2008-ஆம் ஆண்டு இறுதிப்போருக்கு முன்பாக திரைப்படக் குழுவினருடன் ஈழத்திற்கு சென்ற சீமான், கடந்த 15 ஆண்டுகளாக அந்தப் பயணம் தொடர்பாக எண்ணற்றக் கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டுள்ளார். மனநோயாளியைப் போல சீமான் கூறிவந்த அந்தப் பொய்களை, தமிழ்நாட்டு மக்கள் வேடிக்கையுடன் கடந்து சென்றனர். ஆனால் இப்போது பெரியார் மீது அவர் வைத்திருக்கும் அருவருப்பான அவதூறுகளால் தமிழ்நாட்டு மக்கள் கொந்தளித்துள்ளனர்.
தமிழ்நாட்டு மக்கள் மட்டுமின்றி, சர்வதேச அளவில் சீமானின் இந்த புளுகு மூட்டைகளை அம்பலப்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஆரிய இழிவில் இருந்து தமிழர்களை விடுவிக்க வாழ்நாளெல்லாம் உழைத்தத் தந்தை பெரியாரையும், ஈழத்தில் தேசிய இன விடுதலைக்காகப் பெரும்படை கட்டிப் போரிட்ட மேதகு பிரபாகரனையும் நேரெதிர் எதிரிகளாகச் சித்தரிக்க முயன்ற சீமானின் சூழ்ச்சியை விடுதலைப் புலிகளும், அவர்களோடு அணுக்கமாக இருந்தவர்களும் உடனடியாக கண்டித்து அறிக்கை வெளியிட்டு, சீமானுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.
குறிப்பாக பிரபாகரன் அவர்களின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன், நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “சீமான் 8 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே பிரபாகரனை சந்தித்தார். அவர் கூறியது போல கறி இட்லி சமைக்கும் பழக்கம் எங்களிடத்தில் இல்லை. சித்தியை (மதிவதனி) அவர் சந்திக்கவே இல்லை. பிரபாகரனோடு இருப்பது போன்று எடிட் செய்த படத்தைத்தான் அவர் வெளியிட்டிருக்கிறார். அந்தப் படம் உண்மையில்லை. எல்லாளன் ஆவணப் படத்திற்கான குழுவில் இருந்த ஒளிப்பதிவாளர் சந்தோஷிடம் கேட்டால் பல உண்மைகள் வெளியே வரும்” என்று பல உண்மைகளைப் போட்டுடைத்தார். ஏற்கெனவே இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் அந்த படத்தை நான்தான் எடிட் செய்து கொடுத்தேன் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சந்தோஷிடம் மிக நீண்ட பேட்டி எடுத்து ஒளிபரப்பியது. அந்த பேட்டியில், கார்த்திக் மனோகரன் கூறியது அனைத்தும் உண்மை என்று உறுதிப்படுத்திய சந்தோஷ், மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளார். “வன்னி அரசு பரிந்துரையின் பெயரில்தான் சீமான் ஈழத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதுவும் தோல்விப் பட இயக்குநர்கள் இருந்தாலே போதுமானது என்ற விடுதலைப் புலிகளின் அறுவுறுத்தல்படியும், பெரியாரிய இயக்க மேடைகளில் பேசுபவர் என்ற அடிப்படையிலும்தான் சீமான் ஈழத்திற்கு வரவழைக்கப்பட்டார். அவர் ஈழத்தில் இருந்த சமயத்தில் கூட, தலைவர் பிரபாகரனுக்கு சீமான் என்றால் யாரென்றே தெரியாது.
சீமான் 2008-ஆம் ஆண்டு பிப்ரவரி 9-ஆம் தேதி ஈழத்திற்கு வந்தார். 23-ஆம் தேதி அங்கிருந்து திரும்பிவிட்டார். இவர் தலைவர் பிரபாகரனை சந்தித்தது பிப்ரவரி 13-ம் தேதி. தலைவரைச் சந்திக்க வேண்டுமென்று இவர் தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததால்தான் அழைத்துச் செல்லப்பட்டார். 8-9 நிமிடங்கள் மட்டுமே இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது நானும் உடனிருந்தேன். அப்போது படங்கள், வீடியோக்கள் எடுக்கப்பட்டது உண்மைதான். ஆனால் அவை என்னிடமும் உள்ளன. இதுவரை வெளியிடப்படவில்லை. இனியும் வெளியிடமாட்டேன். ஆனந்தவிகடனில் வெளியான படம் போலியானது.
துப்பாக்கியோடு இவர் பயிற்சி எடுப்பதுபோன்ற படங்கள் போர்க்களத்தில் எடுக்கப்பட்டது அல்ல. படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்டவை. அதைப் பகிர்ந்துதான் தலைவர் எனக்குப் பயிற்சி கொடுத்தார் என பொய்யைப் பரப்பிக் கொண்டிருக்கிறார் சீமான். அவர் கூறியது போல ஆமைக்கறி உண்ணும் பழக்கம் அங்கு உள்ளது. ஆனால் அது எப்போதாவதுதான் கிடைக்கும். 7, 8 மாதங்கள் இருந்த நானே நான்கைந்து முறைதான் சாப்பிட்டுள்ளேன். சீமான் இருந்தபோது ஒருமுறை கூட ஆமைக்கறி தரப்படவில்லை. மற்றவர்களுக்கு அங்கு நடந்ததாகச் சொன்னவற்றையெல்லாம் தொகுத்து, தனக்கே நடந்ததுபோல கட்டுக்கதைகளை சீமான் கூறியிருக்கிறார்.
கடைசியாக இறுதிப் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில், சூசையோடு சீமான் உரையாடியதாக வெளியான ஆடியோ முழுமையானது அல்ல. அந்த உரையாடலுக்கு ஏற்பாடு செய்ததே நான்தான். அப்போது ஈழப்போர் தொடர்பாக பல மேடைகளில் உணர்ச்சிப்பூர்வமாக சீமான் பேசிக்கொண்டிருந்ததால் சூசை அவரோடு பேசினார். ஆனால் சீமானிடம்தான் இந்த இயக்கத்தை ஒப்படைத்துச் செல்வதாக அவர் கூறவே இல்லை. ஒரு பகுதியை மட்டும் சீமான் வெட்டி பரப்பிவிட்டார். அந்த ஆடியோவில் கொளத்தூர் மணி, பழ நெடுமாறன், வைகோ என பல்வேறு தலைவர்களின் பெயரை சூசை குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்ல, சேரலாதன் ஒருமுறை சீமானிடம் ஸ்கைப் மூலம் பேச நினைத்தபோது, சீமான் அப்போது நடிகை விஜயலட்சுமியுடன் இருந்தார். சீமானுடன் பேசுவதை அப்போதே நிறுத்திவிட்டார்” என்று அடுக்கடுக்கான உண்மைகளை வெளியிட்டுள்ளார்.
இந்த பேட்டியில், எல்லாளன் ‘திரைப்படத்திற்கான ஒளிப்படக்கலை பொறுப்பாளர் அமரதாஸும் சில படங்களை எடுத்ததாகவும், அவரும் இதுவரை வெளியிடவில்லை என்றும் சந்தோஷ் கூறியிருந்தார். இதையடுத்து சன் நியூஸ் தொலைக்காட்சியின் ஊடாக அமரதாஸும் பல்வேறு உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளார். “ஆணையிறவு முகாமில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் எல்லாளன் படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்றது. அதில் 2,3 நாட்கள் மட்டுமே சீமான் அங்கு வந்தார். அப்போது அங்கிருந்த ஆயுதங்களை வைத்து படம் எடுக்க வேண்டுமென்று சீமான் விரும்பினார். நான்தான் அந்த படங்களை எடுத்தேன். பிரபாகரன் தமக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்ததாகக் கூறுவது முற்றிலும் பொய்.
சீமான் ஆயுதங்களை வைத்திருக்கும் படங்களை உற்று நோக்கினால் சினிமா படப்பிடிப்புகளில் பயன்படுத்தக் கூடிய தெர்மாகோல் அவர் பின்னால் இருக்கும். அதேபோல சீமான் துப்பாக்கி ஒன்றை தமது கை இடுக்கில் வைத்திருப்பார். பொதுவாக ஆயுதங்களைக் கையாள்வதற்கு என ஒரு முறை இருக்கிறது. சீமான் பிடித்திருப்பது போல கை இடுக்கில் வைத்துக் கொண்டு எல்லாம் சுட்டு விடவும் முடியாது. அதேபோல படப்பிடிப்பு நடந்த இடத்தில் ஒரு குண்டு கூட சுடவும் முடியாது. சில கிலோ மீட்டர் தொலைவில் இலங்கை ராணுவ முகாம் இருந்ததால் அப்படி பயிற்சி எடுக்கவும் முடியாது. சீமான் புகழ் விரும்பியாக இருந்தார் என்பதால், சீமானுக்கு இந்த படங்களைத் தரவே கூடாது என்பதில் விடுதலைப் புலிகள் உறுதியாக இருந்தனர். பிரபாகரனை மீண்டும் மீண்டும் சந்திக்க வேண்டும் என நச்சரித்து கொண்டிருந்ததால் அவரை உடனே அங்கிருந்து அனுப்பிவிட வேண்டும் என்பதில் புலிகள் உறுதியாக இருந்தனர்.
பிரபாகரனை முன்வைத்து அரசியல் சூதாடும் சீமான் அத்துடன் வீரச்சாவடைந்த புகழ்மாறனுடன் இருக்கும் படத்தை காண்பித்து அவர்தான் தமக்கு மெய்ப்பாதுகாப்பாளராக பிரபாகரனால் நியமிக்கப்பட்டிருந்தவர் என்றெல்லாம் கட்டுக்கதை சொல்லிவருகிறார். பெரியாரா? பிரபாகரனா? என சீமான் பேசுவது பிரபாகரனை முன்வைத்து நடத்தும் அரசியல் சூதாட்டம்.” என்று கூறியுள்ளார்.
- பெ.மு. செய்தியாளர்