சீமான் என்கிற சில்லரை அரசியல்வாதி திராவிடக் கருத்தியலுக்கு எதிராக செய்கிற அயோக்கியத்தனங்கள் நயமானவை. அது பார்ப்பனியத்தின் வேறு வடிவமாகவே இருக்கிறது. எவ்வாறு சங்கிகளும், சீமானும் ஒன்றுபடுகின்றனர் என்பதைப் பார்ப்போம்.

பார்ப்பன சனாதனவாதிகளுக்கு உறுத்தலை ஏற்படுத்துகிற ஒருவராக காந்தி இருக்கிறார். அவரை ஓரங்கட்டுவதற்காக வேறு தலைவர்களை முன்னிறுத்துகிற வேலையை பாஜகவும் அதை ஆதரிக்கும் சங்கிகளும் செய்கின்றனர். அதில் முக்கியமான முன்னெடுப்பு அவருக்கு இணை கற்பிப்பது. அவரை தேசத் தந்தை என்கிற இடத்தில் இருந்து இறக்குவதற்கான செயல்களை நயமாகச் செய்வது.

2022ல் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்திற்குப் பதிலாக ரவீந்தரநாத் தாகூர், அப்துல்கலாம், ஆகியோரது படங்களைப் பயன்படுத்தலாம் என ஒன்றிய அரசு பரிசீலிப்பதாக ஒரு செய்தி வெளியானது. ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படாமல் போனது. ரவீந்தரநாத் தாகூரையோ, அல்லது அப்துல் கலாமையோ சிறப்பிப்பது அவர்களின் நோக்கமல்ல, காந்தியை தேசத் தந்தை என்கிற இடத்தில் இருந்து எப்படி இறக்குவது என்பதுதான் அவர்களின் திட்டம்.

காங்கிரசிலிருந்து விலகியபின் தொடர்ந்து காந்திக்கு எதிரான அரசியலையே செய்து வந்தவர் பெரியார். ஆனால் காந்தி இறந்த போது இந்த நாட்டிற்கு காந்தி தேசம் என்று பெயர் சூட்டவேண்டும் என்று பேசினார்.

ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அனைவருமே தேசத் தந்தை என்று ஏற்றுக் கொண்ட ஒரு தலைவர் காந்தி. அவரது அடையாளங்களை ஒழிக்க நினைக்கும் பாஜக கும்பல், காந்தி பிறந்த குஜராத்தில், பட்டேலுக்கு மாபெரும் சிலை எழுப்பி தங்களது வன்மத்தை வெளிப்படுத்தியது.

இதே யுத்தியைத்தான் சீமானும் பெரியாருக்கு எதிராக கடைபிடித்து வருகிறார். “பெரியார் தமிழ் மக்களுக்காகப் போராடினார் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் ஆனால் பெரியார் மட்டுமே போராடினார் என்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது…” என்று பேசி வரும் சீமான். பெரியாருக்கு இணை கற்பிக்கும் வேலையை நயமாகச் செய்து வருகிறார்.

பார்ப்பனியத்தின் காலடியில் நசுக்கப்பட்டுக் கிடந்த தமிழ் இனத்தை, தட்டி எழுப்பி சுயமரியாதை ஊட்டிய ஈடு இணையற்ற புரட்சியாளர் பெரியார். அவருக்கு மாற்றாகவோ, அல்லது சமமாகவோ பிற தலைவர்களை நிறுத்தி அவர்களுக்கு புகழ்வணக்கம் என்று சுவரொட்டிகள் ஒட்டுவதை ஒரு வழக்கமாக வைத்திருக்கிறார் சீமான்.

தேசிய விடுதலைக்காகப் போராடியவர், காந்தி மட்டுமல்ல. அப்போராட்டத்தில் அவருக்கும் முன்பே உயிர்த்தியாகம் செய்தோர் ஏராளம். இருந்தாலும் எல்லா தரப்பு மக்களும் ஏற்றுக்கொண்ட ஏகோபித்த தலைவராக அவர் இருந்தார் என்பதால்தான் அவரை தேசத் தந்தை என்கிறோம்.

அதைப் போலவே இந்த சமூகத்தின் இழிவு நீக்க எத்தனையோ பேர் பாடுபட்டாலும், எந்த வித சமரசமும் இன்றி போர்க்குணத்தோடு தன் ஆயுளின் இறுதி வரை போராடியவர் பெரியார். அதனால்தான் அவரை தந்தை பெரியார் என்று அனைத்துத் தரப்பு மக்களும் போற்றுகின்றனர்.

சமீபத்தில் புதிதாக கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய், பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று பெரியாரின் நினைவிடத்தில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்த நிலையில், இது பற்றி பத்திரிகையாளர்களிடம் பேசிய சீமான், பெரியாருக்கு விஜய் மரியாதை செலுத்துவது போலவே மறைமலையடிகள், திருவிக, போன்ற தமிழர் தலைவர்களுக்கும் மரியாதை செய்ய விஜய் முன்வர வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

இங்குதான் சீமானின் நயமான விஷம் செலுத்தப்படுகிறது. காந்திக்கு எதிராக பாஜக, ஆர்.எஸ்.எஸ் செய்கிற அதே அரசியலைத்தான் அவர்களின் கள்ளக் குழந்தையான சீமானும் பெரியாருக்கு எதிராக செய்து வருகிறார்.

இவர் யாரை பெரியாருக்கு இணையாக போற்ற வேண்டும் என்று சொல்கிறாரோ அந்த மறைமலை அடிகளின் மகள் திருவரங்க நீலாம்பிகை இணைந்து நடத்திய 1938 பெண்கள் மாநாட்டில்தான் பெரியார் என்ற பட்டமே வழங்கப்பட்டது. அம்மாநாட்டுத் தீர்மானத்தில் இந்தியாவில் இதுவரை தோன்றிய சீர்திருத்தவாதிகளில் பெரியாரே தலைசிறந்தவர் என்றும், அவருக்கு இணையாகவோ, மேலாகவோ வேறு எவரும் இல்லை என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால் இந்த சில்லரை சீமானோ வரலாறு தெரியாமல் பேசுகிறார்.

முக்தாரிடம் கொடுத்த பேட்டியில் இயக்குநர் சேரனும், சீமானின் பாணியில், அத்திவாக்கம் வெங்கடாசல நாயகர் என்பவர்தான் பெரியாருக்கும் முன்பே சுயமரியாதை பேசினார், எனவே அவரையும் நாம் போற்ற வேண்டும் என்று கூறுகிறார்.

இவர்கள் எல்லோருக்கும் ஒரே நோக்கம் தான். அது பிற தலைவர்களைப் போற்றுவதல்ல. தமிழ் மக்களின் வாழ்வில் பின்னிப்பிணைந்து இருக்கும் பெரியாரை இரண்டாவது இடத்திற்கு நகர்த்துவது. இதையேதான் சங்கிகள் காந்தியின் விஷயத்தில் செய்கின்றனர்.

காந்தி மட்டும்தான் தேசத் தந்தையா என்று கேட்டால் அவன் சங்கி, பெரியார் மட்டும்தான் சமூகநீதிப் போராளியா என்றால் அவன் தமிழ் சங்கி. அவ்வளவுதான்.

- சுமன் கவி