பல ஆண்டுகளுக்கு முன்பு பிறருடைய வீட்டுத் தோட்டம் மற்றும் நிலத்திற்கு அடையாளம் தெரியாமல், வழி புரியாமல் சென்றுவிடும் ஆடு, மாடுகளைப் பிடித்து கட்டி, அடைத்து வைப்பார்கள். அவ்வாறு அடைத்து வைக்க பெரும்பாலான ஊர்களில் ‘பட்டி' என்றொரு இடம் இருந்தது. காலப்போக்கில் ஆடு, மாடுகளைப் பணயமாக அடைத்து வைப்பது தவறு என சமூகம் உணர்ந்து பட்டிகள் ஒழிக்கப்பட்டு விட்டன. ஆனால் இன்றும் ஆடு, மாடு போன்ற விலங்கினங்களுக்கும் கீழானவர்களாக விழுப்புரம், கடலூர் போன்ற பகுதிகளில் பழங்குடி இருளர்கள் நடத்தப்படுகிறார்கள். சாதி இந்து ஒருவரின் இடத்தில் சாப்பிட்டதற்காக அண்ணாமலை என்ற இருளரை கட்டி வைத்து, அடித்து துன்புறுத்திய கொடுமை அண்மையில் நிகழ்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட அண்ணாமலை பேசுகிறார் : "நான் பழங்குடி இருளர் சார். விழுப்புரம் பக்கத்துல இருக்கிற வளவனூர்ல எங்க இருளர் குடியிருப்பில இருக்கிறேன். என்னோட சொந்தக்காரர் முனியப்பன். அவர் ஊருக்கு வரனும்னு தொடர்ந்து என்னை கூப்பிட்டார். அதனால போன மாசம் கடைசில அவரோட ஊரான முட்டத்தூர் பக்கத்துல உள்ள நகர் கிராமத்திற்குப் போனேன். ஒரு வாரம் விருந்தாளியா அவர் வீட்ல இருந்தேன். இந்த மாசம் முதல் சனிக்கிழமை, பக்கத்து ஊரான கல்லாலிப்பட்டுல கோயில் திருவிழாவில நாடகம் போட்டிருந்தாங்க. அன்னிக்கு ராத்திரி நான், முனியப்பன், அதே ஊரைச் சேர்ந்த எங்க சொந்தக்காரங்களான கார்த்தி, முருகன் எல்லாம் நாடகம் பார்க்கறதுக்காக, சாப்பாடு கட்டிக்கிட்டு கல்லாலிப்பட்டு கிளம்பினோம். எங்க கூட செஞ்சியை சேர்ந்த நரிக்குறவர் தனிக்கொடியும் வந்தார்.
போற வழியில பூதூர் கிராமத்துல ஒரு மோட்டார் கிணத்துகிட்ட, நாங்க எடுத்துக்கிட்டுப் போயிருந்த சாப்பாட்டை நாங்க அய்ந்து பேரும் சாப்பிட்டு, கிளம்பிப் போனோம். கொஞ்சம் தூரம் போனதும்தான் தன்னோட மருந்து பையை சாப்பிட்ட இடத்துல வச்சிட்டு வந்துட்டேன்னு தனிக்கொடி சொன்னார். அதனால மத்த மூணு பேரையும் போயிகிட்டே இருங்கன்னு சொல்லிட்டு, நானும் கார்த்தியும் மருந்து பையை எடுக்க திரும்பவும் மோட்டார் கிணத்துகிட்ட வந்தோம். அப்ப ராத்திரி மணி 10 இருக்கும். நாங்க சாப்பிட்ட இடத்தில பை இல்ல. அதனால, அங்க தண்ணீர் பாய்ச்ச வந்திருந்த நிலத்துக்காரர் கலியனிடம் மருந்து பையை கேட்டோம். அதுவரை அமைதியாக இருந்த அவர், நாங்க கேட்டதும் பக்கத்துல தண்ணீர் பாய்ச்சிகிட்டு இருந்த நொண்டிவீட்டு கலியன் என்பவரை அழைத்தார். அவர் வந்ததும் ரெண்டு பேரும் சேர்ந்து, "இருளப் பசங்களுக்கு இங்க என்னடா வேலை. எங்க வாழை இலையை எப்படிடா அறுத்து சாப்பிடலாம். நீங்க சாப்பிடறதுக்காக நாங்க இங்க எல்லாம் வச்சிருக்கமா'' என்று திட்டிக் கொண்டே என்னுடன் இருந்த கார்த்தியை அடித்தனர். கலியன், "இங்க இருந்த தார் பாயை எடுத்துக்கிட்டு, சாப்பிட்டதா நாடகமா ஆடறீங்க'' என்று எங்கள் மீது பொய் சுமத்தி மீண்டும் எங்களை அடித்தார்கள். அப்போது, கார்த்தி தனது சித்தப்பா முனியப்பனை அழைச்சிட்டு வர்ரேன்னு சொல்லிட்டுப் போனான்.
அவன் போனதும், ரெண்டு கலியனும் சேர்ந்து என்னை அவங்க ஊருக்குள்ள இழுத்துக்கிட்டு போயி, ‘ஒரு திருடன பிடிச்சிட்டோம். இன்னும் 4 பேரு ஓடிட்டானுங்க... எல்லாரும் வாங்க' என்று கத்தினார்கள். தூங்கிட்டு இருந்த பலரும் சுமார் 50–க்கும் அதிகமான பேர் கூடிட்டாங்க. நான் திருடல. விருந்தாளியா வந்திருக்கேன். சாப்பிட்டோம். மறந்து வச்சிட்டுப் போன நரிக்குறவனோட மருந்து பைய எடுக்கத்தான் வந்தோம்னு எவ்வளவோ சொன்னேன். யாரும் காதுல வாங்கல. ரெண்டு கலியன், ஒருத்தரோட மகன், இன்னும் ஒரு பத்து பேர் இருக்கும் எல்லாம் சேர்ந்து என்னை கையால் அடித்து, காலால் மிதித்து தாக்கினார்கள். தொடர்ந்து நான் கட்டியிருந்த கைலிய அவுத்து, என்னோட ரெண்டு கையையும் பின்னாடி வச்சி கட்டினார்கள். அதோட விடாம ஒரு மரக்கழிய எடுத்து கட்டியிருந்த கைகளுக்கும், என்னோட காலுக்கும் நடுவுல விட்டு கீழே தள்ளினார்கள். என்னால் எழுந்து நிற்க முடியாமல் போனது. கொஞ்ச நேரத்துல ஜனங்க எல்லாம் அவங்க வீட்டுக்குப் போயிட்டாங்க. ஆனா அந்த 10 பேர் மட்டும் சுத்தி நின்னுகிட்டு ராத்திரி பூரா என்னை விட்டு விட்டு அடிச்சிக்கிட்டே இருந்தாங்க.
அடி தாங்க முடியாம அந்த ராத்திரியில கண்ணசந்து மயங்கினா, அப்படியே என்னை தரையிலேயே தர தரன்னு இழுத்துகிட்டுப் போயி பக்கத்துல இருந்த வாய்க்கால் தண்ணியில அப்படியே என்னோட மூஞ்ச வைச்சி அழுத்தி, இழுத்துகிட்டு வந்து, மயக்கம் தெளிய வச்சி திரும்பவும் அடித்தார்கள். ராத்திரிபூரா இதே மாதிரியே என்னை செய்தார்கள். காலையில விடிஞ்சதும், ராத்திரி என்னுடன் பையை எடுக்க வந்த கார்த்தி, அவனோட அம்மாவும், என்னோட பெரியம்மா மகளுமான சாந்தா, முனியப்பன், அவரோட மனைவி நீலாவதின்னு நாலு பேரும் என்னை கட்டிப் போட்டிருந்த இடத்துக்கு வந்தாங்க.''
இதன் பிறகு நிகழ்ந்தவை குறித்து, ஏற்கனவே செங்கற்சூளையில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சாந்தா நம்மிடம் கூறினார் : "எனக்கு சொந்த ஊர் பண்ருட்டி பக்கத்துல உள்ள கொரத்தி கிராமம். ஆனா, அங்க பொழைக்கறதுக்கு சரியான வேலை எதுவும் தொடர்ந்து கிடைக்கல. அதனால இப்ப நான் குடும்பத்தோட வளவனூர்ல இருக்கேன். என்னோட மகன் கார்த்தி, எங்க சொந்தக்காரங்க இருக்கிற நகர் கிராமத்திற்குப் போறேன்னு போயிருந்தான். ஒரு நாள் பாதி ராத்திரியில என் மகன் கார்த்தி, போன் பண்ணி, பூதூர் ஆளுங்க நானும், அண்ணாமலை மாமாவும் திருடிட்டோம்னு அடிச்சிட்டாங்க. மாமாவை இழுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. எனக்கு பயமா இருக்கும்மா, முன்னாடி செஞ்ச மாதிரி கட்டிவச்சி சூடு போடுவாங்களோன்னு பயமா இருக்கும்மா, நீ வாம்மா என்றான். நானும் ரொம்ப பயந்து, அதிர்ச்சியானேன்.
இப்பதான் சூளைகாரனுங்க பிரச்சனை முடிஞ்சு அமைதியா இருக்கோம். திரும்பவும் கேஸ், சித்தரவதைன்னா எப்படி தாங்கறதுன்னே புரியல. 2007 ஆம் ஆண்டு நாங்க குடும்பத்தோட, சொந்தக்காரங்க எல்லாம் சேர்ந்து காஞ்சிபுரம், செல்லம்பேட்டை செங்கல் சூளையில வேலை செஞ்சோம். கொத்தடிமையா இருந்தோம். தாங்க முடியல. ஆனா முன் பணம் வாங்கிட்டோம். வேலையை முடிச்சிடனும்னு இருந்தோம். அப்பதான் சூளையில் பணமும், நகையும் காணாம போச்சு. எங்கள சந்தேகப்பட்டாங்க. நாங்க அந்த மாதிரி ஆளுங்க இல்லேன்னு எவ்வளவோ சொன்னோம். கேட்கல. என்னோட மகன், மருமகனை கட்டிவச்சி அடிச்சாங்க. கால்ல சூடு போட்டாங்க. கண்ணுமுன்னாடி அம்மா, நான் இந்தக் கொடுமையை எல்லாம் பார்த்தேன்.
பொம்பளைங்கன்னு கூட பாக்காம என்ன, என்னோட மகள எல்லாம் சொல்ல முடியாத அளவுக்கு சித்திரவதை செஞ்சாங்க. 5 வயசு பேரன தூக்கி கிடாசி கையை உடைச்சாங்க. அப்புறம், நகையும் பணமும் கிடைச்சிடுச்சி. நீங்க பாட்டுக்கு வேலையை செய்ங்க என்றார்கள். அவங்க ஆளுங்களே எடுத்திருந்தாங்க. நம்மள சந்தேகப்பட்டுட்டாங்களேன்ற வேதனை ஒருபுறம், மகனையும், மருமகனையும் செஞ்ச சித்திரவதை ஒருபுறம். நடந்த கொடுமையை எல்லாம் நெனச்சிப் பார்க்கக் கூட பயமா இருக்கு. அந்த மாதிரி திரும்பவும் நடந்துடுமோன்னு பயந்தேன்.
விடியறதுக்கு முன்னாடியே கிளம்பி அந்த ஊருக்குப் போனேன். அங்க போனதும், நான் அழைச்சிக்கிட்டு முனியப்பனையும், அண்ணாமலைகூட உட்கார வச்சிட்டாங்க. எனக்கு திக்குன்னு ஆயிடுச்சி. நானும் பயந்துட்டேன். இருந்தாலும், ஊர்க்காரர்களிடம் நடந்ததைச் சொல்லி, நாங்கள் அப்படிப்பட்ட குடும்பம் கிடையாது, எங்களப் பத்தி உங்களுக்கு தெரியாதா, தெரிஞ்சும் ஏன் இந்த மாதிரி செய்கிறீர்கள், விட்டுவிடுங்கள் என்று எவ்வளவோ கெஞ்சினேன். அதுக்கு ரெண்டு கலியன்களும் ‘இவனுங்கள விட முடியாது. இவனுங்ககூட வந்த இன்னும் மூணுபேரையும் அழைச்சிகிட்டு வா. ஆள் வச்சி திருடிறியா நீ' என்று என்னையும் சேர்த்துப் பேசினார்கள். மாற்றி, மாற்றி, கெஞ்சு அழுது போராடிக் கொண்டிருந்தேன், எங்களை விட்டு விடுமாறு.
அதுக்கப்புறம் சுமார் 11 மணி இருக்கும். முன்னாள் கவுன்சிலர் மணி அங்க வந்தார். அவரிடமும் கெஞ்சி கூத்தாடினேன். அதன் பிறகு அவர் கூறியதன் பேரில் வெள்ளைப் பேப்பரில் அண்ணாமலையிடம் கையெழுத்தும், முனியப்பனிடம் கைரேகையும் வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தார்கள். சாயங்காலத்துக்குள்ள மத்த மூணு பேரையும் கொண்டு வரணும். இல்லன்னா போலிசுல புகார் கொடுப்போம்னு மிரட்டினாங்க.
ராத்திரி பூரா அடிபட்டதுல அண்ணாமலைக்கு உடம்புக்கு முடியாம இருந்தது. அதனால அவர செஞ்சி அரசாங்க ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். அதுக்கப்புறம் எனக்கு இன்னொரு பயம் வந்துச்சி. உளுந்தூர்பேட்டை பக்கத்துல திருடு போய், ஆள் கிடைக்காத எல்லா கேசுலயும் எங்க இருளர் ஆளுங்கள போலிஸ் புடிச்சிப் போட்டுடுது. 6 மாசம் ஆயும் வெளியில வரமுடியாமல் இன்னும் ஜெயில்லதான் இருக்காங்க. அந்த மாதிரி இதையும் போட்டுட்டா என்னா செய்றதுன்னு பயந்துட்டேன். பொய் கேசுலு எங்க ஆளுங்க உள்ள போகாம இருக்கணும்னா, நாங்க அவங்க பேர்ல புகார் கொடுக்கணும்னு முடிவெடுத்தோம். அதனால எங்க சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாணிகிட்ட சொல்லி புகார் எழுதி வாங்கிகிட்டு பெரியதச்சூர் காவல் நிலையத்துல கொடுத்தோம்'' என்று கூறினார்.
புகார் கொடுத்த பின்பு காவல் நிலையத்திலே ஊர்க்காரர்களால் மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாக நேர்ந்தது குறித்து அண்ணாமலை நம்மிடம், "2 ஆம் தேதி ராத்திரி முழுக்க என்னைக் கட்டி வச்சி அடிச்சாங்க. 3 ஆம் தேதி என்னோட பெரியம்மா மகள் சாந்தா ஊர்க்காரங்ககிட்ட பேசி என்னை அழைச்சிகிட்டுப்போய் ஆஸ்பத்திரில சேர்த்தாங்க. நடந்தத எங்க சங்கத்துல சொன்னோம். சார் புகார் எழுதி கொடுத்தாரு. வாங்கிட்டு அன்னிக்கு ராத்திரி 9 மணிக்கு பெரியதச்சூர் போலிஸ் ஸ்டேஷன்ல கொடுத்தோம். எங்கூட முனியப்பன், கார்த்தி, முருகன், சாந்தா எல்லாம் துணைக்கு வந்தாங்க.
உதவி ஆய்வாளர் எங்களிடம் விசாரித்தார். நாங்கள் நடந்ததைச் சொன்னோம். பூதூரில் எங்களைத் தாக்கிய கலியன், நொண்டி வீட்டுக் கலியன், முன்னாள் கவுன்சிலர் மணி, தி.மு.க. பிரமுகர் மணி எல்லாம் ராத்திரி 10.30 மணி இருக்கும், அப்ப போலிஸ் ஸ்டேஷன் வந்தாங்க. நாங்க தேடிக்கிட்டு கிணத்துகிட்ட போன அந்த நரிக்குறவர் தனிக்கொடியோட பையை கலியன் போலிசாரிடம் ஒப்படைத்தார். அந்த நாலு பேரும் எங்களை வெளிய கூப்பிட்டு புகார வாபஸ் வாங்குன்னு சொல்லி மிரட்டினாங்க. நாங்க மறுத்துட்டோம். அப்புறம் ராத்திரி 1 மணிக்கு உதவி ஆய்வாளர் எங்களை கூப்பிட்டு காலையில் 8 மணிக்கு வரச் சொல்லி அனுப்பினார். பூதூர்ல இருந்து வந்திருந்த கலியன் உள்ளிட்ட நாலுபேரும் போலிஸ் ஸ்டேஷன்லேயே இருந்தாங்க.
மறுநாள் காலையில 8 மணிக்கு நாங்க போலிஸ் ஸ்டேஷன் போனோம். என்னை அடிச்சி சித்திரவதை செஞ்ச ரெண்டு கலியன்களும் இல்ல. நாங்க அங்கேயே வெளியில இருந்தோம். ஒரு 9.30 மணி இருக்கும். அப்ப பூதூர்காரங்க சுமார் 50 ஆளுங்களுக்கு மேல இருக்கும். திபுதிபுன்னு போலிஸ் ஸ்டேஷனுக்குள்ள போனாங்க. எல்லாம் டூவீலர், குட்டியானை, சைக்கிள்னு புடிச்சி வந்திருந்தாங்க. உள்ள போன எல்லாரும் கொஞ்ச நேரத்துல வெளியில வந்தாங்க. நேரா வந்து கூட இருந்த முனியப்பனை மிரட்டினாங்க. ‘நீ இனிமே ஊர்ல இருக்கணுமா வேணாமா. ஊர்ல தொடர்ந்து இருக் கனும்னா கேசை வாபஸ் வாங்கு. நீ உன் இஷ்டத்துக்கு இருந்தா. நாங்க எங்க இஷ்டத்துக்கு செய்வோம்' என்று முன்னாள் கவுன்சிலர் மணி, முனியப்பனை அச்சுறுத்தினார். நாங்கள் புகாரை வாபஸ் வாங்க மறுத்துவிட்டோம். அவர்கள் சென்ற பின்பு பிற்பகல் 3 மணியளவில், எங்களுக்கு முதல் தகவல் அறிக்கையின் நகலைத் தந்தார்கள். இரவு நாங்கள் செல்லும்போது காவல் நிலை யத்தில் இருந்த குற்றவாளிகள், காலையில ஊர்க் காரங்க 50 பேரை அழைச்சிகிட்டு வந்து, மிரட்டிட்டு ஊர்க்காரங்களோட போறாங்க. போலிஸ் அவுங்கள எதுவும் சொல்லாமல் அனுப்பி வச்சிட்டாங்க'' என்றார்.
இச்சம்பவம் குறித்து, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஆலோசகர் மு. கந்தசாமி அவர்களிடம் கேட்டபோது, "ஊருக்கு ஒன்று, இரண்டு அல்லது சில குடும்பங்கள் மட்டுமே வாழ்கிற இருளர்கள், எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருப்பதால், கேட்பதற்கு ஆளில்லாமலும், ஆதரவுக் குரல் இல்லாமலும் இருப்பார்கள். காவல் நிலையம் வந்திருந்த குற்றவாளிகளை கைது செய்யாமல் போலிஸ் அனுப்பி வைத் திருக்கிறது. மேலும், கட்டி வைத்து சித்திரவதை செய்யப்பட்ட இவ்வழக்கில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட வேண்டும்.குற்றவாளிகளை கைது செய்யாத காவல் துறை மீது பிரிவு 4இன் படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது வரை நாட்டில் எங்கும் இந்தப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதே இல்லை. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்றாலே பிரிவு 10 மட்டும்தான் போலிசாருக்கு தெரிகிறது. இவர்கள் மட்டும் அன்று அந்தப் புகாரை தந்திருக்கவில்லை என்றால், அந்த ஊரிலோ அல்லது அந்தக் காவல் நிலையத்திலோ உள்ள அனைத்து திருட்டு வழக்குகளையும் இவர்கள் மீது போட்டிருப்பார்கள். இப்படித்தான் உளுந்தூர்பேட்டை பகுதியில் கண்டுபிடிக்க முடியாத 12 திருட்டு வழக்குகளில், எட்டு இருளர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர் போலிசார். 6 மாதங்களுக்கு மேலாகியும் வெளியில் வர வழியில்லாமல் இன்னும் சிறையில் இருக்கின்றனர் 3 இருளர்கள். போடப்பட்ட பொய் வழக்குகளால் ஊரில் பெயர் கெட்டுப் போனதுடன், உறவினர்கள் மத்தியில் எந்த முகத்துடன் இவர்கள் சொல்ல முடியும். சிறையில் கழித்த காலத்தையும், நீதிமன்றத்திற்கு அலையும் நாட்களையும் போலிசாரால் திருப்பித் தர முடியுமா?'' என்று கூறினார்.
பதில் சொல்லுமா காவல் துறை?
நேர்மையாய் இருப்பது குற்றமா?
விழுப்புரம் வட்டம், கஞ்சனூர் ஊராட்சி மன்ற உறுப்பினராக உள்ளார் பழங்குடி இருளரான முனியம்மா (45). ஊராட்சி மன்றக் கூட்டம் நடத்தாமல் தீர்மானத்திலும், அதிகமான ஆட்கள் வேலை செய்ததாகப் பொய் கணக்கு எழுதியதிலும், முனியம்மாளிடம் கையெழுத்து கேட்டுள்ளார், ஊராட்சி மன்ற எழுத்தர் பக்தவச்சலம். முனியம்மாள் கையெழுத்துப் போட மறுத்துவிட்டார்.
மே 22 அன்று நடைபெற்ற 100 நாள் வேலை உறுதித் திட்டப் பணிகளைப் பார்வையிடச் சென்ற முனியம்மாளிடம் எழுத்தர் பக்தவச்சலம், 23 அன்று சனிக்கிழமையும், 25 அன்று திங்கட் கிழமையும் வேலை கிடையாது என்று கூறினார். அதனால் முனியம்மா சனிக்கிழமை பணியிடத்திற்குச் செல்லவில்லை. திங்கட் கிழமை இருளர் பிள்ளைகளுக்கான சாதிச் சான்று பெறுவது தொடர்பாக விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று விட்டார். ஆனால், முனியம்மாளிடம் பொய் சொன்ன பக்தவச்சலம் திங்கட்கிழமை வேலை நடத்தியுள்ளார். ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் வேலையைச் சோதனையிட முன்னறிவிப்பின்றி சென்றுள்ளனர். சனிக்கிழமை வேலை நடக்காதது குறித்து, தொலைபேசி வழியாகப் புகார் வந்தது என்று கூறி விசாரித்துள்ளனர்.
அதிகாரிகளிடம் அவமானப்பட்டு சிக்கலில் மாட்டிய பக்தவச்சலம், தான் காட்டிய பொய் கணக்கு, பொய்யான தீர்மானம் ஆகியவற்றில் கையெழுத்திடாத முனியம்மாளை பழிவாங்க நினைத்து, முனியம்மாள்தான் அதிகாரிகளுக்கு புகார் கூறி யுள்ளார் என்று அங்கு வேலை செய்து கொண்டிருந்த மக்களிடம் கூறினார். எழுதப் படிக்கத் தெரியாததுடன், அரசு அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் எதுவும் அறிந்திராத நிலையில் முனியம்மாள் மீது கூறப்பட்ட பொய்யான தகவலை நம்பி, மக்கள் முனியம்மாளைத் தேடி அவரது வீட்டிற்குச் சென்று அவரில்லாத நிலையில் வீட்டில் தகராறு செய்துள்ளனர்.
விழுப்புரம் சென்று ஊர் திரும்பிய முனியம்மாளை எழுத்தர் பக்தவச்சலமும், துணைத் தலைவர் ராமலிங்கமும் 50–க்கும் மேற்பட்ட நபர்களுடன் கூடிக்கொண்டு வழியிலேயே மறித்துள்ளனர். வன்னியர்களான துணைத் தலைவர், எழுத்தர் ஆகிய இருவரும், "இவள இழுத்துப் போட்டு உதைங்கடா, இந்த இருளத் தேவிடியாதான் வேலை நடக்கலன்னு புகார் சொல்லியிருப்பா'' என்று அங்கிருந்தவர்களிடம் கூறியுள்ளனர். அப்போது அங்கிருந்த சிலர் தங்களது செருப்பைக் கழட்டி முனியம்மாளை அடித்துள்ளனர். இவருக்கு ஆதரவாக இருந்த நந்தன், சக்தி என்கிற மற்ற இரு உறுப்பினர்களையும் இந்தக் கூட்டம் வழிமறித்து திட்டி, மிரட்டி தாக்க முயன்றுள்ளது.
இருளராய் பிறந்து, நேர்மையாய் இருக்க முயலுவதைத் தவிர வேறெந்த குற்றமும் செய்யாத, முனியம்மாளை அடித்து அவனமானப்படுத்திய சாதி இந்துக்கள் மீது, மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது?