பவானியில் பரப்புரை இயக்கம் தொடங்கியது

kolathoor mani soolur

 “பிற்படுத்தப்பட்டோரின் சமூக நீதியை ஆதரிக்கும் நாங்கள் தான் ஜாதி வெறியை தூண்டிவிடும் சக்திகளையும் எதிர்க்கிறோம்” என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி தனது உரையில் குறிப்பிட்டார்.

திராவிடர் விடுதலைக் கழக ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக “எங்கள் தலை முறைக்கு ஜாதி வேண்டாம்; எங்கள் இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும்” பிரச்சார பயணத் துவக்க விழா பொதுக் கூட்டம் பவானியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் பவானி வேணுகோபால் தலைமையேற்க, முன்னிலை பொறுப்பை மாவட்ட தலைவர் நாத்திகசோதி ஏற்க, கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் இரத்தினசாமி,  மாநில பொருளாளர் துரைசாமி, மாநில வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

கூட்டத்தில் சிறப்புரை வழங்க கழகத் தலைவர் கொளத்தூர்மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த வழக்குரைஞர் ப.பா. மோகன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முன்னதாக மேட்டூர் டி.கே.ஆர். இசை குழவினரின் ஜாதி ஒழிப்பு பாடல் நிகழ்வுகளும், கோவிந்தராஜின் மந்திரமல்ல! தந்திரமே! என்கிற நிகழ்ச்சியும் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருகை தந்தவர்களை வேல்முருகன் வரவேற்று பேசினார்.

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த வழக்குரைஞர் ப.பா. மோகன் உரையாற்றும் பொழுது, “இந்தியாவில் மார்க்சியம் என்பது பெரியாரியமும், அம்பேத்கரிய மும் இணைந்துதான் என்றார். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் என்னவெல்லாம் செய்ய நினைக்கிறதோ அதை திராவிடர் விடுதலைக் கழகம் செய்துகொண்டு இருப்பதோடு மட்டுமில்லாமல் ஜாதிவெறி எங்கெல்லாம் தலை தூக்குகிறதோ அங்கு எல்லாம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோடு திராவிடர் விடுதலைக் கழகம் இணைந்து களப்பணி ஆற்றி வருகிறது. எவன் ஒருவன் சமூக மாற்றத்திற்காக நிற்கின்றானோ அல்லது உழைக்கிறானோ அவன் நாத்தினாகத் தான் இருக்க வேண்டும் என்று பகத்சிங் சொன்னார். இன்றைய இளைஞர்கள் அனைவரும் அதனை மனதில் கொள்ள வேண்டும் என்றார். இன்று நாங்கள் தான் பெரிய ஜாதி என்று கூறிக்கொண்டு பல் வேறு சாதி கலவரங்களுக்கு காரணமாக இருக்கின்ற வன்னியர் சமுகத்தை சார்ந்தவர்களின் உடலை புதைப்பதற்கு கவுந்தப்பாடிக்கு அருகே உள்ள அண்ணாநகரில் உள்ள சுடுகாட்டில் இடம் இல்லை என்று சொன்னார்கள். ஏனெனில் அது கவுண்டர் இன ஆதிக்க சக்திகளுக்கு ஆன சுடுகாடு என்று கூறி வன்னியர் சாதிகளை சாந்தவர்களின் உடலை அங்கு புதைக்க மறுத்தனர். இன்று நாங்கள் தான் அதில் களமிறங்கி செயல்பட்டோம். வன்னியர்களுக்கு பாதுகாப்பு என்று முழக்கமிடும் கட்சிகள் அங்கு வரவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், திராவிடர் விடுதலைக் கழகமும் இணைந்துதான் வழக்காடி அந்த இடத்தில் புதைக்கும் பொது உரிமையை பெற்றுக் கொடுத்தனர்” என்றார்.

கழக தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றுகையில், “நாங்கள் பெரியார் திராவிடர் கழகமாக இருந்த பொழுது தனியார் துறையில் இட ஒதுக்கிடு வழங்கக் கோரி 2002-ல் சம்பூகன் சமுகநீதி பயணம், ஜாதிய வாழ்வியல் எதிர்ப்பு பரப்புரை பயணம், தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகமாக சுயமரியாதை சமதர்ம பரப்புரை பயணம், எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம் என்று பல்வேறு பயணங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக இன்றைய காலகட்டத்தின் தேவையாக இன்றைய சூழ்நிலையில் அவசியமானது தான் ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்! எங்கள் இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும்’ என்ற பிரச்சார பயணம் துவங்க உள்ளோம்.

இன்றைய சூழலில் உழைப்பை கொடுப்பவன் கீழ்சாதி, உழைப்பில் உற்பத்தியை பெருக்கும் பெண்-கீழ்சாதி, உழைக்காமல் சோம்பேறியாக இருப்பவன்-மேல் சாதி என்ற நிலை உள்ளது. 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26-ல் அரசியலமைப்பு சட்ட வரைவு அம்பேத்கர் தாக்கல் செய்யும் முன்பு நவம்பர் 25 ஆம் நாள் உரையாற்றும் பொழுது நாம் இன்று முதல் அரசியல் சமத்துவம் பெற்று விட்டோம் ஒருமனிதன் ஒருவாக்கு, ஒருவாக்கு ஒருமதிப்பு இது அரசியல் சமத்துவம் மட்டும் தான். இங்கு மனிதனுக்கு மனிதன் சமம் இல்லை பொருளதாரத்திலும், சமூகத்திலும் இன்னும் நாம் சமத்துவம் பெறவில்லை என்றார். அதே போல் அவர் உரையாற்றும் பொழுது “இந்திய மக்களாகிய அரசியல் சட்டத்தில் முதல் முகப்புரை, ‘இந்திய மக்களாகிய நாம்’ என்றே தொடங்குகிறது. அரசியல் நிர்ணய சபையில் சில உறுப் பினர்கள் இந்திய தேச மக்களாகிய நாம் என்று குறிப்பிட சொன்னார்கள்” அதற்கு அம்பேத்கர்,  “இங்கு தேசம் எங்கு உள்ளது? நாம் ஆயிரக் கணக்கான ஜாதி களாகப் பிரிந்துதான் கிடக்கின்றோம்.  எனவே தான் இந்திய மக்களாகிய நாம் என்று குறிப்பிட் டேன்” என்றார். அதனை அவரின் நண்பர்களும் ஏற்றுக் கொண்டனர்.

கழக தலைவர் கொளத்தூர் மணி தொடர்ந்து பேசுகை யில், “பெரியாரிய இயக்கம் என்பது வெறும் பகுத்தறிவு இயக்கம் மட்டுமல்ல. பகுத்தறிவு என்பது அதன் ஒரு பகுதி மட்டும்தான். இது இன இழிவு ஒழிப்பு இயக்கம் ஆகும். வருகின்ற செப்-17 தந்தை பெரியாரின் பிறந்த நாள். அதே நாள் மற்றொருவருக்கும் பிறந்த நாள் அவர் விநாயகர். நாங்கள் பெரியாருக்கு 137ஆவது பிறந்தநாள் என்று சொல்ல முடியும். விநாயகருக்கு எத்தனையாவது பிறந்த நாள் என்று இந்து முன்னணிக்காரர்கள் தான் சொல்ல வேண்டும். விநாயகருக்கு என்ன வரலாறு உள்ளது. வரலாறு என்றால் ஒரே மாதிரியாக இருக்கும். கதை என்றால் பல மாதிரியாக இருக்கும். விநாயகர் பிறப்பை பற்றி பல கதைகள் புராணங்களில் கூறப்பட்டு இருக்கின்றன. அவ்வளவு ஆபாசம் அதில் உள்ளது. இந்து முன்னணிக்காரர்கள் அவற்றைப் படிப்பார்களானால் புராணங்களை எரிக்கும் போரட்டத்தினை இந்து முன்ணணி தான் நடத்த வேண்டும்.

விடுதலை என்பது சமத்துவம், சகோதரத்துவம் ஆனால் இவைகளுக்கு எதிராக இருப்பது இந்து மதம் என்றார் அம்பேத்கர். பிற்படுத்தப்பட்டோர்க்கு இட ஒதுக்கீடு கிடைக்கப் போராடியவர்கள் பெரியார் வாதிகள். ஆனால் இன்று அதே பிற்படுத்தப்பட் டோர்கள் வேறு ஒரு சமூகத்திற்கு எதிராக திரும்பும் பொழுது தான் அந்த ஜாதிவெறியை எதிர்த்து,  நாம் பேசவேண்டியுள்ளது. இன்று ஒவ்வொரு ஜாதிகட்சி தலைவர்களும் தங்களது ஜாதிகளை இடஒதுக்கீடு உரிமைகளுக்காக சின்ன சாதிகளாக அறிவிக்ககோரி அரசிடம் போராடிக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் ஊருக்குள் வந்தால் தாங்கள் தான் பெரிய சாதி என கூறிக் கொள்கின்றனர். இன்றைய உலக மயமாக்கலில் உடல் உழைப்பு பொறியியல் படித்த இளைஞர்களின் தினசரி சம்பளமும் 200 ரூபாய் தான். நாம் இன்றைய சூழ்நிலையில் கல்வியில் இடஒதுக்கிடு உரிமை பெற்று விட்டோம். வேலை வாய்ப்புகளில் இன்னும் இடஒதுக்கீடு பெறவில்லை. இன்று ஊர் கோவில்கள் அனைத்தும் கந்து வட்டி கொடுப்பவனும், கள்ள சாராயம் விற்பவனும் தான் கட்டிக் கொண்டு இருக்கின்றார்கள். இந்துக்களே ஒன்றுபடுங்கள் என்று கூவுகின்ற இந்து முன்னணி காரர்கள் சேஷ சமுத்திரத்தில் தலித் மக்கள் இந்து கடவுளின் தேரை மற்றொரு இந்து ஜாதி எரித்தபோது ஏன் கண்டனக் குரல் எழுப்பவில்லை எனக் கேட் கிறோம் என்றார். மேலும் இன்றைய இளைஞர்களே உங்கள் ஜாதி கட்சி தலைவர்களிடம் கேளுங்கள் மத்திய அரசு பணிகளில் எங்களின் வேலைக்கு இட ஒதுக்கிட்டு இது வரை என்ன செய்து உள்ளீர்கள்? அதை உயர்த்த ஜாதி கட்சி தலைவர்களான நீங்கள் இன்று வரை என்ன செய்து உள்ளீர்கள்? எனக்  கேளுங்கள் என்று கேட்டார்” கொளத்தூர் மணி.

பொதுக்கூட்டத்திற்கு வினோத் நன்றியுரை வழங்கினார் பொதுக்கூட்டதிற்கான ஏற்பாடுகளை இராம. இளங்கோவன், நாத்திகசோதி, வேணு கோபால், வேல்முருகன், அருள், வினோத் உள்ளீட்ட தோழர்கள் சிறப்பாக செய்து இருந்தனர் பொதுக் கூட்டத்திற்கான விளம்பர பலகைகளை அந்தியூர் வீரன், தோழர்களுக்கான உணவு ஏற்பாடுகளை வினோத் ஏற்பாடு செய்து தந்தனர்.

செய்தி ம.நிவாசு

Pin It