சேலம் பெரியார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் திரு.ஜெகநாதன் மீது கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகரை சாதியினைச் சொல்லித் திட்டியதாக "அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது". அந்த வழக்கினைத் தள்ளுபடி செய்யக்கோரி துணைவேந்தர் தொடுத்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

இதனால் ஆத்திரமடைந்த துணைவேந்தர், பட்டியலினக் கல்வியியல் பேராசிரியருக்கு அனைத்து தகுதிகள் இருந்தும் அவருக்கு துறைத் தலைவர் பதவி வழங்க மறுத்துள்ளது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

சேலம் பெரியார் பல்கலையில் இரண்டு பேராசிரியர்கள் இருக்கும் பொழுது கல்வியியல் துறைக்கு சம்பந்தமில்லாத நூலக அறிவியல் துறைப் பேராசிரியர் முருகன் என்பவர் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார். நூலக அறிவியல் துறைத் தலைவர் முருகன் பணி நியமனமே சர்ச்சைக்குரியது. இது தொடர்பாக உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளர் திரு.பழனிச்சாமி விசாரணைக் குழுவால் விசாரிக்கப்பட்டு அந்த அறிக்கையின் நடவடிக்கை நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவருக்குப் பிறகு தமிழ்த் துறைத் தலைவர் பெரியசாமி என்பவர் கல்வியியல் துறைத் தலைவர் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். இவருக்கும் கல்வியியல் துறைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.இவர் மருதமலை முருகன் கோவிலில் ஓதுவாராக இருந்ததை கற்பித்தல் அனுபவமாகக் காட்டி பணியில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்குப் பிறகு எடப்பாடி பெரியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பணியாற்றி தற்பொழுது அந்த கல்லூரி அரசு கல்லூரி ஆக மாற்றப்பட்டதால் அந்த கல்லூரி முதல்வராக இருந்த வெங்கடேஸ்வரனை, அரசு பல்கலைக்கழகத்திற்குத் திருப்பி அனுப்பியது. அவர் பல்கலைக்கழகத்திற்காக நியமிக்கப்பட்ட பேராசிரியர் அல்லர். அப்படிப்பட்ட ஒருவரை கல்வியியல் துறைத் தலைவராக நியமித்தார் துணைவேந்தர் ஜெகநாதன்.

தற்பொழுது சூரமங்கலம் காவல்துறை உதவி ஆணையர் துணைவேந்தரை வன்கொடுமை வழக்கிற்காக விசாரணைக்கு அழைத்து வரும் நிலையில் அவர் கடந்த வெள்ளி,சனி ஆகிய இரண்டு நாட்கள் விசாரணைக்கு ஆஜரானார். இதனால் ஆத்திரமடைந்த துணைவேந்தர் கல்வியல் துறைக்கு பேராசிரியர் திரு.வக்கீல் என்பவரை துறைத் தலைவராக நியமித்துள்ளார். இவர் பட்டியலினப் பேராசிரியை திருமதி.தனலட்சுமி அவர்களை விட பணி அனுபவத்தில் மிகவும் குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது பட்டியலினப் பேராசிரியை மீது தொடுக்கும் ஓர் உளவியல் தாக்குதலே ஆகும்.

இதனை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. பட்டியலினப் பேராசிரியருக்கு உடனடியாக பல்கலைக் கழக சாசன விதியின்படி துறைத் தலைவர் பதவியினை வழங்கிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

இதே துணைவேந்தர் பல்கலைக்கழகத்தில் பட்டியல் இன அருந்ததியினருக்கு ஒதுக்க வேண்டிய நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களைப் பொதுப்போட்டிக்கு ஒதுக்கி அங்கு ஜெயப்பிரகாஷ், வெங்கடாஜலம் ஆகியோரை நியமித்தார்.இதுவும் பட்டியல் இனத்திற்கு எதிரான துணைவேந்தரின் ஜாதிய வன்ம நடவடிக்கையே ஆகும். இது 200 புள்ளி இட ஒதுக்கீட்டினை முறையை அப்பட்டமாக மீறிய செயலாகும்.

இப்படி தொடர்ந்து பட்டியல் இனத்திற்கு எதிரானத் தாக்குதலை துணை வேந்தர் ஜெகன்னாதன் மேற்கொள்வதை வன்மையாகக் கண்டிக்கிறோம். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீடு முறை முழுமையாக கடைபிடிக்கப்படுவதில்லை.பட்டியல் இன அருந்ததியினருக்குக் கிடைக்க வேண்டிய தமிழ்த் துறைப் பேராசிரியர் பணியிடம் பொதுப்போட்டிக்கு சென்று அங்கு போலி சான்றிதழ் என பலராலும் உறுதி செய்யப்பட்ட பெரியசாமி என்பவர் நியமிக்கப்பட்டார். இதைப் போல் நூலக அறிவியல் துறை பேராசிரியர் முருகன், தற்பொழுது ஆளுநர் மாநாட்டில் துணைவேந்தரின் பிரதிநிதியாக கலந்து கொண்ட மேலாண்மைத் துறை பேராசிரியர் யோகானந்தம் மற்றும் கணிதவியல் துறை பேராசிரியர் பிரகாஷ் ஆகியவர்கள் 200 புள்ளி இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பணியில் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.எந்த பல்கலைக்கழக துணைவேந்தரும் ஆளுநர் கூட்டிய மாநாட்டிற்கு செல்லாத பொழுது சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மட்டும் இரண்டு பேராசிரியர்களைத் தனது பிரதிநிதிகளாக அதில் கலந்து கொள்ளச் செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்நிலையில் தமிழக அரசு தலையிட்டு பெரியார் பல்கலைக்கழகத்தினுடைய பட்டியலின விரோத நடவடிக்கைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பல்கலைக்கழக வேந்தரான தமிழக முதல்வரையும், உயர் கல்வித்துறை அமைச்சரையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

- கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்