பிரிட்டிஷ் ஆட்சி - காங்கிரஸ் ஆட்சி காலங் களில் தமிழர் உரிமைகள் பறிக்கப்பட்ட வரலாறுகளைத் தொடர்ந்து இத்தொடரில் - அதைவிட மோசமாக பா.ஜ.க. ஆட்சியின் ‘இருண்டகால’ வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போம்.

amit shah 422இந்தித் திணிப்பு (3.5.2017 ‘ஆனந்த விகடன்’ தீட்டிய தலையங்கம்)

2011ஆம் ஆண்டு நாடாளுமன்ற நிலைக்குழு சமர்ப்பித்த இந்தி மொழி தொடர்பான பரிந்துரைகளுக்குக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இப்போது ஒப்புதல் அளித்துள்ளார். இந்தி பேசாத மாநிலங்களின் மீது இடியைப்போல் இறங்கியிருக்கும் இந்தப் பரிந்துரைகள் கீழ்வருமாறு...

1. ஜனாதிபதி, பிரதமர், மத்திய மந்திரிகள் உள்ளிட்ட தலைவர்கள், குறிப்பாக யாருக்கெல்லாம் இந்தி தெரியுமோ, அவர்கள் இனி நாடாளுமன்றத்திலும் பொது விழாக்களிலும் இந்தியில்தான் பேச வேண்டும்

2. விமானங்களில் இந்தியில்தான் அறிவிப்புகளை வெளியிட வேண்டும். அதைத் தொடர்ந்து, ஆங்கிலத்தில் அறிவிப்புகள் வெளியிடப்பட வேண்டும்.

3. இனி, விமானங்களில் வழங்கப்படுகிற செய்தித் தாள்கள் மற்றும் பத்திரிகைகள் 50 சதவிகிதம் இந்தி மொழியில் இருக்க வேண்டும். ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் டிக்கெட்டுகளிலும் இந்தி பெருமளவு பயன்படுத்தப்பட வேண்டும்.

4. மத்திய அரசின் டேராடூன் ஐ.ஏ.எஸ். பயிற்சி நிலையத்தில் அனைத்துப் பயிற்சி ஏடுகளும் இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

5. பள்ளிக் கல்வித்திட்டத்தில் இந்தி கட்டாயப் பாடமாகச் சேர்க்கப்படவேண்டும். முதல் கட்டமாக சி.பி.எஸ்.இ மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கூடங்களில் 10ஆம் வகுப்பு வரையில் இந்தி கட்டாயப் பாடமாக வைக்கப்பட வேண்டும். இது தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி, கொள்கை வகுக்க வேண்டும்.

6 இந்தி மொழி பேசாத மாநிலங்களில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில், தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளில் இந்தியில் பதில் அளிப்பதை விருப்புரிமைத் தேர்வாகக் கொள்ள வேண்டும்.

இந்தப் பரிந்துரைகள் அனைத்தும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது காங்கிரஸ் ஆட்சியின் போது அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக் குழுவால் முன் மொழியப்பட்டவை. இந்த நிலைக் குழுவின் தலைவரே, தமிழகத்தைச் சேர்ந்த, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்தான். இந்தியைத் திணிப்பதற்கான காங்கிரஸ் பரிந்துரைகளை பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில், `இந்தி'யாவின் ஜனாதிபதி ஏற்றுக் கொண்டு ஒப்புதல் வழங்கியிருக்கிறார் என்பதுதான் உண்மை. பல்வேறு மொழிகள், தேசிய இனங்கள், பண்பாடுகளை அழித்து, இந்தி என்ற ஒற்றை மொழியை அனைத்து மட்டங்களிலும் கொண்டுவரும் நடவடிக்கைதான் இது.

“காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்” என்றார் மோடி. ஆனால், இதையெல்லாம் பார்க்கும் போது, இந்தி தவிர்த்த பிறமொழிகள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதுதான் நோக்கம் போலத் தெரிகிறது. நாம் அனைவரும் ‘இந்தியர்’ என்று இதுவரை சொல்லி வந்ததன் உண்மையான அர்த்தம், இனி `இந்தி'யர் என்பது தானோ?

இனி, ஆனந்த விகடன் தலையங்கமாவது தமிழில் இருக்கலாமா, அல்லது இதுவும் இந்தியில்தான் இருக்க வேண்டுமா? - என்று கேட்கிறது, ‘ஆனந்த விகடன்’.

தமிழ்நாட்டில் 1967இல் கொண்டு வரப்பட்ட இருமொழிக் கொள்கையை ஒழித்து இந்தியைத் திணிக்கும் முயற்சிகள் அனைத்துத் துறைகளிலும் அரங்கேறி வருகின்றன.

1963இல் இந்திய ஆட்சி மொழி சட்டம் உருவானது. அதற்கான விதிகள் 1976இல் தான் வகுக்கப்பட்டன. அதில் இந்தியாவின் ஆட்சி மொழிக் கொள்கை தமிழ்நாடு நீங்கலாக அமுல்படுத்தப்படும் என்றே குறிப்பிடுகிறது. கடைசியாகக் கடந்த 14.5.2011லும் இது உறுதிப்படுத்தப்பட்டது. அதையும் மீறியே இப்போது இந்தி திணிக்கப்படுகிறது.

• தேசியக் கல்விக் கொள்கை என்ற கல்வித் திட்டத்தை ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி உருவாக்கி மாநிலங்களின் மீது திணித்தபோது மும்மொழித் திட்டத்தை வலியுறுத்தியது. உடனடியாக தமிழ் நாட்டிலிருந்து கண்டனக் குரல்கள் வலிமையாக எழுந்தன. அடுத்த இரு நாட்களிலேயே அதைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது ஒன்றிய ஆட்சி.

• உ.பி.யில் அகில இந்திய ஆட்சி மொழிக் கூட்டத்தில் (12.11.2021) பங்கேற்றுப் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “நான் ஒரு குஜராத்தி; ஆனால் என் தாய்மொழியைவிட இந்தி மொழியைத்தான் நேசிக்கிறேன் என்று கூறிய தோடு, உள்துறை அமைச்சகத்தில் ஒரு கோப்பு கூட ஆங்கிலத்தில் எழுதப்படுவது இல்லை என்பதை பெருமையாகக் கூறிக் கொள்கிறேன். நாங்கள் இந்தியை ஆட்சி மொழியாக முற்றிலுமாய் பின்பற்றி வருகிறோம். இந்தியா சுதந்திரத்தின் நூற்றாண்டைக் கொண்டாடும் போது உள்நாட்டு மொழிகளும் ஆட்சி மொழியாக இந்தி வர வேண்டும்; அப்போது ஒரு அயல் மொழியினர் உதவியை நாம் நாடக் கூடாது. அந்த அளவுக்கு இந்தி வலிமை பெற வேண்டும் என்ற உறுதி மொழியை இந்தி மொழி ஆர்வலர்கள் இந்த ஆண்டு எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று பேசியிருக்கிறார். இந்தியே ஆட்சி மொழி என்ற கொள்கை தமிழ்நாட்டில் மட்டும் அமுல்படுத்தப்படாது என்று இப்போதுள்ள சட்டபூர்வமான நிலையை காற்றில் பறக்கவிட ஒன்றிய ஆட்சி தயாராகி விட்டது.

• சென்னை சரக்கு மற்றும் சேவை வரி உதவி ஆணையரான பா. பாலமுருகன் என்பவர்தான் இப்படியோர் அதிரடி குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார். இது குறித்து துறை சார்ந்த மேலதிகாரிகளுக்கு பாலமுருகன் எழுதியிருக்கும் கடிதத்தில்,

“நான் சென்னை (புறம்) சரக்கு மற்றும் சேவை வரி ஆணையர் அலுவலகத்தின் இந்திப் பிரிவில் பணியாற்றி வருகிறேன். இந்தி மொழியைப் பரப்பும் இந்தப் பணியில் எனக்குத் துளியும் விருப்பம் இல்லை. எனவே, இந்தி எழுதப் படிக்கத் தெரிந்த, அந்தப் பிரிவில் பணியாற்றுவதற்கு விருப்பமுள்ளவர்களைப் பணி நியமனம் செய்ய உத்தரவிடும்படி மத்திய வரி மற்றும் சுங்கவரி வாரியத்தின் தலைவர் அவர்களைத் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

• 1976இல் அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலங் களை மூன்று வகைகளாகப் பிரித்தார்கள். அதாவது, இந்தி பேசும் மாநிலங்கள், இந்தியைக் கல்வி மொழியாக மட்டும் வைத்திருக்கும் மாநிலங்கள், இந்தியைக் கல்வி மொழியாக அங்கீகரிக்காத மாநிலங்கள் என அவை பிரிக்கப் பட்டிருக்கின்றன. இதன்படி ‘தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் அல்லது ஆங்கிலத்தை அலுவல் மொழியாக வைத்துக் கொள்ளலாம்; இந்தி மொழியை அலுவல் மொழியாகப் பயன்படுத்தக் கூடாது’ என்று 1976ஆம் ஆண்டிலேயே அலுவல் மொழிச் சட்டத்தில் திருத்தம் செய்துவிட்டார்கள்.

• சட்டம் இப்படியிருக்கும்போது, தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்களில், இந்தியைப் பரப்புவதற்கென்று தனிப்பிரிவு வைத்திருப்பதே தவறானது. அடுத்து, இந்தி மொழியே தெரியாத ஒருவரை, இந்தி பரப்பும் குழுவில் நியமிப்பதற்கான நோக்கம் என்ன?

• தமிழ்நாட்டிலுள்ள எல்.ஐ.சி., பெல், ஏ.ஜி.எஸ் அலுவலகம் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் இந்தி மொழி திணிக்கப்படுவதை எதிர்த்து ஏற்கெனவே ஊழியர்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

• 2014இல் ராணிப்பேட்டை பெல் தொழிற் சாலையில் ஓர் அதிகாரி வழக்கத்துக்கு மாறாக வேண்டுமென்றே இந்தி மொழியிலான சுற்றறிக்கையை தொழிலாளர்களுக்கு அனுப்பி வைத்தார். அதிகாரியின் இந்த நடவடிக்கைக்கு எதிராகப் போராடிய தொழிலாளர்களும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், இந்தி மொழியில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கைக்குத் தமிழ் மொழியிலேயே பதில்களைத் தயார் செய்து அனுப்பிவைத்தனர்

வங்கித் துறைகளில்...

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) என்பது நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஓர் அரசு நிறுவனமாகும். 2014ஆம் ஆண்டிற்கு பிறகு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வேலைக்கு சேருபவர்களுக்கான ஆரம்ப தேர்வுகளை நடத்தியது. 2019ஆம் ஆண்டில் கிராமப்புற மற்றும் பிராந்திய வங்கிகள் உட்பட தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பணியாளர்களுக்கான ஆரம்பத் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என்று IBPS அறிவித்தது.

ஆட்சேர்ப்புக் கொள்கை மாற்றப்பட்டதன் காரணமாக உள்ளூர் பணியாளர்கள் 90% பேர் வேலை வாய்ப்பை இழக்கின்றனர். மேலும், இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை இழக்கிறார்கள்; அந்தந்த மாநிலங்களின் தாய்மொழி மட்டுமே தெரிந்த வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். வங்கியில் பணம் போடுவதற்கும் எடுப்பதற்கும் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். வாடிக்கையாளர்களை இந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

இதற்கு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆளும் கட்சிகள், எதிர்க்கட்சிகள் உள்ளிட்டு பலரும் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மாநில மொழிகளில் வங்கிப் பணியாளர் தேர்வுகள் நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது.

அஞ்சல் அலுவலக பண விடைகள் (Money Order) சிறு சேமிப்பு படிவங்கள் (Small Savings Forms) இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே இணைய வழியில் கிடைக்கின்றன; அலைபேசிகளில் கூட சாதாரண மக்கள் தமிழ் எழுத்துக்களை தரவிறக்கம் செய்ய தமிழில் வாய்ப்பில்லை. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், தலைமை அஞ்சல் நிலைய பொது மேலாளருக்கு கடிதம் எழுதி நேரில் சந்தித்து வற்புறுத்திய பிறகு தமிழ் இடம் பெறச் செய்யப்பட்டது.

• தமிழ்நாட்டின் அஞ்சல் துறைகளில் தமிழே தெரியாத வடநாட்டார்கள், தமிழ் தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றதாக மோசடியாக தமிழ்நாட்டில் வேலை வாங்கிய மோசடி மத்திய தேர்வாணையத்தில் நடந்தது. மோசடி அம்பலமான பிறகு, தேர்வுகள் இரத்து செய்யப்பட்டன.

• மத்திய அரசால் நடத்தப்படும் தொழில்நுட்ப உயர் கல்வி நிறுவனங்களுக்கான அய்.அய்.டி. கூட்டு நுழைவுத் தேர்வுகளை (ஜே.இ.இ.) தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய அரசு மறுக்கிறது. ஆங்கிலம், இந்தி மொழிகளில் நடத்தப்படும் தேர்வுகள், மாநில மொழியான குஜராத்துக்கு மட்டும் சிறப்புரிமை வழங்கப்பட்டு, குஜராத் மொழியில் நடத்தப்படுகிறது.

• 145க்கும் மேற்பட்ட ஒன்றிய நிறுவனங்களுக்கு பல கட்ட தேர்வுகளை நடத்தி ஊழியர்களை தேர்வு செய்யும் ஒன்றிய அரசு தேர்வாணையம், மண்டலங்கள் வாரியாக தேர்வு நடத்தும் முறையை ஒழித்து, அகில இந்திய தேர்வுகளாக மாற்றியதால் இந்தி பேசும் வடநாட்டுக்காரர்கள், ஒன்றிய அரசுப் பணிகளை பெருமளவில் கைப்பற்றி வருகிறார்கள்.

(தொடரும்)

- விடுதலை இராசேந்திரன்

Pin It