திராவிட மாடல் ஆட்சி என்றாலே, அதை குறை கூறுகிறார்கள், பாஜகவினரும், இந்துத்துவத்தினரும், பார்ப்பனர்களும். ஆனால் இந்துத்துவ மாடல் ஆட்சி எப்படி நடந்து கொண்டு இருக்கிறது என்பதற்கு ஏடுகளில் வந்திருக்கிற ஒரு செய்தியை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

உத்திரகாண்ட் மாநிலத்திலும், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் அரசு ஒரு திட்டத்தை அறிவித்து இருக்கிறது. உத்திரகாண்ட் மாநிலத்தில் அங்கு உள்ள ஒரு சிறையில் ஒரு நாள் ஒரு இரவு பொழுது தங்கிவிட்டு திரும்பினால் தோஷம் கழிந்துவிடும் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. இந்த நம்பிக்கை உள்ளவர்களுக்கு சிறையில் அடைப்பதற்காக அரசே ஏற்பாடுகளை செய்து இருக்கிறது. ஒரு இரவுக்கு 500 ரூபாய் அரசுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். ஏற்கனவே ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு இரவுக்கு 500 ரூபாய் செலுத்தி சிறையில் இருந்துவிட்டு வரலாம் என திட்டம் இருக்கிறது. இப்போது உத்திரகாண்ட் அரசும் அதே திட்டத்தை பின்பற்றப் போவதாக அறிவித்து இருக்கிறது.

ஜாதகப்படி தங்கள் மீதுள்ள தோஷம் இப்படி ஒரு நாள் இரவு சிறையில் தங்கிவிட்டு வந்தால் கழிந்து விடும் என்று மக்கள் நம்புகிறார்களாம். அதற்காக அரசே இப்படி ஒரு திட்டத்தை உருவாக்கி இருக்கிறது. ‘ஹாத்துவானி’ பகுதியில் உள்ள ஒரு சிறையில் சிறைத்துறை அதிகாரியாக இருக்கும் ‘சதீஷ் சடிஜா’ என்பவர் கூறும் போது, தோஷம் என்று கூறி வருபவர்களுக்கு 500 ரூபாய் கட்டணம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு கைதிகளின் உடைகளை வழங்குகிறோம். சிறையில் உள்ள உணவுகளை வழங்குகிறோம். ஒரு நாள் முழுதும் இரவு சிறையில் தங்க வைக்கின்றோம். பிறகு அடுத்த நாள் காலை விடுதலை செய்கின்றோம் என்று தங்களுடைய அரசு திட்டத்தை பெருமையோடு அறிவித்து இருக்கிறார்.

நாளைக்கு சுடுகாட்டில் போய் பிணமாக படுத்திருந்தால் சாவு தோஷத்தில் இருந்து விலக்கு தங்களுக்கு கிடைக்கும் என்று நம்பினால் அதற்கும் இந்துத்துவா ஆட்சி ஏற்பாடு செய்தாலும் ஆர்ச்சர்யப்படுவதற்கு இல்லை. இது தான் இந்துதுவ மாடல் ஆட்சி.

அரசு அலுவலகங்களில் மத வழிபாடு நடத்துவது அரசாணைக்கு எதிரானது

அரசு அலுவலகங்களில் மதம் சார்ந்த வழிபாடுகளை, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜைகளை கொண்டாடக் கூடாது என தலைமைச் செயலாளர்கள், உயர் அதிகாரிகள் ஆணைகளை ஏற்கனவே பிறப்பித்துள்ளனர். ஆனால் அந்த ஆணைகளை அவமதிக்கும் வகையில் மத வழிபாடுகளை அரசு அலுவலகங்களில் தொடர்ந்து நடத்துகிறார்கள்.

எனவே தமிழ்நாடு அரசின் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கும், சமூக அமைதிக்கும் எதிரான ஆயுத பூஜை வழிபாடுகள் அரசு அலுவலகங்களில் நடந்திடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி 23.9.2022 அன்று காலை 11 மணி அளவில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர், கோவை மாநகர காவல் ஆணையர், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

கலந்து கொண்ட தோழர்கள்: பன்னீர்செல்வம், நிர்மல் குமார், கிருஷ்ணன், மாதவன், இயல், சிவராசு, ஸ்டாலின் ராஜா, சதீஷ் கலந்து கொண்டனர்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It