திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும்கல்வி உரிமை பரப்புரைப் பயணம்

• கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்று! • தமிழ்நாட்டில் ‘நீட்’டை விலக்கு! • மத்திய அரசுப் பணிகளில் வடநாட்டுக் காரர்களைத் திணிக்காதே! • தமிழகத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் வேலை கொடு; தேர்வுகளை தமிழில் நடத்து! • தனியார் துறைகளில் இடஒதுக்கீடு வழங்கு!

தோழர்களே!

கல்வி - வேலை வாய்ப்பு - இதுவே தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களாகிய நமக்கு இரண்டு கண்கள்:

ஆனால், நமது கண்கள் இப்போது பிடுங்கப் படுகின்றன. மீண்டும் நமது தாத்தா, பாட்டிகளின் ‘கைநாட்டு’க் காலத்துக்கே விரட்டப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் சூழ்ந்து நிற்கிறோம்.

neet exam 2இதோ சில தகவல்கள்... இதைப் படியுங்கள்.

1976ஆம் ஆண்டு வரை கல்வி நமது மாநில அரசுக்கு மட்டுமே உரிமையாக இருந்த நிலை மாறி மத்திய அரசு ‘நாங்களும் தலையிடுவோம்’ என்று குறுக்கிட்டுத் தானாகவே பொதுப் பட்டியலுக்கு மாற்றிக் கொண்டது.

அதன் விளைவு? இப்போது நமக்கு அடி மேல் அடி.

‘நீட்’ தேர்வு அப்படித்தான் நுழைந்தது. ‘பிளஸ் டூ’ தேர்வில் நமது மாணவச் செல்வங்கள் இரவு பகலாகப் படித்துப் பெற்ற மதிப்பெண் களை குப்பைக் கூடையில் வீசி விட்டார்கள்.

“வேண்டாம்; எங்கள் மாநிலத்தை விட்டு விடுங்கள்” என்று சட்டமன்றத்திலேயே தீர்மானம் போட்டோம். நடுவண் ஆட்சி மதித்ததா? இல்லை. 1200க்கு 1176 மதிப்பெண் வாங்கிய அருமைச் சகோதரி அனிதா போன்றோரைப் பறி கொடுத்ததுதான் மிச்சம்.

இலட்சம் இலட்சமாய் பணத்தை தனியார் பயிற்சி மய்யங்களுக்குக் கொட்டி அழுது, நீட் தேர்வுக்குப் பயிற்சி பெற, நமது கிராமத்து ஏழை எளிய மாணவ மாணவிகள் எங்கே போவார்கள்? அப்படியும் மீறி எழுதப் போனால் தேர்வு மய்யத்தில் ‘சோதனை’ என்ற அலைக்கழிப்பு; தாய்மொழியாம் தமிழில் தேர்வு எழுதியவர் களுக்கோ தண்டனை; கேள்வித் தாள்களில் குளறுபடி; சி.பி.எஸ்.ஈ.யோ நீதிமன்றத்தில் திமிர்வாதம் பேசுகிறது. பிறப்பால் தாழ்ந்தவன் யார் என்று சி.பி.எஸ்.ஈ. வினாத்தாளில் விடை கேட்கிறது.

• மத்திய அரசாங்கத்தின் பணிகளுக்கு தேர்வு எழுத வேண்டும் என்றால் இந்தியிலும், ஆங்கிலத்திலும்தான்! மாநில மொழிகளில் தமிழில் எழுத முடியாதாம். அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் இந்திக்காரர்களே - வடமாநிலங்களிலிருந்து அதிகாரிகளாக அரசு ஊழியர்களாக குவிந்து கிடக்கிறார்கள். (வேறு மாநிலங்களிலிருந்து தொழிலாளர் களாக வேலை தேடிவரும் தோழர்களைக் குறிப்பிடவில்லை; அதிகாரிகளைத்தான் கூறுகிறோம்) இந்தப் புள்ளி விவரத்தைப் பாருங்கள்:

2013லிருந்து 2016 வரை தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணிகளில் வேலைக்கு வந்த இந்திக்காரர்கள் 1988 பேர். நமது தமிழ் பேசும் மக்கள் 110 பேர் மட்டுமே.

அந்தந்த மாநில மொழிகளிலே தேர்வுகளை எழுத அனுமதி மறுக்கிறார்களே? - இது நியாயமா?

அரசு உதவிகள் பலவற்றையும் பெற்று தொழில் தொடங்குகின்றன தனியார் தொழில் நிறுவனங்கள். அமெரிக்கா, அய்ரோப்பிய நாடுகளில் கருப்பர்களுக்கு வழங்குவதுபோல் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோருக்கு இடஒதுக்கீட்டை நடுவண் அரசு உறுதி செய்ய மறுக்கிறது? - இது நியாயமா?

இந்தியாவிலேயே அதிக மருத்துவக் கல்லூரி களை நமது மாநிலத்தில் தான் உருவாக்கியுள் ளோம். 24 அரசு மருத்துவக் கல்லூரிகள்; மொத்தம் 5660 இடங்கள். இதில் சரி பகுதி இடங்களை நடுவண் ஆட்சி பறித்துக் கொள்கிறது.

மருத்துவத் துறையில் தலை சிறந்த ‘நிபுணர்களை’ உருவாக்கும் ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ எனும் உயர்நிலை மருத்துவப் படிப்புகளில் இடஒதுக்கீட்டை முற்றிலுமாக நீக்கிவிட்டது நடுவண் ஆட்சி. எம்.டி., எம்.எஸ். போன்ற மேல் பட்டப் படிப்புக்கோ, பிற்படுத்தப் பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டையும் முடக்கி விட்டார்கள். இதன் காரணமாக 2160 பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களின் முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பு வாய்ப்புகளை இழந்து விட்டோம். அடுத்து பட்டப்படிப்பான ‘எம்.பி.பி.எஸ்.’க்கும் இறுதி யாண்டு தேர்வுகள் இனி அகில இந்திய தேர்வாகப் போகிறது. - இது நியாயமா?

62 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பல்கலைக்கழக மானியக் குழு கலைக்கப்பட்டு, இந்திய உயர் கல்வி ஆணையம் என்ற அமைப்பைக் கொண்டு வந்திருக்கிறது, நடுவண் ஆட்சி. இனி, மாநில அரசுகள் புதிய பல்கலைக் கழகங்களைத் தொடங்க முடியாது. கல்வியை பன்னாட்டு சந்தையில் விற்பனைப் பொருளாக மாற்றப்பட வேண்டும் என்ற உலக வர்த்தக அமைப்பின் தொடர்ச்சியான வற்புறுத்தலுக் காகவே வந்திருக்கிறது இந்த மாற்றம். இனி உயர் கல்விக் கொள்கைகளை தீர்மானிக்கப் போவது கல்வியாளர்கள் அல்ல; பார்ப்பன உயர் ஜாதி அதிகார வர்க்கம் தான். சமூக நீதிக்கு அவர்கள் சங்கு ஊதப் போகிறார்கள்.

தமிழக அரசு நிலை என்ன?

சரி; தமிழக அரசின் நிலை என்ன? மத்திய அரசுக்கு ஆமாம் சாமி போட்டு, ‘அப்படியே ஆகட்டும்’ என்று மண்டியிட்டுக் கிடக்கிறது.

தமிழக அரசு நடத்தும் தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புக்கான தேர்வுகளை (பொதுப் போட்டிக்கு) தமிழ் மொழி தெரியாத, பிற மாநிலத்தவர்களும், நேபாளம் பூட்டான் நாட்டைச் சார்ந்தவர்களும் எழுதுவதற்குக் கதவைத் திறந்து விட்டார்கள்.

நமது வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்குக் காத்திருப்போர் (2017ஆம் ஆண்டு நிலவரப்படி) 82 இலட்சம் பேர். இதில் பொறியாளர்கள் 2.4 இலட்சம் பேர்; டாக்டர்கள் 4307 பேர்.

தமிழ்நாடு அரசுப் பள்ளிகள் நிலை என்ன? ஏராளமான பள்ளிகள் மூடப்படுகின்றன. 13,000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆசிரியர் பயிற்சியை முடித்தவர்களை ‘தகுதித் தேர்வு’ எழுதச் சொன்னார்கள். இப்போது பணியிடங் களுக்கு தேர்வு செய்ய போட்டித் தேர்வு என்ற இரண்டாவது தேர்வைத் திணித்திருக்கிறார்கள். வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டிய ஆட்சி வேலைகளுக்கு வரவிடாமல் வடிகட்டும் போட்டித் தேர்வுகளை நடத்திக் கொண்டு, ‘தகுதி திறமை’ பேசிக் கொண் டிருக்கிறது. இது சமூக நீதியா?

அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. மழலையர் வகுப்புகள் தரமாக தமிழ் வழியில் தொடங்காததால், பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நோக்கித் தள்ளப்படுகிறார்கள். அவர்கள் கேட்கும் கல்விக் கட்டணம் செலுத் தவே நமது மக்களுக்கு மூச்சுத் திணறுகிறது.

கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால் மத்திய அரசு உருவாக்கும் சமூகநீதிக்கு எதிரான கல்விக் கொள்கைகளே எல்லாவற்றுக் கும் அடிப்படையான காரணம்.

பெரியார் - நமது மக்களின் கல்வி, வேலை வாய்ப்பு உரிமைக்கும் சுயமரியாதைக்கும் 95 வயது வரை சாகும் வரை போராடினார்.

காமராசர், அண்ணா, கலைஞர், எம்,.ஜி.ஆர். என்று நமது முதல்வர்கள் இந்த உரிமைகளை அரண்போல் காத்து நின்றார்கள்; வளர்த் தெடுத்தார்கள்.

இன்று.... ஒவ்வொன்றாய் பறி கொடுத்து நிற்கிறோம். என்ன செய்யப் போகிறோம்? எப்படித் தடுக்கப் போகிறோம்?

ஒடுக்கப்பட்ட சமூகத்து இளைஞர்களே நீங்கள் போராடக்கூட வேண்டாம்; இந்த ஆபத்து களை ஒவ்வொருவரிடமும் எடுத்துக் கூறுங்கள்!

போராடும் இயக்கங்களுக்கு ஆதரவு தாருங்கள். அதுவே போதும்.

‘யாருக்கோ வந்தது; நமக்கென்ன?’ என்று ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்ப்பது மிகப் பெரும் சமூக துரோகம் அல்லவா?

நாம் மக்கள் கருத்தை உருவாக்குவோம்; அதுவே வெற்றியைத் தீர்மானிக்கும்; அரசுகளை பணிய வைக்கும்!

தோழர்களே உறுதி ஏற்போம்

கல்வி, வேலை வாய்ப்பு - நமது உரிமை!

சுயமரியாதை - நமது அடையாளம்!

இதை எடுத்துச் சொல்லவே இந்தப் பயணம்!

ஆதரவு தாரீர், தமிழர்களே!

தோழமையுள்ள

திராவிடர் விடுதலைக் கழகம்

பெரம்பலூர் - கருஞ்சட்டைக் கடலாகட்டும்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலாற்றல் மிக்க தோழர்கள் தமிழர்களின் குறிப்பாக தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் பாதிக்கப் படும் கல்வி வேலை வாய்ப்பு உரிமைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறார்கள்.

2018 ஆக. 20இல் தொடங்கி 26இல் பெரம்பலூரில் நிறைவு விழா மாநாடு;

6 முனைகளிலிருந்து புறப்பட்டு 180 ஊர்களில் பரப்புரைக் கூட்டங்கள்.

எத்தனையோ தடைகளைத் தகர்த்து ‘மனு சாஸ்திரம்’ நமக்கு மறுத்த கல்வி உரிமையை மீட்டு நமது தலைவர்கள் போராடிப் பெற்றுத் தந்த உரிமைகள் இப்போது பறிபோய்க் கொண்டிருக்கின்றன.

நீதிக்கட்சி ஆட்சியில் தொடங்கியது நமக்கான வகுப்புவாரி உரிமை.

1950இல் தமிழ்நாட்டில் பின்பற்றி வந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் செல்லாது என்று சென்னை உயர்நீதி மன்றமும் பிறகு உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்தது. பெரியார் போராடினார்; தமிழகம் கொந்தளித்தது. இந்திய அரசியல் சட்டம் பெரியார் நடத்திய போராட்டத்தால் முதன் முதலாக 1951இல் திருத்தப்பட்டது.

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக் கான போராட்டத்தையும் வடவர் சுரண்டல் எதிர்ப்புப் போராட்டத்தையும் 1950இல் பெரியார் இணைத்தே நடத்தினார் என்பதை நாம் சுட்டிக் காட்டியாக வேண்டும்.

ஆம்; நமது கைத்தறித் தொழி லாளர்களுக்காக சென்னை பாரி முனையிலிருந்த வடநாட்டு செல்லாராம்ஸ் துணிக் கடை முன் 72 நாள்கள் தொடர் மறியல் நடத்தி பெரியார் தொண்டர்கள் கைது ஆனார்கள். இப்போதும் அதே நிலைதான். சமூகநீதிப் போராட்டத்தையும் வடவர் எதிர்ப்புப் போராட்டத்தையும் இணைந்து நடத்தும் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளோம்.

ஓமந்தூரார் - காமராசர் - அண்ணா - கலைஞர் - எம்.ஜி.ஆர் ஆட்சிகளில் இடஒதுக்கீட்டு வேலை வாய்ப்புகளில் நாம் பெற்ற உரிமைகளை இழந்து நிற்பதையும் தமிழகத்தில் மத்திய அரசுப் பணிகளில் வடநாட்டுக்காரர்கள் குவிக்கப்படும் ஆபத்துகளை மக்களிடம் எடுத்துச் சொல்வதற்குமே இப்பயணம்.

• ‘நீட்’ மிரட்டுகிறது.

• மருத்துவக் கல்லூரியில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பறி போகிறது.

• பல்கலைக்கழக மான்யக் குழு கலைக்கப்பட்டு பல்கலைக் கழகங்கள் தொடங்கும் உரிமை மாநிலங்களிடமிருந்து பறிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணிகளில் வடநாட்டு இந்திக்காரர்கள் குவிந்து வருவதைத் தடுத்து நிறுத்தா விட்டால் தமிழகமே வடநாடாகிவிடும்! எனவே தான் சமூக நீதியையும் வடவர் எதிர்ப்பையும் ஒரே நேரத்தில் பெரியார் எதிர்த்த அதே கடமையை இன்று நாம் நிறைவேற்றப் புறப்பட்டிருக்கிறோம்.

2018 ஆக.26இல் பெரம்பலூரில் அனைத்து பரப்புரைக் குழுக்களும் சங்கமிக்கின்றன. கருஞ்சட்டைக் கடலைப் பார்க்கப் போகிறோம்.

பயணத்தில் பங்கேற்க வாய்ப்பில்லாத தோழர்களே! தமிழின உணர்வாளர்களே! பெரம்பலூர் நோக்கி அன்புடன் அழைக்கிறோம்!