crackers

சமண சமயப் பண்டிகையே தீபாவளி

தீபாவளி சமணரிடமிருந்து இந்துக்கள் பெற்றுக் கொண்ட பண்டிகை. கடைசித் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரிலே அவ்வூர் அரசனுடைய அரண்மனையிலே தங்கி இருந்தபோது அங்கு குழுமி இருந்த மக்களுக்கு அறிவுரை செய்தருளினார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. வைகறைப் பொழுது ஆனபடியினாலே சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர். வர்த்தமான மகாவீரரும் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே இயற்கை எய்தினார். உலகத்திற்கு அறிவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு அவர் இயற்கை எய்திய நாளில் வீடு தோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழா கொண்டாடும்படி ஏற்பாடு செய்தனர். அது முதல் இந்த விழா (தீபம் = விளக்கு, ஆவலி = வரிசை; தீபாவளி) மகாவீரர் விடியற்காலையில் இயற்கை எய்தியபடியால் தீபாவளி என்ற பெயரில் விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது. விடியற்காலையில் நீராடிய பின்னர் திருவிளக்கு ஏற்றித் தீபாவளிப் பண்டிகை கொண்டாடபடுவது வழக்கமாக இருக்கிறதன்றோ!

சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள் வழக்கமாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத ஆரியர்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் பொருத்தமற்ற புராணக்கதைகளைக் கற்பித்துக் கொண்டார்கள், திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவதுதான் தீபாவளி என்றும் கூறப்படும் புராணக்கதை பொருத்தமானது அன்று. (கல்வெட்டராய்ச்சி அறிஞர் “மயிலை சீனி வேங்கடசாமி” அவர்கள் எழுதிய “சமணமும் தமிழும்” என்ற நூலில், பக்கம் 79 – 80)

தீபாவளி என்ற பெயர் சமண பண்டிகைக்கு மட்டுமே பொருந்தும். நரகாசுரன் கதைக்குப் பொருந்தாது. எனவே சமணப் பண்டிகையை இந்துப் பண்டிகையாக ஆக்கிக்கொண்ட மோசடி இதில் வெளிப்படுகிறது. இதை வாரியாரே கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.

அசுரர் கொலைக்கு விழாவா?

தீபாவளியின் உண்மையறிந்தவர்கள் ஒரு சிலரே ஆவார்கள். பெரும்பாலோர் நரகாசுரனைக் கண்ணபிரான் சம்கரித்தார்; அந்த அரக்கனை அவர் அழித்த நாளே தீபாவளி என்று கூறிக் கொண்டு இருக்கிறார்கள். நரகாசுரனை கொன்ற காரணத்தினால் கொண்டாடப்படுவது தீபாவளி என்பது பிழை. ஓர் அசுரனைக் கொன்றதற்காக ஒரு கொண்டாட்டம் இருக்க முடியாது. அப்படியானால் இராவணன், இரணியன், இடும்பன் மகன் சலந்தரன், அந்தகன் முதலிய அரக்கர்களைக் கொன்றதற்கும் கொண்டாட்டம் இருக்க வேண்டும். (ஆனால் அவ்வாறு இல்லையே) நரகாசுரனைக் கொன்றதற்கும், தீபாவளிக்கும் தொடர்பு இல்லை என உணர்க. நரகாசுரனைக் கொன்றதற்காகத் தீபாவளி ஏற்பட்டதன்று. (திருமுருக கிருபானாந்த வாரியார் சுவாமிகள் எழுதிய “வாரியார் விரிவுரை விருந்து” என்ற நூலில், பக்கம் 95)

எனவே தீபாவளி இந்துப் பண்டிகை அல்ல என்பதையும், அது தமிழர்க்குரிய பண்டிகையும் அல்ல என்பதையும் உணர வேண்டும். இப்பொழுது கொண்டாடப்படுவது பட்டாசு வெடித்து மாசுபடுத்துவது, ஒரே நாளில் பல பலகாரங்களைத் தின்று உடலை கெடுத்துக் கொள்வது அறிவுக்கும் உகந்தது அல்ல என்பதை உணர்ந்து மக்கள் இப்பண்டிகையை கை விடவேண்டும். அது நாட்டுக்கும், வீட்டுக்கும், சுற்றுச்சூழலுக்கும் நல்லது.

ஒரே நாளில் இந்தியா முழுக்க புகையாக்கி காற்றை மாசுபடுத்துவது, அதனால் குழந்தை முதல் வயோதிகர் வரை அனைவரின் உடல் நலத்தைக் கெடுப்பது, சமுதாய துரோகச் செயல் என்பதை கருத்தில் கொண்டு இவற்றைக் கைவிடவேண்டும்.

- மஞ்சை  வசந்தன்

Pin It