பல முனைகளிலிருந்தும் தமிழர்களைத் தாக்கி அழிக்கிறது இரக்கமற்ற சிங்கள அரசு. இலங்கைப் பிரச்சினை உச்சத்திற்கு வரும்போதெல்லாம் தமிழக முதல்வர் கலைஞரின் மீதும் பல முனை தாக்குதல்கள் நடைபெறுவது வழக்கமாகிவிட்டது. கலைஞரை ஆதரிப்போரின் பார்வையும் விமர்சிப்போரின் பார்வையும் பலவிதமாக இருக்கின்றன.

கலைஞர் கைவிடமாட்டார்

கருணாநிதி ஏமாற்றிவிட்டார்

கலைஞர் நினைத்தால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும்

கலைஞர் தன் சக்திக்குட்பட்டதை செய்துகொண்டு தானிருக்கிறார்

கருணாநிதி தமிழினத்திற்கு துரோகம் செய்கிறார்

இப்படி பலவிதமான பார்வைகளுடன், ஈழத்தமிழர் பிரச்சினையில் கலைஞரை விமர்சிப்பதும் ஆதரிப்பதும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. பார்வைகள் பலவிதமாக இருப்பதற்கு அவரவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் காரணமாக இருப்பதுடன், ஈழத்தமிழர் சிக்கலில் தி.மு.க. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பார்வை கொண்டிருந்ததும் முக்கிய காரணமாக இருப்பதை மறுப்பதிற்கில்லை.

1956லேயே இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்தவர் கலைஞர் என்பது வரலாறு. 1983இல் இனப்படுகொலை உச்சகட்டத்திற்கு சென்ற நேரத்தில், தனித்தமிழீழம்தான் தீர்வு என்பது தி.மு.கவின் பார்வையும் நிலைப்பாடுமாகும். அதனைத் தொடர்ந்து, டெசோ என சுருக்கமாகச் சொல்லப்பட்ட தமிழீழ பாதுகாப்பு அமைப்பை தொடங்கி, அதன் சார்பில் மாநாடு நடத்தி, அகில இந்தியத் தலைவர்களை அழைத்துவந்து, இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும் என்பதை இந்தியத் தேசியத் தலைவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றதில் கலைஞருக்கு முக்கிய பங்கு உண்டு.

ஈழப்போராளிக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட சகோதர யுத்தத்தால், விடுதலைப்புலிகள் இயக்கம் எம்.ஜி.ஆரின் ஆதரவுக்குரியதாகவும், சிறீசபாரத்தினத்தின் டெலோ இயக்கம் கலைஞரின் ஆதரவுக்குரியதாகவும் தமிழக அரசியல் போட்டிக்குள் சிக்கிக்கொண்டன. சபாரத்தினம் கொல்லப்பட்டதைக் கண்டித்து கலைஞர் எழுதிய கடிதம் பல ஊர்களிலும் சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டன. அந்தக் காலக்கட்டத்திலும் தமிழீழமே தீர்வு என்பதுதான் தி.மு.க.வின் நிலைப்பாடாக இருந்தது.

பத்மநாபா படுகொலை, ராஜீவ்காந்தி படுகொலை போன்ற துன்பியல் சம்பவங்களால் தமிழகத்தில் வேறெந்த அரசியல் கட்சியும் சந்திக்காத இழப்புகளைத் தி.மு.க. சந்திக்க நேர்ந்தது. இதன் பிறகு, ஈழச்சிக்கல் குறித்த அதன் பார்¨வியிலும் அணுகுமுறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. தனிநாடோ, சுயநிர்ணய உரிமையோ, ஒன்றுபட்ட தேசத்திற்குள் இனச்சிக்கலுக்கான தீர்வோ எதுவாக இருந்தாலும் அதனை ஈழத்தமிழர்களே முடிவு செய்வார்கள் என்றும் அவர்களின் முடிவை தி.மு.க. ஆதரிக்கும் என்றும் கலைஞர் அறிவித்த காலகட்டமும் உண்டு. கவிஞர் அறிவுமதி அவர்கள் சொன்னதுபோல, ஈழத்தமிழர் பிரச்சினையைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர். கொடுத்த தொகை அதிகம். கலைஞர் கொடுத்த விலை அதிகம்.

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டது. ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான ஜெயின் கமிஷன் விசாரணையை தி.மு.க. எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது. அந்தக் கமிஷனின் இடைக்கால அறிக்கையை வைத்துக்கொண்டு இங்கு நடத்தப்பட்ட அரசியல் விளையாட்டுகளால், ஈழச்சிக்கலில் தி.மு.கவின் அணுகுமுறை மிகவும் எச்சரிக்கையுடன்கூடிய போக்கிலேயே அமைந்தது. தி.மு.க. மீது அதன் அரசியல் எதிரிகள் தேசத்துரோக குற்றம்சாட்டுகிற அளவுக்கு இங்கே அரசியல் நிகழ்வுகள் மலிவானதால், அதனை எதிர்கொண்டு அரசியலில் தாக்குப்பிடிக்க வேண்டிய நிலைமைக்கு தி.மு.க. தள்ளப்பட்டது. ஈழப்பிரச்சினை தொடர்பான போராட்டங்களில் அதன் நேரடிப் பங்களிப்பு குறைந்துபோனது.

அதே நேரத்தில், மத்தியில் தொடர்ச்சியாக அமைந்த அரசுகளில் தி.மு.க.வுக்கு முக்கியத்துவம் கூடிக்கொண்டே இருந்ததால், இந்தியப் பேரரசை வழிநடத்தும் தலைவராக கலைஞர் அடையாளப்படுத்தப்பட்டார். மத்தியில் தி.மு.க. ஆதரவுடன் காங்கிரஸ் தலைமையிலான அரசு, தமிழகத்தில் காங்கிரஸ் தயவுடன் தி.மு.க. அரசு என்ற நிலை ஏற்பட்டபிறகு, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசின் நிலைப்பாடே எங்களின் நிலைப்பாடு என்று அறிவிக்க வேண்டிய கட்டத்திற்கு கலைஞர் வந்தார்.

ஈழத்தமிழர் பிரச்சினையில் மத்திய அரசின் நிலைப்பாடுதான் என்ன?

ராஜபக்சே அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு என்பதே இன்றைய மத்திய அரசின் நிலை. போர் நிறுத்தம் குறித்து முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிகள் கூடி தீர்மானம், தமிழகத்தின் அனைத்து எம்.பி.க்களும் ராஜினாமா செய்வார்கள் என்ற கெடு, சென்னையிலிருந்து செங்கல்பட்டு வரையில் கொட்டும் மழையில் மாபெரும் மனிதச் சங்கிலி, சட்டமன்றத்தில் தீர்மானம், பிரதமரை தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் முதல்வர் தலைமையில் நேரில் சென்று வலியுறுத்தல் என இத்தனைக்குப் பிறகும், போர் நிறுத்தம் பற்றி இந்திய அரசு வாயே திறக்கவில்லை. மாறாக, தமிழின அழிப்புப் போரை நடத்திக் கொண்டிருக்கும் ராஜபக்சே அரசின் ராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு இந்திய அரசின் நிர்வாகம் பாராட்டு தெரிவிக்கிறது.“இந்தியா எங்களுக்கு ஆதரவாக இருக்கும். போர் நிறுத்தத்தை வலியுறுத்தாது“ என்று தொடர்ச்சியாக சொல்லி வருகிறார்கள் இலங்கை அரசினர்.

இந்தியாவின் பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கைக்கு ரேடார்களை வழங்கினோம் என கோபாலபுரத்தில் கலைஞரை சந்தித்துவிட்டு வெளியே வந்த வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒப்புக்கொண்டதையும் மறக்கமுடியாது. இந்தியப் படையினர் இலங்கை மண்ணில் இருப்பதற்கான புகைப்படங்களும் வெளியாகிவருகின்றன. இந்திய உளவுப்பிரிவான ரா அமைப்புக்குச் சொந்தமான விமானம் இலங்கையின் மீது பறந்து படங்கள் எடுத்ததாகவும், இந்தியக் கடற்படை கப்பல்கள் இலங்கை எல்லையில் நிலை கொண்டிருப்பதாகவும் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக செய்திகள் வெளியாகின்றன.

இவையனைத்துமே, போர் நிறுத்தத்தை இந்தியா வலியுறுத்தாது என இலங்கை அரசு நிர்வாகத்தினர் முன்மொழிந்ததை வழிமொழியும் வகையிலான செயல்பாடுகளாகவே இருக்கின்றன. நீண்ட தாமதத்திற்குப்பின் இலங்கைக்கு பிரணாப் முகர்ஜி மேற்கொண்ட பயணமும் இதைத்தான் உறுதிப்படுத்துகிறது. இதுதான் இந்திய அரசின் நிலைப்பாடு என்பது எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரியும்போது கலைஞருக்கு மட்டும் தெரியாமல் இருக்குமா? இதன்பிறகும் அவர் ஏன் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்காமல் இருக்கிறார் என்றும், அவர் நினைத்தால் மத்திய அரசை ஆட்டிவைக்கமுடியுமே என்றும் சொல்பவர்கள் இருக்கிறார்கள்.

மத்தியில் உள்ள மன்மோகன்சிங் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதெல்லாம் இன்றைய சூழலில் தி.மு.க.வால் நடக்காத காரியம். தமிழகத்தில் 40 எம்.பிக்கள் இருக்கிறார்ளே என்று கேட்கலாம். அந்த நாற்பதில் 10 எம்.பிக்கள் காங்கிரஸ் எம்.பிக்கள். அவர்கள் தங்கள் ஆட்சிக்குத் தாங்களே நெருக்கடி கொடுப்பார்களா? மீதமுள்ள 30 எம்.பிக்களில் 6 பேர் பா.ம.கவினர். மத்திய அரசை கலைஞர் வலியுறுத்தவேண்டும் என்று சொல்லும் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கு டெல்லியில் நிலவரம் என்ன என்பது நன்றாகவே தெரியும்.பிப்ரவரி இறுதியில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிவடைகிற நிலையில் பா.ம.கவின் மத்திய அமைச்சர்கள் பதவி விலகுவதால் என்ன பலன் என்று ராமதாஸ் கேட்டிருப்பதை மறந்துவிடக்கூடாது.

ம.தி.மு.கவின் 2 எம்.பிக்களும் சி.பி.எம். கட்சியின் 2 எம்.பிக்களும், சி.பி.ஐ.கட்சியின் 2 எம்.பிக்களும் போயஸ் தோட்டத்தில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். மீதமுள்ள 18 எம்.பிக்கள்தான் (எல்.ஜி-செஞ்சி உள்பட) தி.மு.க. வசமிருக்கிறார்கள். இந்த 18 எம்.பிக்களின் நிர்பந்தத்தால் மத்திய அரசு எந்த நெருக்கடியையும் எதிர்கொள்ளப்போவதில்லை. 60க்கும் மேற்பட்ட இடதுசாரி எம்.பிக்களின் ஆதரவு திரும்பப் பெறப்பட்ட நிலையிலேயே நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் வெற்றி பெறுவது எப்படி என்பதை நிரூபித்துவிட்டார் மன்மோகன்சிங். இப்போது அவரது அரசு நிலைத்திருப்பது, தி.மு.க. ஆதரவில் அல்ல. முலாயம்சிங்கின் சமாஜ்வாடி கட்சியின் ஆதரவில்.

அப்படியெனில் செல்வாக்கில்லாத மத்திய அரசில் ஏன் நீடித்திருக்கவேண்டும்? வெளியேற வேண்டியதுதானே என்ற கேள்வி கலைஞரை நோக்கிக் கேட்கப்படுகிறது. ஏனெனில், கேட்பது எளிது. மத்திய அரசுக்கான ஆயுள் இன்னும் ஒன்றிரண்டு மாதங்களே உள்ள நிலையில் தி.மு.க. வெளியேறுவதால் டெல்லியைப் பொறுத்தவரை இருதரப்புக்கும் எந்த நட்டமும் இல்லை. ஆனால், மாநிலத்தில் உள்ள தி.மு.க. அரசுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால் அது காங்கிரஸ் கட்சியின் 35 எம்.எல்.ஏக்களின் தயவில்தான் நீடித்துக் கொண்டிருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகால ஆயுள் இருக்கிறது. இதுதான் கலைஞர் எதிர்கொள்ளும் நெருக்கடி.

ஈழத்தமிழர் பிரச்சினைக்காக பதவியைத் து¡க்கி எறிந்துவிட்டு, தேர்தலைச் சந்தித்தால் பெரும்பான்மை பெறலாமே எனச் சொல்வோரின் குரலும் பலமாக கேட்கிறது. இதற்கு முன் ஈழத்தமிழர் பிரச்சினைக்காக ஆட்சியை இழந்த கட்சி தி.மு.க. மட்டும்தான். அதனைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் ஒற்றை இடம் மட்டுமே தி.மு.க.வுக்கு கிடைத்தது என்பது வரலாறு. ஆட்சியை இழக்கவேண்டியதுதானே என இன்று கேட்பவர்கள் அன்றும் இருந்தார்கள். ஈழப்பிரச்சினைக்காக ஆட்சியை இழந்த தி.மு.கவை மீண்டும் பதவியில் அமர்த்துவோம் என்று யாரும் தி.மு.கவுக்கு ஆதரவாக தேர்தல் களத்திற்கு வரவில்லை. இப்போதும் அதே நிலைதான்.

இரண்டு முறை ஆட்சியை இழந்த கலைஞரை நோக்கி, கொள்கை என்பது வேட்டி- பதவி என்பது தோளில் உள்ள துண்டு என்று அண்ணா சொன்னதை நினைவுபடுத்தி, பதவியை இழக்கச் சொல்பவர்கள் யாரும் ஈழத்தமிழர்களுக்காக தங்கள் தோளில் போட்டுள்ள துண்டைக்கூட இழக்கவில்லை என்பதையும் இங்கு நினைவுகூரவேண்டும். அதுமட்டுமல்ல, ஈழத்தமிழினம் அழிக்கப்படுகின்ற நேரத்தில், கலைஞர் என்ன செய்தார் என்று கேட்பவர்களில் பெரும்பாலானவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் தமிழக மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான் என்றும், விடுதலைப்புலிகளிடம் மனிதக்கேடயமாக தமிழர்கள் சிக்கியிருப்பதால்தான் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி ராஜபக்சேவின் தங்கச்சி போல பேசும் ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்குத்தான் அவர்கள் துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். நேரடி ஆதரவு, மறைமுக பேரம், நடுநிலைமை என ஏதேனும் ஒரு வகையில் இவர்கள் ராஜபக்சேவின் தங்கச்சிக்குத் துணை நிற்கிறார்கள்.

கலைஞரை பதவி இழக்கச் செய்துவிட்டு, ஜெயலலிதாவை முதல்வராக்கத் துடிக்கும் முயற்சிக்கு துணை நின்றால் ஈழத்தமிழினத்திற்கு விடிவுகாலம் ஏற்பட்டுவிடுமா? 2009ல் முல்லைத்தீவுக்குள் சிங்கள ராணுவம் நுழைந்தபோது தமிழகத்தில் எழுந்த உணர்ச்சியலைக்கும், 1995ல் யாழ்ப்பாணத்தை சிங்கள ராணுவம் பிடித்தபோது இங்கே நிலவிய மயான அமைதிக்குமான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். முல்லைத்தீவு தாக்குதல் நடந்தபோது கலைஞர் ஆட்சி. எல்லோரும் பதைபதைத்து குரல் கொடுத்தனர். யாழ்ப்பாணத் தாக்குதலின்போது ஜெயலலிதா ஆட்சி. அதனால்தான் அந்த மயான அமைதி. இதுதான் கலைஞர் ஆட்சிக்கும் ஜெயலலிதா ஆட்சிக்குமான அடிப்படை வேறுபாடு.

மீண்டும் ஜெயலலிதா ஆட்சியைக் கொண்டுவந்து, மீண்டும் பொடா போன்ற சட்டங்களில் கைதாகி சிறைவளாகத்தில் •புட்பால் விளையாடிக்கொண்டும், வாலிபால் விளையாடிக் கொண்டும் பொழுதுபோக்கலாம் என்று நினைப்பவர்களுக்கும், புத்தகங்களாக எழுதிக் குவிக்கலாம் என நினைப்பவர்களுக்கும் கலைஞர் ஆட்சியை அகற்றும் எண்ணம் இருக்கலாம். ஈழத் தமிழினத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டவர்களுக்கு கலைஞர் ஆட்சி கவிழ்வதால் ஈழத்தமிழனுக்கு எந்த நன்மையும் விளையப்போவதில்லை என்பது தெரியும். இப்போது மட்டும் என்ன நடந்துவிட்டது என்பது அடுத்த கேள்வி.

தமிழகத்தின் முதல்வர் என்ற முறையில் கலைஞரால் செய்யக்கூடியது இப்பிரச்சினை குறித்து மத்திய அரசுக்கு வலியுறுத்துவதும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிக்கலுக்கு இடமளிக்காமல் நடைபெறும் ஈழத்தமிழர் ஆதரவு ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி அளிப்பதும்தான். இதுதான் இன்றைய அரசியல் நிலைமையில் அவரது அதிகாரவரம்பிற்குட்பட்டு செய்ய முடியும். ஒன்றுபட்ட இந்தியாவுக்குள் இருக்கும் தமிழகம் என்ற மாநிலத்தின் முதல்வர் என்ற முறையில் இதற்கு மேல் கலைஞரிடம் எந்த அதிகாரமும் இல்லை என்பதை ஈழத்தமிழர் நலனுக்கானப் போராட்டங்களை முன்னின்று நடத்துகின்ற தலைவர்களும் அறிவார்கள்.

ஈழத்தமிழர் பிரச்சினைக்காக கலைஞரிடமிருந்தும் மாறி மாறி குரல்கள் வெளிப்பட்டன. எத்தனை முறை குரல்கள் ஒலித்தாலும் மத்திய அரசு அதை மதிக்கவே இல்லை. இதனால், ஈழத்தில் ஆயுதப்போராட்டத்தை அழித்தொழிக்கிறேன் என்ற பெயரில் அப்பாவித் தமிழர்களைக் கொல்லும் ராஜபக்சே அரசுக்கு ஆதரவுக்கரம் கொடுத்த மத்திய அரசில், தி.மு.க. மவுன சாட்சியாக இருந்தது என்ற விமர்சனத்திற்கு கலைஞர் ஆளாகியிருக்கிறார். இது ஓர் அரசியல் அவலம். ஈழப்பிரச்சினை என்பது தமிழகத்தில் பல கட்சிகளுக்கும் வாய்த்த முன்நகர்வு. தி.மு.க.வுக்கோ பதுங்கு குழி. இப்போது அதுதான் நிலைமை.

ஈழத்தமிழர் பிரச்சினையில் ஒரு நிலைப்பாடு, தேர்தல் கூட்டணிக்காக இன்னொரு நிலைப்பாடு என தமிழகத் தலைவர்கள் பலர் தங்கள் கட்சி நலன் சார்ந்து எடுத்திருக்கும் முடிவைப்போலவே, தி.மு.க. தலைவரான கலைஞரும் தனது கட்சியின் நலனையும் ஆட்சியின் பாதுகாப்பையும் கவனத்திற்கொண்டே ஈழத்தமிழர் பிரச்சினையை அணுகுகிறார். ஆட்சியதிகாரத்தில் இல்லாதவர்கள் விமர்சனத்திலிருந்து தப்பிவிடுகிறார்கள். ஆட்சியதிகாரத்தில் இருப்பவர் விமர்சன வலையில் வசமாகச் சிக்கிக் கொள்கிறார்.

கலைஞரின் தமிழுணர்வு அவரது இளமையிலிருந்து தொடர்வது. காங்கிரஸ் தயவில் நடைபெறும் தனது ஆட்சியைக் கவிழ்க்க ஜெயலலிதாவும் அவரது அணியைச் சேர்ந்தவர்களும் தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையிலும் கலைஞரின் உணர்வு வெளிப்பட்டே வந்திருக்கிறது. இந்தத் தமிழுணர்வு, ஆட்சிக்கு ஆபத்து நேர்ந்துவிடக்கூடாது என்கிற பாதுகாப்புணர்வுடனேயே வெளிப்படுவதால் கலைஞரை விமர்சிப்பது மிகவும் எளிதாகிவிடுகிறது. இந்த விமர்சனம் தடுக்க முடியாதுதான். ஆனால், அந்த விமர்சனங்களையும் தாண்டித்தான் அவரது தமிழுணர்வு, தமிழ்ச்செல்வனுக்கான இரங்கல் கவிதையாக, செஞ்சோலைப் பிஞ்சுகளுக்கான சட்டமன்ற அஞ்சலித் தீர்மானமாக, ஈழத்தில் அமைதி ஏற்பட வேண்டும் என்ற குரலாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

ஈழப்பிரச்சினையின் இன்றைய சூழலில், தமிழகத்தில் போராட்ட வடிவங்கள் வேறுவேறு கட்டத்திற்கு சென்றுவிட்ட நிலையில் கலைஞரின் அறிக்கைகளும் தீர்மானங்களும் அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் விமர்சனத்திற்குள்ளாகின்றன. எத்தகைய வரலாற்றுப் பின்னணியில் கலைஞரின் குரல் ஒலிக்கிறது என்பதைக் கவனிப்பதற்கான அவகாசமும் தற்போதைய போராட்டக்களத்தில் இல்லை. தீக்குளிப்பு, மறியல், பொது வேலைநிறுத்தம் என தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைப்பெறும் நிலையில், கலைஞரின் அமைதிகரமான நடவடிக்கைகள் அவரது அரசியல் எதிரிகளால் மட்டுமின்றி, தமிழுணர்வாளர்களாலும் விமர்சனத்திற்கும் கிண்டலுக்கும் உள்ளாகும் நிலைமைதான் தற்போது நிலவுகிறது. இதனை கலைஞரின் தலைமையையேற்றுள்ள தி.மு.க.வின் தொண்டர்கள் எந்தளவு உணர்ந்திருக்கிறார்கள் என்பதும் கேள்விக்குரியதே.

80களில் ஈழத்தமிழர் போராட்டத்தை முன்னின்று நடத்திய அரசியல் இயக்கமான தி.மு.கவைச் சேர்ந்த இன்றைய எம்.எல்.ஏ ஒருவர், ஈழத்தமிழர்கள் நலனை வலியுறுத்தி தீக்குளித்த இளைஞர் முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தச் சென்றபோது, அங்கிருந்தவர்களால் அடித்து விரட்டப்பட்டிருக்கிறார். இது ஈழத்தமிழர் பிரச்சினையில் தி.மு.க.வின் நிலைப்பாடு பற்றி இன்றைய தலைமுறை என்ன நினைக்கிறது என்பதன் வெளிப்பாடுதான். இதையாவது தி.மு.க. உணர்ந்துள்ளதா?

ஈழத்தமிழர் நலன் காக்கப்பட வேண்டும் என்ற உணர்வு தமிழக மக்களின் நெஞ்சில் எப்போதும் கனன்று கொண்டிருக்கிறது. அது அவ்வப்போது எழுச்சியாக வெளிப்படுவதையும் காண்கிறோம். முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டு, நள்ளிரவு வரை எழுச்சியுடன் நடந்து சென்றதும், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அறிவித்த பொதுவேலை நிறுத்த அழைப்பை ஏற்று தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடையடைப்பு நடத்தப்பட்டதும் தி.மு.க என்ற அரசியல் இயக்கம் கவனிக்க வேண்டிய அம்சமாகும்.மக்களின் இத்தகைய உணர்வுகளை ஒருங்கிணைத்து தலைமையேற்க வேண்டியவர் கலைஞர்தான். அவர் தனது ஆட்சிப்பாதுகாப்பு என்ற நெருக்கடியில் இருப்பதால், அ.தி.மு.க. அணியில் தற்போது இருப்பவர்களும் இணையப்போகிறவர்களும் மக்களின் உணர்வை பிரதிபலிக்கச் செய்யும் அணியினராக தோற்றம் பெற்றிருக்கிறார்கள் என்பதையாவது தி.மு.க. உணர்ந்திருக்கிறதா என்பதும் கேள்விக்குறிதான்.

தி.மு.கவினர் இதையெல்லாம் கவனிக்காமலிருப்பதற்கு காரணமென்னவெனில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஜெயலலிதா களமிறங்கவில்லை என்பதுதான். அவர் ராஜபக்சேவின் தங்கச்சியாகவே பேசிவருகிறார். அதேவேளையில், இந்திய அளவில் முக்கியத்துவம் மிக்க தலைவராக கலைஞர் இருந்தாலும், தி.மு.க.வின் அரசியல் என்பது ஜெயலலிதாவை சமாளிப்பது என்கிற அளவுடன் சுருங்கிப் போயிருப்பதன் விளைவே ஈழத்தமிழர் பிரச்சினை உள்பட இன-மொழி-சமுதாய அடிப்படையிலான பல பிரச்சினைகளிலும் தி.மு.க.வினர் போதிய கவனம் செலுத்தாமல் இருப்பதற்கான காரணம். அ.தி.மு.க. இப்பிரச்சினையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்து, அதை ஓட்டாக மாற்ற முயற்சித்தால் அதைவிட வேகமாக தி.மு.கவினரின் குரல் ஒலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

1956ல் இலங்கைப் பிரச்சினை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டில்தான், தேர்தலில் தி.மு.க. போட்டியிடுவது தொடர்பான வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. தேர்தலில் போட்டியிடுவது என்பதில் இன்றுவரை தி.மு.கவிடம் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், இலங்கைப் பிரச்சினையில் காலத்திற்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப அணுகுமுறைகள் மாறிக்கொண்டே வந்துள்ளன. தற்போதைய அணுகுமுறை என்ன என்பது பற்றி தி.மு.க. தொண்டர்கள் பலருக்கே தெரியாத நிலைமை.

கொள்கையும் அதனைச் சார்ந்த உணர்வும் கட்சியின் அடிமட்டம் வரை பாய்வதுதான் அரசியல் இயக்கத்திற்கு நிரந்தர பலம் என்பதை கலைஞரும் கழகத்தின் மூத்த தலைவர்களும் அறியாதவர்களல்லர். கூட்டணியை மட்டும் நம்பி கடைசிவரை காலம் தள்ளிவிடமுடியாது. அதுவும், ஈழத்தமிழர் பிரச்சினையில் இயல்பான கூட்டணி என்பது அ.தி.மு.கவும் காங்கிரசும்தான். இவ்விரு கட்சியினரும்தான் ஈழச்சிக்கலை வெறும் தீவிரவாதப் பிரச்சினையாக்கி அரசியல் குளிர்காய்பவர்கள். ஆனால் தமிழக அரசியலின் கெட்ட வாய்ப்பாக, காங்கிரஸ் தயவில் தி.மு.க. ஆட்சி நடைபெறவேண்டிய நிலைமையும், அ.தி.மு.க தலைமையின் காலடியில் ஈழத்தமிழர் ஆதரவு கட்சிகள் வீழ்ந்துகிடக்கின்ற நிலைமையும் உள்ளன. இந்தக் கூட்டணிகள் எத்தனை காலத்திற்குத் தாக்குப்பிடிக்கும்?

கூட்டணிகள் நிரந்தரமில்லை. கொள்கையும் உணர்வுமே நிரந்தரம். அதனை 1 கோடி உறுப்பினர்களைக் கொண்ட இயக்கம் சரிவர உணராவிட்டால், ஈழத்தமிழர் பிரச்சினையில், விமர்சனத்திற்கு உள்ளாவதை தடுக்க முடியாது. “கையில் ஊமன் கண்ணில் காக்கும் வெண்ணெய் உருகுவது போன்ற நிலைமையில் இருக்கிறோம்“ என்ற கலைஞரின் வேதனை மட்டுமே மிஞ்சும். கலைஞரின் இத்தகைய வேதனைகளில் துணை நிற்பவர்கள் குறைவு. அவரை விமர்சிப்பவர்களே அதிகமாகவும் இன்று ஊடகங்களை அதிகம் பயன்படுத்திக் கொள்ளக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். “கருணா காட்டிக் கொடுத்தார். கருணாநிதி கண்டுகொள்ளாமல் இருந்தார்“ என்கிற அளவுக்கு கலைஞர் மீது விமர்சனப்பழி சுமத்தக்கூடிய நிலைமை ஊடகங்கள் வழியே உருவாக்கப்பட்டு வருகிறது.

இத்ததைகய விமர்சனங்களின் எதிர்கால விளைவு என்ன என்பதையாவது உணரக்கூடிய நிலைமையில் இருக்கிறதா இன்றைய தி.மு.க? கலைஞர் மீது சுமத்தப்படும் பழிகளுக்கு, அவரே பதிலளித்து தனது நிலைப்பாட்டை விளக்கி, அதற்கும் விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை தொடர்ந்துகொண்டேதான் இருக்கும் போலும்.

- கோவி. லெனின் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It