“குடி அரசு” தொகுப்பின் 27 தொகுதிகளை பெரியார் திராவிடர் கழகத்தினர் 11-6-2010 அன்று காலை 11.00 மணியளவில் சென்னையில் பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிட்டனர். பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் திருவாரூர் கே. தங்கராசு தொகுதிகளை வெளியிட, இந்தியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் இரா. நல்லக்கண்ணு முதல் படியைப் பெற்றுக்கொண்டார்.
வழக்கறிஞர் எஸ். துரைசாமி வரவேற்புரையாற்றினார். பெ.தி.க. பொதுச் செயலாளர்கள் விடுதலை இராசேந்திரன் , கோவை கு. இராமகிருட்டிணன் மற்றும் ஆனூர் செகதீசன், வ. கீதா, வழக்கறிஞர் கிளாடிஸ் டேனியல் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 1925 முதல் 1938வரையிலான “குடிஅரசு” இதழ்களில் உள்ள பெரியாரின் பேச்சுகளையும் எழுத்துகளையும் தொகுத்து வெளியிடப் பெரியார் திராவிடர் கழகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முயற்சி செய்தது. இவற்றை வெளியிடப் பெரியார் திராவிடர் கழகத்துக்கு உரிமையில்லை எனக்கூறி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
“குடிஅரசு தொகுதிகளை பெரியார் திராவிடர் கழகம் வெளியிடத் தடையில்லை எனத் தனிநீதிபதி சந்துரு தீர்ப்புக் கூறினார். ஆனால், கி. வீரமணி இத்தீர்ப்பை எதிர்த்து மேல முறையீடு செய்தார். உயர்நீதிமன்ற அமர்வில் இரு நீதிபதிகள் எப்.எம். இப்ராகிம் கலிபுல்லா, என். கிருபாகரன் ஆகியோர், தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பு சரி என்று கூறி, கி. வீரமணியின் மேல்முறையீட்டு மனுவை 9.6.2010 அன்று தள்ளுபடி செய்தனர். பெரியாரின் படைப்புகளை யார் வேண்டுமானாலும் வெளியிடலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை என்று தீர்ப்புக் கூறினர்.
பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் ‘குடி அரசு’ 27 தொகுதிகளையும் ‘ரிவோல்ட்’ ஆங்கில ஏட்டின் கட்டுரைகளைத் தொகுத்து ஒரு தொகுதியையும் ஒரே நேரத்தில் வெளியிட்டனர். இந்தத் தொகுதிகள் அனைத்தையும் இணையத் தளத்தில் ‘periyardk.org’ இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளவும் ஏற்பாடு செய்துள்ளனர். 27 தொகுதிகளையும் கணினியில் யார்வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் குறுந்தகடு ‘pdf’ உருவாக்கி குடிஅரசு தொகுப்பு முன்பதிவு செய்தவர்களுக்கு இலவசமாக அளித்தனர்.
வெளியீட்டு நிகழ்ச்சி மிகவும் எளிமையாக நடைபெற்றது.
குடிஅரசு மற்றும் பிற இதழ்களிலிருந்து தொகுக்கப்பட்ட பெரியாரின் சொற்பொழிவுகளையும் எழுத்துகளையும் 1925 முதல் 1938 வரை ஆண்டு வாரியாக அமைத்து வெளியிட்டிருப்பது இத் தொகுதிகளின் தனிச்சிறப்பாகும்.
செய்தி : வாலாசா வல்லவன்