கிராமக் கோயில்கள் குலதெய்வங்கள் - பார்ப்பன ஆகமங்களுக்கு எதிரானவை என்றும் அவை பண்பாட்டு அடையாளங்கள் என்றும் நாட்டார் வழிபாட்டு முறைகளை சில ‘முற்போக்கு’ பேசும் சிந்தனையாளர்கள்கூட நியாயப்படுத்துகிறார்கள். ஆனால் இந்த நாட்டார் வழிபாடு, ஜாதியவாதிகளின் பிடிக்குள் சிக்கி ஜாதிக் கட்டமைப்பை உறுதிப்படுத்தி வருவதோடு, கிராமங்களில் ஜாதி மோதல்களுக்கும் காரணமாக இருக்கிறது. இவை பார்ப்பனியத்துக்கு வலிமை சேர்த்து வருகின்றன.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே 65 கிராமங்களைக் கொண்ட ‘வெள்ளலூர் நாடு’ எனும் பகுதி, ஆதிக்க ஜாதியினரான கள்ளர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்தப் பகுதியில் உள்ள மூன்று கோயில்களை கள்ளர் சமூகத்தினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

‘அம்பலத்துக்காரர்கள்’ என்ற நாட்டாண்மைக்காரர்கள், கோயிலை நிர்வகிக்கிறார்கள். இந்தக் கோயில் சொத்துகளும் கோயில் பணமும் முறைகேடாக அம்பலத்துக்காரர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று அம்பலத்துக்காரர் பதவிக்கு வர முயன்று தோற்றுப்பான ஒருவர் அறநிலையத் துறைக்கு புகார் தந்தார். விசாரணையில் முறைகேடுகள் நடப்பதைக் கண்டறிந்த அறநிலையத் துறை, தனது கட்டுப்பாட்டின்கீழ் கோயில்களைக் கொண்டு வர முடிவு செய்தது.

ஆனால், 65 கிராம மக்களும் ஜாதி அடிப்படையில் ஒன்று சேர்ந்து கோயில், தங்கள் சமூகத்துக்கே பரம்பரை பரம்பரையாக உரித்தானது என்றம், அறநிலையத் துறை எடுக்கக் கூடாது என்றும் மிரட்டி வருகின்றனர். பல பெண்கள், ‘சாமி’ வந்து ஆடி தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். ‘நாடு’ என்ற ஜாதிக் கட்டமைப்பு இத்தகைய கோயில்கள் வழியாக மேலும் உறுதியாகி வருகிறது.

ஜாதிக் கட்டமைப்பு வலிமையாக இருப்பதுதான் பார்ப்பனர்களுக்கான வலிமை. இந்த குல தெய்வங்களை எப்படி தமிழர் பண்பாட்டு அடையாளமாக ஏற்க முடியும்?

Pin It