மாநில உரிமைகளை உறுதிபடுத்தும் மற்றொரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் செயல்படும் ஜி.எஸ்.டி கவுன்சில் எடுக்கும் முடிவுகள், வெறும் பரிந்துரைகள் மட்டும் தான். அதை மாநில அரசுகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று , உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. இந்த பிரச்சனையில், ஒன்றிய அரசுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதே அளவு சம உரிமை மாநில அரசுகளுக்கும் இருக்கிறது என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி இருக்கிறது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “ஜி.எஸ்.டி கவுன்சில் என்பது அரசியல் சார்ந்த இடமாக தற்போது மாறியுள்ளது என்பதை மறுக்க முடியாது. இந்த நிலை இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தை முழுமையாக பாதிக்கச் செய்யும். எனவே ஜனநாயகமும், கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி பல்வேறு குழப்பங்களை தவிர்ப்பதற்காக மட்டுமே, கூட்டாட்சித் தத்துவத்தில் ஒன்றிய அரசிற்கு கூடுதல் அதிகாரத்தை வழங்குகிறது” என்று உச்சநீதிமன்றம் மேலும் தெளிவுபடுத்தி இருக்கிறது.

பேரறிவாளன் வழக்கில், “சிறைவாசிகளை விடுதலை செய்கிற உரிமை மாநில அரசுக்கு மட்டுமே உண்டு. அமைச்சரவை எடுக்கின்ற முடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் தந்தே ஆக வேண்டும். ஆளுநர் தனது விருப்பு, வெறுப்புகள் அடிப்படையில் செயல்பட முடியாது” என்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம். தற்போது ஜி.எஸ்.டி குறித்தான தீர்ப்பிலும் மாநில உரிமையை உறுதிபடுத்தியுள்ளது. இரண்டு தீர்ப்புகளும் மாநில உரிமைகளுக்கு பச்சைக் கொடி காட்டுகிற தீர்ப்பாகும்.

Pin It