பாலியல் குற்றசாட்டுக்குள்ளான பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்யாமல் – பாஜக ஆட்சி காப்பாற்றி வருகிறது. பாதிக்கப்பட்ட மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராடுகிறார்கள். புதிய நாடாளுமன்றத்தின் முன்பு போராடச் சென்ற வீராங்கனைகளை காவல்துறை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.

மல்யுத்த வீரர் - வீராங்கனைகளை குண்டுக் கட்டாக தூக்கி கைது செய்த சம்பவத்திற்கு தில்லி மகளிர்ஆணையத் தலைவர் ஸ்வாதி மலிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை உடனடியாக கைது செய்யுமாறு தில்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோராவிற்கு கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில், “இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த போது நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷண் சிங் மீது ஒரு சிறுமி உட்பட பல மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். குற்றம்சாட்டப்பட்டவர் மீது ஏற்கனவே 40 கிரிமினல் வழக்குகள் உள்ள நிலையில், உச்சநீதிமன்றம் தலையிட்டு 2 எப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டாலும், தில்லி காவல்துறை பிரிஜ் பூஷணை இன்றுவரை கைது செய்யவில்லை. இதனால் மல்யுத்த வீராங்கனைகள், அவர்களுக்கு ஆதரவாக வீரர்களும் ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தில்லியில் ஒவ்வொரு நாளும் 6 பாலியல் வன்கொடுமை வழக்கு கள் பதிவாகின்றன. ஒவ்வொரு வழக்கிலும், குற்றம் சாட்டப்பட்ட நபரைக் கைது செய்ய தில்லி காவல்துறை முயற்சிக்கிறது. ஆனால் ஏன் பிரிஜ் பூஷண் சிங் இன்றுவரை கைது செய்யப்பட வில்லை? இது அப்பட்டமான அநீதி இல்லையா? குற்றம் சாட்டப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு பகிரங்கமாகவே ஆதரவாக செயல்படும் தில்லி காவல் துறையின் பாகுபாடான அணுகுமுறை நீதியை கேலிக் கூத்தாக்கியது. மேலும் மல்யுத்த வீராங்கனைகளை தில்லி தெருக்களில் உட்கார வைக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில், மல்யுத்த வீராங்கனைகள் அவர்களது குடும்பத்தினருடன், தில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ் போகத் மற்றும் சங்கீதா போகத் இந்த நாட்டின் ஹீரோக்கள் மற்றும் சாம்பியன்கள் என் பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக குரல் எழுப்பியதற்காக அவர்களுக்கு நீதியை மறுப்பதன் மூலம், வலுக் கட்டாயமாக காவலில் வைப்ப தன் மூலம், தில்லி காவல்துறை நாட்டின் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்குகளுக்கு எதிராக புகார் அளிப்பதற்கும் நீதிக்காகப் போராடுவதற்கும் எதிராக மனச் சோர்வை அளிக்கிறது.

பிரிஜ் பூஷண் சரண் சிங் கைது செய்யப்பட்டு, மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It