திராவிடர் இயக்க வரலாற்றோடு கலைஞர் வரலாறும் இணைந்தே பயணிக்கிறது. இளைய தலைமுறையின் புரிதலுக்காக அந்த வரலாற்றின் சுருக்கமான தொகுப்பை பெரியார் முழக்கம் பதிவு செய்கிறது.

1. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தொடங்கிய 1924 இல் பிறந்த கலைஞர், சுதந்திரம் பெறுவதற்கு 9 ஆண்டு காலத்திற்குப் முன்பு தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அந்த பயணம் 80 ஆண்டு காலம் 2018 வரை நீடித்தது.

2. ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்தார். அதில் இரண்டு முறை சட்ட விரோத குறுக்கு வழிகளால் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே ஒன்றிய ஆட்சியால் அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.

karunanidhi 4393. அறுபது ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், போட்டியிட்ட ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெற்றார்.

4. நான்கு வயதில் தந்தை விருப்பப்படி இசைப் பயிற்சிக்கு சென்றார் கலைஞர். கோயில்களில் தான் இசைப் பயிற்சி நடக்கும், கோயில்கள் பெரிய மனிதர், உயர் சாதியினர் வரும் இடம் என்பதால் மேல் சட்டை அணியும் உரிமை, காலில் செருப்பு போடும் உரிமை மறுக்கப்பட்டன. சாதியின் அடிப்படையில் மனிதர்கள் ஒதுக்கப்படுவதை இளம் வயதிலேயே அறிந்த கலைஞர் பிறகு தனது இசை வகுப்புகளே எனக்கு முதல் அரசியல் வகுப்பானது என்று கூறினார்.

5. 1935இல் ஐந்தாம் வகுப்பில் சேர்வதற்கு திருவாரூருக்கு வந்த கலைஞருக்கு பல தடைகள், நுழைவுத் தேர்வு என்ற அந்த காலத்து நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அப்படியும் தேர்ச்சி பெற்ற அவர் கஸ்தூரி ஐயங்கார் நடத்திய பள்ளியில் சேர சென்ற போது ஐயங்கார் அவரை சேர்க்க மறுத்து விட்டார். கண்ணீர் விட்ட கலைஞர் அவமானத்துடன் ஊர் திரும்ப முடியாது என்று கருதி கோயில் குளத்தில் மூழ்கி இறக்கப் போகிறேன் என்று கூறவே அதற்குப் பிறகு ஐயங்காரே இறங்கி வந்து ஐந்தாம் வகுப்பில் சேர்க்க அனுமதித்தார்.

6. ஐந்தாம் வகுப்பு சேர்ந்த போது பாடநூலில் நீதிக்கட்சித் தலைவர் பாடங்கள் அரசு வரலாற்று நூலில் இடம்பெற்றிருந்தது. அதை படித்த போது நீதிக்கட்சி முன்வைத்த பார்ப்பனரல்லாதார் அரசியலின் நியாயத்தை உணர்ந்தார்.

7. 1937இல் காங்கிரஸ் கட்சியில் முதல்வராக வந்த ராஜகோபாலாச்சாரி இந்தியை கட்டாயப் பாடமாக்கினார். பட்டுக்கோட்டை அழகிரி பேச்சுகளால் உந்தப்பட்ட கலைஞர் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் குதித்தார், திருவாரூரில் பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து போராட்டக்களத்தை அமைத்தார்.

8. ஒரு பள்ளியில் நடந்த பேச்சு போட்டியில் அவரது முதல் பேச்சு தொடங்கியது. இந்து புராண கதாபாத்திரங்களில் அசுரர்கள் என்று எழுதப்பட்டவர்களின் உயர்ந்த மாண்புகளை உள்ளடக்கியதாக அந்த பேச்சு இருந்தது. கர்ணனுக்கும் துரியோதனனுக்கும் உள்ள நட்பின் ஆழத்தையும் விவரித்தார், இந்த பேச்சை தயாரிக்க ஒரு வாரம் முழுவதும் செலவிட்டார். தனது பேச்சை அனைவரும் விவாதிக்க வேண்டும் என்ற உறுதியோடு அதை அவர் தயாரித்தார்.

9. நண்பர்களுடன் சேர்ந்து மாணவர் நேசன் என்ற கையெழுத்து பத்திரிக்கையை தொடங்கினார் . 50 பிரதிகளையும் கைகளால் எழுத வேண்டும், அதை சுயமரியாதை இயக்கத் தலைவர்களுக்கும் அனுப்பி வைத்தார். அப்போது அவர் 15 வயது மாணவன்.

10. 1942 இல் முரசொலி மாத இதழைத் தொடங்கினார். 1944 இல் சிதம்பரத்தில் பார்ப்பனர்கள் வர்ணாசிரம மாநாடு ஒன்றை நடத்தினார்கள், அந்த மாநாட்டை எதிர்த்து முரசொலியில் எழுதிய கலைஞர் வர்ணாசிரம மரண குறிப்பையும் எழுதினார்.

11. காஞ்சிபுரத்திலிருந்து வெளிவந்த அண்ணாவின் திராவிட நாடு ஏட்டுக்கு ”இளைஞர்களின் தியாகம்” என்ற கட்டுரையை அனுப்பினார். அண்ணா அதை வெளியிட கலைஞர் உற்சாகமானார் .

12. பள்ளி இறுதி வகுப்பின் மூன்று முறை தோல்வியடைந்த கலைஞர், பெற்றோருக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறினார். நாகையில் திராவிடர் கழக பிரமுகர் ஆர்.வி.கோபால் திராவிட நாடக குழு ஒன்றை தொடங்கியிருந்தார். கலைஞர் எழுதிய பழனியப்பன் நாடகத்தை 100 ரூபாய் விலை கொடுத்து கோபால் வாங்கிக் கொண்டார்.

13. கலைஞருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த பெற்றோர்கள் பிரபல பின்னணி பாடகர் சிதம்பரம் ஜெயராமன் சகோதரி பத்மாவை திருமணம் செய்ய முன்வந்தனர். கட்டாயத்திற்காக கலைஞர் சம்மதித்தார். தனது திருமணம் சீர்திருத்த திருமணமாக நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். சிதம்பரம் ஜெயராமனுக்கும் அதே நாளில் திருமணம் நடத்த முடிவானது, அது வைதீகத் திருமணம். ஒரே மேடையில் சீர்திருத்த திருமணமும் வைதீகத் திருமணமும் நடந்தது. நாவலர் நெடுஞ்செழியன், அவரது சகோதரர் செழியன் அவர்களது சொந்த கிராமத்தில் இருந்து திருவாரூருக்கு நடந்தே வந்தார்கள். மாலை நடந்த வரவேற்பில் என்.எஸ்.கிருஷ்ணன் நந்தன் சரித்திரத்தை கதை உரையாடலாக நடத்தினார். அப்போது என்.எஸ்.கிருஷ்ணன் திரை உலகில் பிரபலமாக இருந்தார் அவரை பார்க்க பெரும் கூட்டம் கூடிவிட்டது, தள்ளுமுள்ளு உருவாக்கி விட்டது.

14. கலைஞர் இளம் வயதில் முதன்முதலாக எழுதிய நாடகம் சாந்தா பிறகு பழனியப்பன் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் நாடகத்துக்கு கூட்டம் சேரவில்லை, வறுமையில் வாடியது நாடகக் குழு தோல்விக்கு காரணம் திராவிட என்ற சொல் தான் திராவிட நாடக குழு என்று அந்த குழுவுக்கு பெயர் சூட்டப்பட்டது. அக்காலத்தில் திராவிட என்ற சொல் தீண்டப்படாத தலித் மக்களை குறிப்பதாகவே இருந்ததால் தலித் அல்லாதவர்களின் எதிர்ப்பை அந்த நாடகக் குழு சந்திக்க வேண்டி இருந்தது.

15. திராவிடர் கழகம் பெரியார் தலைமையில் பாண்டிச்சேரியில் ஒரு மாநாட்டை நடத்தியது. அமைப்பாளர்களின் கலைஞரும் ஒருவர் அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர் மாநாட்டை நடக்க விடாமல் காங்கிரஸ்காரர்கள் கலவரத்தில் இறங்கினார்கள். முன்னணி தலைவர்கள் பாரதிதாசன், கலைஞர் ஆகியோர் பத்திரமாக தலைவர்களை மீட்டு வேறு இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கலவரக்காரர்களின் கையிலேயே கலைஞர் சிக்கிக்கொண்டு கொடூரமாக தாக்கப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டார். அவர் இறந்து விட்டதாகவே கருதி கூட்டம் வெளியேறியது. மாலை எதிர்ப்புகளையும் மீறி மீண்டும் மாநாடு கூடியது அப்போது தான் கலைஞரை பெரியார் தன்னுடன் ஈரோட்டுக்கு அழைத்துச் சென்று குடிஅரசு பத்திரிக்கையில் பணியாற்ற வைத்தார்.

16. 1947 இல் கலைஞர் எழுதிய தூக்கு மேடை நாடகத்தை தஞ்சையில் நடிகவேள் எம்.ஆர்.ராதா அரங்கேற்றினார். கலைஞரும் நாடகத்தில் நடித்தார், நாடகத் தலைவர் பட்டுக்கோட்டை அழகிரி தூக்கு மேடையில் இருந்து கதாநாயகன் பேசும் வசனங்கள் திராவிடர் கழகத்தின் சமூக புரட்சி கொள்கைகளை மட்டுமல்ல, பகத்சிங் வாழ்வும் மரணம் கூட பேசப்பட்டது. கருணாநிதிக்கு கலைஞர் என்ற பட்டத்தை இந்த நாடக மேடையில் தான் பட்டுக்கோட்டை அழகிரி சூட்டினார்.

17. திராவிட இயக்க எழுத்தாளர்களின் எழுத்து வலிமையைக் கண்டு – நடுங்கிப் போன காங்கிரஸ் ஆட்சி – பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் சட்டங்களைக் கொண்டு பல நூல்களை தடை செய்தது. கலைஞரின் தூக்கு மேடை நாடகமும் அதில் ஒன்று. 1) அண்ணாவின் இலட்சிய வரலாறு, 2) புரட்சிக் கவிஞரின் இரணியன் அல்லது இணையற்ற வீரன், 3) ஏவிபி.ஆசைத் தம்பியின் காந்தியார் சாந்தி அடைய, 4) புலவர் குழந்தையின் இராவண காவியம், 5) புலவர் செல்வராஜின் கருஞ்சட்டை ஒழிய வேண்டுமா? ஆகியவை தடை செய்யப்பட்ட நூல்களில் சில.

17. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் தனது மணமகள் திரைப்படத்திற்கு கதை வசனம் எழுத கலைஞரை சேலத்தில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தார். அவரது வீட்டில் தான் கலைஞர் வசனங்களை எழுதினார், அப்போது காவி உடையில் நெற்றியில் விபூதி பூசிய ஒருவரை கலைவாணர் கலைஞரிடம் அறிமுகப்படுத்தினார். அவர் தான் பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்த ஜீவா என்று அழைக்கப்பட்ட ஜீவானந்தம். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலம் அது, அவருக்கு தடை நீக்கப்படும் வரை அடைக்கலம் கொடுத்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். கலைஞருக்கு முதலில் கார் வாங்கி கொடுத்தவரும் என்.எஸ். கிருஷ்ணன் தான்.

தொகுப்பு : விடுதலை இராசேந்திரன்

Pin It