என்னைப் பொருத்தவரையில் யார் என்ன நினைக்கிறார்கள், எதிர்க்கிறார்கள் என்பதைப் பற்றி periyar_21கவலைப்படாதவன். என்னை இங்கு பேச அழைத்திருக்கிறீர்கள். என் கருத்தைத்தான் இங்கு பேச வந்தேனே தவிர, உங்களுக்கு எது இனிக்குமோ அதைப் பேச வந்தவனல்ல. கசப்பைப் பேசுவதால் மரணமே வருவதாக இருந்தாலும் அதையே நான் பேசுவேன்! என் அறிவுக்குட்பட்ட கருத்தைத்தான் நான் எடுத்துரைப்பேன். அவற்றை எல்லாம் நீங்கள் அப்படியே நம்ப வேண்டிய அவசியமில்லை, உங்கள் அறிவு கொண்டு சிந்தித்துப் பாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த மாநாட்டிற்குப் பகுத்தறிவாளர் மாநாடு என்று பெயர் வைத்துள்ளார்கள். இதைவிட "கடவுள் ஒழிப்பு – மத ஒழிப்பு – ஜாதி ஒழிப்பு' மாநாடு என்றே வெளிப்படையாகப் போட்டு இருக்கலாம். அப்படிப் போட்டு இருந்தால், விருப்பப்பட்டவர்கள் இருப்பார்கள்; விருப்பப்படாதவர்கள் வெளியேறி விடுவார்கள். வீணாக இங்கு வந்து கூச்சல் போட மாட்டார்கள். இந்த மாநாட்டிலே அமைச்சர் பெருமக்கள் கலந்து கொள்வதாக இருக்கிறது. அமைச்சர்களாக இருந்தாலும் சரி, பெரிய பெரிய ஜமீன்தாராக இருந்தாலும் சரி, அவன் சூத்திரன்தானே! இல்லை என்று எவராவது கூற முடியுமா? மறுப்பவன் யாராவது இருந்தால் கை தூக்கலாமே!

பார்ப்பானைப் பற்றி பேசினால், கூச்சல் போடுகிறாயே! இந்து மதத்தை ஒப்புக் கொண்டால், பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன்தானே! கூச்சல் போடுகிற உன்னையும் சேர்த்துத்தானே சூத்திரன் என்று எழுதி வைத்து இருக்கிறான். உனது இழிவும் நீங்க வேண்டும் என்பதற்காகத்தானே நாங்கள் பாடுபடுகிறோம். இந்தக் காரியத்தை இந்த நாட்டில் எங்களைத் தவிர வேறு யாரும் செய்ய நாதியில்லையே! முன்னோர்கள் என்பான், ரிஷிகள் என்பான், விவேகானந்தன் என்பான், இவர்கள் அத்துணைப் பேர்களும் நம்முடைய சூத்திரத் தன்மையை நிலை நிறுத்தப் பாடுபட்டவர்கள் தானே! இல்லை என்று சொல்ல முடியுமா?

ஏதோ அம்பேத்கர் பாடுபட்டு வந்தார். அவராலேயே முடியவில்லையே! வேறு வழியின்றி புத்த மார்க்கத்திலே அல்லவா போய் சேர்ந்து விட்டார். இந்து மதத்தை எதிர்த்து அவர் வெற்றி பெற முடியாமல் போனதுதான், அவர் மதம் மாறியதற்கு காரணம். தோழர்களே! எங்கள் இயக்கம் பாடுபட்டதன் காரணமாக, இன்றைக்கு வெளிப்படையாக சூத்திரன் என்று எவனும் எழுதவோ, கூறவோ முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. எங்கள் இயக்கக் கிளர்ச்சியின் காரணமாகத்தான் பார்ப்பானுக்கு ஒரு இடம்; சூத்திரனுக்கு ஒரு இடம் என்று பேதப் பந்தி இருந்த கொடுமை எல்லாம் ஒழிந்தது. ஆனால், அந்தச் சூத்திரன் என்று சொல்வதற்கு ஆதாரமான சங்கதி எல்லாம் இன்றைக்கும் ஒழிந்த பாடில்லை.

கோயில்களை எடுத்துக் கொள்ளுங்கள். கும்பிடப் போகிறாயே – கர்ப்பக்கிரகத்திற்குள் உன்னால் போக முடியுமா? "பிரேக்' அடித்தது போல் அந்த இடத்திற்குப் போனால், நீயே நின்று விடுகிறாயே? அதற்கு என்ன அர்த்தம்? நீ சூத்திரன் என்பது தானே? சிந்தித்துப் பார்த்தாயா? இந்து என்று சொல்லிக் கொள்கிறாயே – அதற்கு அர்த்தம் தெரியுமா? "இந்து' என்றாலே பார்ப்பானைத் தவிர்த்து அத்துணைப் பேரும் "சூத்திரன்' தானே? இந்து என்ற சொல்லும் – மதமும் எப்பொழுது ஒழியும்? இந்தியா என்ற நாட்டிற்குள் நாம் இருக்கும் வரை, அது நடக்கக் கூடிய காரியமா? இந்தியாவிலிருந்து வெளியேறி நாம் தனி நாடு பெற்றால்தான் அதை ஒழித்துக் கட்ட முடியும் என்று கருதுகிறேன்.

தோழர்களே! நாம் ஒரு சமுதாயம் என்றோ "நேஷன்' என்றோ கூறிக் கொள்ளும் அளவுக்குக்கூடத் தகுதி உள்ளவர்களல்ல. வடமாநிலத்திலே சுற்றித் திரிந்து வாழும் "மலை ஜாதிக்' கூட்டம் போன்றவர்கள்தான் நாம். ஏன், நம் கூட்டத்திற்கு ஒரு சரியான வரலாறுகூட கிடையாது. நமது சாத்திர, புராண, இதிகாசங்களில்கூட நம்மைப் பற்றி யார் என்று தெரிந்து கொள்ள ஆதாரங்கள்கூட கிடையாது. "இந்தியா' என்கிறோம்; "இந்து மதம்' என்கிறோம்; இவற்றிற்குதான் என்ன சரித்திர ஆதாரம் இருக்கிறது? ஒன்றுமில்லையே! நமக்கு நாடும் இல்லை – மதமும் இல்லை. ஏதோ நாடோடிக் காட்டுக் கூட்டம் போல் வயிறு வளர்த்துக் கொண்டு இருக்கிறோம் அவ்வளவுதான்.

இப்பொழுது பெருமையாகப் பேசிக் கொள்கிறார்களே – இந்த அய்யப்பன், இவன் பிறப்பு ஒன்று போதுமே நமது காட்டுமிராண்டித்தனத்திற்கு! "சிவன்' என்கின்ற ஆண் கடவுளும் – "விஷ்ணு' என்கின்ற ஆண் கடவுளும் சேர்ந்து புணர்ந்து பெற்றுப் போட்ட "குட்டி'தானே இந்த அய்யப்பன்! அப்படித்தானே புராணம் கூறுகிறது? இந்தக் கடவுளை நம்பி இன்றைக்கும் இந்த நாட்டிலே பஜனை, விரதம் நடக்கிறது என்றால், எவ்வளவு வெட்கக் கேடு? நம்மைக் காட்டுமிராண்டி என்று அழைக்காமல், வேறு என்ன பெயர் கொடுத்து அழைப்பது? கடவுளையும், மதத்தையும் பற்றிப் பேசினால், ஆத்திரம் வந்தால் மட்டும் போதுமா? அறிவோடு சிந்திக்க வேண்டாமா?

23.6.1973 அன்று, பெங்களூரில் ஆற்றிய உரை

Pin It