விஜயதசமி நாளில் இராவணன் படத்தைத் தீயிட்டுக் கொளுத்துகிறார்கள். இராவணன் எரிவதைப் பார்த்து கைத்தட்டி கும்மாளம் அடிக்கிறார்கள். இராவணன் மீது அம்புகள் ஏவப்படுகின்றன. தொலைக்காட்சிகள் இதை ஒளிபரப்புகின்றன. மோடியும், அதன் பரிவாரங்களும் மட்டுமல்ல, ராகுல், சோனியாவும் இதில் பங்கேற்கிறார்கள். ஏன் இந்த எரிப்புகள் நடக்கின்றன? தொலைக்காட்சியில் பார்த்த இருவர் இதுகுறித்து உரையாடுகிறார்கள். (விவாதம் தொடங்குகிறது)

கேள்வி : தசரா என்பது இந்துப் பண்டிகை. இதுல எதுக்கு இராவணனை எரிக்கனும்? இராமனைக் கொண்டாடனும்? இராமாயணக் காலத்துலயே இந்துமதம் வந்துடுச்சா?

பதில் : அப்படியெல்லாம் ஒன்னுமில்ல… இந்து என்ற பெயரே பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்துல தான் வந்துச்சு. ஆனால் பிராமணர் தெய்வம், அவர் பேச்சை மீறுவது குற்றம், மற்றவர்கள் சூத்திரர்கள், பிராமணர்களுக்கு அடிமை என்ற கருத்து இராமாயணக் காலத்துலேயே வந்துருச்சு. அதனால் தான் இராமன், சூத்திரன் சம்பூகனின் தலையை வெட்டி வீசினான். இந்துமதம் அப்போது வரல, ஆனால் வர்ணாசிரம தர்மம் வந்துருச்சு.

கேள்வி : இந்துமதம் இல்லாத காலத்தில் நடந்த இந்தக் கதையை எப்படி இந்து மதத்துல சேர்த்தாங்க?

பதில் : இந்தக் கேள்விக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் விஜயதசமி நாளில் பதில் கூறியிருக்கிறார். இந்துமதம் வருவதற்கு முன்பே நாம் வாழ்ந்து கொண்டிருந்தோம், அதுதான் இதற்கு பதில்.

கேள்வி : அப்போ ஒரு சந்தேகம்? இராமனும் இந்து, இராவணனும் இந்து தான். இராவணன் கிருஸ்துவனோ, இஸ்லாமியனோ அல்ல, இந்துவை ஒரு இந்து ஏன் எரிச்சு ஒழிக்கனும்?

பதில் : நல்ல கேள்வி, இந்துவுலேயே இரண்டு பிரிவு உண்டு. ஒன்று ஆரிய இந்து, மற்றொன்று திராவிட இந்து. ஆரிய இந்துவின் அதிகாரத்துக்கு திராவிட இந்து ஒழுங்கு மரியாதையா அடங்கிப் போகனும். எதிர்த்தால் எரிப்பார்கள், கடலில் மூழ்கிக் கொலை செய்வார்கள், தலையை வெட்டுவார்கள்.

கேள்வி : ஏன் திராவிட இந்துக்களின் மீது அவர்களுக்கு இவ்வளவு எரிச்சல்?

பதில் : அப்படிக் கேளுங்க! மக்கள் உணவுப் பொருட்களையும், கால்நடைகளையும் தீயில் போட்டு கடவுளுக்கு யாகம் நடத்துகிறோம் என்று ஆரிய இந்துக்கள் எரித்தார்கள். இந்தக் கொடுமையை எதிர்த்து திராவிட இந்துக்கள் கேள்வி கேட்டார்கள். எங்களுடைய யாகத்தை எதிர்க்கிறாயா? நீ இந்துவாக இருந்தாலும் உயிரோடு இருக்க முடியாது. விட மாட்டோம், பார் என்று திராவிட இந்துக்களை ஆரிய இந்துக்கள் ஒழிக்கச் சதி செய்தார்கள். இந்து காந்தியை இந்து கோட்சே ஏன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றான்? இதே காரணத்துக்காகத்தான். இன்னும் இராவணனைத் தெய்வமாக வழிபடுகின்ற இந்துக்கள் இந்தியாவில் பல மாநிலங்களில் வாழ்ந்து வருகிறார்கள். பழங்குடியினர் இராவணனைத் தங்கள் தலைவனாக கருதுகிறார்கள். நேற்று கூட ஒரு செய்தி வந்திருக்கு.. உபியில் கான்பூர் சீவாலா என்ற ஊரில் இராவணன் கோயிலில் ஆயிரக்கணக்கான சிவ பக்தர்கள் திரண்டுவந்து வழிபாடு நடத்தியிருக்கிறார்கள். இவங்க உணர்வுகளை எல்லாம் காலில் போட்டு மிதித்து இராவணன் உருவத்தைத் தீயிட்டு எரிச்சா அவங்க மனம் புண்படாதா?

கேள்வி : ஆக, விஜயதசமி சக இந்துக்களை இழிவுபடுத்தும் பண்டிகை என்று கூறுகிறீர்களா?

பதில் : அதில் என்ன சந்தேகம். விஜயதசமி மட்டுமல்ல, தீபாவளிக் கதையும் அப்படித்தான். நரகாசூரன் என்ற இந்து ஆரிய இந்துக்களின் தியாகங்களை கேள்விக் கேட்டான். உடனே ஆரிய இந்துவான விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து சூழ்ச்சியாக நரகாசூரனைக் கடலுக்குள் தள்ளி கொலை செய்தான். இப்படித் திராவிட இந்துக்களை ஆரிய இந்துக்கள் கொலை செய்கிற பண்டிகை தான் தீபாவளியும், விஜயதசமியும்.

நரகாசூரனும் சரி, இராவணனும் சரி, மசூதிக்கோ சர்ச்சுக்கோ போகாதவர்கள். பாகிஸ்தானில் இருந்தோ, வங்கதேசத்தில் இருந்தோ வந்தவர்கள் அல்ல. ஆனால் நரகாசூரன் கொலை செய்யப்பட்ட நாளில் துக்கம் அனுசரிக்காதே, கண்ணீர் வடிக்காதே, பட்டாசு வெடித்து, புத்தாடை உடுத்தி இனிப்பு சாப்பிட்டு கோலாகலமாகக் கொண்டாடு என்று ஆரிய இந்து திராவிட இந்துக்களைக் கட்டாயப்படுத்துகிறது. இல்லாவிட்டால் இந்து விரோதி கூக்குரலிடுகிறது.

தீபாவளிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் வாழ்த்து கூறவில்லை என்று கேள்வி கேட்கிறது ஆரிய இந்து. எங்கள் திராவிட இந்துக்களைக் கொலை செய்யும் நாளுக்கு வாழ்த்துக்கூற வேண்டுமா? ரகு தாத்தா திரைப்படத்தில் கதாநாயகி கூறுகிற மொழியிலேயே கூறுகிறோம். தீபாவளி வாழ்த்து கிடையாது போயா!

கோடங்குடி மாரிமுத்து