இரண்டு அடிப்படைக் கருத்துகளை நான் முன் வைக்க விரும்புகிறேன் : முதலாவதாக, இலங்கையில் வாழும் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இரண்டாவதாக, பன்னாட்டுச் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின்படி, தாங்கள் விரும்பினால் ஒரு தனியான அரசை நிறுவும் உரிமை உள்ளிட்ட சுய நிர்ணய உரிமை – இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு உண்டு. அத்துடன், இலங்கையில் வாழும் தமிழர்கள் இனப்படுகொலைக்கு பலியாகிறார் கள் என்ற உண்மையானது, அவர்கள் விரும்பினால் ஒரு தனியான அரசை நிறுவுவது உள்ளிட்ட அவர்களின் சுயநிர்ணய உரிமைக்கு வலுசேர்க்கவும் ஆதரிக்கவும் செய்கிறது.

da_101948 இனப்படுகொலை ஒப்பந்தத்தின் பிரிவு 1, அதில் கையெழுத் திட்டுள்ள 140 அரசுகளையும், தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்தும் இனப்படுகொலையை "தடுத்து நிறுத்த' உடனடியாக செயல்பட கோருகிறது. இனப்படுகொலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள 140 அரசுகளும், பிரிவு 1 க்கு தங்களின் கடப்பாட்டினை நிறைவேற்ற வேண் டிய முக்கிய நடவடிக்கைகளில் முதன்மையானது என்னவெனில், 1948 இனப்படுகொலை ஒப்பந்தத்தை மீறியதற்காக உலக நீதிமன்றம் என்று அழைக்கப்படும் ஹேக் பன்னாட்டு நீதி மன்றத்தில், இலங்கை அரசு மீது வழக்குத் தொடுத்து விசாரிக்க வேண்டும். இதற்கு அடிப்படையாக இருக்கும் பிரிவு 9 பின்வருமாறு கூறுகிறது :

“ஓர் இனப்படுகொலைக்கோ, பிரிவு 3 இல் பட்டியலிடப் பட்டுள்ள பிற செயல்களுக்கோ ஓர் அரசு பொறுப்பாவது குறித்தது உட்பட, இந்த ஒப்பந்தத்தைப் புரிந்து கொள்வதிலோ, நடைமுறைப் படுத்துவதிலோ, நிறைவேற்றுவதிலோ – ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளவர்களுக்கு இடையிலான முரண்பாடுகள், அதில் தொடர்புடைய ஏதாவது ஒரு பிரிவினரின் வேண்டுகோளின் படி, பன்னாட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும்.''

இனப்படுகொலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள 140 அரசுகளில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேலானது – 1. உடனடியாக இலங்கை மீது ஹேக் பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும் 2. உலக நீதிமன்றம் அவசர விசாரணை நடத்த கோர வேண்டும் 3. வன்னியில் உள்ள 3 லட்சம் தமிழர்களுக்கு எதிராக இலங்கை புரியக்கூடிய அனைத்து இனப்படுகொலை செயல்களைத் தடுக்கவும், நிறுத்தவும், அதற்கு எதிராக அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் – ஓர் ஆணையை பிறப்பிக்க வேண்டுகோள் விடுக்க வேண்டும். அப்படி வழங்கப்படும் உலக நீதிமன்றத்தின் ஆணையானது, உள்ளூரில் வழங்கப்படும் இடைக்கால எச்சரிக்கை ஆணை அல்லது நிரந்தரத் தடை ஆணைக்கு சமமான உலகளாவிய உத்தரவாகும்.

உலக நீதிமன்ற ம் அப்படியான ஆணையை பிறப்பித்த உடன் அது அய்.நா. சார்டர் பிரிவு 94(2)இன் கீழ் நடைமுறைப்படுத்தப்படவேண்டி அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு உடனடியாக அறிவிக்கப்படும். 1. வன்னியில் நிலவும் சூழல் "அமைதிக்கு அச்சுறுத்தல்' ஏற்படுத்தக் கூடியதாக இருப்பதால், அய்.நா. சார்டர் பிரிவு 39இன் படி, அய். நா. பாதுகாப்பு அவையின் தலையீடு அவசியமாகிறது என்ற உண்மை 2. தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை நிறுத்த வேண்டிய கடப்பாடு, இனப்படுகொலை ஒப்பந்தத்தின் பிரிவு 1இன் படி அவர்கள் அனைவருக்கும் இருக்கிறது என்ற உண்மை ஆகியவற்றைப் புறந்தள்ளி, இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தி வரும் இனப்படுகொலையை தடுப்பதற்கான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள, அய்.நா. பாதுகாப்பு அவை உறுப்பினர்கள் தவறியும் மறுத்தும் விட்டனர்.

da_11உலக நீதிமன்றத்தின் ஆணையானது, இதை அய்.நா. பாதுகாப்பு அவையின் செயல் திட்டத்தில் இணைக்கும்; அதன் மூலம் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலையை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அய்.நா. பாதுகாப்பு அவை மேற்கொள்ள அது வலியுறுத்தும். இனப்படுகொலை ஒப்பந்தமானது, இனப்படுகொலை குற்றம் என்பதற்கான விளக்கமாக கீழ்க்காண்பவற்றை கூறுகிறது :

தற்போதைய ஒப்பந்தத்தின்படி, இனப்படுகொலை என்பது முழுமையாகவோ, பகுதியாகவோ ஒரு தேசிய, இன, மரபின அல்லது மதக் குழுவை அழிப்பதற்கான நோக்கத்துடன் கீழ்க்காணும் செயல்களை செய்தல் :

1. குழுவின் உறுப்பினர்களை கொல்லுதல் 2. குழுவின் உறுப்பினர்களுக்கு உடல் அல்லது உளவியல் ரீதியாக கடுமையான தீங்கை ஏற்படுத்துதல் 3. அக்குழுவானது முழுமையாகவோ, பகுதியாகவோ அழிவதற்கான வாழ்வியல் நிலைகளை அக்குழுவின் மீது திட்டமிட்டுத் திணித்தல்.

சட்டப்படி முன்பு "சிலோன்' என்று அழைக்கப்பட்ட சிங்கள – பவுத்த இலங்கையானது, இந்து – கிறித்துவ தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலையை நடத்தியுள்ளது. இந்த இனப்படுகொலையானது 1948இல் தொடங்கி, இன்று வரை விரைவாக நடத்தப்பட்டு, தற்போது வன்னியில் உச்சத்தை அடைந்து வருகிறது. இது, இனப்படுகொலை ஒப்பந்தத்தின் பிரிவுகள் 2(அ), (ஆ), (இ) ஆகியவற்றை மீறுவதாகும்.

கடந்த 60 ஆண்டுகளாக சிங்கள – பவுத்த சிலோன் – இலங்கை, வேறு தேசிய, இன, மரபின, மதக்குழுவான இந்து – கிறித்துவ தமிழர்களில் பெரும் பகுதியினரை அழிக்க – திட்டமிட்ட, பரவலான, முழுமையான ராணுவ, அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த சிங்கள – பவுத்த சிலோன் – இலங்கையின் நடவடிக்கைகளானது, இந்து – கிறித்துவ தமிழர்களுக்கு கொடிய உடல் மற்றும் உளவியல் ரீதியான தீங்கை ஏற்படுத்தியுள்ளது. இது, இனப்படுகொலை ஒப்பந்தம் பிரிவு 2(அ)விற்கு எதிரானது. இந்த சிங்கள – பவுத்த சிலோன் – இலங்கையின் நடவடிக்கைகளானது, இந்து – கிறித்துவ தமிழர்கள் முழுமையாகவே, பகுதியாகவோ அழிவதற்கான வாழ்வியல் நிலைகளை அக்குழுவின் மீது திட்டமிட்டுத் திணித்துள்ளது. இது, இனப்படுகொலை ஒப்பந்தம் பிரிவு 2(இ)க்கு எதிரானது.

1983 முதல் சிங்கள – பவுத்த இலங்கையானது, ஏறத்தாழ ஒரு லட்சம் இந்து – கிறித்துவ தமிழர்களைக் கொன்றுள்ளது. இந்த இனப்படுகொலைப் பட்டியலில் தற்பொழுது வன்னியின் மேலும் 3 லட்சம் இந்து – கிறித்துவ தமிழர்களை சேர்த்துள்ளது. வன்னியில் உள்ள 3 லட்சம் தமிழர்கள் மேலும் இனப்படுகொலைக்கு ஆளாகாத வண்ணம் அவர்களைக் காப்பாற்ற, இனப்படுகொலை ஒப்பந்தத்தின் பிரிவு 1க்கு தங்களின் கடப்பாட்டினை நிறைவேற்ற – ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகளில் ஒரு நாடு, இலங்கை மீது உலக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும். அதுவே தற்போதைய உடனடி தேவையாக இருக்கிறது.

இலங்கையில் வாழும் ஒரு குழுவினர் என்ற அடிப்படையில் தமிழர்களை நோக்கும்போது, நான் முன் வைக்க விரும்பும் இரண்டாவது கருத்து என்னவெனில் – பன்னாட்டுச் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின் அடிப்படையில் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. இங்கு இலங்கை அரசு கையெழுத்திட்டுள்ள ஒரு பன்னாட்டு ஒப்பந்தத்திலிருந்து நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன். அதன் மூலம் இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை வெளிப்படையாக அங்கீகரிக்க விரும்புகிறேன். அது, சமூக மற்றும் அரசியல் உரிமைகளுக்கான பன்னாட்டு ஒப்பந்தம். இதில் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின் பிரிவு – 1இன் படி, "அனைத்து மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு' என்பதற்கு அவர்கள் கட்டுண்டு இருக்கிறார்கள்.

அதோடு தெளிவாக, இலங்கைத் தீவில் வாழும் தமிழர்கள் "மனிதர்களே'. இலங்கைத் தமிழர்கள் இலங்கை அரசிலிருந்து மாறுபட்ட தங்களுக்கென தனியான மொழி, மரபினம், இனத்தன்மை மற்றும் மதங்களை கொண்டுள்ளனர். தமிழர்கள் தங்களை தனியான "மக்களாகவே' பார்க்கிறார்கள். இலங்கை அரசும் அவ்வாறே பார்க்கிறது. இந்த குறிப்பிட்ட காரணத்துக்காகவே இலங்கை அரசு – தமிழர்களை ஒட்டுமொத்தமாக அழிக்கவும், அவர்களின் தாய்நிலத்தை இனச் சுத்திகரிப்பு செய்யவுமான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதனால் இதைவிட வேறு சான்று தேவையில்லை. பன்னாட்டுச் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின்படி, சுயநிர்ணய உரிமை உள்ள மக்களுக்கான அக மற்றும் புற அடிப்படைகள் அனைத்தும் இலங்கையில் வாழும் தமிழர்களுக்குப் பொருந்துகின்றன.

da_12இலங்கை அரசும் கையெழுத்திட்டுள்ள இந்தப் பன்னாட்டு ஒப்பந்தம் அங்கீகரித்துள்ள பன்னாட்டுச் சட்டங்களின் கீழ், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு உள்ள மேலும் சில அடிப் படை சுயநிர்ணய உரிமைகளை தொடர்ந்து பட்டியலிடுகிறேன்.

“அந்த உரிமையின் அடிப்படையில் தங்களது அரசியல் நிலையை முடிவு செய்ய அவர்களுக்கு அதிகாரம் உண்டு. தங்களின் பொருளாதார, சமூக மற்றும் பண்பாட்டு வளர்ச்சியை முன்னெடுக்க அவர்களுக்கு அதிகாரம் உண்டு.''

இந்த உரிமைகள் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு இன்றும் உள்ளது. இது, இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் உள்ளது. இவை குழு உரிமைகள், தனியான உரிமைகள் மட்டுமல்ல. இவை குழு உரிமைகள் என்ற அடிப்படையில் பாதுகாக்கப்பட வேண்டியவை. ஏனெனில் இலங்கை, தமிழர்களை ஒரு குழுவினர் என்ற அடிப்படையிலேயே தாக்கியது; தனி நபர்களாக அல்ல. ஆக, தமிழர்கள் ஒரு குழுவினராக பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் ஒரு குழுவினராக பாதுகாக்கப்பட வேண்டும். அதிலும் தமிழர்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அனைத்து அடிப்படை உரிமைகளிலும் முதன்மையானது சுயநிர்ணய உரிமையே. இது, அவர்களது அரசியல் நிலையை அவர்கள் நிர்ணயித்துக் கொள் வது மற்றும் அவர்களின் சொந்த பொருளாதார, சமூக மற்றும் பண்பாட்டு வளர்ச்சியை முன்னெடுப்பது. அத்துடன் தங்கள் குறிக்கோள்களை அடைவதற்கு இதுதான் சரியானது என்று தமிழர்கள் முடிவெடுப்பார்களேயானால், அதன்படி தங்களுக்கென தனியான ஓர் அரசை நிறுவுவது ஆகியவற்றை உள்ளடக்கும்.

தமிழர்களின் சுயநிர்ணய உரிமை குறித்த மற்றொரு பகுதியானது, சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான பன்னாட்டு ஒப்பந்தத்தின் பிரிவு 1 இன் இரண்டாம் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளது. இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவெனில், இனப்படுகொலை ஒப்பந்தம் உட்பட இலங்கை அரசும் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்களையே நான் பயன்படுத்துகிறேன்.

இலங்கை அரசு அங்கீகரிக்க மறுத்து, இலங்கையில் வாழும் தமிழர்களைப் பொருத்தவரையில், மிக மோசமாக மீறியுள்ள பன்னாட்டுச் சட்டங்களின் எந்தப் பிரிவையும் நான் குறிப்பிடவில்லை. “அனைத்து மக்களும், தங்கள் சொந்த தேவைகளுக்கு, இயற்கை வளங்களை, பரஸ்பர நலன்களின் அடிப்படையிலும் பன்னாட்டுச் சட்டங்களின் அடிப்படையிலும், பன்னாட்டு பொருளாதார ஒத்துழைப்பினால் எழும் கடப்பாடுகளின் மீதான முன் தீர்மானங்கள் எதுவு மின்றி பயன்படுத்தும் உரிமை கொண்டவர்கள், தங்கள் சொந்த வளங்களைப் பயன்படுத்தி வாழ்வதற்கான உரிமைகளை மக்களிடமிருந்து எந்தச் சூழலிலும் பறிக்கக் கூடாது.''

da_13இருப்பினும் இலங்கை அரசு, தமிழ் மக்கள் தங்களது சொந்த வளங்களைப் பயன்படுத்தி வாழ்வதற்கான உரிமைகளை, தன்னால் ஆன அளவிற்கு மறுத்திருக்கிறது என்ற உண்மையை நாம் அறிவோம். அதுதான் இனப்படுகொலை என்ற அளவிற்கு இன்று வந்து நின்றுள்ளது. இது நான் முன்னர் குறிப்பிட்டதைப் போல, ஒரு குழுவினரை முழுவதுமாகவோ, பகுதியாகவோ அழிக்கும் நோக்கில் – அவர்கள் மீது ஒரு வாழ்நிலை திணிக்கப்படுவதை தடுக்கக் கூடிய இனப்படுகொலை ஒப்பந்தத்தை மீறுவதாகும். இந்த பொருளாதார உரிமைகளும் அரசியல் உரிமைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்பதை கவனிக்க வேண்டும். சுயநிர்ணய உரிமையின் இந்த இரு கூறுகளும் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும். ஏனெனில், தமிழர்கள் இனப்படுகொலைக்குப் பலியானவர்கள். அவர்கள் தங்கள் இயற்கை வளங்களை சுதந்திரமாக பயன்படுத்த, அவர்களின் அரசியல் உரிமைகள் மற்றும் பொருளாதார உரிமைகளை நாம் பாதுகாக்க வேண்டும்.

தமிழ் மக்களே இலங்கை அரசாங்கம் அல்ல. தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தங்களின் மரபு ரீதியான தாய் நிலத்தின் மீது, தங்கள் வயல்வெளிகள், தங்கள் சுரங்கங்கள், தங்கள் பயிர்கள், தங்கள் காடுகள், தங்கள் நீர் வளங்கள், தங்கள் கடற்கரைகள் மற்றும் பிறவற்றின் மீது அதிகாரம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இது முக்கியமானது. இன்று நாம் அறிவோம்... இலங்கை அரசு, தமிழர்களின் மரபு ரீதியான தாய்நிலமான இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி கள் மீது தமிழர்கள் கொண்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகள் அனைத்தையும் திருடி, அழித்து இல்லாமல் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளது. இலங்கை அரசு அங்கு வாழும் தமிழர்கள் மீது இனச் சுத்திகரிப்பை மேற்கொண்டுள்ளது.

இலங்கையில் வாழும் தமிழர்கள் இலங்கை அரசு ஏற்றுக் கொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே, சுயநிர்ணய உரிமை கொண்டவர்கள் என்பதை நான் முன்பே நிறுவிவிட்டேன். அவர்களின் சுயநிர்ணய உரிமையின் காரணமாக எழும் பிற அரசியல் விளைவுகள் என்ன? அய்.நா.வின் சார்டர் (1971) உடன் உடன்பாடு கொண்ட "அரசுகளுக்கு இடையிலான நட்பு ரீதியான உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்த பன்னாட்டுச் சட்ட'த்தின் கோட்பாடுகள் மீதான அறிவிக்கை என்று அழைக்கப்படுவதில் அவை முன் வைக்கப்பட்டுள்ளன. இலங்கை அரசு இந்த அறிவிக்கையை அய்.நா.வின் பொது அவையில் ஏற்றுக் கொண்டுள்ளது. அதனால் நான் இங்கு இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளாத எந்த சட்டப்பிரிவையும் குறிப்பிடவில்லை. அந்த அறிவிக்கையின் படி, தமிழ் மக்களுக்கு உள்ள அரசியல் மாற்றுத் திட்டங்கள் என்ன என்பதை குறிப்பிடுகிறேன்.

1. ஓர் இறைமையுள்ள சுதந்திர அரசை நிறுவுவது 2. ஒரு சுதந்திர அரசுடன் சுதந்திரமாக இணைவது 3. மக்கள் சுதந்திரமாக முடிவெடுத்திருக்கும் எந்த ஓர் அரசியல் நிலையையும் உருவாக்குவது. இவையே அந்த மக்கள் தங்களின் சுயநிர்ணய உரிமையை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகள்.

எனவே, மீண்டும் இங்கு ஓர் இறுதி அரசியல் தீர்வு என்னவாக இருக்க வேண்டும் என்பதை இலங்கை அரசு முடிவு செய்ய முடியாது. இலங்கையில் வாழும் தமிழர்களே மேற்குறிப்பிடப்பட்டுள்ள மூன்று வழிகளில் எது தங்களுக்கு விருப்பமானது என்பதை முடிவு செய்ய வேண்டும். அதோடு, இந்த மூன்றில் எந்த வழியை இலங்கையில் வாழும் தமிழர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை நான் சொல்வதற்கில்லை என்பதையும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அதோடு, இந்தியாவில் வாழும் தமிழர்களும், இலங்கையில் வாழும் தமிழர்களும் இந்த மூன்றில் எந்த வழியை தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதை சொல்வதற்கில்லை. பன்னாட்டுச் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின்படி, தங்களின் சுயநிர்ணய உரிமையை எப்படி நிலைநாட்டுவது என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

ஆனாலும், வரலாற்று நோக்கில் நான் குறிப்பிட விரும்புவது என்னவெனில், இலங்கையில் வாழும் தமிழர்களைப் போல இனப்படுகொலைக்கு ஆளான மக்கள், தாங்கள் மேலும் அழிவதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே வழி–தங்களுக்கென ஒரு சுதந்திர அரசை நிறுவுவதே. உண்மையில், உலகம் பார்த்துக் கொண்டிருக்க, இலங்கை அரசானது, வேண்டுமென்றே, வெளிப்படையாக, வெட்கமின்றி எந்த அடிப்படைக் காரணமுமின்றி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை வன்னியில் படுகொலை செய்தது. ஆனால் ஒட்டுமொத்த உலகத்திலும் ஒரு நாடு கூட அவர்களைப் பாதுகாக்கவோ, அவர்களுக்காக வாதாடவோ, 1948இன் இனப்படுகொலை ஒப்பந்தத்தின் பிரிவு 1இன்படி அவர்களுக்கு உதவவோ முன்வரவில்லை. இதனாலேயே இலங்கை அரசு, மேலும் தங்களை அழித்தொழிப்பதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அவர்களுக்கென தனியான ஓர் சுதந்திர அரசை நிறுவுவது அவசியமாகிறது. இனப்படுகொலைக்கு ஆளான மக்களுக்கு சிறந்த தீர்வாகவும், சரியான ஈடாகவும் இருக்கக்கூடியது, அவர்களுக்கென ஒரு தனியான சுதந்திர அரசே என பன்னாட்டுச் சட்டங்களும் நடைமுறைகளும் நிறுவுகின்றன.

இந்திய அரசானது, இலங்கையில் வாழும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் சுதந்திர அரசை நிறுவுவதற்கான உரிமையை தான் அங்கீகரித்தால், தமிழ்நாட்டில் வாழும் 6 கோடி தமிழர்களும் அதே உரிமையை கோரி, இந்தியாவிலிருந்து பிரிந்து போவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என தொடர்ந்து வாதம் செய்கிறது.

இதைப் பொருத்த வரையில், அரசுகளுக்கு இடையிலான நட்பு ரீதியான உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்த பன்னாட்டுச் சட்டத்தின் கோட்பாடுகள் மீதான அறிவிக்கைக்கு நான் மீண்டும் செல்கிறேன். இதை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரண்டு அரசுகளுமே ஏற்றுக் கொண்டுள் ளன. 1986 இன் நிகரகுவா வழக்கில் பன்னாட்டு நீதிமன்றம் முடிவு செய்ததன்படி, அய்.நா. சார்டரின் நிபந்தனைகளை விளக்குவதான வழக்கமான பன்னாட்டுச் சட்டங்கள் குறித்த வரைமுறைகளை முன்வைக்கிறது. குறிப்பாக, கீழ்க்காணும் வரிகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்: “அடுத்து வரக்கூடிய பத்திகளில் உள்ள எவையும், தனது எல்லைக்குள் வாழும் அனைத்து மக்களையும், இன, மத அல்லது நிற அடிப்படையில் எந்தப் பாகுபாடுமின்றி நடத்தக்கூடிய அரசைப் பெற்றுள்ள, அதன் மூலம் சம உரிமை மற்றும் மக்களின் சுயநிர்ணய உரிமைகள் மற்றும் கோட்பாடுகளை கடைப்பிடிக்கக் கூடிய இறைமையுள்ள சுதந்திரமான, எந்த அரசின் எல்லை பாதுகாப்பையோ, அரசியல் ஒருங்கிணைவையோ – முழுமையாகவோ பகுதியாகவோ – பாதிப்பதாகவோ, சிதைப்பதாகவோவான எந்த செயல்களையும் அங்கீகரிப்பதாகவோ, ஊக்கப்படுத்துவதாகவோ எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.''

அறிவிக்கையின் இந்தப் பத்தி, தங்களின் சுயநிர்ணய உரிமையை நடைமுறைப்படுத்துவதன் அடிப்படையில், ஒரு மக்கள் வேறொரு அரசிடமிருந்து பிரிந்து போகும் உரிமைக்கான வழக்கமான பன்னாட்டுச் சட்டத்திற்கான வரையறைகளை வகுக்கிறது. மேற்குறிப்பிட்டுள்ள சொற்களின்படி, ஓர் அரசு “சம உரிமை மற்றும் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு களுக்கு'' ஏற்ப நடந்து கொள்ளாத போது அதனால், “இன, மத மற்றும் நிற வேறுபாடின்றி தனது எல்லைக்குள் வாழும் அனைத்து மக்களையும்'' அது பிரதிநிதித்துவப்படுத்தாத போது மட்டுமே பிரிந்து போவது என்பது அனுமதிக்கப்படும்.

தமிழர்களைப் பொருத்தவரையில், சிலோன்–இலங்கை அரசு, தான் அமைக்கப்பட்ட 1948 ஆண்டு முதலே ஒருபோதும் “சம உரிமைகள் மற்றும் மக்களின் சுயநிர்ணய உரிமைகள் கோட்பாடுகளுக்கு ஏற்ப'' நடந்து கொண்டதே இல்லை. மேலும், தமிழர்களைப் பொருத்த அளவில் சிலோன் – இலங்கை அரசு, “இன, மத மற்றும் நிற வேறுபாடின்றி தனது எல்லைக்குள் வாழும் அனைத்து மக்களையும்'' அது பிரதிநிதித்துவப்படுத்தியதே இல்லை.

உண்மையில், சிலோன்–இலங்கை அரசு, எப்போதும் தமிழர்களை இன, மத, நிற மற்றும் மொழி அடிப்படையில் பாகுபடுத்தி, மோசமாக நடத்தி வந்திருக்கிறது. சிங்களர்களின் இந்த பரவலான குற்றச் செயல்கள், தற்பொழுது தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்திய ஒட்டுமொத்தமான இனப்படுகொலைச் செயல்களில் வந்து முடிந்திருக்கிறது. ஆகவே, பன்னாட்டுச் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின்படி, குறிப்பாக இந்த அறிவிக்கையின்

படி, தமிழர்கள் இலங்கையிலிருந்து பிரிந்து போக உரிமை உடையவர்கள்.

மாறாக, இந்திய அரசு தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களைப் பொருத்தவரையில், “சம உரிமை கள் மற்றும் மக்களின் சுயநிர்ணய உரிமைகள் கோட்பாடுகளுக்கு ஏற்ப'' நடந்து கொண்டு, அதன் மூலம் “இன, மத மற்றும் நிற வேறுபாடின்றி, தனது எல்லைக்குள் வாழும் அனைத்து மக்களையும்'' பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய ஓர் அரசை கொண்டிருக்கிறது.

இந்தியாவில் அண்மையில்தான் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள், பிறரைப் போலவே முழுமையான சமத்துவத்தின் அடிப்படையில் பங்கேற்ற ஒரு தேர்தல் நடைபெற்றது. இந்தியாவில் உள்ள தமிழர்கள் இந்தியாவில் வாழும் பிற மக்களைப் போன்ற முழுமையான சட்ட ரீதியான சமத்துவத்தை கொண்டுள்ளனர். உண்மையில் தங்களுக்கென தமிழ்நாட்டில் ஓர் அரசையும் கொண்டுள்ளனர்.

எனவே, எனது கருத்தின்படி, தமிழ்நாட்டில் வாழும் ஆறு கோடி தமிழர்கள், இந்தப் பிரச்சனை குறித்து வழக்கமான பன்னாட்டுச் சட்டத்திற்கான அடிப்படை நெறிமுறைகள் வகுக்கும் இந்த அறிவிக்கையின்படி, பன்னாட்டுச் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின் கீழ் பிரிந்து போகும் உரிமை உடையவர்கள் அல்லர்.

மாறாக, இந்தியாவும் இலங்கையும் வாக்களித்துள்ள இந்த அறிவிக்கை உள்ளிட்ட பன்னாட்டுச் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின்படி, இலங்கையில் வாழும் தமிழர்களுக்குப் பிரிந்து போகும் உரிமை உண்டு. எனவே, இந்திய அரசின் நிலைக்கு உரிய அனைத்து மரியாதைகளுடனும், இலங்கையில் வாழும் தமிழர்கள் சுதந்திர அரசை நிறுவு வதன் மூலம் அவர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதானது, அதே போன்ற ஒன்றை தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களுக்கும் ஏற்படுத்திவிடும் என்ற வாதம் ஒரு பொய்யான கருத்து என்று கூறுகிறேன். இத்தகைய முடிவுக்கு பன்னாட்டுச் சட்டங்களில் எந்த அடிப்படையும் இல்லை.

சொல்லப் போனால், இலங்கைத் தீவில் வாழும் தமிழர்கள் தங்களுக்கென ஒரு சுதந்திர அரசை நிறுவுவது உட்பட, அவர்களின் சுயநிர்ணய உரிமையை இந்திய அரசு அங்கீகரிக்குமானால், இந்த அறிவிக்கை உள்ளிட்ட பன்னாட்டுச் சட்டங்கள், இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பை முழுமையாக ஆதரிக்கும்.

ஒரு வேளை அதிகப்படியான எச்சரிக்கை உணர்வின் காரணமாக, இந்திய அரசு அந்த அளவிற்கு தற்போது செல்ல விரும்பவில்லை எனில், அது இருப்பது போல் இருக்கட்டும். ஆனால் குறைந்த பட்சமாக, தமிழர்களின் உண்மையான தாய் நாடு என்ற அளவில், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு ஒரு பாதுகாவலாக, பன்னாட்டுச் சட்டங்களின்படியான "தாய் தேசமாக' இருப்பதற்கான அனைத்து உரிமை, கடப்பாடு, மற்றும் பன்னாட்டுச் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின்படியான நிலைப்பாடு ஆகியவை இந்தியாவுக்கு உண்டு.

அதனால் இந்திய, இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலைகளுக்காக அதன் மீது உடனடியாக, ஹேகில் உள்ள பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும். அவசர விசாரணையை கோர வேண்டும். இலங்கை அரசு, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு எதிராகப் புரிந்து வரும் அனைத்து விதமான இனப்படுகொலை செயல்களையும் தடுத்து நிறுத்தக் கூடிய ஒரு தற்காலிகத் தடுப்பு ஆணையை உலக நீதிமன்றம் அளிக்க வேண்டும் என கோர வேண்டும். சாவ், ஆஷ்விட்ஸ், கம்போடியா, சப்ரா மற்றும் ஷாடில்லா, ஸரெபிரெனிகா, ருவாண்டா, கொசோவோ, தற்பொழுது வன்னி ஆகியவற்றில் மரித்த உயிர்கள் – இதைவிட குறைச்

சலாக எதையும் கேட்கவில்லை.

சூன் 8,2009 அன்று சென்னையில் பன்னாட்டுத் தமிழ் மய்யம் சார்பில் நடைப்பெற்றக் கருத்தரங்கில் ஆற்றிய உரை

நன்றி : http://www.tamilnet.com

Pin It