“காங்கிரஸ்”, “தேசீயம்” என்பவைகளின் புரட்டுகள் வெளியாகி தலைவர்கள், தேசபக்தர்கள் என்கின்றவர்களின் சுயநலத்தையும் அயோக் கியத்தனங்களையும் பாமர மக்கள் அறிய நேர்ந்து விட்ட பிறகு வேறு வேஷத்தின் மூலம் வெளியாகலாம் என்று காத்திருந்த பல தலைவர்கள் சைமன் கமிஷன் பகிஷ்காரம் என்கின்ற ஒரு புதிய வேஷம் போட்டுக் கொண்டு வெளியில் தலைநீட்ட முயற்சித்து வந்ததைப்பற்றி பலமுறை எழுதிவிட்டு, கடைசியாக கமிஷன் பகிஷ்காரம் காலித்தனத்தில் முடியும் என்பதையும் எடுத்துக்காட்டியிருந்தோம். அது போலவே சென்னை மீட்டிங் குகளும் வேலை நிறுத்தங்களும் காலித்தனத்திலேயே முடிந்து விட்டது.

periyar with kidநேற்று சென்னையில் நடந்த சம்பவங்களைப் பற்றி சென்னைப் பத்திரிகை யில் உள்ள விஷயங்களை வேறு இடத்தில் பிரசுரித்திருக்கின்றோம். அதைப் பார்த்தால் ஆரம்பமுதல் முடிவுவரை காலித்தனத்திலே முடிந்திருப்பது யாவருக்கும் நன்றாய் விளங்கும். சில்லரைக்கடை வியாபாரிகளை தடி கொண்டு விரட்டி அடித்து மூடச் செய்தும், கடை அடைக்க ஒப்பாதவர்களின் கடைக்குள் நுழைந்து சாமான்களுக்கு சேதம் விளைவித்தும், சாமான்களை கொள்ளை அடித்தும், தொந்திரை செய்தும், வண்டியில் போய்க் கொண்டி ருந்த வழிப்பிரயாணிகளை கல்லெறிந்தும், காரி உமிழ்ந்தும், துர்ப்பாஷைகளால் வைதும், வருத்தியும், மோட்டாரில் போன கனவான்களை அடித்து துரத்தியும், வண்டியை கொளுத்தியும், நியாயஸ் தலங்கள் மீது கற்களை எறிந்தும், பொது ஜனங்களுக்குத் தொல்லைகள் விளைவித்திருப்பதுடன் பலருக்கு உயிர்ச்சேதமும் உண்டாக்கத்தக்க அளவு முயற்சி எடுத்து போலீஸ் அதிகாரிகள் காலிகளின் தொல்லையை அடக்க வேண்டியும், வந்திருப்ப தாகவும் தெரியவருகிறது.

காங்கிரஸ் நாடகத்தில் மீதியான ரூபாய்களை காலிகளுக்கு கண்மூடி வாரி இறைத்து வெறியுண்டாக்கி பாமர மக்களின் மேல் ஏவி விடுவதன் மூலம் ஏற்பட்ட பலன்களே இச்சென்னைக் காலித்தனமாக முடிந்தது என்பதை யாரும் உணராமலிருக்க முடியாது.

முகமதிய சமூகமும், ஆதி இந்து சமூகம் என்று சொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகமும் இக்கமிஷன் பகிஷ்காரத்தில் ஒரு சிறிதும் கலந்து கொள்ளாமல் பகிஷ்காரத்திற்கு சம்மதமற்ற தங்கள் கருத்தையும் முதலில் இருந்தே காட்டி வந்திருக்கின்றார்கள். மற்றும் பொது மக்களில் பலரும் பகிஷ்காரத்தையும் வேலை நிறுத்தத்தையும் கண்டித்து வந்திருக்கின்றார்கள். எனவே பார்ப்பனக் கூட்டமும், படித்துவிட்டு உத்தியோகத்திற்கு அலையும் ஒரு சிறு அல்லாதார் கூட்டமும், பிழைக்க வேறு வழியில்லாமல் அரசியலையே பிழைப்புக்கு மார்க்கமாய் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு சிறு வயிற்றுச் சோற்று தேசபக்த கூட்டமும், கூடிக் கொண்டு சர்க்காரையும் பாமர மக்களையும் ஏமாற்றுவதற்காக செய்த காரியம்தான் இந்தப் புரட்டு என்பதையும் அவ்வப்போது தெரிவித்தும் வந்திருக்கின்றோம்.

இத்தனை ரூபாய் செலவும் இவ்வாறு சுயநலமிகளுடையவும், காலிகளினுடையவும் கூட்டுறவும் சூழ்ச்சியும் தந்திரமும் காலித்தனமும் ஒரு மனிதனையாவது ஒரு கடைக்காரனையாவது இவர்களது காரியத்தை சரி என்று ஒப்புக் கொள்ளச் செய்து தானாகவே வேலை நிறுத்தம் செய்யவோ கடை அடைக்கச் செய்யவோ முடியாமல் போய்விட்டது என்கின்ற விஷயம் இந்த வேலைநிறுத்தத் தோல்வியாலும் அளவுக்கு மீறிய காலித்தனம் செய்ய வேண்டி நேர்ந்ததாலும் நன்றாய் விளங்கிவிட்டது! நன்றாய் விளங்கிவிட்டது!!

இதைப் போல் இதற்கு விரோதமாக எண்ணமுள்ளவர்களும் ஒரு சிறிதாவது முயற்சி எடுத்திருப்பார்களானால் இச்சுயநலமிகளும் காலிகளும் இருந்த இடம் தெரியாமல் ஓடிப்போயிருக்க முடியும். ஆனால் எவரும் முயற்சி எடுத்துக் கொள்ளவில்லை. ஒவ்வொருவரும் ‘நமக்கென்ன’ ‘நமக்கென்ன’ என்று கவலையீனமாகவே இருந்து விட்டார்கள். இம்மாதிரி குணம்தான் நம் இந்திய நாட்டை அடிமையாக்கி ஆங்கில அரசாங்க முறை யை அசுரத்தனமாக்கி தேசத்தையும் மக்களையும் காட்டிக் கொடுத்து வாழும் துரோகிக் கூட்டங்களாகிய பார்ப்பனக் கூட்டத்தையும் வயிறு வளர்ப்பு தேசீயக் கூட்டத்தையும் வாழச் செய்து வருவதுடன் பாமர மக்களையும் தொழிலாளர்களையும் ஏழைகளாக்கி கஞ்சிக்கு வழியில்லாமல் நாட்டை விட்டு கூலிக்கு ஓடச் செய்து வருகின்றது. எனினும் பாமர மக்களுக்கு இது சமயம் சற்று உணர்ச்சி ததும்பியிருப்பது மாத்திரம் நன்றாய்த் தெரிகின்றது. எப்படியெனில் பகிஷ்காரத்துக்கும் கடை அடைப்புக்கும் எதிரிடையாகவும் பகிஷ்காரப் புரட்டை வெளியாக்கவும் ‘குடி அரசு’ என்கின்ற ஒரே ஒரு பத்திரிகைதான் முனைந்து வேலை செய்தது. சுமார் ஒரு லக்ஷம் துண்டுப் பிரசுரமும் 5000 சுவர் விளம்பரமும்தான் வெளியாக்கப்பட்டது. இவைகளில் பகுதி சரிவர வினியோகிக்கப்பட்டிருக்காது என்று கூடத்தெரிய வருகிறது. 15 அல்லது 20 இடங்களில் தான் உபந்நியாசம் செய்திருக்கக்கூடும். இவை களுக்கு ஏற்பட்ட செலவு 500 ரூபாய் கூட இருக்காது. சமீபகாலத்தில் ஆதி இந்து சகோதரர்களில் சிலரும் முகம்மதிய சகோதரர்களில் சிலரும் வெளிவந்து சற்று முயற்சித்தார்கள். ஆனால் அதையும் தேசீயக் காலிகள் உபத்திரவித்தார்கள். எனவே காங்கிரசு பத்திரிகைகள் முழுதும், காங்கிரஸ் ஸ்தாபனங்கள் முழுவதும், அதில் சேர்ந்த ஆட்கள் முழுவதும், மற்றும் வக்கீல் அதிகாரமும், சட்டமெம்பர் அதிகாரமும், பார்ப்பன மாணவர் கூட்ட மும், திருட்டுத்தனமாய் பல பார்ப்பன அதிகாரிகளும் சேர்ந்து வேலை செய்தும் 5000, 6000 ரூபாய் செலவும் ஒவ்வொரு ஸ்தாபனத்திற்கும் பணம் அனுப்பச் செய்தும் பகிஷ்கார வேலை நிறுத்த யோக்கியதை இவ்வளவு தோல்வியிலும் காலித்தனத்திலும் முடிந்ததைப் பார்க்கும் போது பொது ஜனங்களும் பாமர ஜனங்களும் எவ்வளவோ விழிப்புடனும் சுய அறிவு டனும் இருக்கின்றார்கள் என்றே சொல்ல வேண்டும்.

இந்த முடிவினால் நமக்கு பெருத்த நன்மையோ தீமையோ ஒன்றும் ஏற்பட்டு விட்டதாகக் கருதி எதையும் இங்கு சொல்ல வரவில்லை. தேசீயத் தின் பெயரால் வாழும் சுயநலக்காரர்களின் சூழ்ச்சியை மக்கள் அறியத் தகுந்த நிலை ஏற்பட்டு வருகின்றது என்பதற்கு அறிகுறிகள் காண்கின்றன என்கின்ற சந்தோஷத்தையே தெரிவிக்க விரும்புகிறோம். தவிர நமது உண்மையான சுயமரியாதைக்கு நாம் செய்ய வேண்டிய பகிஷ்காரங்களும் வேலை நிறுத்தங்களும், சத்தியாக்கிரகங்களும் நமது நாட்டில் அநேகம் இருக்கின்றன. அதை நடத்த சர்க்காரும் ஒப்பார்கள். ஏனென்றால் நமக்கு உண்மை சுயமரியாதை வந்து விட்டால் நாம் (இந்திய மக்கள்) எல்லோரும் ஒன்று சேர்ந்துவிடுவோம். அப்போது இங்கு ஆங்கிலேயர்களின் ஆட்சி முறைக்கு சாவுமணி அடித்துவிடும் - ஆதலால் அவர்கள் நமக்கு எவ்விதத்தி லும் உதவமாட்டார்கள். பின்னையோ பார்ப்பனர்களும் நமக்கு உதவாத தோடு எதிரிகளாகவும் இருப்பார்கள். ஏனென்றால் நமது சுயமரியாதை என்பது பார்ப்பனீயம் சாவதில்தான் இருக்கின்றது. அப்பார்ப்பனீயம் ஒழிந்தால் பார்ப்பனர்கள் ஒன்றா பிச்சை எடுக்க வேண்டும், அல்லது நம்மைப் போல் உடல் வேலை செய்து ஜீவிக்க வேண்டுமேயல்லாமல் இம்மாதிரி மக்களை பிரித்து வைத்து ஏமாற்றிப் பிழைக்க முடியாது.

நிற்க, நமது சுயமரியாதைக்கு மற்றொரு வகை எதிரிகள் யார் என்றால் இப்போது தேசீயத்தின் பெயரால் வாழ்கின்ற வயிற்றுப் பிழைப்பு தேச பக்தர்கள் என்பவர்கள். அவர்களும் நமது உண்மை சுயமரியாதைக்கு உதவி செய்ய முடியாதவர்கள்.

ஏனெனில், நமக்கு உண்மை சுயமரியாதை வந்துவிட்டால் போலி தேசீயத்திற்கு இந்த நாட்டில் வேலை இருக்காது. அது சமயம், இப்பொழுது இந்த தேசீயத்தின் பெயரால் பிழைத்துக் கொண்டிருக்கும் கூலி பக்தர்களுக்கு தேசீய பிழைப்பு கிடைக்காது. அவர்கள் ஒன்றா பாடுபட்டுப் பிழைக்க வேண்டும் அல்லது கொள்ளைக்காரர்கள், திருடர்கள் முதலியவர்களுடன் சேர்ந்து வாழ வேண்டும். ஆகையால் நமது நாட்டு சுயமரியாதைக்கு மேற்கண்ட அரசாங்கமும், பார்ப்பனர்களும், தேசீய வாழ்வுக்காரர்களும் எதிரிகள் என்பதை நன்றாய் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

உண்மை சுயமரியாதைக்காக எங்கு நாம் பகிஷ்காரமும் வேலை நிறுத்தமும் சத்தியாக்கிரகமும் ஆரம்பித்து விடப்போகிறோமோ என்ற பயத்தாலேயே இந்தப் பார்ப்பனர்களும் தேசீய வாழ்வுக்காரர்களும் கூடி யோசித்த சூழ்ச்சியே இந்த கமிஷன் பகிஷ்கார வேலை நிறுத்தம் என்பவை களுக்கு மற்றொரு காரணம் என்பதை உணர வேண்டுகின்றோம்.

ஆதலால் சூழ்ச்சிகளாலும் இந்த உபத்திரவங்களினாலெல்லாம் நாம் ஏமாறாமலும் நமது முயற்சியை தளரவிடாமலும் தைரியமாய் இருந்து நமது சுயமரியாதைக் கிளர்ச்சியை தொடர்ந்து செய்து கொண்டுபோக வேண்டும் என்பதே நமது விண்ணப்பம்.

அன்றியும் இச்சுயமரியாதைக்கு அனுகூலமாய் இருந்தால் எந்தக் கமிஷனையும் வரவேற்போம். எந்த சாத்தானையும் வரவேற்போம். விரோதமாயிருந்தால் கடவுளையும் பகிஷ்கரிப்போம், தேசீயத்தையும் குழி தோண்டிப் புதைப்போம், உயிரையும் துறக்க முந்துவோம் என்கின்ற துணிவு ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டுமென்கின்ற கவலைதான் பகிஷ்காரப் புரட்டையும் வேலை நிறுத்த காலித்தனத்தையும் வெளியாக்க முயற்சி எடுத்துக் கொள்ளச் செய்ததே ஒழிய வேறில்லை.

(குடி அரசு - தலையங்கம் - 05.02.1928)

Pin It