ஆகஸ்ட் 21 முதல் 26 வரை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய ‘தமிழர் கல்வி உரிமை மீட்பு’ப் பரப்புரைப் பயணத்தில் பங்கேற்ற தோழர்களின் பயண அனுவபங்கள்.

சென்னை குழுவின் அனுபவங்கள் பற்றி உமாபதி

கல்வி உரிமைகள் குறித்த பரப்புரைப் பயணம் என்பதால் கலைக்குழுவுக்கு அதிக நேரத்தை எல்லா இடத்திலும் வழங்கினோம். எங்களுடன் வந்த விரட்டு கலைக் குழுவின் நாடகம் பரப்புரையின் நோக்கத்தை மக்களிடம் மிக எளிமையாக விளக்கியது. தங்களுக்குத் தேவையான செய்திகளைப் பேசுகிறார்கள் என்பதைப் புரிந்து எல்லா இடங்களிலும் மக்கள் தங்களது பேராதரவைத் தந்தனர். சென்ற இடங்களில் கடை வைத்திருந்த ஏழை, எளிய உழைக்கும் மக்கள், நம் நிகழ்ச்சியை முடித்த பிறகு குளிர்பானங்கள், பழங்கள் வாங்கிக் கொடுத்து பல இடங்களில் எங்களை உற்சாகப்படுத்தினர்.

ஒரு இடத்தில் தோழர்கள் பரப்புரையில் புத்தகம் விற்றுக்கொண்டிருந்தபோது நாடகத்தைப் பார்த்துவிட்டு, “எனக்குப் படிக்கத் தெரியாது, நீங்கள் ஏதோ நல்லது செய்கிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது” என்றுகூறி தனது மகனுக்குப் புத்தகங்களை வாங்கிச் சென்றார் ஒரு பெரியவர். மற்றொரு இடத்தில் பள்ளிச் சிறுவன் தனது பேருந்துக்கு வைத்திருந்த 5 ரூபாயில், ”பேருந்துக் கட்டணம் 4 ரூபாய்தான், மீதி ஒரு ரூபாயை உங்களுக்குத் தருகிறேன்” என்று கொடுத்துவிட்டு சென்றார். இதுபோல பரப்புரை செய்த எல்லா இடங்களிலும் மக்கள் 10 ரூபாய், 20 ரூபாய் என தங்களால் இயன்ற தொகையை நன்கொடையாக அளித்து நமது பிரச்சாரத்திற்கு உதவினார்கள். இவ்வாறு ஒட்டுமொத்தமாக மக்கள் அளித்த நன்கொடை ரூ.62,000. அதுமட்டுமின்றி 20,300 ரூபாய்க்குப் புத்தகங்களையும் மக்கள் வாங்கிக் கொண்டனர். அதேபோல சென்ற இடங்களில் எல்லாம் காவல் துறையின் ஒத்துழைப்பும் மிகச் சிறப்பாக இருந்தது. கல்வி உரிமைகள் குறித்து இந்தப் பயணம் மக்களிடையே நிச்சயமாக ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதுதான் அவர்கள் அளித்த ஆதரவின் மூலம் எங்களால் உணர முடிந்தது.

திருப்பூர் பயணக் குழுவின் அனுபவங்கள் பற்றி மடத்துக்குளம் மோகன்

எங்கள் குழுவில் பெரும் பாலானவர்கள் பெண்களாகத்தான் இருந்தார்கள். எல்லா இடங் களிலும் அவர்களின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்தது. கடை வசூல், புத்தகம் விற்பனை, பிரச்சாரம் என அனைத்துப் பணிகளிலும் பெண்கள் 6 நாட்களும் மிகவும் ஆர்வத்தோடு செயல்பட்டனர். பயணம் நடந்த எல்லா பகுதிகளிலும் காவல் துறையினர் எங்களுக்கு மிகச் சிறப்பான ஒத்துழைப்பை அளித்தனர். சில இடங்களில் காவல் துறையினர் நன்கொடைகள் அளித்து, நீங்கள் பேசும் செய்திகள் மிகவும் அவசியமானது என்று பாராட்டினர். ஒரு இடத்தில் இந்து முன்னணியினர் வந்து தகறாரில் ஈடுபட்ட போது காவல் துறையினர் “அவர்களை நாங்கள் காலையிலிருந்து பின் தொடர்ந்து வருகிறோம். அவர்கள் நல்ல செய்தியை பேசுகிறார்கள், நீங்கள் கிளம்புங்கள்” என்று அவர்களை விரட்டிவிட்டனர். தொடர்ந்து எங்களுக்கு பாதுகாப்பும் அளித்தனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் பேசிக் கொண்டிருந்தபோது “விவசாயிகளை திட்டமிட்டு மோடி அழிக்கிறார். எனவே மோடி ஆட்சியை முதலில் ஒழிக்க வேண்டும். அதையும் சேர்த்துப் பேசுங்கள்” என்று கூறி 500 ரூபாய் நன்கொடை அளித்துச் சென்றார் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர்.

மடத்துக்குளத்தில் நாங்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது சிவ பக்தர் ஒருவர் தோழர்களுக்கு திராட்சை பழச்சாறு வாங்கிக் கொடுத்து, மிகவும் அவசியமான செய்திகளை பேசுகிறீர்கள் என்று பாராட்டிச் சென்றார். திண்டுக்கல் பாப்பம்பட்டி கிராமத்தில் பிரச்சாரம் செய்தபோது திருப்பூர் தோழர்கள் சங்கீதா-தனபால் இணையர்களின் மகள்கள் யாழினி மற்றும் யாழிசை அறிவியல் விளக்கப் பாடலை பாடினார்கள். அந்தப் பாடலைக் கேட்டதும், அப்பகுதியில் இருந்த ஏராளமான மக்கள் பிரச்சாரத்தைக் காண குவிந்தனர். மற்றொரு இடத்தில் இவர்கள் பாடலைக் கேட்டு எதிரே சிறியதாக கொய்யாப் பழக் கடை வைத்திருந்த பாட்டி ஒருவர் பைகளில் கொய்யாப் பழத்தை எடுத்து வைத்து இவர்களின் கைகளில் கொடுத்து, இருவரையும் கட்டியணைத்து முத்தம் கொடுத்தார். பிறகு அங்கேயே இருந்து முழு நிகழ்ச்சியையும் பார்த்தார்.

திண்டுக்கல்லில் ஒரு இடத்தில் பிரச்சாரம் செய்த போது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் வந்து நிகழ்ச்சியை நடத்த விடாமல் இடையூறு செய்தனர். பெரியார் அமைப்பினர் வந்து எங்களுக்கு இதெல்லாம் சொல்லித் தர வேண்டாம் என்று கூச்ச லிட்டனர். ”நீட் தேர்வால்தான் அனிதா இறந்தார். நாங்கள் கல்வி உரிமையைத்தான் பேசுகிறோம், இதில் என்ன எதிர்ப்பு” என்று கேட்டோம். எங்களுக்குத் தெரியும் நீங்கள் பேசக் கூடாது என்று அவர்கள் மீண்டும் கூறினார்கள். “நாங்கள்தான் கடவுளை மறுப்பவர்கள். நீங்கள் கடவுளை ஏற்பவர்தானே, நீங்கள் இந்துதானே? அனிதாவும் இந்துதான், நீங்கள் வந்து பேசுங்கள்” என்று பொறுமையாக அவர்களிடம் கூறினோம். இதைப்பார்த்த உடனே அங்குக் கூடியிருந்த பொதுமக்களே அவர்களை போகச் சொல்லி நமக்கு ஆதரவு கொடுத்தார்கள்.

தமிழகத்தில் பல இடங்களில் வட இந்தியர்கள் வேலைக்கு வந்துவிட்டார்கள், நம்முடைய இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோய்க் கொண்டிருக்கிறது என்று பொது மக்களே நம்மிடம் பேசினார்கள். திருப்பூர் தோழர் முத்துலட்சுமியின் மகன் சக்தி, பயணத்தில் விற்பனை செய்ய எங்களுக்கு கொடுக்கப்பட்ட 100 நிமிர்வோம் இதழ்களையும் விற்றுக் கொடுத்தார். இந்தக் கல்வி உரிமை பிரச்சாரம் மிகவும் அவசியம் என்றும் பாராட்டியதோடு மட்டுமின்றி 40,156 ரூபாயை பொதுமக்கள் நன்கொடையாக அளித்தனர். 7,850 ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையானது. நம் தோழர்கள் மட்டுமின்றி, மற்ற இயக்கங்களைச் சேர்ந்த கருப்புச் சட்டைத் தோழர்களும் பயணத்தைப் பாராட்டி எங்களுக்குப் பல இடங்களில் உணவு வழங்கினார்கள். திமுக, ஆதித் தமிழர் பேரவை, தமிழர் விடுதலை இயக்கம் போன்ற தோழமைக் கட்சிகளையும், அமைப்புகளையும் சார்ந்த தோழர்கள் பல இடங்களில் ஆதரவு தெரிவித்து பயணத்துக்கு தேவையான உதவிகளைச் செய்தார்கள்.

சங்கரன் கோவில் குழுவின் அனுபவங்கள் பற்றி காவை.இளவரசன்

ஆகஸ்ட் 21ஆம் தேதி சங்கரன் கோவிலில் ஒண்டிவீரன் நினைவு நாளையொட்டி 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது. அதனால் அங்கு பரப்புரைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே எங்களது முதல் பிரச்சாரத்தை ராஜபாளையத்தில் தான் தொடங்கினோம். பிரச்சாரம் நடந்து கொண்டிருந்தபோது இந்து மதத்தைப் பற்றி பேசக்கூடாது என்று கூறி பாதியில் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. மாவட்ட கண்காணிப் பாளர் அலுவலகத்துக்குச் சென்று மாவட்ட கண்காணிப்பாளரிடம் பேசி மீண்டும் மாலை விருதுநகர் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகில் பிரச்சாரத்தை நடத்தினோம்.

இரண்டாவது நாளில் பாண்டிய நகரிலும், மல்லாங்கு நகரிலும் பிரச்சாரத்தை நடத்தினோம். அன்று மாலை மதுரையில் அனுமதி மறுக்கப் பட்டது. அங்கும் காவல் துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தி 23ஆம் நாள் காலை பிரச்சாரத்துக்கு அனுமதியளித்தார்கள். மதுரையில் பிரச்சாரத்தை சிறப்பாக முடித்துக்கொண்டு அடுத்து சிவகங்கை சென்றோம். சிவகங்கையில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது எதிரே இருந்த வயதான பூக்கடைக்கார பாட்டி “தம்பி கல்வி பற்றிப் பேசுகிறீர்கள், எனக்குப் படிக்க தெரியாது, ஆனால் நீங்கள் பேசுவதைக் கேட்டேன். துண்டறிக்கை கொடுங்கள், எங்கள் வீட்டில் பேரன்-பேத்திகள் படிக்கிறார்கள், அவர்களிடம் கொடுத்து படிக்கச் சொல்லுகிறேன்” என்று கேட்டு வாங்கிச் சென்றார். பிரச்சாரத்துக்கு நன்கொடையாக 10 ரூபாய் நிதியும் வழங்கினார்.

அன்று மாலை மற்றொரு இடத்தில் நடந்த பிரச்சாரத்தில் மந்திரமா, தந்திரமா நிகழ்ச்சியைக் குழந்தைகள் மிகவும் ரசித்துப் பார்த்தனர். ஒரு இடத்தில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் நமது பிரச்சாரத்தைப் பாராட்டி 500 ரூபாய் நன்கொடை கொடுத்தார். காரைக்குடி மாவட்டத்தின் கரம்பக்குடியில் மட்டும் 4,700 ரூபாயை உண்டியல் வசூலாக அளித்து மக்கள் நமது பிரச்சாரத்துக்கு உற்சாகமான வரவேற்பளித்தனர். இங்கு மட்டும் சுமார் 2.30 மணி நேரம் கல்வி உரிமைகள் பற்றி பிரச்சாரம் செய்தோம்.

25ஆம் தேதி காலை திருச்சி குண்டூரிலும், மதியம் சமயபுரத்திலும் பிரச்சாரம் நடந்தது. சமயபுரத்தில் கோயிலுக்கு சென்று வந்த பக்தர்களிடம் துண்டறிக்கை பிரச்சாரம் செய்தோம். பக்தர்களும் துண்டறிக்கைகளை பெற்றுக்கொண்டு அதில் சொல்லப்பட்டிருக்கிற செய்திகளைப் படித்தனர். நமது பிரச்சாரத்துக்கு ஆதரவாக நன்கொடை களையும் வழங்கினர். பிரச்சாரம் நடந்த எல்லா இடத்திலும் நீட் தேர்வால் நமது மாணவர்களின் மருத்துவ வாய்ப்பு எப்படி பறிபோகிறது என்பதைப் பற்றியும், மோடி அரசால் நமது கல்வி உரிமைகள் எவ்வாறு பறிபோய்க் கொண்டிருக்கிறது என்பதைப் பற்றியும் விரிவாகப் பேசினோம். இதுபோன்ற கல்வி உரிமை பிரச்சினைகளை எந்த அரசியல் கட்சியோ அல்லது வேறு யாருமே இவ்வளவு தீவிரமாக எடுத்துச் செய்வதில்லை என்று மக்கள் நமது பிரச்சாரத்துக்கு சிறப்பான ஆதரவை வழங்கினர். எல்லா இடங்களிலும் நம்முடைய துண்டறிக்கையை மக்கள் ஆர்வமாக வாங்கிப் படித்தனர். நமது நிகழ்ச்சிகளையும் ஆழமாகக் கூர்ந்து கவனித்தனர். திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர்கள், ஆதரவாளர்கள் பிரச்சாரப் பயணத்துக்கு அவர்களால் இயன்ற ஆதரவு அளித்தனர்.

மயிலாடுதுறை பரப்புரைக் குழுவின் அனுபவங்கள் பற்றி பாரி.சிவா

சட்ட எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு உயிரிழந்த மணல்மேடு வெள்ளைச்சாமி அவர்களின் ஊரில் இருந்து நாங்கள் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கினோம். திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் இந்தக் கல்வி உரிமை மீட்புப் பரப்புரை பயணம் வெற்றி பெற வேண்டு மென்று பல்வேறு தோழமை அமைப்புகளும் கலந்துகொண்டு வாழ்த்தினர். இரண்டாவது நாள் பிரச்சாரத்தில், ஒரு இடத்தில் நமது பிரச்சார வாகனத்தைப் பார்த்து ஏடிஎம் பாதுகாவலர் ஒருவர் பெரியார் புத்தகங்கள் வேண்டுமென்று கேட்டு, வெளியீடுகளை வாங்கிச் சென்றார்.

மற்றொரு இடத்தில் பிரச்சாரத்தைப் பார்த்து, நம்மைப் பாராட்டியதோடு அனைத்துத் தோழர் களுக்கும் தேநீர் வாங்கிக் கொடுத்துச் சென்றார் ஒருவர். மூன்றாவது நாள் பிரச்சாரத்தில் நாம் பேசிய செய்திகளைக் கேட்டு அவ்வழியாகக் கடந்து சென்ற திமுகவினர் “உங்களுடைய பிரச்சாரம் மிகவும் சிறப்பாக உள்ளது. நீங்கள் பேசும் செய்திகள் மிகவும் அவசியமானது. எங்கள் ஊரிலும் வந்து பிரச்சாரம் செய்யுங்கள்” என்று கேட்டனர். நாம் ஏற்கெனவே திட்டமிட்ட பகுதிகளில் செய்ய வேண்டும் என்பதற்காக மீண்டும் ஒருமுறை வந்து அவர்கள் ஊரில் பிரச்சாரம் செய்வதாகக் கூறினோம். அவர்கள் நம்மிடம் துண்டறிக்கைகளைப் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக சென்றனர்.

25ஆம் தேதி காலை தஞ்சாவூரில் உள்ள வேங்கடசாமி நாட்டார் கல்லூரி மாணவர்களிடம் பிரச்சார நோக்கத்தை விளக்கிப் பேசினோம். ஒவ்வொரு வகுப்பறையிலும் துண்டறிக்கைகள் கொடுத்து தனித்தனியாக பிரச்சாரம் செய்தோம். மாணவர்கள் நம்மிடம் பல்வேறு விளக்கங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டனர். கல்லூரியிலேயே தங்கிக் கொள்ளவும் எங்களுக்கு அனுமதியளித் தார்கள். அவர்களே உணவும் அளித்தார்கள். இது மதிமுகவைச் சேர்ந்த தோழர் ஒருவரின் கல்லூரி. எல்லா இடங்களிலும் மக்கள் பிரச்சாரத்துக்கு பேராதரவைத் தந்தார்கள். எங்களுடைய பிரச்சாரப் பகுதிகள் யாவும் பெரும்பாலும் கிராமங்களாகத்தான் இருந்தன. எல்லா பகுதிகளிலும் கழகத் தோழர்கள் எங்களுக்கு சிறப்பான ஏற்பாட்டைச் செய்து கொடுத்தனர். மிகவும் நிறைவான பிரச்சாரமாக அமைந்தது.

திருப்பூர் பயண அனுபவங்கள் குறித்து கோவை நிர்மல்

மேட்டுப்பாளையத்தில் 21ஆம் தேதி காய்கறி சந்தையில் பிரச்சாரம் செய்தோம். அவர்களுக்கு படிக்கத் தெரியாது என்றார்கள். அவர்களிடம் கல்வி உரிமைகள் குறித்தும், நீட் தேர்வு குறித்தும் பேசி புரிய வைத்தோம். முதலில் துண்டறிக்கை வேண்டாம் என்றவர்கள், நாம் பேசிய பிறகு அவர்களே மீண்டும் கேட்டு வாங்கி வைத்துக்கொண்டனர். வீட்டுக்கு கொண்டு சென்று மகன்-மகள்களை படிக்கச் சொல்வதாகவும் ஆர்வத்துடன் கூறினார்கள். நன்கொடையும் அளித்து பயணத்துக்கு உதவி செய்தார்கள்.

பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இரண்டு பேர், மூன்று பேர் தனியாக சென்று சுமார் 15 இடங்களில் பேருந்தில் ஏறி பிரச்சாரம் செய்தோம். சில இடங்களில் பேருந்தை இயக்கும் நேரம் ஆகியும் கூட, நம்முடைய பிரச்சாரம் முடியும்வரை பேருந்தை இயக்காமல் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் பிரச்சாரத்துக்கு ஆதரவு அளித்தார்கள். அதேபோல பேருந்து நிலையங்களில் மக்கள் கூடியிருந்த இடங் களுக்கு சென்று 5 நிமிடம், 10 நிமிடம் கல்வி உரிமைகள் குறித்து பேசினோம். நாங்கள் பேசியதை மக்கள் பொறுமையாகக் கேட்டதோடு, எங்களிடம் பல இடங் களில் விளக்கமும் கேட்டனர். பல இடங்களில் பிரச்சாரத்தைக் கேட்ட பிறகு மக்களே துண்டறிக்கைகளை கேட்டு வாங்கிச் சென்றனர். பேருந்துகளில் நாம் பேசியதைக் கேட்டு, அவர்களே மற்ற பேருந்துகளிலும் நம்மை பேசச் சொல்லி கேட்டனர். நீங்கள் பேசுவது மிகவும் அவசியமானது, நீட் தேர்வு இருக்கக் கூடாது என்றும் மக்கள் கருத்து தெரி வித்தனர்.         

தொகுப்பு : ர.பிரகாசு

சென்னை பயணக் குழுவுக்கு பக்தர்கள் பொது மக்கள் பேராதரவு

கல்வி உரிமை மீட்பு பரப்புரைப் பயணம் மேற்கொண்ட சென்னைக் குழுவினருக்கு மக்கள் பேராதரவை வெளிப்படுத்தினர்.

  1. தோழர்கள் இராவணன், முரளி, அருண், இரண்யா, தேன்ராஜ், செந்தில், பிரியா, ஓவியா - வெயில், மழை என்று பாராமல் கழக துண்டறிக்கையைக் கொடுதது கடைகளில் நிதி வசூல் செய்தனர்.
  2. ஏழு நாளில் 16,000 துண்டறிக்கையை மக்களிடையே கொடுத்தனர். மக்களும் தாமாக முன் வந்து துண்டறிக்கை வாங்கி படித்தது மிகச் சிறப்பு.
  3. பயணத்தில் கடை வசூல் மட்டும் ரூ.60,000/- கிடைத்தது. இதில் சிறு வியாபாரிகளே அதிக ஆதரவு தந்தனர்.
  4. கூடுவாஞ்சேரியைச் சார்ந்த நாடி ஜோதிடர் பழனிச்சாமி என்பவர், பயணச் செலவுக்கு ரூ.2000 நிதியளித்தார். கண்டிகையில் பிரச்சாரத்தைக் கேட்ட பக்தர் ஒருவர் ரூ.500 நன்கொடை வழங்கினார். இப்படி பயணத்தில் ஏராளமான பக்தர்கள் நிதி உதவி தந்தும், பழம், குளிர் பானம், தேநீர் என்று அவர்களால் இயன்ற அளவில் வழங்கி ஆதரவு தந்தனர்.
  5. பெரியார் இயக்கத்தைச் சார்ந்த வர்கள் நம் உரிமைக்கும் சுயமரி யாதைக்கும் குரல் கொடுப் பவர்கள், இவர்கள் நமக்கானவர்கள் என்றுதான் மக்கள் பார்த்தார்கள். கடவுள் மறுப்பாளர்கள் என்று கருதவில்லை.
  6. பயணத்தில் ரூ.23,000-க்கு கழக வெளியீடுகள் விற்பனையாகின.
  7. பேராசிரியர் கல்விமணி பயணக் குழுவை வரவேற்று திண்டிவனம் நகரம் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி, மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்தார். பல இடங்களில் கழக ஆதரவாளர்கள், தோழர்கள் தங்கு வதற்கும், உணவுக்கும் ஏற்பாடு செய்தது மகிழ்ச்சியளித்தது.
  8. வீதி நாடகக் குழுவினர் மத்திய கல்வி வேலை வாய்ப்பு மற்றும் பிற மாநில உரிமைகள் பறிப்பு குறித்து மக்களிடையே கேள்வி பதில் மூலம் பிரச்சாரக் குழுவுக்கும் மக்களுக்கு மிடையே ஒரு உரையாடலை ஏற்படுத்தி மக்களை பரப்புரை யுடன் இணைத்தனர்.
  9. பயண நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அனைவரும் இதுபோன்ற பயணத்தை மக்களிடையே தொடர்ந்து நடத்துங்கள் என்றே வலியுறுத்தினர். இது பெரும் ஊக்கத்தைத் தந்தது.
  10. வழக்கம்போல் அல்லாமல் காவல்துறை உரிய பாதுகாப்பு தந்தது, பல காவலர்கள் நிதி உதவி தந்தது, புத்தகங்களை வாங்கினர்.

தொகுப்பு: அய்யனார்

Pin It