கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பெரியார் தம் வாழ்நாள் காலமெல்லாம், மக்கள் மானமும் அறிவும் பெற்ற மக்களாக மாற்றப்பட வேண்டுமென்ற முதன்மையான குறிக்கோளை முன்னிறுத்தி, பரந்துபட்ட நெடும் தொடர் பரப்புரையை மேற்கொண்டு அந்தக் குறிக்கோளை அடைவதற்கான செயல் திட்டங்களையும் வகுத்து நடைமுறைப்படுத்திட ஆவனவெல்லாம் செய்தார். மேலும் “மானம் தான் மனிதனுக்கு அழகு” என்று வலியுறுத்தினார். மான உணர்வு உடைய ஒருவர்தான் மனிதன் என்ற இலக்கண வரையறைக்குள் வரும் தகுதி பெறுகிறார் என்றார். மான உணர்வு பெற்றிட அடிப்படையில் மக்களுக்கு வாழ்க்கை, பிழைப்பு அல்ல உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை நிறைவேற்றும் வகையில் மக்கள் எல்லோ ருக்கும், குறிப்பாக மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் சமூக மதிப்பு, கல்வி, பொருளாதாரம், மருத்துவம் மறுக்கப்பட்டவர்களாக ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த வர்கள் அரசுக் கல்வியில், பணிகளில் பங்குபெற்றிடும் உரிமை உடையவர்கள் என்பதை வலியுறுத்தி, அரசுகளைக் குறிப்பாகத் தமிழகத்தில் 1921-லிருந்து சமூக நீதிக் கோட்பாட்டின் முதன்மைக் கூறான இடப்பங் கீட்டைப் பெற்றிட வழி கண்டார்.

periyar 296ஏறத்தாழ 100 ஆண்டுகளைக் கடக்கின்ற இந்த 2020-ஆம் ஆண்டில் என்ன நிலை நிலவுகின்றது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். பெரியார் காண விழைந்த சமூக விடுதலையுடன் கூடிய தன்மானத்துடன் வெகுமக்கள் அனைவரும் வாழ்ந்துவர வழிகண்டோமா என்ற வினாதான் நம் முன் நிற்கிறது. ஆனால் இப்பொருள் குறித்து விரிவான ஆய்வுக் கண்ணோட்டத்தில், தன்மான உணர்வு அற்ற பிழைப்பு நிலையில் கொடும் இழிவான நிலையில் மக்கள் உழன்று வருவது குறித்து நெடிதும் பேசி வருகிறோம்; எழுதி வருகிறோம். அதே நேரத்தில் தீர்வை நோக்கி, அவ்வளவு எளிதில் இக்குறிக்கோளை அடைந்திட நெடும் பயணம் தேவை என்ற புரிதலுடன் தான் இருக்கிறோம். எனினும் தெளிவான, வரையறுக் கப்பட்ட கால அளவுகளுடன் கூடிய செயல் திட்டங்கள் வகுத்துச் செயல்பட வேண்டியவர் களாகவுள்ளோம். எனவே, கட்டுரையின் தொடக்கத்திலேயே என் புரிதலி லான தீர்வுகளை முன்வைத்து விட்டு, அவற்றின் விளக்கங்களைத் தொடர முற்படுகிறேன்.

தன்மானம் தழைக்க, தன்மான உணர்வு நிலைத்திட மிகவும் அடிப்படையாக ஒவ்வொரு தனிமனிதனும் எதற்கும் எவரையும் சார்ந்து வாழாத தற்சார்பு வாழ் வையே கொண்டிருக்க வேண்டும். இக்கூற்று பொது நிலையில்-பொதுவெளியில் பொருத்தப்பாடு உடையது எனச் சொல்லிட முடியாது. அதே நேரத்தில் தற்சார்பு வாழ்வுக்கு தனிமனிதன் மதிப்புடைய ஊதியம் கொண்ட பணி, நற்கல்வி பெறத்தக்க வாழ்ப்பைத் தரும் சூழ் நிலையுடைய சமூகத்தின் அங்கமாக இருக்க வேண்டும். இந்தப் பின்னணியில் தீர்வுகளைக் கீழே காணலாம்.

அ. அடிமைத்தளை விலங்கிடும் இந்துச் சனாதன நால்வருணம் நொறுக்கப்படும் வகையில் “இந்துச் சட்டம்” தக்கவாறு திருத்தப்பட வேண்டும்.

ஆ. இதையே கோட்பாடாகக் கொண்டுள்ள ‘கீதை’ நூல் தடைசெய்யப்பட வேண்டும்.

இ.       நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் வாழ்க்கைக் கேற்ற ஊதியம் கிடைக்கும் வகையிலான- குறைந்த அளவு ஊதியம் இவ்வளவு என உறுதிப்படுத்தும் பணியைப் பெறவேண்டும்.

(i)            அடிப்படையில் உடலுழைப்பு, எழுத்துச் சார்ந்தவை போன்ற எம் பணியும் சமூகத்தின் நலத்திற்கும், மேம்பாட்டுக்குரியது என்ற தன்மையில் ஒரு மணிநேரத்திற்கு இவ்வளவு சம்பளம் என உறுதி செய்யப்பட வேண்டும்.

(ii)           இதற்கான துணை நடவடிக்கையாக, தற்போதைய உயர் ஊதிய அளவு மொத்த மாதச் சம்பளம் ரூ.2.50-ரூ.3.00 இலக்கம் என நிலைப்படுத் தப்பட வேண்டும். காட்டாகக் குடியரசுத் தலைவர் சம்பளம், உச்ச வழக்குமன்றத் தலைமை நடுவர், ஒன்றிய அரசின் அமைச்சரவைச் செயலர் (Cabinet Secretary) மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் ஆகியோருக்கு நிலைநிறுத்தப்பட்ட சம்பளம் (Fixed Pay) என்றாக வேண்டும்.

(iii)          அடித்தட்டு சம்பள விகிதம் தொடர்ந்து நான்கு (அ) ஐந்து ஆண்டுக்கொரு முறை உயர்த்தப்பட்டு 100க்கு மேற்பட்ட சம்பள விகிதங்கள் ஒழிக்கப்பட்டு, அதிக அளவாக பத்துச் சம்பள விகிதங்களாக மட்டும் ஆக்கப்பட்டு பின் ஐந்தாக ஆகவேண்டும்.

(iv)       ஏவல் பணி (Meanial), கீழ்ப்பணி (Subordinate) விதிகள் என்பவை ஒழிக்கப்பட்டு 1-ஆம் நிலைப் பணிகள், 2-ஆம் நிலைப் பணிகள், 3-ஆம் நிலைப் பணிகள் என்று மாற்றியமைக்கப்பட வேண்டும்.

(v)        சம்பள விகிதங்கள் தொடர்ச்சியாக உயர்த்தப் பட்டு 10 அல்லது 5 சம்பள விகிதங்கள் மட்டுமே என்று மாற்றியமைக்கப்படுவதற்கேற்ப அந்தச் சம்பள விகிதங்களைக் கொண்ட பணியாளர்களின் பணி கள் அதிகரிக்கப்பட வேண்டும். காட்டாக, அலு வலக உதவியாளர்களின் தற்போதையப் பணிகளுடன் பதிவேடுகள், கோப்புகளைப் பராமரித்தல், பதிவேடுகளில் பதிவுகள் செய்தல், எளிமையான கோப்புகளைக் கையாளுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வகையில் அலுவலக உதவியாளர் பதவிப் பெயர் அகன்றுவிடும். இதே போன்று பிற இடைநிலைப் பதவிகளின் பணிகளும் அதிகரிக்கப்பட வேண்டும்.

(vi)         குறிப்பாகச் சம்பள வகைகள் 100-க்கு மேற்பட்ட வையாக உள்ள இழிநிலையுடன், அரசுப் பணி யிலிருப்போருக்கு நாட்டில் ஏற்படும் விலைவாசி ஏற்றத்தை ஈடுகட்ட அரசுகள் அகவிலைப்படி என் பதை அளித்து வருகின்றன. கொடுமை என்ன வென்றால், ஒவ்வொரு பணியாளரும் அவரவர் பெற்றுவரும் அடிப்படை ஊதியத்தில் அகவிலைப் படி வழங்கப்பட்ட விழுக்காடு அளவைப் பெறுவர். அதாவது உயர் ஊதியம் பெறுவோர் உயர் அக விலைப்படி குறைவான ஊதியம் பெறுவோர் அதற்கேற்றாற் போல் குறைவான அகவிலைப்படி. காட்டாக அகவிலைப்படி 5 விழுக்காடெனில் ரூ.1,00,000 அடிப்படை ஊதியம் பெறுபவர்கள் ரூ.5000 அகவிலைப்படியாகப் பெறுவர். ஆனால் ரூ.10000 அடிப்படை ஊதியம் எனில் அகவிலைப் படி ரூ.500 மட்டுமே. பொருள்களின் விலையேற்றம் அனைவருக்கும் பொதுவானது. அப்படியெனில் இதை அடிப்படைச் சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு தரப்படுவது, உயர்சம்பளக்காரன்தான் அதிகம் பயன்படுவான். ஆனால் உண்மையில் குறைந்த அடிப்படைச் சம்பளம் பெறுபவர்கள்தான் விலையேற்றத்தால் பாதிப்புக்கு உள்ளாவர். எனவே அகவிலைப்படி அளவை அடிப்படைச் சம்பளத்தில் விழுக்காடு என்ற அடிப்படையில் இன்றி மூன்று அல்லது நான்கு வகையாகப் பிரித்து உயர் அளவை குறைவான அடிப்படை ஊதியம் பெறு பவருக்கும் குறைந்த அளவை உயர் ஊதியம் பெறுபவருக்கும், என வழங்குவதுதான் நியதி யாகும். எனவே விலையேற்றத்தால் அதற்கு ஈடாக விழுக்காட்டில் அகவிலைப்படி தரப்படுவது கைவிடப்பட வேண்டும்.

இங்கு தனியார் நிறுவனங்கள், அதில் பணிநிலை, ஊதிய நிலை போன்றவை ஆய்வுக்கு எடுத்துக் கொள் ளப்படவில்லை.

(vii) மேலே அமைப்புசார் துறைப் பணிகள், அவற் றின் ஊதியங்கள் பற்றிப் பேசப்பட்டன. அதே போன்று அமைப்புசாரா துறைகளான வேளாண்மை, நெசவுத் தொழில், உடலுழைப்புச் சார்ந்த பிற பணிகளுக் கான ஊதியங்களும் முறைப்படுத்தப்பட வேண்டும். முதன்மையாக உழவுத் தொழில்சார் பல்வேறு பணிகளுக்கும் மணிக்கு இவ்வளவு ஊதியம் என்று அளிக்கப்பட வேண்டும். இதையொட்டி நெசவுத் தொழிலாளர்களின் பல்வேறு பணிகளுக்கும் மணிக்கு இவ்வளவு ஊதியம் என்று அளிக்கப்பட வேண்டும். உடலுழைப்புச் சார்ந்த கட்டடம் கட்டும் பணிகள், சாலை அமைத்தல், இன்னும் பல்வேறு வகைப் பட்ட தொழில் சார்ந்த பணிகள் அனைத்தும்-மணிக்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

நாட்டின் மிகவும் அவலமான நிலை! இப்போது கூட குறைந்த அளவு சம்பளம் (Minimum Wage) எவ்வளவு என்பதுகூட இந்திய ஒன்றிய அரசால் இறுதி செய்யப்படாமல் உள்ளது. ஆனால் தொழிலாளர் நலத்துறை குறைந்த அளவு நாள் ஊதியம் ரூ.400-450 என்ற அளவில் இருக்க வேண்டும் என்று சொல்லி வருகின்றது. நாட்டிலேயே கேரள மாநிலம் மட்டும்தான் நாள் ஊதியம் ரூ.600 வழங்கி வருகின்றது. ஆனால் தமிழ்நாட்டில் இன்னும் மாவட்ட ஆட்சியர்கள் அலுவல கங்களில் ஏன் தலைமைச் செயலகத்தில் கூட, நாள் சம்பளம் வெறும் ரூ.100/-ம் அதற்குக் குறைவாகவும் வழங்கப்பட்டு வருகின்றது. வளர்ந்த மாநிலம் என வகைப்படுத்தப்பட்ட மாநிலமெனக் கருதப்படும் தமிழ் நாட்டு நிலையே இதுவெனில், வளர்ச்சியறியா வடமாநிலங்களான பீகார், உ.பி., ம.பி. போன்ற மாநிலங்களின் சம்பள அளவு எவ்வளவு கடைநிலையிலிருக்குமென எண்ணிக் கொள்ளலாம்.

ஈ) (i) கல்வியின் நோக்கமே மனிதன் தன்மான உணர் வுடன் வாழத்தான். அதனால் அரசு மட்டுமே மக்களனைவருக்கும் கல்வியை அனைத்து நிலை களிலும் வழங்கிடும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இது நாடாளுமன்ற சனநாயக அரசின் முதன்மை யான கொள்கைக் கோட்பாடு என்பது உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் இந்த அடிப்படைக் கல்விக் கோட்பாட்டைச் சிதைக்கும் நோக்கம் கொண்ட தேசியக் கல்விக் கொள்கை கைவிடப்பட வேண்டும். மேலும் கல்வி, தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டுக், கொள்ளைக் கொள்கலனாக வடிவெடுத்துவிட்டது. இது அடிப்படைக் கல்வி பெறுவதையே மறுப்பது போலாகும் என்பதுடன், தனியாரிடம் கல்வியை உரிமையாகக் கோரிப் பெற முடியாது. மேலும் கல்வியில் தனியார் முதலீடு எனில் அது இலாபம் ஈட்டும் தொழிலாக மாறும். அங்கு பணிபுரிவோர் அடிமை ஊழியத்திற்குத்தான் அணிய மாவர். எனில் அவர்களிலும் பயிலும் மாணவர்கள் நிலை பெரிதும் அவலம். கல்விக் கூடத்தில் மாண வர்கள் சேர்க்கப்படுவதிலிருந்து அங்குப் பணிபுரிபவர் கள் வரை அடிமைத்தளைக்கு உள்ளானவர்கள் ஆவர். எனவே இவர்கள் அனைவரும் தன்மான உணர்வே அற்றவர்களாகத்தான் இருக்கமுடியும். எனவே பள்ளிக் கல்வி வரையிலாவது, அரசு மட்டுமே கல்வி அளிக்க வேண்டும். அரசு மட்டுமே, தனியாரால் முடியாத இலவயக் கல்வி அளிக்க முடியும், ஆகையால் தன்மான உணர்வு மாணவத் தளிர் மனதிலேயே, விதைக்கப்பட பள்ளிக் கல்வியை அரசு மட்டுமே வழங்கிடல் வேண்டும். அதுவும் இலவயமாக வழங்கிட வேண்டியது அரசின் தலையாய பொறுப்புடனான கடமை.

(ii)           கல்வியை அளிப்பது என்பது தாய்மொழியின் வழி யாக இயலும். வேற்று மொழியில் அளிக்கப்படின், அது கல்வியாக இராது; வெறும் படிப்பு என்றாகி விடும். கல்விதான் சமூக நெறிகளுடனான வாழ்க் கைக்கானது. படிப்பு எப்படியோ பிழைப்புக்கானது. எனவே தாய்மொழித் தமிழ் வழிக் கல்வி மட்டுமே -அரசால் மட்டுமே இலவயமாக வழங்கப்பட வேண்டும். பள்ளிக்கல்வி வரையிலாவது அரசின் பொறுப் பாகும்.

(iii) படிப்பு கல்வி என்ற பெயரில் மாநிலக் கல்விப் பாடத்தில், மய்ய அரசு பாடத் திட்டம், எனப் பல் வகைப்பட்ட பாடத் திட்டத்தில் அளிக்கப்படுவது இன்னும் குறிப்பாக ஒரே கல்விக் கூட வளாகத்தில் என்பது வளமானவருக்கு உயர்ந்த படிப்பு வறிய வர்க்கு தரமற்ற படிப்பு என்ற தன்மையில் அமைந் துள்ளது. பள்ளிக் கல்வி வரையிலாவது ஒரு மாநிலம் ஒரே கல்விப் பாடத் திட்டத்தின்கீழ்க் பொதுக் கல்வி யாக அரசு மட்டுமே வழங்கிட வேண்டும்.

உ)       மக்களுக்கு மருத்துவம் அளிப்பது அரசின் தலை யாய சனநாயகக் கடமை. மேலும் எல்லா நிலை மருத்துவமும் மக்களனைவருக்கும் அரசு மட்டுமே வழங்க வேண்டும். அரசு வழங்கினால் மட்டுமே அதனை மக்கள் தம் உரிமையாகப் பெற்றிட முடியும். அதையே தனியார் வழங்கிடின் அது வெறும் இலாபம் ஈட்டும் ஒரு வணிகத் தொழிலாகத்தான் அமையும். சனநாயகச் சந்தைப் பொருளாதாரம் பின்பற்றப்படும் நாட்டில் தனியாரின் இலாபத்திற்கு எந்த அளவுகோலும் எவராலும் வகுத்திடவிய லாது. எனவே, மக்கள் மருத்துவம் பெறுவதற்கு முழுதும் சுரண்டப்படும் நிலைக்குத் தள்ளப்படுவர். எனவே வெகுமக்கள் தனியாரைச் சார்ந்துதான் மருத்துவம் பெறவேண்டின் உரிமை இழந்தவ ராவர்; இன்னும் முதன்மையாக உயிர் சார்ந்த மருத்துவத்தைப் பெறத் தன்மானத்தை இழக்கத் தான் நேரிடும்.

கட்டுரையின் தொடக்கத்திலேயே சொல்லப்பட்டுள்ள தீர்வுகளுள் முதல் இரண்டும் எந்த அடிப்படையில் முன்வைக்கப்பட்டது என்பதை விளக்கிட வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சமயத்தின் பேரால், கடவுளின் பேரால் பார்ப்பனிய இந்துத்துவச் சனாதனம் மக்களைப் பிறப்பின் அடிப்பைடயிலேயே மக்களை வஞ்சகமான நால்வருணங்களாகப் பிரித்து, வெகுமக்களைச் சூத்திரர்கள் எனச் சொல்லி அவர்கள் ஏனைய மூன்று வருணப் பிரிவினருக்கும் தொண்டூழியம் செய்து, கல்வி மறுக்கப்பட்டவர்களாக, பெரும்பாலோர் எப்பொருளுக்கும் உடைமையற்றவர்களாகப் பிழைத்திட மட்டும் வாழ்ந்திட அல்ல - என விதிக்கப்பட்டவர்கள் என ஒடுக்கி வைக்கப்பட்டு வந்துள்ளனர். இந்த இழிவைத் ‘தர்மம்’ என்று சொல்லியும் அது மீறப்படின் கொடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவதுடன் மறுபிறப்பில் இன்னும் இழிபிறப்பாகப் பிறப்பர் என்னும் நரகத்திற்குள் தள்ளப்படுவர் என்றும் இந்த வெகுமக்கள் மனதில் பதிய வைத்ததின் விளைவால் அவர்கள் தாங்கள் இழிவானவர்களாக இருப்பதே மகிழ்ச்சிக்குரியதென என்னும் அவலநிலை உள்ளது. எனவே தன்மானத் திற்கு அடிப்படைத் தேவையான கல்வி, பொருள், உரிமை, உணர்வு மறுக்கப்பட்ட நிலையில் இவ்வெகு மக்களுக்குத் தன்மான உணர்வை ஊட்டிட, பிற்காலத் தில் முற்பட்டவர்தான் பெரியார். அவர் காலத்திலும், அடுத்தும் அவரின் அயராத அரும்பணியாலும் உழைப் பாலும் தன்மான உணர்வு பெற்றோராய் வளர்ந்துள் ளோம் என்பது உண்மைதான்.

ஆனால் அண்மைக் காலத்தில் பார்ப்பனியம் தலை தூக்கியதை அடுத்து, சனாதனம் அவரவர் விருப்பிற் கேற்பப் பின்பற்றப்படுவதில் தவறென்ன எனப் பரவலாகக் காட்சி ஊடகங்களிலும், பொதுவெளியிலும், அச்சு ஊடகங் களிலும் பேசு பொருளாக இன்னும் குறிப்பாகப் பெண்கள் சூத்திரரனைய இழிமக்கள் என இந்து மதமும், கீதையும் சொல்வதைச் சுரணையின்றிப் புறந்தள்ளிவிட்டுப் பெண்கள் கட்டுரை வடிப்பதுமான இக்காலக்கட்டத்தில் இவ்விரண்டும் ஒழிக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட் டுள்ளதைத் தன்மானமுள்ள எவரும் உணர்வர். தன்மானமற்ற தன்மையில் சனாதன விரும்பிகளாகத் தங்களைச் சொல்பவர்களைப் பார்த்துச் சொல்வது போல் இருக்கிறது குத்தூசி குருசாமியின் 10.2.1953 அன்றைய கட்டுரையில் உள்ள கீழேயுள்ள அவரின் நகைச்சுவை கலந்த கூற்று,

“யார் நன்மைக்காக ஒன்றை எழுதுகிறோமோ, அவர்களே நம்மீது சண்டைக்கு வருகிறார்கள்! என் தலையில் தீ வைத்துக் கொண்டால் இவனுக்கென்ன? இவனா தீப்பெட்டி வாங்கித் தந்தான்? என்று கூடக் கேட்கிறார்கள்.”

தன்மானம் என்பது உலகம் முழுவதற்குமான பொதுமைத் தன்மை கொண்டது. எனினும் தனிமனிதத் தன்மானம், இனம்சார் தன்மானம் (இன மானம்), நாட்டிற்கான தன்மானம் (நாட்டு மானம்) என்பவையும் கருத்தில் கொள்ளத்தக்கவை. அடிப்படையில் வேலை தரப்படாமல், மதிப்புடை ஊதியத்துடனான பணி அளிக்கப்படாமல், நற்கல்வி வழங்கப்படாமல் மற்றும் பசிப்பிணியில் வைக்கப்பட்டுள்ள மக்களுள் எவருக்குத் தன்மான உணர்வு முகிழ்க்கும்? இப்படிப்பட்ட நிலை யில்தான் உலக நாடுகளுடன் 117 நாடுகளில் நிலவும் பசிப்பிணி அளவை ஒப்பிடுகையில், இந்திய ஒன்றியம் 102-ஆம் இடத்தில் உள்ளது. அதாவது ஏறத்தாழ 17.5-20.0 கோடி மக்களைப் பசிப்பிணியில் வாட விட்டுவிட்டுப் பொருளாதாரத்தைச் சீர்குலைத்துள்ளது ஒன்றிய அரசு.

ஆனால் இந்த அரசு செல்வந்தர்களையும், பெருந் தொழில் நிறுவனங்களையும் மதிப்புடன் நடத்தப் படுவதுடன் அவர்கள் பெற்றுவரும் ரூ.1000 கோடி கணக்கிலான இலாப அளவு குறைந்துவிடக் கூடாது என்பதற்காக காலம் காலமாக வெகுமக்களிடமிருந்து பறிக்கப்பட்ட வரிப்பணம் ஆர்.பி.அய்.இல் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததில் ரூ.176 இலக்கம் கோடியை, சில நூறு பெரு நிறுவனங்களுக்குக் கொட்டிக் கொடுத்து விட்டது. மேலும் அவர்களுக்கு ரூ.1.45 இலக்கம் கோடி வரிச் சலுகை அளித்துள்ளது இந்த அரசு. ஆனால் வெகுமக்களின் குறிப்பாக உழவு, நெசவு தொழில்சார் உடலுழைப்பு மக்களான 70-80 கோடி மக்களின் நலன் பேண - அவர்களின் விளை உற்பத்திப் பொருள்களுக்கு மதிப்புடைய விலைதர சில ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கிட இவ்வரசு தயக்கம் காட்டுகிறது. இதன் விளைவால்தான் இத்தொழில்கள் சார்ந்த மக்கள்தான், பெரும் அளவில் பசிப்பிணியில் வாழுவோராய் உள்ளனர். இவர்கள் எப்படி நற்கல்வி பெறமுடியும்? இந்நிலையில் உள்ள இவர்கள் தங்கள் உயிர் காப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்க வைத்து, தன்மானம் உள்ளவர்களாக வாழ வேண்டுமென்ற எண்ணம் எழாதவர்களாக வைத் துள்ளது இந்த வன்கொடுமை இந்திய ஒன்றிய அரசு.

இந்திய ஒன்றியத்தில் வேலையின்மை, கல்வி யின்மை என்ற நிலையில் வைக்கப்பட்டுள்ள மக்களாக உள்ளவர்களில் பெண்களின் நிலைமை- குறிப்பாக அவர்களுக்கான மருத்துவம் அளிக்கப்படுவது மிகவும் அவலமாக உள்ளது என்பதை 153 நாடுகளில் நிகழ்த்திய ஆய்வு சுட்டுகிறது. பொருளாதாரத்தில் பங்கேற்பு மற்றும் அதற்கான வாய்ப்புப் பெறும் அளவீட்டில் இந்திய ஒன்றியம் 149-ஆம் இடத்தில்தான் உள்ளது. பெண்கள் மருத்துவம் பெறுவதில் 150-ஆம் இடத்தில் எனத் தாழ்நிலையில் உள்ளது. பாலின சமநிலை அளவில் 112-ஆம் இடம்; கல்வி பெறுவதில் 112-ஆம் இடத்தில் உள்ளது இந்திய ஒன்றியம். இதிலிருந்து பொது நிலையில் மக்களின் தன்மான உணர்வு தாழ்ந்த நிலையில் உள்ளதைக் காட்டிலும் பெண்களின் தன்மதிப்புச் சிந்தனை மிகவும் அவல நிலையில் தான் இருக்கின்றது.

தனிமனிதத் தளம் தாண்டி தமிழ் நாட்டின் தன் மானம் கொடுமையாகச் சிதைக்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் தமிழர்களின் வரிப்பணத்தால் நிறுவப் பட்ட 25 அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தமிழ் நாட்டரசே நிருவகித்து வந்த நிலையில், 2017-இல் ‘நீட்’ என்று ஒன்றியம் முழுமைக்குமாக ஒரு நுழைவுத் தேர்வை ஒன்றிய அரசின் தேசிய மருத்துவக் குழுவே நடத்தி-அவர்களே தெரிவு செய்து மேற்சொன்ன தமிழக அரசு மருத்துவக் கல்லூரி இடங்களை நிரப்பிக் கொள்கின்றனர். இதை எந்த விலை கொடுத்தேனும் தமிழகத் தின் தன்மானம் காக்கப்பட்டு ‘நீட்’லிருந்து விலக்கும் பெற்றிருக்க வேண்டும்.

இதேபோன்று ஆண்டு வருமானம் ரூ.8 இலக்கம் என்ற அளவில் உள்ள உயர்சாதியினரை நலிந் தோர் எனச் சொல்லி அவர்களுக்கென்று 10 விழுக் காடு அளவுக்கு பொதுப் பிரிவிலிருந்து தனியே ஒதுக்கீடு செய்யப்பட்டு 2018-19-ஆம் கல்வி ஆண்டிலிருந்தே இந்திய ஒன்றியக் கல்வி மற்றும் வேலைகளில் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்து விட்டது. இந்திய ஒன்றிய அரசு. இது சமூகநீதிக் கோட்பாட்டுக்கு முற்றிலும் எதிரானது. இதற்கென இயற்றப்பட்ட சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது; மோசடியானது. இவ்வாறெல்லாம் உண் மைநிலை இருக்க, தமிழ்நாடு ஒன்றியத்திற்கே ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு முன்னோடியானது/முன் காட்டானது என்ற பெருமையைக் கொண் டிருக்கும் இச்சட்டத்தை எதிர்த்துப் பெரும் எதிர் வினை மேற் கொண்டு அதை முறியடித்திருக்க வேண்டும். ஆனால் நாட்டின் தன்மானம்-தடு மாற்றம் கண்டு இச்சட்டத்திற்குத் தமிழகம் அடி பணிந்தது வரலாற்றுத் தலைக்குனிவு.

ஒவ்வொரு தனிமனிதனும் தன்மானத்துடன் வாழ உரிமை உடையவன் என்பதை அரசமைப்புச் சட்ட விதி 21 உறுதி செய்துள்ளது. அது கீழே ‘சட்டப் படியான நிறுவப்பட்ட முறையினாலன்றி எந்த மனி தனின் வாழ்க்கை அல்லது அவரின் தனி உரிமை மறுக்கப்படக்கூடாது.’ இந்த விதியை விளக்கும் வகையில் அதன் உள்ளடக்கத்தைப் பல காலக்கட்டங்களில் உச்ச வழக்குமன்றம் விவரித்துள்ளது. அதாவது விதியில் குறிப்பிட்டுள்ள வாழ்க்கை என்பது வெறும் பிழைப்பு இல்லை. மதிப்புடன் கூடிய-தன்மானத்துடனான வாழ் வைத்தான் விதி வலியுறுத்துகிறது. மேலும் வாழ்வு என்றாலே மதிப்புடைய, வாழ்வு என்பது என்றும் நலிவற்ற நல்ல மருத்துவ வசதியுடன் கூடிய உடல் நலத்துடனும், தேவையான அளவுக்குமான மதிப்பு டைய ஊதியம் பெறுபவராக ஒருவர் இருக்க வேண்டும் என்றும் கருத்துரைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி இவையெல்லாம் ஒரு மனிதன் பெற்றால்தான் அவன் தன்மதிப்புடன், தன்மானத்துடன் வாழ்பவராகக் கொள் ளப்படும் என்றும் தெளிவுரை தந்துள்ளது உச்ச வழக் காடு மன்றம். இதையெல்லாம் இந்த இந்திய ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் கரிசனத்துடன் கருத்தில் கொண்டிருந்து திட்டங்கள் வகுத்து செயல்படுத்தியிருந் தால், மேல் பத்தியில் சொல்லப்பட்டுள்ள அவல நிலையில் உலக நாடுகளுள் கடை இழிநிலையில் நிற்க நேரிட்டி ருக்குமா? இதில் செம்பாதி மக்களை வறுமையிலும் பட்டினியிலும் வாட வதங்க விட்டுவிட்டு, “நாட்டை வல்லரசு ஆக்கிடுவோம்” என்பது வெறும் வெற்றுக் கூச்சல் என்பதன்றி வேறு என்ன?

இனி மரியாதை என்ற சமற்கிருதச் சொல்லைத் தமிழில் தனமானம் என்றுதான் பெரியார் சொல்லி வருகின்றார். இந்த வடமொழிச் சொல்லுக்குள், இருவருக் கிடையே உள்ள உறவு, உயர்வு தாழ்வைக் குறிப்ப தாகத்தான் உள்ளது. காட்டாகப் பார்ப்பானைப் பார்த்தால் அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும்; செல்வந் தனை ஏழை கண்டால் அவன் அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும். ஆசிரியருக்கு மரியாதை செலுத்த வேண்டும். உயர் அலுவலர்களைப் பிற நிலையிலுள்ள வர் காணும் போது, வணக்கம் சொல்லி மரியாதை செலுத்த வேண்டும். பெரியோருக்கு, பெற்றோருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் முதலில் இவர்களைப் பார்க்கும் போதெல் லாம் இவர்களுக்கெல்லாம் மரியாதை செலுத்தக்கூடத் தெரியவில்லையே, மரியாதையில்லாமல் நடந்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இதில் இருவழியிலும் மரியாதை நிலவுகிறதா? இல்லவே இல்லை. மேலும் இதில் இருவருக்குமிடையே மரியாதை பெரும் இடைவெளியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் உயர்வு தாழ்வு நிலை பொதிந்துள்ளது இச்சொல்லில் என்பது தெளிவாகின்றது. ஆனால் பிறருக்கு மதிப்பளிக்க வேண்டுமென்பதில் இருவரும் ஒருவருக்கொருவர் மதிப்பளிக்க வேண்டுமென்பது பொதிந்துள்ளது. எனவே காணும் எவருக்கும் அவரின் பெரியவர், சின்னவர், சிறுவர் என அகவை, பதவி, பொருளியல் நிலைகள் எதையும் முன்னிருத்திடாமல் மதிப்பளிக்க வேண்டும்; அதில் தவறக்கூடாது என்பது சரியே. அதே நேரத்தில் மற்றவருக்கு எதிர் மதிப்பும் இயல்பாகவே அளிக்கப்படும், கிடைக்கும். எனவே காணும் எவருக்கும் முதலில் மதிப்பளி பின், மதிப்பிடு. இதுதான் தன்மானம். எனவே மரியாதை தேவையில்லை.

தனிமனிதன் ஒவ்வொருவரின் தன்மான உணர்வு பெருகுவதற்கு முதலில் சொன்ன தீர்வுகள் செயல் பாட்டுக்கு வர அரசுக்குப் பெருமளவு நிதி ஆதாரம் வேண்டும். அதை எவ்வாறு ஏற்படுத்துவது என்பதற் கான வழிவகைகள் கீழே.

  1. நாட்டின் மிகப்பெரும் செலவினமான பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்படும் ரூ.9 இலக்கம் - ரூ.10 இலக்கம் கோடி அளவிற்கு இருப்பதை, பாக்கிசுத் தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான அயலுறவுக் கொள்கையை நல்லிணக்கத்துடன் மேற் கொண்டு, உடனடியாக பெருமளவு செலவைக் குறைத்திட வேண்டும்.
  2. வெகுமக்களின் உழைப்பால் பெரும் செல்வத் தையும் சொத்துக்களையும் குவித்துள்ள பெரு நிறு வனங்கள் தனியார்களிடமிருந்து நேரடி வரி விழுக் காட்டை அதிகரித்து வரி வருவாயை மேலை வளர்ந்த அய்ரோப்பிய நாடுகளில் உள்ளது போல் பெருக்கி, மொத்த வரி வருவாயில் இதன் பங்கு 80-90 விழுக்காடு அளவுக்கு ஆக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் வெகுமக்களின் ஏழ்மை நிலை யைப் போக்கிடும் வகையில் அவர்கள் மேல் விதித்து ஈட்டப்படும் தற்போதைய மறைமுக வரி விழுக்காட்டை குறைத்து தற்போது மொத்த வரி வருவாயில் 60-70 விழுக்காடு வரை இருப்பதைக் குறைத்து 10-20 விழுக்காட்டு அளவுக்குக் கொண்டு வரவேண்டும்.
  3. சொத்து வாங்குதல், மகிழுந்து வாங்குதல் போன்ற வற்றிற்கு பதிவுக் கட்டண விழுக்காடு ஒரே மாதிரி யாக இருப்பதை மாற்றி-அவற்றின் உயர்மதிப்பு, குறைவான மதிப்புக்கு ஏற்றவாறு முறையே உயர் அளவிலும் குறைந்த அளவிலும் விதிக்கப்பட வேண்டும்.
  4. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் துய்த்தல் பொருள்களான உயர்மதிப்பு உடைகள்-மது வகைகள், நறுமணப் பொருள்கள் போன்றவற் றிற்கு விதிக்கப்படும் வரிகளைப் பல மடங்கு அதி கரிக்க வேண்டும். இன்ன பிற வழிகளில் (வெகு மக்களின் மீது வரிச் சுமையைக் குறைத்து) நிதி ஆதாரத்தைப் பெருக்கலாம்.

தீர்வுகள் அதற்கான நிதிஆதாரங்களைப் பெருக்குவது என்பவையெல்லாம் கருத்தியலளவில் அடிப்படையாகப் புரிந்து கொண்டு, பெரும் வலி மையான போராட்டத்தின் மூலம் அரசுக்கு நெருக்கடி தந்துதான் செயல்படுத்த முடியும். முன்பாக இதற்கு இடதுசாரிக் கட்சிகள், அமைப்பு கள், ஒத்த கொள்கைகளைக் கொண்ட பிற கட்சிகள், அமைப்புகள் ஒருங்கே ஒன்றிணைந்து முன்னெடுத்து நடவடிக்கையுடன் கூடிய திட்டங்களை வகுத்திட வேண்டும்.

- இரா.பச்சமலை