அதிமுக ஆட்சியின் கடைசி ஒன்றரை ஆண்டுகளில் சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய ஐந்து மாவட்டங்களைத் தவிர வேறெங்கும் சுயமரியாதைத் திருமணச் சட்டத்தின்கீழ் சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவுகளே நடைபெறவில்லை. சுயமரியாதை, சாதி மறுப்புத் திருமணங்களை நடத்தியவர் தோழர் ரமேஷ் பெரியார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற விவரங்கள் மூலம் இது தெரிய வந்துள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங் களில் கடந்த 2 ஆண்டுகளில் 9 அலுவலகங்களில் மட்டுமே சுயமரியாதைத் திருமணச் சட்டத்தின் கீழ் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. அதிமுக முன்னாள் அமைச்சர்களின் மறைமுக மிரட்டலே இதற்குக் காரணம் என்பது பரவலான குற்றச்சாட்டு. ஆனால் ஆட்சி மாறியும் சார் பதிவாளர்களின் மனநிலை இன்னும் மாறாமல் அப்படியே நீடிக்கிறது.

இப்போதும் ஜாதி கடந்து, காதல் திருமணம் செய்வோர் சுயமரியாதைத் திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய மிகுந்த போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை நாடு முழுவதும் சட்டப்பூர்வமாக்க திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டுமென சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

சுயமரியாதை பதிவுத் திருமணங்களை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தும் அரசின் மனநிலைக்கு மாறாக சார்பதிவாளர்கள், அதிமுக ஆட்சிக்கால மனநிலையிலேயே இருந்து கொண்டு ஜாதி மறுப்பாளர்களின் சுயமரியாதை திருமணங்களுக்கு முட்டுக்கட்டை போடுவது எவ்விதத்திலும் நியாயமல்ல. கடந்தகால நெருக்கடிகளை நீக்கி, மிக எளிமையாக சுயமரியாதை திருமணங்களை பதிவுசெய்யும் சூழல் மீண்டும் ஏற்பட வேண்டும்.

அதற்கான தெளிவான ஆணையை அரசு பிறப்பிக்க வேண்டும்; அண்ணா கொண்டு வந்த மகத்தான சமூகப் புரட்சித் திட்டத்தைக் காப்பாற்றியாக வேண்டும்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It