இட ஒதுக்கீடு என்பதற்கு மாற்றுப் பெயர் சமூக சமத்துவம். அனைவருக்கும் சமத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதே இதன் அடிப்படையான ஒரு கொள்கை. உரிமைகளை, வேலை வாய்ப்புகளை அரசியலை உழைப்பை பகிர்ந்து கொள்ள வேண்டும். 10% இட ஒதுக்கீட்டு ஆதரவாளர்கள் அதை எதிர்ப்பவர்களைப் பார்த்து ‘பிராமண வெறுப்பு அரசியல்’ பேசுவதாக இப்போது புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து சில கேள்விகளை நாம் கேட்க வேண்டியிருக்கிறது.

பிராமணர் என்று நீங்கள் சொல்கிற சொல் என்பதே சூத்திரர் என்று ஏனைய மக்களை வெறுக்கின்ற இழிவு படுத்துகின்ற சொல் என்பது உங்களுக்குப் புரியவில்லையா? பிராமணர் என்று ஒரு சாதி இருக்கிறதா? சர்மா இருக்கிறார், சாஸ்திரி இருக்கிறார், அய்யங்கார் இருக்கிறார் ஆனால் பிராமணர் என்று ஒரு சாதி இருக்கிறதா? இந்த சர்மா, சாஸ்திரி, அய்யங்கார் இவர்களையெல்லாம் சேர்த்து வர்ண அடிப்படையில் சூட்டப் பட்டது தான் பிராமணர். ஆனால் வர்ணம் என்ற அடிப்படையில் பிராமணர் என்று நீங்கள் உங்களை கூறிக் கொள்ளுகிறீர்கள் என்று சொன்னால் ஏனைய சாதி மக்களையும் வர்ண அடிப்படையிலேயே சூத்திரர்கள் என்று நீங்கள் அங்கீகரிப்பதாகவே அர்த்தம்.

சூத்திரர்கள் என்றால் பிராமணர் களுடைய அடிமைகள், பிராமணர்களின் இரு பிறப்பாளர்களுக்கு சேவகம் செய்யக் கூடியவர்கள், விலைக்கு வாங்கப்பட்டவர்கள், பிராமணரின் வைப்பாட்டி மக்கள் என்று மனுதர்மம் கூறியிருக்கிறதா? இல்லையா? உழைக்கின்ற மக்களை இப்படி சூத்திரர்கள் என்று இழிவுபடுத்தி விட்டு தங்களைப் பிராமணர் என்று சொல்லிக் கொண்டு விட்டு, பிராமணர் என்பதையே தங்கள் வர்ண அடையாளம் ஆக்கிக் கொண்டவர்கள் மற்றவர்களைப் பார்த்து பிராமண வெறுப்பு அரசியல் என்று கூறுவதற்கு என்ன நியாயம் இருக்கிறது? என்ற கேள்விக்கு முதலில் அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

மற்றொரு கேள்வியை கேட்க வேண்டும். ஒரு சமூகத்தின் அடிப்படை தேவை என்ன? மூன்று தேவைகள் இருக்கின்றன. ஒன்று இருப்பதற்கு வீடு, உடுப்பதற்கு உடை, உண்பதற்கு உணவு. இந்த வீடு, உணவு, உடை மூன்று துறைகளிலும் உற்பத்திகளில் எந்த பிராமணராவது ஈடுபட்டு இருக்கிறார்களா ஏன்? ஒரு பிராமணர் கூட வயலில், வேத காலத்தில் இருந்து இந்த நாள் வரை இறங்கி நாற்று நட முன் வரவில்லை? ஏன் எந்த ஒரு பிராமணரும் கட்டுமானத் தொழிலில் உழைப்புத் தொழிலில் ஈடுபடுவதற்கு முன் வரவில்லை? எந்த ஒரு பிராமணரும் ஏன் உடைகளை, ஆடைகளை தயாரிக்கும் அந்த உற்பத்தி தொழிலில் தொழிலாளிகளாக, உழைப்பாளிகளாக இன்று வரை முன் வரவில்லை?

வேத காலத்திற்குப் பிறகு பல்லாயிரம் ஆண்டு காலத்திற்கு பிறகும் பிராமணியம், பிராமணர் தன்னுடைய அடையாளத்தை அப்படியே நிலை நிறுத்திக்கொண்டு உழைக்கின்ற மக்களைப் பார்த்து அவர்கள் சமூக ஜனநாயகத்தை கூறுகின்ற போது நீங்கள் பிராமண வெறுப்பு அரசியலைப் பேசுகிறீர்கள் என்றால் மகா மகா மோசடி, பித்தலாட்டம்.

Pin It