்த முதல் வேலை. தமிழ் மற்றும் சமஸ்கிருதம் மட்டுமின்றி, லத்தீன் மற்றும் கிரேக்கம் ஆகிய செம்மொழிகளும் எனக்குத் தெரியும். அம்மொழிகளின் இலக்கியங்களை மூலமொழியிலேயே விரிவாகப் படித்துள்ளேன். நவீன ஐரோப்பாவின் ஒப்பீட்டு மொழியியல் மற்றும் இலக்கியங்களில் எனக்கு நல்ல பரிச்சயம் உண்டு. (எனக்கு ஜெர்மானிய மொழி, ரஷ்ய மொழி, பிரெஞ்சு மொழி ஆகியவையும் தெரியும். அம்மொழிகளிலும் விரிவாகப் படித்துள்ளேன்). அவற்றுடன் நவீன இந்திய இலக்கியங்களையும் மொழி பெயர்ப்பில் படித்துள்ளேன். தமிழ், மலையாள இலக்கியங்களை மூலமொழியிலேயே வாசித்துள்ளேன். தெலுங்கு இலக்கியம் மற்றும் அதன் மரபு பற்றி மாபெரும் தெலுங்கு அறிஞர்களில் ஒருவரான வி.நாராயணராவுடன் வெகுநேரம் விவாதித்துள்ளேன். ஆதலால் குறிப்பாக அந்த மரபு எனக்கு நன்கு தெரியும். தெற்காசிய ஆய்வுத்துறையின் நீண்டகால உறுப்பினர் என்கின்ற முறையில் ஹிந்தி இலக்கிய வளத்தையும் நான் அறிந்திருந்தேன். மகாதேவி வர்மா, துளசி, கபீர் ஆகியோர் பற்றியும் விரிவாகப் படித்துள்ளேன்.

சமஸ்கிருதம் கற்பதில் பல ஆண்டுகள், என் வாழ்க்கையின் பெரும்பகுதியை (1963லிருந்து) செலவழித்துள்ளேன். காளிதாசர், மகா ஆகியோரின் அனைத்துப் படைப்புகளையும் மூலமொழியிலேயே படித்துள்ளேன்; பாரவி மற்றும் ஸ்ரீஹர்ஷா ஆகியோரது படைப்புகளைப் பகுதியளவு வாசித்துள்ளேன். ரிக்வேதத்தின் ஐந்தாவது நூலையும் நான் மூலமொழியில் படித்துள்ளேன். அத்துடன் மற்ற பகுதிகளையும், உபநிஷத்துக்களையும், மகாபாரதத்தின் பெரும்பகுதி, கதாசரித்திரசாகரா, ஆதிசங்கரரின் படைப்புகள், மற்றும் இதர பல படைப்புகளை சமஸ்கிருத மொழியில் படித்துள்ளேன்.

என்னுடைய புலமையைக் காட்டிக் கொள்வதற்காக இதை நான் சொல்லவில்லை; மாறாக, ஒரு மொழி செம்மொழியா இல்லையா என்று மதிப்பிடுவதற்கு எனக்குள்ள தகுதியை நிலைநாட்டவே கூறுகின்றேன். சந்தேகத்திற்கு இடமற்ற வகையில் தெளிவாக நான் கூறுகின்றேன்: எந்த அளவுகோலை வைத்துப் பார்த்தாலும் உலகின் மகத்தான செவ்வியல் இலக்கியங்கள் மற்றும் மரபுகளில் தமிழும் ஒன்று.

இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகக் காணலாம்.

முதலாவதாக, தமிழ் கணிசமான தொன்மையுடையது. மற்ற நவீன இந்திய மொழிகளைவிட ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை உடையது. அதன் பழம்பெரும் இலக்கணமான தொல்காப்பியத்தின் பகுதிகள், பழமையான கல்வெட்டுகளை வைத்து மதிப்பிடும்போது, கிமு200 காலகட்டத்தைச் சேர்ந்தவை. பண்டைய தமிழின் மகத்தான படைப்புகளான சங்கப் பாடல்கள் மற்றும் பத்துப்பாட்டு ஆகியவை (கி.பி) முதல் இரண்டு நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. இந்தியாவில் முதன்முதலில் எழுதப்பட்ட மதச்சார்பற்ற இலக்கியத் தொகுப்புகளாகும் அவை; காளிதாசனின் படைப்புகளுக்கு இருநூறு ஆண்டுகள் முந்தையவை.

இரண்டாவதாக, இந்தியாவில் உள்ள சமஸ்கிருதத் திலிருந்து பெறப்படாத ஒரே உள்நாட்டு இலக்கிய மரபாக தமிழ் இருக்கின்றது. தெற்கில் சமஸ்கிருதத்தின் செல்வாக்கு பலமடைவதற்கு முன்னரே தமிழ் இலக்கியங்கள் தோன்றிவிட்டன. சமஸ்கிருதத்திலும், மற்ற இந்திய மொழிகளிலும் உள்ள இலக்கியங்களிலிருந்து பண்படிப்படையில் வித்தியாசமானவை அவை. அதற்கே உரித்தான கவிதைக் கோட்பாடு, இலக்கண மரபு, அழகியல் ஆகியவை இருக்கின்றன; எல்லாவற்றிற்கும் மேலாக, தனித்துவமிக்க இலக்கியங்களின் மிகப் பெரும் தொகுதி தமிழுக்கு இருக்கின்றது. சமஸ்கிருதத்திலோ அல்லது வேறு இந்திய மொழிகளிலோ இருக்கும் எதைவிடவும் வித்தியாசமான ஒரு வகை இந்திய உணர்ச்சி முனைப்பை அது காட்டுகின்றது. மற்றும் அதற்கே உரித்தான மிகவும் வளமானதும், பரந்ததுமான அறிவுசார் மரபையும் அது கொண்டிருக்கின்றது.

மூன்றாவதாக, சமஸ்கிருத, கிரேக்க, லத்தீன், சீன, பெர்சிய, அராபிய மொழிகளில் உள்ள மகத்தான இலக்கியங்களுக்குச் சமமாக நிற்கக்கூடிய அளவு செவ்வியல் தமிழ் இலக்கியங்களின் தரம் இருக்கின்றது. தமிழ்ப் படைப்புகளின் நுட்பமும், ஆழமும், வீச்சும் (நவீன காலத்திற்கு முந்தைய இந்திய இலக்கியங்களில் தமிழ் இலக்கியங்கள் மட்டுமே அடித்தட்டு மக்களைப் பற்றியும் விரிவாகப் பேசின), அவற்றின் பரந்துவிரிந்த தன்மையும் உலகின் மகத்தான செவ்வியல் மரபுகள் மற்றும் இலக்கியங்களில் ஒன்று என்ற தகுதியைத் தமிழுக்கு அளிக்கின்றது. உலகின் மகத்தான அறநெறி நூல்களில் ஒன்றான திருக்குறள் பற்றி அனைவரும் அறிவர். ஆனால், தமிழ்ச் செவ்வியல் மரபின் உள்ளடக்கமாக இருக்கின்ற பல வகையான எண்ணற்ற பெரும் படைப்புகளில் ஒன்று மட்டுமே அது. இந்த மகத்தான மொழியில் ஆராயப்படாத, ஒளிபாய்ச்சப்படாத மனித வாழ்வின் அம்சம் என்று எதுவும் இல்லை.

இறுதியாக, நவீன இந்தியக் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் சுயேச்சையான, முதன்மையான தோற்றுவாய்களில் தமிழும் ஒன்று. சமஸ்கிருதக் கவிதை மரபில் தென்னிந்தியக் கவிதை மரபின் செல்வாக்குக் குறித்து நான் விரிவாக எழுதியுள்ளேன். ஆனால், சங்கம் செய்யுள் திரட்டுகளில் துவங்கும் மகத்தான தமிழ் இந்துயிச புனித நூல்கள் நவீன இந்துயிச வளர்ச்சியின் அடித்தளங்களில் ஒன்றாக இருந்திருக்கின்றன என்பதும் அதற்கிணையான முக்கியத்துவம் மிக்கது. அவற்றின் கருத்துகள் பாகவதபுராணத்திலும், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருத மொழிகளில் உள்ள மற்ற படைப்புகளிலும் எடுத்தாளப்பட்டு, அங்கிருந்து இந்தியா முழுவதிலும் பரவின. வேதங்களைப் போலவே புனிதமாகக் கருதப்படுகின்ற தனக்கே உரித்தான நூல்களைத் தமிழ் கொண்டிருக்கின்றது. திருப்பதி போன்ற தென்னிந்தியாவில் உள்ள மகத்தான வைணவக் கோவில்களில் வேத மந்திரங்களுடன் அவையும் ஓதப்படுகின்றன. நவீன இந்தோ-ஆரிய மொழிகளின் மூலமாக சமஸ்கிருதம் இருப்பதுபோல, நவீன தமிழ் மற்றும் மலையாளம் ஆகியவற்றின் மூலமொழியாகத் தமிழ் இருக்கின்றது. இந்தோ-ஆரிய மொழிகளில் மிகப் பழமையானதும், மாற்றமடையாததுமான மொழியாகச் சமஸ்கிருதம் இருப்பது போல, திராவிட மொழிகளில் தமிழ்தான் மிகப்பழமையான மொழியாகும்; திராவிட மொழிகளின் இயல்பு மற்றும் வளர்ச்சியைப் புரிந்து கொள்ள மொழியியலாளர்கள் உரசிப்பார்க்க வேண்டிய உரைகல்லாகத் தமிழ் இருக்கின்றது.

தமிழ் ஏன் செம்மொழியாக அங்கீகரிக்கப்படவில்லை என்பதைப் பகுத்துணர முயற்சிக்கும்போது, என்னால் ஒரு அரசியல் காரணத்தை மட்டுமே காணமுடிகின்றது. தமிழ் செவ்வியல் மொழியாகத் தேர்வு செய்யப்பட்டால், மற்ற இந்திய மொழிகளும் அதே அந்தஸ்தைக் கோரும் என்கின்ற அச்சம் இருந்தது. அது தேவையற்ற கவலையாகும். நவீன இந்திய மொழிகளின் வளம் பற்றி எனக்கு நன்கு தெரியும். பூமியில் உள்ள மிக வளமான, விளைபலன் தரக்கூடிய மொழிகளில் அவையும் அடங்கும். அவை ஒவ்வொன்றும் உலகின் முக்கியமான படைப்புகளுக்குச் சமமாகக் கருதப்படக் கூடிய நவீன (பெரும்பாலும் மத்திய காலத்தைச் சேர்ந்த) இலக்கியத்தை உற்பத்தி செய்துள்ளன. எனினும் அவற்றில் எதுவும் செம்மொழியல்ல. ஆங்கிலம் மற்றும் இதர நவீன ஐரோப்பிய மொழிகளைப் போல (கிரேக்கம் தவிர), அவை சற்று தாமதமாகவே ஏற்கனவே இருந்த மரபுகளின் மீது தோன்றி எழுந்தன; இரண்டாவது ஆயிரம் ஆண்டுகளிலேயே வளர்ச்சியடைந்தன. ஐரோப்பாவிலுள்ள மொழிகளில் கிரேக்கமே செம்மொழியாக உலகெங்கிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்கின்ற உண்மை, பிரெஞ்சு அல்லது ஆங்கிலத்திற்குச் செம்மொழி அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று அம்மொழியினர் கோருவதற்கு இட்டுச் செல்லவில்லை.

செம்மொழியாகத் தகுதி பெற வேண்டுமானால் ஒரு மொழி பல்வேறு அலகுகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்: அது தொன்மையானதாக இருக்க வேண்டும்; அது ஒரு சுயேச்சையான மரபாக இருக்க வேண்டும்; மற்றொரு மரபின் கிளையாக இருக்கக் கூடாது; அது மிகப்பெருமளவு அதீத வளமிக்க பண்டைய இலக்கியங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். மற்ற நவீன இந்திய மொழிகளைப் போலல்லாமல், தமிழ் இந்தத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்கின்றது. அது மிகப் பழமையானது; லத்தீன் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது; அராபிய மொழியை விட முந்தையது; அது கிட்டத்தட்ட சமஸ்கிருதம் அல்லது வேறு எந்த மொழியின் செல்வாக்கும் இல்லாமல் முற்றிலும் சுயேச்சையான மரபாகத் தோன்றியது. அதன் பண்டைய இலக்கியம் விவரிக்க முடியாதபடி பரந்து விரிந்த வளம் கொண்டது.

தமிழ் ஒரு செம்மொழி என்று நிரூபிக்க இது போன்று நான் ஒரு கட்டுரை எழுதவேண்டிய அவசியம் ஏற்பட்டது எனக்கு விநோதமாகப்படுகின்றது. அது இந்தியா ஒரு மாபெரும் தேசம் அல்லது இந்துயிசம் உலகின் மகத்தான மதங்களில் ஒன்று என்று வாதிட வேண்டிய நிலைமை இருப்பதற்குச் சமம். இவ்விஷயம் பற்றி அறிந்தவர் எவருக்கும் தமிழ் மகத்தான செம்மொழிகளில் ஒன்று என்பது தெள்ளத் தெளிவாகத் தெரியும். தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்தை மறுப்பது இந்திய கலாச்சாரத்தின் முக்கியமான மற்றும் மையமான அம்சங்களான வளம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றை மறுப்பதாகும்.

(ஒப்பம்)

ஜார்ஜ் ஹார்ட்,

தமிழ்ப் பேராசிரியர், தமிழ் ஆய்வுத்துறைத்தலைவர்.ஏப்ரல் 11, 2000

தமிழில்: அசோகன் முத்துசாமி

Pin It