தூத்துக்குடியில் போராட்டம் தொடங்கிய முதல் 4 நாட்கள் கழிந்த உடன் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், தூத்துக்குடி கோட்ட வளர்ச்சி அதிகாரியும் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்துக்குள் 7 இடங்களிலும், அதைச் சுற்றி உள்ள 8 கிராமங்களிலும் நிலத்தடி நீரை எடுத்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு நிலத்தடி நீர் மாசுபட்டு இருந்தது தெரிய வந்தது.

அதாவது அதிக அளவு ஈயத் தாது தண்ணீரில் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மடத்தூர், காயலூரணி, தெற்கு வீர பாண்டியபுரம், குமரெட்டியபுரம், சில்வர்புரம், பண்டாரம் பட்டி, மீளவிட்டான் ஆகிய கிராமங்களில் இவ்வாறு நிலத்தடி நீர் மக்களின் உடல்நலத்தை கெடுக்கும் வகையில் மாசுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு, கிராம மக்களிடம் இந்த தண்ணீரை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை செய்து இருக்க வேண்டும். ஆனால், அது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வெளியே வரும் வரை இரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் தெரிவித்தார்.

இதற்கு முன்பும் 1998 நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படியும், 23.3.2013, 9.4.2018 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூட உத்தரவிட்டுள்ளது. கடந்த 23-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது.

முன்பெல்லாம் ஏதாவது ஒரு அரசு அமைப்பு ஆலையை மூட உத்தரவிட்டால், மற்றொரு அமைப்பு மூலமாகவோ அல்லது மேல்முறையீடு மூலமாகவோ அனுமதி பெற்று ஆலையை நடத்தி வந்துள்ளனர். அது மட்டும் அல்ல அனுமதி இல்லாத நேரங்களில்கூட ஆலையை நடத்திய வரலாறும் உண்டு.

இது தவிர, ஸ்டெர்லைட் ஆலையின் மாசு கட்டுப்பாட்டு கட்டமைப்புகள் மிகவும் தரக்குறைவாக உள்ளது. இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிவுரைப்படி, பெரிய அபாயகரமான தொழிற்சாலைகளை சுற்றி 500 முதல் 1000 மீட்டர் அகலம் வரை பசுமைப்பட்டி (மரங்கள், பூங்காக்கள்) வளர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலைக்கு 25 மீட்டர் மட்டும் போதும் என்று மாசுகட்டுப்பாட்டு வாரியம் சலுகை அளித்துள்ளது.

இந்த 25 மீட்டர் அகல பசுமை பட்டிக்கூட ஆலை தொடங்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை அமைக்கப்படவில்லை.

அதிக காற்று மாசு உருவாக்கும் தொழிற்சாலைகள் மாசின் தாக்கத்தை குறைப்பதற்கான முக்கிய கட்டமைப்பு புகைபோக்கி குழாய்கள் ஆகும்.

இதன் உயரம் சட்டப்படி 40 ஆயிரம் டன் உற்பத்தி திறன் கொண்ட ஆலைக்கு குறைந்தபட்சம் 70 மீட்டர் உயரம் கொண்ட புகைபோக்கி குழாய் அமைக்கப்பட வேண்டும். ஆனால், 1996 முதல் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையின் புகைபோக்கி உயரம் 60 மீட்டர்தான். இப்போது அதன் உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ள போதிலும் புகைபோக்கியின் உயரம் அதிகரிக்கப்படவில்லை. இது குறைந்தபட்சம் 123 மீட்டர் உயரம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாகக் கட்டப்பட உள்ள இதே திறன் கொண்ட இரண்டாவது உருக்காலைக்கு 165 மீட்டர் உயரம் கொண்ட புகைபோக்கி அமைக்கப் போவதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது குறைந்த உயரம் கொண்ட புகைபோக்கியின் காரணமாக காற்று மாசு சரியாகக் காற்றில் கலக்காமல், மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளில் அதிக அளவில் கலக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலை தொடங்கிய நாளில் இருந்து அனுமதி இன்றி இயங்கிய நாட்களின் விவரம் வருமாறு:

• 1997 ஏப்ரல் 1-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை (6 நாட்கள்)

• 1999 ஏப்ரல் 1-ந் தேதி முதல் மே 19-ந் தேதி வரை (49 நாட்கள்)

• 1999 டிசம்பர் 1-ந் தேதி முதல் 2005 ஏப்ரல் 18-ந் தேதி வரை (5 ஆண்டுகள், 4 மாதங்கள், 18 நாட்கள்)

• 2006 ஏப்ரல் 1-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை (6 நாட்கள்)

• 2006 அக்டோபர் 1-ந் தேதி முதல் நவம்பர் 11-ந்தேதி வரை (42 நாட்கள்)

• 2007 ஏப்ரல் 1-ந் தேதி முதல் மே 6-ந் தேதி வரை (36 நாட்கள்)

• 2007 அக்டோபர் 1-ந் தேதி முதல் 2009 ஜனவரி 1-ந் தேதி வரை (ஒரு ஆண்டு, 3 மாதங்கள்)

• 2009 ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஆகஸ்டு 13-ந் தேதி வரை (4 மாதங்கள், 13 நாட்கள்)

• 2010 ஜனவரி 1-ந் தேதி முதல் 2011 ஏப்ரல் வரை (ஒரு ஆண்டு, 4 மாதங்கள்)