உத்தரப் பிரதேசத்தில் ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26-ஆம் தேதி வரை நடைபெற்ற கும்ப மேளாவில் 66 கோடி பேர் திரண்டதாகவும், உலகின் மிகப் பெரிய ஆன்மீகத் திருவிழா இதுதான், இதற்கு ஈடாக மக்கள் கூடிய இன்னொரு கொண்டாட்டத்தை காட்ட முடியுமா என்றும் சங்கிகள் பெருமிதம் தெரிவிக்கின்றனர்.
ஆனால் 66 கோடி பேர் என்று சங்கிகள் கூறுவது வாய்க்கு வந்ததை அள்ளிவிடும் கட்டுக்கதை என்று ஊடகங்கள் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஏனெனில் கும்பமேளா நடைபெற்ற பிரயாக்ராஜிற்கு விமானத்தில் சென்றவர்கள் எண்ணிக்கை 5.6 லட்சம் பேர். ரயிலில் சென்றவர்கள் எண்ணிக்கை 4.24 கோடி பேர். அரசுப் பேருந்துகளில் சென்றவர்கள் 3.25 கோடி பேர். தனியார் பேருந்துகளில் சென்றவர்கள் 2.7 கோடி பேர். ஒட்டுமொத்தமாக சேர்த்தால் 10.25 கோடி பேர்தான் ரயில்கள், விமானங்கள், பேருந்துகள் மூலம் சென்றிருப்பார்கள்.
இதில் கார்கள், இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் எண்ணிக்கை குறித்து எந்த கணக்கும் இல்லை. ஆனால் ரயிலில் சென்றவர்களை விடவோ, பேருந்துகளில் சென்றவர்களை விட கூடுதலாக எண்ணிக்கையில் கார்களிலும், பேருந்துகளிலும் சென்றிருக்க முடியாது என்பதுதான் எதார்த்தம். எனவே 66 கோடி பேர் கூடினார்கள் என்பது அப்பட்டமான பொய்.
உத்தரப் பிரதேசத்தில் வாழும் இந்துக்களின் எண்ணிக்கை மட்டுமே 16 கோடி. அவர்களே முழுமையாகச் செல்லவில்லை என்பதைத்தான் இந்த கணக்குகள் காட்டுகின்றன.
அதேபோல கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 என்கிறது ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள். ஆனால் இதில் மூடிமறைக்கப்பட்ட உயிரிழப்புகள் இன்னும் இருக்கிறது என்பதே ஊடகங்கள் சொல்லும் செய்தி. குறைந்தபட்சமாக 69 பேர் வரை உயிரிழந்திருப்பதாக நியூஸ் லாண்டரி ஊடகம் காவல்துறை தரவுகளின் அடிப்படையில் செய்தி வெளியிட்டிருக்கிறது.
- விடுதலை இராசேந்திரன்