தெற்காசியாவில் மனிதவுரிமைகள் மீறல்கள் என்ற கருத்தரங்கு 25/10/2009 அன்று பெங்களூரில் நடைபெற்றது. நிகழ்வில் தெற்காசியாவின் மனிதவுரிமை மீறல்களை குறித்துப் பேசிய மனிதவுரிமை ஆர்வலர்கள் 50000 ஈழத்தமிழர்கள் மீள்குடியேற்றம் என்பது சுத்த பொய் என்றும் வன்னிமுகாமிலிருந்து ஜாப்னா முகாமிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதே உண்மை என்றும் கூறினர். ஈழத்தில் நடைபெற்ற மனிதப்பேரவலங்கள் தெற்காசியாவின் மனித உரிமை மீறல்களை மேலும் ஊக்குவிக்கும் என்றும் ஈழத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட சோதனைகள் இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்கள் மற்றும் காஷ்மீரிலும் நடைபெறுவதற்கான அபாயங்கள் அதிகம் உள்ளன என்றும் கவலை தெரிவித்தனர்.

தெற்காசியாவில் மனிதவுரிமை மீறல்கள் என்ற தலைப்பில் தெற்காசிய மனிதவுரிமை ஆர்வலர்கள் மற்றும் பெங்களூர் பல்கலைகழகம் இணைந்து யுடிசி கல்லூரியில் நடத்தில் கருத்தரங்க நிகழ்வில் சிவசுந்தர் (‘o eezham’ என்ற கன்னட புத்தகத்தை எழுதியவர்), பால் நியுமென் (விரிவுரையாளர் பெங்களூர் பல்கலைகழகம்), முருகானந்தம் (செயலாளர் தமிழக மீனவர்சங்கம்), எலிசபெத் (விரிவுரையாளர் National Law School), தீனா (பத்திரிக்கையாளர் other media) ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் முதலாகப் பேசிய சிவ சுந்தர் இலங்கையின் ராணுவமயமாக்கல் மற்றும் பத்திரிக்கை சுதந்திரம் பற்றி உரை நிகழ்த்தினார். போரின் பிடியில் இல்லாத ஜாப்னாவில் ஐந்து லட்சம் மக்களுக்கு ஐம்பதாயிரம் ராணுவ வீரர்களை இலங்கை அரசு நியமித்துள்ளது. பத்து பேருக்கு ஒரு இராணுவ வீரர் என்ற விகிதத்தில் இருப்பதால் அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்வு பாதித்துள்ளவிதம் குறித்து கவலை தெரிவித்தார் மேலும் ராணுவவீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் இலங்கை அரசிடம் இருப்பதையும் சுட்டிகாட்டிய சிவசுந்தர் பத்திரிக்கை சுதந்திரம் இலங்கையில் படும்பாடு குறித்தும் விளக்கமாகப் பேசினார்.

அடுத்தாக ‘சிறப்பு முகாம்களின் அவலங்கள்’ என்ற தலைப்பில் பேசிய பால் நியுமென் சிறப்பு முகாம்களில் இருந்து 50000 மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று பொய்யான பரப்புரைகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டினார். வன்னி சிறப்புமுகாமிலிருந்து ஜாப்னா முகாமிற்கு இடம்மாற்றம் செய்யபட்டதை தவறாக மீள்குடியேற்றம் என்று பரப்புரை செய்வதையும், இலங்கையில் தேர்தல் முடியும்வரை ராசபக்சே அரசு மீள்குடியேற்றம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை என்பதும் முகாம் மக்களின் வாக்குகள் தமக்கு எதிராக அமையும் என்ற அச்சத்திலேயே ராசபக்சேவின் அரசு மவுனம் சாதிக்கிறது என்றும் மழைக்காலம் துவங்கினால் மிகப்பெரியளவில் மனிதப்பேரவலம் நடைபெற வாய்ப்புகள் உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.

தமிழக மீனவர்கள் மீதான மனிதவுரிமை மீறல்கள் என்ற தலைப்பில் பேசிய முருகானந்தம் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கப்பல்படை நிகழ்த்திய தாக்குதல்களால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து மிகவிளக்கமாகக் கூறினார். மத்திய அரசும் மாநில அரசும் தமிழக மீனவர்களை கைவிட்டு விட்டமையையும் ஈழத்தமிழர்கள் பக்கம் நின்றிருக்க வேண்டிய இந்திய அரசு சிங்களர்கள் பக்கம் நின்றதால் இந்தியாவிற்கே அது ஆபத்தாக போய்விட்டது என்றும் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து பேசிய எலிசபெத் இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சிறப்பு சட்டங்கள் மற்றும் ஆளும்வர்க்கத்தின் அடக்குமுறைகள் பற்றிப் பேசினார். ஈழத்தில் செயல்முறைப்படுத்தப்பட்ட சோதனை முயற்சிகளை இந்தியா வடகிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தும் ஆபத்து உள்ளதாகக் கூறினார்.

காஷ்மீரின் மனிதவுரிமைகள் பற்றிப் பேசிய தீனா ‘ஜம்மு காஷ்மீரில் பிறந்தவன் என்றாலே தீவிரவாதி’ என்று பார்க்கும் சூழல் உள்ளது என்றும் ராணுவமயமாக்கல் ஏற்படுத்தும் வாழ்வியல் சிக்கலையும் பட்டியலிட்ட தீனா, இலங்கையில் நடந்த மனிதப் பேரவலம் நியாயமான உரிமைகளுக்கான போராட்டங்களை நசுக்குவதற்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது என்றும் கூறினார்.

- தமிழன்பன்

Pin It