மேட்டூர் தாய்த் தமிழ்ப் பள்ளி நிர்வாகியும், மேட்டூர் அனல் மின் நிலைய ஓய்வு பெற்ற முதுநிலை வேதியரும் பெரியாரியலாளருமான ப. தமிழ்க்குரிசில் (62) 3.9.2018 அன்று மேட்டூரில் உள்ள அவரது இல்லத்தில் முடிவெய்தினார். தாய்த் தமிழ்ப் பள்ளிகளை வளர்த்தெடுக்க பெரும் கவலை கொண்டு பணி ஓய்வுக்குப் பிறகு முழுமையாக அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். ‘குடிஅரசு’ தொகுப்புகளை பெரியார் திராவிடர் கழகமாக இருந்தபோது வெளியிட்ட போது தொகுப்புப் பணியில் பெரும் பங்காற்றிய பெருமைக்குரியவர் தமிழ்க்குரிசில். மேட்டூர் அருகே கொளத்தூரில் இரவு பகலாக பல வாரங்கள் தொகுப்புப் பணி நடந்த போது பணிகளை ஒருங்கிணைத்து ‘குடிஅரசு’ இதழ்களில் உள்ளது உள்ளவாறே அப்படியே வெளி வர வேண்டும். அப்போது தான் இது வரலாற்று ஆவணமாக எதிர்காலத்தில் நிற்கும் என்பதில் கவனம் செலுத்தி கவலையோடு பணியாற்றியவர் தமிழ்க் குரிசில்.

tamilkurisilஇறுதி வணக்கம் செலுத்திட கழகத் தோழர்களும் தாய்த்தமிழ்ப் பள்ளி ஆதரவாளர்களும் ஏராளமாகத் திரண்டு வந்திருந்தனர். கழகக் கொடி போர்த்தப்பட்டு வீரவணக்க முழக்கங் களுடன் இறுதி ஊர்வலம் 6 மணி அளவில் புறப்பட்டது. மேட்டூர் மின் மயானத்துக்கு கழகத்தின் பெரியாரியப் பெண்கள் அவரது உடலை சுமந்து சென்றனர். எவ்வித மூடச் சடங்கு களும் இன்றி உடல் எரியூட்டப் பட்டது.

அங்கே நடந்த இரங்கல் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் கல்வி மணி (கல்யாணி), பி.யு.சி.எல். தலைவர் கண.குறிஞ்சி, கோபி தாய்த் தமிழ்ப் பள்ளி குமணன், திருச்சி தமிழ் கல்விக் கழகத்தைச் சார்ந்த மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த சிவக்குமார், அனல் மின்நிலைய அய்.என்.டி.யூ.சி. சங்கத்தைச் சார்ந்த பாலு, சோலை மாரியப்பன், முல்லை வேந்தன், குரிசில் மைத்துனர் த. தங்கப் பிள்ளை, குரிசில் தம்பி முருகேசன், மேட்டூர் தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்த சு.கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலரும் இரங்கல் உரையாற்றினர்.

கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி உள்ளிட்ட கழகத் தோழர்கள் மற்றும் திருச்சி பேராசிரியர் நெடுஞ்செழியன், அடைக்கலம், அரசெழிலன், புகழூர் விசுவநாதன் உள்ளிட்ட உணர் வாளர்களும் ஏராளமாகத் திரண்டு வந்திருந்தனர்.

‘குடிஅரசு’ தொகுப்பின் முதல் தொகுதியில் எழுதப்பட்ட அணிந்துரை, தோழர் தமிழ்க்குரிசில் ஆற்றிய பங்களிப்பை இவ்வாறு பதிவு செய்திருக்கிறது.

“தொகுப்புப் பணியின் ஒருங் கிணைப்பாளராக தோழர் ப. தமிழ்க் குரிசில் செலுத்திய உழைப்பும் சிந்தனையும் அளப்பரியதாகும். கண்டிப்பு நிறைந்த ஆசிரியராக அவர் வழி நடத்தினார். கடமையாற்றிய கழகத்தினர் ஏதேனும் ஒரு நாள் விடுப்போ அல்லது சில மணி நேர தாமத வருகைக்கோ பள்ளி மாணவர்களைப் போல் தயங்கி தயங்கி அவரிடம் அனுமதி கேட்பதும் அவரோ கோரிக்கையில் பாதியை அதுவும் தயக்கத்துடன் அனுமதித்ததை யெல்லாம் இப்போது நினைத்தால் கூட நகைப்பை ஏற்படுத்தக் கூடியவை. மேட்டூர் தாய் தமிழ்ப் பள்ளியில் விடுமுறை காலம் முழுதும் தொடர்ந்த இப்பணிகள் பள்ளி திறப்பிற்குப் பிறகு கொளத்தூர் பெரியார் படிப்பகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டன” என்று தமிழ்க் குரிசில் பங்களிப்பு பதிவாகியுள்ளது.