kumaresan 450

நம்பிக்கைகளும் மூடநம்பிக்கைகளும் என்னும் சிறு நூலைத் தோழர் தீக்கதிர் குமரேசன் அவர்கள் எழுதிக் கருஞ்சட்டைப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இந்நூலின் சாராம்சம் நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்குமான வேறுபாடு. மூடநம்பிக்கைகளின் மூலம் பயனடைவோர் யார், பாதிக்கப்படுகிறவர்கள் யார், பார்ப்பனர்களிடம் மூடநம்பிக்கை குறைவாகவும் மற்ற சமூக மக்களிடம் அதிகமாகவும் இருப்பதற்குக் காரணம் என்ன  என்று பல கேள்விகளை எழுப்பி அதற்கு நிறைவான பதிலையும் தருகிறார் இந்நூலின் ஆசிரியர்.

நாம் பலர் இப்படிச் சொல்வதைக் கேட்டிருப்போம். எனக்கு மூட நம்பிக்கை கிடையாது ஆனால் கடவுள் நம்பிக்கை உண்டு என்பார்கள். கடவுள் நம்பிக்கையே மூடநம்பிக்கை தானே! ஐன்ஸ்டீன் கூற்றின்படி "The word God is for me nothing more than the expression and product of human weaknesses". மனிதனின் அச்சத்திலிருந்தே மூடநம்பிக்கை உருவாகிறது. இந்நூலின் ஆசிரியர் மொழியில் "ஒன்றைச் செய்தால் அல்லது செய்யத் தவறினால் தீங்கு விளையும் என்ற அச்சத்தின் அடிப்படையில், தீங்கைத் தவிர்க்க அல்லது ஏற்கனவே ஏற்பட்டுவிட்ட தீங்கைப் போக்க ஒரு மாற்றுச் செயலைக் கடைபிடிப்பதே மூடநம்பிக்கை எனலாம்." மூடநம்பிக்கைகள் குடும்பம், சமூகம், சமயம் என்று பல கட்டமைப்புகளின் அறிவுரைகளாகப் பயிற்றுவிக்கப்படுகின்றன.

மூடநம்பிக்கைகள் நிரம்பியிருக்கும் எந்த ஒரு சமூகமும் முன்னேறாது என்று பொதுவில் சொன்னாலும் இவற்றால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்களே!  எந்த நாட்டிலாவது தான் முதலில் இறந்து விட வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டு விரதம் இருப்பார்களா? வரலட்சுமி நோன்பு என்கின்ற பெயரில் இந்த "பாரத தேசத்தில்" தான் இது நிகழும். இந்நூலின் ஆசிரியர் கூறுவது போல 70% பெண்கள் இரத்த சோகையால் பீடிக்கப்பட்டுள்ள நாட்டில் இப்படியான விரதச் சடங்குகள் அவர்களது உடல்நலத்தை மேலும் பாதிக்கின்றன, உற்சாகமான செயல்பாட்டைக் கெடுக்கின்றன.

தீபாவளி சமயத்தில் DSM என்னும் அமைப்பு "Project Sthreedhan" என்னும் விளம்பரத்தை வெளியிட்டது. அந்த விளம்பரத்தின் கடைசி வரி இப்படி முடிகிறது. இந்தியாவில் வாழும் பெண்களில் இரண்டில் ஒருவருக்கு இரத்த சோகை இருக்கிறது. இந்தப் பண்டிகைத் திருநாளில் தங்கத்தில் முதலீடு செய்யாமல், பெண்கள் தங்களுடைய இரும்புச்சத்தை மேம்படுத்துங்கள். தங்க நகைகள், பட்டுப்புடவைகள் விளம்பரங்கள் அதிகம் வரும் பண்டிகைக் காலங்களில் இது போன்ற விளம்பரங்கள் வருவது நல்ல விழிப்புணர்வைச் சமுதாயத்தில் ஏற்படுத்தும்.

இறைநம்பிக்கையுள்ள அறிவியலாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளில் கடவுளைக் கலப்பதில்லை. இராக்கெட் விடும் நேரத்தை அவர்கள் பஞ்சாங்கம் பார்த்து முடிவு செய்வதில்லை. கோள்களின் நிலை, பருவநிலை இவற்றைக் கணக்கிட்டே முடிவு செய்கிறார்கள். விண்ணில் நிறுத்தப்படும் செயற்கைக்கோளின் தகவல்கள் கடவுளால் வழங்கப்பட்டவை என அறிக்கை அளிப்பதில்லை. ஆனால் தங்களது முயற்சியில் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் வெற்றிகரமாக இயங்குவதற்குக் காரணம் கடவுள்தான் என்ற நம்பிக்கையோடு மனத்திற்குள் வணங்குவார்கள்.  அறிவியலற்ற அறிவியலாளர்களைக் கொண்டு  இயங்கும் சமூகம், அடுத்த கட்ட முன்னேற்றத்தை நோக்கிச் செல்லாது என்பதை ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார்.

நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கக் கூடாது என்று கூறியவர்கள் தற்போது இந்த மூடநம்பிக்கைகளுக்குப் பின்னால்  ஒரு அறிவியல் இருக்கிறது என்று நம்முடன் வாதிட முற்படுகிறார்கள். மக்களை மூடநம்பிக்கைகளில் இருந்து வெளிக்கொண்டு வர அறிவியலைப் பயன்படுத்த வேண்டிய வேளையில் இங்கு அறிவியலையே மூடநம்பிக்கைகளுக்குள் மூடி விடுகிறார்கள். இது மிகவும் ஆபத்தானதாகும். பரிணாம வளர்ச்சி பின்னோக்கிச் சென்றுவிடும்.

மூடநம்பிக்கைகளுக்குள் மூழ்கிப் போயிருக்கும் இந்தச் சமூகம் மூளையைப் பயன்படுத்தும் காலம் வர வேண்டும். அதற்கு இது போன்ற நூல்கள் அதிகம் வெளிவரவேண்டும்.

Pin It