வருகிற கல்வி ஆண்டு முதல் மருத்துவம், பொறியியல், வேளாண் அறிவியல், கால்நடை மருத்துவம், சட்டம் உள்ளிட்ட உயர் தொழிற் கல்வியில் சேருவதற்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அண்மையில் மைய அரசு அறிவித்துள்ளது.

அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்துவது என்பது மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கின்ற செயல்ஆகும். ஏற்கெனவே மாநில அரசுகள் நுழைவுத்தேர்வை நடத்தித்தான் மேற்கண்ட படிப்புகளுக்கு மாணவர்களைத் தேர்வு செய்தனர் கிராமப்புற மாணவர்கள் இத்தேர்வால் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாயினர் இதை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தப்பட்ட பின்பே தமிழக அரசு நுழைவுத் தேர்வு நடத்தும் முறையையே கைவிட்டது. அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தினால் தமிழகத்தில் உள்ள மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட கல்லூரிகளிலும் பல்கலைக்கழங்களிலும் வடநாட்டு மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்துவிட்டு தமிழக மாணவர்க்கு இடமில்லாமல் போகக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது.

மேலும், திராவிடர் இயக்கத்தின் முன்னோடிகள் டாக்டர் சி.நடேசனார், சர்.பிட்டி. தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோரின் கடும் முயற்சியினால் ஏற்படுத்தப்பட்ட வகுப்பு வாரி உரிமை என்பது பறிபோய்விடக் கூடிய ஆபத்தும் அதிக அளவில் உள்ளது. இந்தத் தகுதி, திறமை என்ற கோட்பாட்டை முன்வைத்தே யைம அரசு உயர் கல்வி நிறுவனங்களில் பார்ப்பனர்களும், மேல்சாதியினருமே இன்றுவரை பயன் அடைந்து வருகின்றனர். இனி இந்நுழைவுத் தேர்வின் மூலம் அவர்கள் மாநில அரசின் உயர்கல்வி நிறுவனங்களையும் ஆக்கிரமித்துக் கொள்ளக்கூடிய ஆபத்தும் உள்ளது.

தேர்தலில் வேட்பாளர்களாக நிற்பதற்கே பார்ப்பனரல்லாதாருக்குத் தனித்தொகுதியை அன்று அவர்கள் பெற்றார்கள். 1920 இல் நீதிக்கட்சி சென்னை மாகாணத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. அப்போது உயர்கல்வியிலும், அரசுப் பணிகளிலும் பார்ப்பனர்களே பெரும்பான்மையான இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர்.

அரசு வேலைகளில் உள்ள பார்ப்பனர் ஆதிக்கத்தை குறைத்துப் பார்ப்பனரல்லாதார் வகுப்புவாரி உரிமையை அடையவேண்டும் என்பதற்காக டாக்டர் சி.நடேச முதலியார் 5.8.1921 இல் சென்னை சட்ட மன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். இத் தீர்மானத்தை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு மாற்றாக ஒ.தணிகாசலம் செட்டியார் ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தார் அரசுப் பணிகளில் ரூ.100-ம் அதற்கு மேலும் ஊதியம் உள்ள பணிகள் 66ரூ-ம், ரூ. 100- க்குக்கீழ் சம்பளம் உள்ள பணிகளில் 75ரூ பார்ப்பனரல்லாத இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், ஆகியோருக்கு வழங்க வேண்டுமென்ற தீர்மானத்தை அரசு ஏற்றுக்கொண்டது.

அத் தீர்மானத்தின் அடிப்படையில் தான் முதல் வகுப்புவாரி உரிமை ஆணை பொது. அரசாணை எண் 613 நாள் 16.9.1921 வெளியிடப்பட்டது. பார்ப்பனர்களும், சென்னை உயர்நீதிமன்றமும் அதைச் செயல்படுத்த முடியாமல் முடக்கினர்.

நீதிகட்சி ஆதரவுடன் செயல்பட்ட டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த முத்தையா முதலியாரின் வகுப்புரிமை ஆணை எண் 744 நாள் 3.9.1928 முதன்முதலாக நடைமுறைக்கு வந்தது. அதன்பிறகுதான் பார்ப்பனரல்லாதார் ஓரளவு மாகாண அரசின் பணிகளில் சேருவதற்கு முடிந்தது.

உயர்கல்வி என்பதையும் முழுக்க முழுக்க 3 சதவீதப் பார்ப்பனர்கள் ஆக்கிரமித்து கொண்டிருந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைத்திட பார்ப்பனரல்லாதார் உயர் கல்வியில் பங்குபெற நீதி கட்சியினர் வழியை உண்டாக்கினர்.

1.9.1921 அன்று சென்னை சட்டமன்றத்தில் டாக்டர் சி.நடேசனார் அவர்கள் சென்னை மாநிலக் கல்லூரியில் அந்த ஆண்டு சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரத்தை வகுப்புவாரி அறிவிக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் பாத்ரோ கீழ்க்கண்ட விவரங்களைக் கூறினார்.

1921 இல் சென்னை மாநிலக்கல்லூரியில் வகுப்புவாரியாக சேர்க்கப்பட்ட மாணவர் விவரம்.

                இண்டர்மீடியட்        பி.ஏ.வகுப்பு

பார்ப்பனர்      93           119

பார்ப்பனரல்லாத

இந்துக்கள்    12           44

முகமதியர்  1              6

கிறித்தவர்    1              18

இதரர்                -              1

மொத்தம்      107         183

மற்றொரு கேள்வியையும் அன்றே டாக்டர் சி.நடேச முதலியார் எழுப்பினார் சென்னை மாகாணத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விவரத்தை சமூக அடிப்படையில் கேட்டார். அதற்கு விடை அளித்த அமைச்சர் கீழ்க்காணும் விவரங்களைக் கூறினார்.

பார்ப்பனர்      32

பார்ப்பனரல்லாத இந்துக்கள்       5

முகமதியர்  -

கிறித்தவர்    7

இதரர்                1

மொத்தம்      45

டாக்டர் சி.நடேசமுதலியார் 7.12.1921இல் சென்னை மருத்துவக் கல்லூரியில் அந்த ஆண்டு சேர்க்கப்பட்ட மாணவர் விவரத்தை வகுப்புவாரி அடிப்படையில் தெரிவிக்க வேண்டுமெனக் கேட்டார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் கீழ்க்கண்ட விவரத்தைக் கூறினார்.

1              பார்ப்பனர்      -              58

2.            பார்ப்பனரல்லாத இந்துக்கள்       -              15

3.            கிறித்தவர்கள்           -              9

4.            முகமதியர்கள்         -              -

5.            ஆஸ்கிலோ இந்தியர்         -              6

6.            இதரர்                -              -

                மொத்தம்                      88 பேர்

3 சதவீதம் உள்ள பார்ப்பனர்கள் உயர் கல்வியில் அதிக இடங்களைக் கைப்பற்றி இருந்தனர் என்பதை மேலே கண்ட விவரங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வியில் பார்ப்பனரல்லாதாருக்கு உரிய் இடம் கிடைக்க உரிய வழிவகைகளை நீதிக்கட்சியினர் உருவாக்கினர்.

உயர்கல்வியில் இட ஒதுக்கீடு

டாக்டர் சி.நடேச முதலியார் 2-9-1921 அன்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். உயர் தொழில் நுட்பக் கல்வியில் பார்ப்பனரல்லாதாருக்கு 66ரூ இட ஒதுக்கீடு வேண்டுமென்பது அத்தீர்மானம்.

இந்தப் பின்னணியில் தான் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அரசு ஆணை என் 815 கல்வி, நாள் 10.6.1922. இந்த அரசு ஆணையின்படி ஒவ்வொரு கல்லூரிக்கும் மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. பார்ப்பனரல்லாத மாணவர்கள் 50ரூ இடம்பெற வழிவகை செய்யப்பட்டது.

1922இல் மாநிலக் கல்லூரிக்கு அமைக்கப்பட்ட மாணவர் சேர்க்கைக் குழுவில் அக்கல்லூரி முதல்வர், கல்வித்துறைச் செயலாளர், டாக்டர் சி.நடேசனார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

1922இல் மாநிலக் கல்லூரியில் மொத்தம் உள்ள 222 இடங்களில் மதிப்பெண் அடிப்படையில் 167 பார்ப்பன மாணவர்கள் சேர்க்கைக்கு தகுதி பெற்றிருந்தனர். 50ரூ மட்டுமே பார்ப்பனர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற அரசு ஆணையின்படி 121 பார்ப்பன மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பார்ப்பனரல்லாதாரை விட அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் 46 பார்ப்பன மாணவர்களுக்கு இட மறுக்கப்பட்டது. (மதராஸ் மெயில் - 12.8.1922) அதேபோல 1922இல் மருத்துவ கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை தேர்வு குழுவுக்கு ஆர்க்காடு சர்.ஏ. இராமசாமி முதலியாரின் இளவல் டாக்டர் இலட்சுமணசாமி முதலியார் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

18.9.1922இல் சென்னை சட்டமன்றத்தில் சர்.சீனிவாச அய்யங்கார் என்பவர் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை எவ்வளவு என்பதை வகுப்பு வாரியாக விவரம் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் கீழ்கண்ட விவரங்களைக் கூறினார்.

                                தேர்ந்தெடுக்கப்பட்ட                                           எண்ணிக்கை

1.            பார்ப்பனர்கள்             33

2.            பார்ப்பனரல்லாத இந்துக்கள்       36

3.            இந்திய கிறித்தவர்கள்      15

4.            முகமதியர்  2

5.            அய்யோரப்பியர்களும்

                ஆங்கிலோ இந்தியர்களும்           5

                மொத்தம்      91

அகில இந்திய இந்திய ஒதுக்கீடு

1.            பார்ப்பனர்      7

2.            பார்ப்பனரல்லாத இந்துக்கள்       4

3.            இந்திய கிறித்தவர்கள்      3

                மொத்தம்      14

பார்ப்பன மாணவர்கள் 16 பேர் பார்ப்பனரல்லாத மாணவர்கiவிடக் கூடுதல் மதிப்பெண் பெற்றிருந்தும், 50ரூ பார்ப்பனருக்கு என்ற அடிப்படையில் அவர்களுக்கு இடம் மறுக்கப்பட்டது.

தமிழக வரலாற்றிலேயே பார்ப்பன மாணவர்களைவிட பார்ப்பனரல்லாத மாணவர்கள் சம எண்ணிக்கையில் இடம்பெற்றது. இதுவே முதல் முறையாகும் 1922 முதல் இந்த மாணவர் தேர்வுக் குழு தொடர்ந்து செயல்பட்டு வந்ததால் தான் பார்ப்பனரல்லாதவர்கள் உயர்கல்வியில் இடம்பெற முடிந்தது.

1937இல் சி.இராசகோபாலாச்சாரியார் ஆட்சிக்கு வந்தபோது கிராமப்புற மாணவர்கள் படித்துவிட்டு உயர்நிலைக்கு வருவதனால் தானே நம் சாதிப் பிள்ளைகளுக்குப் போட்டி ஏற்படுகிறது - அவர்களைக் கீழ் நிலையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தினால்தான், 6, 7, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய இந்தியைக் கொண்டு வந்தார்.

1952இல் இராசாசி முதல்வராக வந்தபோதும் பார்ப்பனரல்லாத மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்வதைத் தடுப்பதற்காக தொடக்கப்பள்ளிகளில் 3 மணி நேரம் மட்டும் பள்ளிப் படிப்பு, மீதி மூன்று மணி நேரம் அவரவர் தாய் தந்தையரின் குலத் தொழிலைச் செய்ய வேண்டுமென்று ஆணையிட்டார். பெரியாரின் கடுமையானப் போராட்டத்தால் இராசாசி, ஆட்சி ஒழிந்தது - இக் குலக்கல்வித் திட்டம் காமராசரால் நீக்கப்பட்டது. அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தினால் இப்போது உள்ள இடஒதுக்கீடு முறை அடியொடு ஒழிந்து போகும் ஆபத்து உள்ளது.

தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் இந்த நுழைவுத் தேர்வுமுறையை மறுபரிசீலனை செய்யவேண்டுமென்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மடல் எழுதி உள்ளார். தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும், அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்ததால் இந்நுழைவுத் தேர்வை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனாலும், அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்துவதை கைவிடுவதாக அறிவிக்கவில்லை. நம் தலைக்கு கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நுழைவுத் தேர்வை எதிர்க்க பிற மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களையும் செயல்பட தூண்டவேண்டும். இது இந்தியாவில் உள்ள எல்லா மாநில அரசுகளின் கல்வி உரிமையைப் பறிப்பதாகும். தேர்தலில் ஈடுபடாத சிறு அமைப்புகளும், வகுப்புரிமை மற்றும் மாநில உரிமையை மீட்டெடுப்பதில் அக்கறை உள்ளோரும் ஒன்று சேர்ந்து போராடி அகில இந்திய நுழைவுத்தேர்வு வராமல் முறியடிக்க வேண்டியது. நம்முடைய மக்கள் நாயகக் கடமை ஆகும்.

Pin It