கோவையில் ஏப்ரல் 29-ல் திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்திய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி பேசியதாவது:
தந்தை பெரியாரைப் போல தன் கொள்கைக்காக உழைத்த தலைவர் உலக வரலாற்றிலேயே எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டார். பெரியார் இறந்து 51 ஆண்டுள் ஆகிவிட்டன. ஆனால், தமிழ்நாட்டின் அரசியலை இன்றும் அவர்தான் தீர்மானித்துக் கொண்டிருக்கிறார் என்றால், அதுதான் பெரியாரின் சிறப்பு.
இன்னும் பெருமையாகச் சொல்ல வேண்டும் என்றால், இன்றைக்கு உங்களின் அழைப்பை ஏற்று வந்து இருக்கிறேன். தி.மு.க–வின் இளைஞர் அணிச் செயலாளராக வந்திருக்கிறேன், அது பெருமைதான். நீங்கள் எல்லோரும் சொன்னதைப்போல் விளையாட்டுத்துறை அமைச்சராக வந்திருக்கிறேன், அதுவும் பெருமைதான். தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக வந்திருக்கிறேன், அதுவும் பெருமைதான். ஆனால், அவை எல்லாவற்றையும்விட மிகப் பெருமையாக நான் கருதுவது என்னவென்றால் உண்மையான பெரியாரின் கொள்கைப் பேரனாக இந்த மாநாட்டிற்கு வந்திருக்கிறேன். அதனால்தான் பெரியாரின் தொண்டர்கள் மத்தியில் பேசும்பொழுது எனக்கு தனி விதமான ஒரு உத்வேகம் ஏற்படுகிறது. தனித் தெம்பு வருகிறது. அதற்குக் காரணம் என்னவென்றால், உலக வரலாற்றிலேயே தந்தை பெரியாருக்கு கிடைத்த தொண்டர்களைப் போல வேறு எந்த இயக்கத்திற்கும், எந்தத் தலைவருக்கும் கிடைத்தது கிடையாது.
பெருமை வாய்ந்த தொண்டர்கள்!
அரசியல் கட்சியாக இருந்தால், அது என்றைக்காவது ஒருநாள் தேர்தலில் நிற்கும். போட்டி போடலாம், ஏதாவது ஒரு பொறுப்பு கிடைக்கும். ஆனால், பெரியாரின் தொண்டர்கள், அவர்களின் கொள்கையை கொண்டு செல்வதற்காக, அடிபட்டார்கள், மிதிபட்டார்கள், வெட்டப்பட்டார்கள். சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஏன் இன்னும் சொல்லப் போனால் கொலைகூட செய்யப்பட்டார்கள், அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த தொண்டர்கள்தான் பெரியாரின் கொள்கைத் தொண்டர்கள்.